Saturday, February 6, 2016

நானும் இசைஞானியும் 4.

6 ஆம் திகதி ஜனவரி எல்லா பத்திரிக்கைகளிலும்  செய்தி வெளியானது.  ஒரே நாளில் மலேசியா இந்தியா என எல்லா மீடியாக்களிலும் எனது முகமும் நிறுவனத்தின் பெயரும் பிரபலமானது. ஆனால் 10ஆம் திகதி எல்லா ஆடியோ நிறுவனங்களிடமிருந்தும் நீதிமன்ற ஆணை வரத்தொடங்கியது. எனக்கு, இளையராஜா அவர்களுக்கு மற்றும் அவர் மனைவிக்கும். காரணம் சில ஒப்பந்தங்களில் அவர் மனைவியும் கையெழுத்திட்டிருந்தார். 

எனக்கு இதுதான் முதல் நோட்டீஸ். பயம் ஓரளவுக்கு என்னை விழுங்கியிருந்தது. அதைவிட பயத்துடன் இளையராஜா அவர்களின் மனைவி ஜீவா ராஜா “என்ன அகிலன், பெரிய பிரச்சனையா? எப்படியாவது, எதாவது செய்ய முடியுமா?” என்றார். நான் அவரிடம் பேசிய ஒரே வார்த்தை இதுநாள் வரை இது மட்டும்தான். “கவலை படாதீங்க, எதுவும் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்”. 

ஆனால் என் பயம் எனக்கு மட்டும்தான் தெரியும், முதல் அனுபவம் என்பதால். ஆனால் அதை யாரிடமும் காட்ட முடியவில்லை. அவரிடம் விளக்கங்கள் கேட்டு இதுவரை அவர் செய்திருந்த எல்லா ஒப்பந்தங்களையும் அப்பொழுது அவர் உதவியாளராக இருந்த திரு பார்த்தசாரதியிடம் கேட்டு வாங்கி படிக்கலானேன். 

அப்பொழுது அவருக்கு ஒரு அழைப்பு. இளையராஜா அவர்கள் எப்படி எங்களிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு பணமும் வாங்கிவிட்டு வேறு ஒருவருக்கு அதை விற்கலாம். அவர்களை சிறைசாலை வரை கொண்டு செல்வேன் என்று மிரட்டல். அகிலனையும் சும்மா விடுவதாக இல்லை நஷ்ட ஈடு கேட்டு இன்னொரு வழக்குத் தொடரப் போகிறேன் என்றெல்லாம் மிரட்டினார். பார்த்த சாரதி மிரண்டு போய். அவரை நீங்கள் நேரில் சென்று சந்திக்கிறீர்களா என்று கேட்டார். விஷயம் பெரிதாகும் முன் சென்று சந்தித்து விடுங்கள் என்றார். பயம் ஆட்டிப் படைத்தது ஆனால் வெளியில் எதையும் காட்டிகொள்ளாமல் ஹீரோ போல் சம்மதித்தேன். ஆட்டோவில் செல்லும்போது எப்படி இதை சமாளிப்பது என்பது மட்டும்தான் மனமுழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. 

ஆட்டோவை விட்டு இறங்க வேண்டிய இடத்தில் இறங்கியதும் முதலில் கண்ணில் தென்பட்டது சீரடி சாய்பாபாவின் பெரிய சுவர் ஓவியம் ஒன்று. 2009 தொடக்கம் முதல் அவர்தான் எல்லாம் என்று வணங்கி வந்தேன். வேறு எந்த தெய்வத்தையும் வணங்கவில்லை. அவரின் புன்னகையும் அந்த ஆழமானா கண்களும் பெரிய நம்பிக்கையை தந்தது. நான் இருக்கிறேன் எதற்கும் கலங்காதே என்பதுபோல் இருந்தது. யார் அந்த ஓவியத்தை வரைந்தது என்று தெரியாது. அவருக்கும், எனது வணக்கங்களும் நன்றியும். 

அந்த ஆடியோ அலுவலகம் சென்றதும், சின்ன பையன் என்று முடிந்தவரை என்னை பயமுறுத்தி பார்த்தார் அந்த நபர். அவர் பக்க நியாயங்களை சலனமில்லாமல் கேட்டுவிட்டு திரும்பிவிட்டேன். பதில் ஏதும் சொல்லவில்லை. எந்த சட்ட வியூகங்களும் அப்பொழுது தெரியவில்லை. நம்பிக்கை மட்டும் இருந்தது. மறுநாள் தேடிப்பிடித்து காப்புரிமை பற்றிய ஒரு சட்ட புத்தகத்தை வாங்கினேன்.  ஓங்கி அடித்தால் ஒருவருக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்கு பெரிய கனமான புத்தகம். ஒவ்வொரு பக்கமாகப் படித்தேன். காப்புரிமை பற்றி வார்னரில் இருந்தபொழுது கற்றுக்கொண்டதைவிட இந்தியாவில் அதிகமே தெரிந்துக்கொண்டேன். இப்பொழுது ஒரு நல்ல வக்கீல் தேவை. 

அந்த சமயம் ஒருவர் வந்து சேர்ந்தார். இளையராஜாவின் மிகவும் நெருக்கமான நம்பிக்கையான ஒரு நபர். அவர் முன்னமே இளையராஜா அவர்களால் எனக்கு அறிமுகமாகியிருந்தாலும் நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாதவர். இந்த முறை வழக்கு சம்பந்தமாக எல்லாவற்றையும் அவர்தான் கவனிப்பார் என்று இளையராஜா அவர்களே சொல்லிவிட்டார். அசாத்தியமாகவும் சமர்த்தியமாகவும் பேசக்கூடிய ஒரு நபர். பல மேல் நிலை தொடர்புகள் எல்லாம் சாதாரணமாக வைத்திருந்து வெளிநாட்டு (அமெரிக்கா) ரிட்டர்ன். 

டில்லியில் இருந்து ஒரு வக்கீலை அவரே முன்மொழிந்தார். அவர் சொல்லும் அறிவுறையின் படியே நடக்க வேண்டும் என்பது இளையராஜாவின் கட்டளை என்பதால் நானும் சம்மதித்தேன். வேறு வழி எனக்கு தெரியவில்லை. சென்னை வந்திரங்கியவுடன் தங்குவது, பயணம் என்று இன்னும் ரூபாய் 75 ஆயிரமும், அவர் சார்பாக நீதிமன்றத்தில் கோப்புகள் வழங்குவது மற்றும் இதர வேலைகளுகென்று அவர் நியமித்த மற்றொரு வக்கீலுக்கென 25 ஆயிரம் ரூபாயுமாக மொத்தம் ஒரு லட்ச ரூபாய் கட்டணம் கேட்டார். நானும் கொடுத்தேன். ஆலோசனைகள் நடந்தது, நீதிமன்றத்தில் வக்காலத்து வழங்கப் பட்டது. திரும்ப டில்லிக்கு சென்றுவிட்டார். ஒரு மாதத்தில் மீண்டும் சென்னை வருவதாகவும் மீண்டும் செலவுகளுக்கென்று ரூபாய் ஒரு லட்சமும் கேட்டார். கடையே விரிக்கவில்லை பணம் மட்டும் செலவானது. ஆனால் நான் இந்த முறை கொடுப்பதாக இல்லை. அவரிடம் நேரிடையாகவே அவ்வளவு பணம் செலுத்து சக்தி எனக்கில்லை. வேறு வழி சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டேன். உடனே இளையராஜா அவர்களின் பாடல்கள் கோடிகள் ஈட்டும் சொத்து. உங்களால் இது கூட முடியாதானனா நீங்க எப்படி வியாபாரம் செய்வது என்று சாமர்த்தியமாக பேசினார். நான் என் நிலையை இளையராஜா அவர்களிடம் சொன்னேன். அவரும் அவரின் நண்பரிடம் பேசினார் ஆனால் அந்த நபரோ முடியவே முடியாது என்றும், இவரை விட்டால் இந்த வழக்கு நமக்கு தோல்விதான் என்று உறுதியாக சொன்னார். இந்த செலவுகள் ஒரு வழக்குக்கு மட்டுமே. இப்பொழுது நான் எதிர்கொண்டிருப்பதோ 3 வழக்குகள் அதிலும் இளையராஜா, அவர் மனைவி மற்றும் என் நிறுவனம் எல்லாவற்றுக்கும் நான் தான் கட்டணம் செலுத்தியாக வேண்டும். நான் எதிர்பாராத இக்கட்டான நிலை.  ஆனால் காப்புரிமை சட்டம் படித்ததில், நிச்சயம் வென்றுவிடலாம் என்ற என் அறிவின் மீது நம்பிக்கையும் என் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையும் இருந்தது. 

இப்பொழுது வக்கீல் மட்டுமே. அதனால் இளையராஜாவிற்கு நெருக்கமான் அந்த நபரை தனியாக சந்தித்து எனது நிலையை சொல்லி வேறு வக்கீல் பார்க்கலாம் செலவும் குறைவாக என்றால், அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஹோட்டல் வந்து - தங்குவது, பயண செலவு, வக்கீல் செலவு என்று கடன் பட ஆரம்பித்த தருணங்கள் - சாய்பாபவிடம் வேண்டி நான் நினைக்கும் வக்கீலா அல்லது அந்த நபர் சொல்லும் வக்கீலா என்று சீட்டுக்குலுக்கிப் பார்த்தேன். குழம்பும் நெருக்கடியான தருணங்களில் இப்படிதான் செய்வேன். நான் எதிர்பாரா வண்ணம் அந்த நபர் சொல்லும் வக்கீலடமே போ என்று வந்தது. அதிர்ச்சியானேன். பணத்துக்கு? சரி சாய்பாபா முடிவு அதுதான் என்றால் அப்படியே நடக்கட்டும் என்று மறுநாள் அவரிடம், “சரி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன் படி செய்கிறேன்” என்று சொன்னேன். சற்று நேரம் அமைதியாக இருந்தவர் பிறகு என்னை காபி குடிக்க அழைத்து சென்று ஏதேதோ கதைகள் பேசிவிட்டு, சரி நீங்கள் யாரை மனதில் வைத்திருக்கிறீர்கள் சொல்லுங்கள் என்றார். பெயரை சொன்னேன். 

நான் சொன்ன வக்கீல், டில்லியில் இருந்து வந்தவர் அவருடைய கோப்புகளை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக அமர்த்திய பிரபலமில்லாத சாதாரண வக்கீல். ஆனால் அவர் மீது எனக்கு ஒரு அசாத்திய நம்பிக்கை மட்டும் இருந்தது. அவரது முழு பெயரையும் கேட்டார் எனக்கு தெரியாது. எப்படி இருந்தார் என்று அடையாளங்கள் கேட்டார்.  இவையெல்லாம் என்ன சாதி என்று தெரிந்துக்கொள்ளும் உத்திகள் என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகு சரி நான் வந்து அவரை பார்க்கிறேன் என்று என்னை அழைத்துக்கொண்டு அவரை சந்திக்க சென்றோம். இருவரும் கொஞ்சம் நேரம் பேசிய பிறகு என்னிடம் வந்து நாங்கள் என்ன பேசினோம் என்று தெரியுமா என்றார். என் பக்கத்திலேயே அவர்கள் பேசிக்கொண்டாலும், எனக்கு அது புரியவில்லை. அவைகள் ஒரு Code Words. அவர் சொன்னார் அவர் “நம்ம ஆளு” கவலைய விடுங்க, இவரே நமக்கு போதும் என்று; இப்படி எல்லாம் வேறு இருக்கிறதா என்று அப்பொழுதுதான் தெரிந்தது.   

ஒருவழியாக ஒரு பிரச்சனை தீர்ந்தது. புது வக்கீலும் அவர் இளையராஜாவிற்காக அமர்த்திய இன்னொறு வக்கீலும் ஒரு சின்ன தொகை மட்டுமே வாங்கினார்கள். வழக்கை நடத்தும் துணிவு வந்துவிட்டது. வழக்கு சில மாதங்கள் கோர்டில் நடந்து வந்தது. அப்பொழுதுதான் திடீரென ஒருநாள் எனது வக்கீல் என்னை அழைத்து சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஒரு விஷயத்தை சொன்னார். “அகிலன் இளையராஜாவிற்கு நெருங்கிய தொடர்பில் இருக்கும் அவர் இந்த வழக்கை நடத்துவதற்காக இளையராஜாவிடம் சில கையெழுத்துக்கள் வாங்க சொல்லியிருக்கிறார் அதில் உங்களிடம் இருக்கும் உரிமங்களையும் இளையராஜா அந்த நபருக்கே மாற்றி எழுதும்படி சில பேப்பர்களை வைத்திருக்கிறார். அவர் மீது உள்ள நம்பிக்கையினாலும் நட்பினாலும் அவர் சொல்லுமிடத்திலெல்லாம் இளையராஜா கையெழுத்திடுவார் என்று கூறியிருக்கிறார்.  உங்களுக்கு எப்படி இந்த உரிமங்கள் எல்லாம் வரமுடியும், அவன் என்ன சாதி என்று இன்னும் பலவாறு கேவலமாக பேசினார். நான் உங்களிடம் பணம் வாங்கியிருக்கேன் எனது தொழில் ethic படி அது சரியில்லை அதுவும் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் வீழ்வதை என்னால் பார்க்க முடியாது அதனால் சொல்கிறேன், சுதாரித்துகொள்ளுங்கள்” என்றார். 

இது இன்னொரு அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்பில் சில பேரை புகார் இல்லாமலேயே கைது செய்திருக்கிறார். “எப்படி சார் இதெல்லாம். அது சரியில்லையே” என்றதற்கு. “என்ன அகிலன் நீங்க, இந்த ஊர்ல நாங்க கேஸே இல்லாமல் கூட கைது செய்வோம்” என்றார் நக்கலாக.  இளையராஜா இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் இவர் செய்யும் இந்தக் காரியத்தை எப்படி அவரிடம் சொல்வது? பல சமயங்களில் அவரிடம் மிகவும் உரிமையாகவும் நெருக்கத்துடனும் இருப்பவர் இளையராஜா. இளையராஜாவைப் பற்றி வெளியிலும் மீடியாக்களுக்கும் தெரியாத விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறார். இளையராஜா அவர்களின் மீது இவருக்கு மரியாதையில்லை; ஏதோ ஒரு ஆதாயத்திற்காக பழகுகிறார் என்பது மட்டும் தெரிந்தது. இளையராஜாவிடன் பல முறை அவரை பற்றி சொல்ல முயற்சித்திருக்கிறேன் ஆனால் இளையராஜா அவர்கள் அதற்கு இடம் தரவில்லை.  அவரை பற்றி மிகவும் பாசத்துடனும் நம்பிக்கையுடனும் பேசியிருக்கிறார். 

ஆனால் இந்த முறை இதை சொல்லியே தீரவேண்டும் என்று முடிவெடுத்து, போனில் வக்கீல் சொன்னதை சொல்லிவிட்டேன். இளையராஜாவிடமிருந்து மெளனம் மட்டுமே சிறிது நேரம் வந்தது, பதில் இல்லை. பிறகு நான் வக்கீலிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு எனது வக்கீலுக்கு போன் செய்திருக்கிறார். அதன் பிறகு வக்கீல் பதரிக்கொண்டு எனக்கு போன் செய்தார் “என்ன அகிலன் அப்படியே அவர்கிட்ட சொல்லியிருக்கீங்க? நான் எப்படி இப்போ அந்த நபரை எதிர்கொள்வேன்? நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் என்றால் அவர் என்னை என்ன நினைப்பார் என்று புலம்பினார்”. பிறகுதான் தெரிந்தது அந்த நபர் என் உரிமத்தை மட்டும் அவர் பெயரில் மாற்ற சொல்லவில்லை, இளையராஜா அவர்கள் சம்பந்தப்பட்ட பல பல விசயங்களிலும் இதுபோல பல மோசடிகள் நடக்க இருந்திருக்கிறது என்பது. இது தெரிந்ததும் அவருடனான தொடர்பை இளையராஜா உடனே நிறுத்திவிட்டார்.  

ஆனால் அதன் பிறகு ஒருமுறைக் கூட அவரைப் பற்றி எதுவும் மோசமாகவோ வருத்தமாகவோ பேசவே இல்லை. அதற்கான பல சந்தர்ப்பங்கள் அமைந்தும் இளையராஜாவிடமிருந்து  மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது. 

வழக்கு முடியும் தருவாய் இன்னொரு வெளிநாட்டு ரிட்டர்ன் ஒருவர் இளையராஜா அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.  இன்னொரு பிரச்சனை எனக்கு காத்துக்கொண்டிருந்தது.  

No comments: