Saturday, August 30, 2014

ராஜாங்கம் - தூர நோக்கு (Raaja Vision)இளையராஜா ரசிகர் மன்றத்தின் புதிய அலுவலக திறப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.  அவர்களின் நீடித்த செயல்பாட்டுக்கு நான் சில ஆலோசனை வழங்கலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருந்து யாருடனாவது சண்டை இடும் இயக்கம் என்றிருந்த (பலரது என்று எழுத விரும்பமில்லை :)) எண்ணத்தை மாற்றி மரம் நடுவது, இப்பொழுது அலுவலகம் திறப்பது என்று எனது நம்பிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறார்கள். எப்பொழுதும் போல் ஜால்ட்ரா கூட்டங்களாக இல்லாமல் இந்த முறை அறிவும் ஆக்கமுமான கூட்டத்தை இளையராஜா திரட்டியுருக்கிறார், என்றே நினைக்கிறேன்.  இதன் மூலம் பல பெருமைமிகு வளர்ச்சிகள் நடக்கும் என்றும் நினைக்கிறேன். இதைதான் பல வருடங்களாக நான் எதிர்பார்த்திருந்தேன்.  (‘நாங்கள்’ என்றுதான் எழுதியிருக்க வேண்டும்).  ரசிக மன்றத்தினரும் ஆணவமில்லாமல் இளையராஜா அவர்களுக்காக என்ற சிந்தையை மட்டுமே மையப்படுத்தி, எனது ஆலோசனைகளை படிக்கலாம் (மீண்டும் என் மீது போலீஸ் புகாரெல்லாம் கொடுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்).  

இளையராஜா வெறும் தமிழ் கலைஞனல்ல, இசைஞானி.

இதை எப்பொழுதும் நினைவில் கொண்டிருப்போமானால், சாதாரண நிகழ்வுகளையும், வைரமுத்து போன்ற சில முரண்களை பெரிதுபடுத்தி ஒரு வாரத்திற்கு அவர் கேட்டுகொண்டபடியால், அவர் அனுமதியோடு போன்ற போஸ்டிங்களை தவிர்த்து, ஒவ்வொரு போஸ்டும் உலக ரசிகனை மனதில் வைத்து வெளிப்படுத்தப்படட்டும். 

அ. இந்தி, மராத்தி, போன்ற மொழிகளில் இசையமைத்தவர் அங்குள்ள தமிழனுக்கா இசையமைத்தார்? அந்த மொழியில் அவருக்கு ரசிகர் இருக்க முடியாதா? இத்தாலியில் எங்கோ ஒருதெருவில் ராஜாவின் கீதத்தை கேட்டுவிட்டு ஒரு இத்தாலியன் அவரை தேடி வரவில்லையா? ஹங்கேரியில் அவர் பெயர் தெரியாதா ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்கள் யாராவது இருப்பார்களா (எல்லோருக்கும் தெரியும் என்றில்லை கண்டிப்பாக ஒரு 200 இசைகலைஞர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்). அவர்கள் ராஜாவை எந்த மொழியில் தெரிந்துக்கொள்வார்கள்?  ஜப்பானியன் என்னிடம் ராஜாவைப் பற்றி பேசியிருக்கிறான். மலாய்காரர் என்னிடம் ராஜாவைப்பற்றி பேசியிருக்கிறார். இவர்களெல்லாம் ராஜாவின் அதிகாரத்துவ முகநூலுக்கு (Facebook) வந்தால், என்ன இருக்கிறது இங்கு? அல்லது நான் சொன்னது எல்லாம் கட்டுக்கதைகளா?

ஆ. ரவிசங்கர் மறைவிட்கு பிறகும் அவரது முகநூல் நடத்தப்படுகிறது. அவரது மகளா அல்லது ரவிசங்கர் ஃபெளண்டேசினா (Ravi Shankar Foundation) என்று தெரியவில்லை. யாரோ நடத்துகிறார்கள். அவ்வப்போது மற்ற இசைமேதைகள் அவரைப்பற்றி சொன்ன கருத்து தொகுப்புகள். ரவிசங்கர் சொன்ன quotes (கருத்துக்கள்/ தத்துவங்கள்??) என்று ஆச்சரியப்படுத்துகிறது. ராஜாவே சொன்ன quotes என்று வாரம் ஒன்று? அவரது பத்திரிக்கை பேட்டிகள் மேடை பேச்சுகள், என்று கடந்த கால திரட்டின் மூலம் பல பொக்கிஷங்களை மீட்டெடுக்கலாம்.  

இ. பத்திரிக்கையாளர்கள் சிலரும் அதி காரத்துடன் இங்கு இருப்பதால், வாழும் இசை மேதைகளிடம் ராஜாவைப்பற்றி பேட்டியெடுக்கலாம், இன்றைய எல்லா இளம் இசையமைப்பாளர்களுக்கும் ஏதோ ஒரு வழியில் வகையில் உத்வேகமாக ராஜா இருக்க வேண்டும். அவரது பாதிப்பில்லாது யாருமே இருக்க முடியாது அல்லது இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ராஜாவைதான் கேட்டு வளர்ந்திருக்க வேண்டும், அவரிடன் வேலைப்பார்த்த இசையமைப்பாளர்கள் என்று பல நூறு பிரபலங்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பேட்டி எடுக்கலாம்.  ராஜாவிடம் அவர்கள் கற்றது, பெற்றது, எந்த பாட்டு அவர்களின் புத்தூக்கத்திற்கு உத்வேகம் இட்டது. எது எது அப்பட்ட காபி என்று எல்லைகளை விஸ்தாரமாக்கும் பேட்டிகளின் வழி, ராஜா எத்தகைய வேரை இந்திய சினிமாவில் ஊன்றியிருக்கிறார் என்பது புரியம். இன்றைய டிஜிட்டல் உலகில் பல இசையமைப்பாளர்கள் ஊடகங்கள் வழி விருட்சமாக தென்பட்டாலும் வேர் இன்னும் ராஜாவிடத்தில்தான் என்று உணரக்கூடிய பேட்டிகள் தமிழில் ஆங்கிலத்தில் என்று மாதம் ஒன்று அல்லது இரண்டு, நிச்சயம் பெருமைப்படக்கூடிய விஷயமாக இருக்கு.  இதற்கெல்லாம் பெரும் செலவு ஆகப்போவதில்லை. மன்றத்தில் கொஞ்சம் நிதி இருந்தால் இன்னும் சிறப்பு. ராஜாவின் சிம்பொனி பணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டது. சிம்பொனி இசைக் குழுவும் அன்று பெறும் பண நெருக்கடியால் இருந்ததால் அதற்கு ஒப்புக்கொண்டது, பின்னர் அந்த இசை பலபெரும் இசை இலக்கணத்தவறுகள் இருந்தக்காரணத்தால் வெளியிடப்படாமல் போனது என்று ஒரு மிகப்பிரபலம் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் ரசிகர்களோ இன்னும் ஆவலுடன் அதன் வெளியீட்டுக்காக தவம் கிடக்கிறார்கள். அதுவரை அதன் இயக்குனர் ஜான் ஸ்டார்ட்டை பேட்டி எடுங்களேன். அவரின் அனுபவத்தை முழுதும் எழுதுங்களேன்? ராயல் பில்ஹார்மோனிக்கிடம் அவர்கள் அனுபவங்களை கேட்டு எழுதுங்களேன்?நாளை இதுவெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்று சொல்லப்படுமா? அல்லது வேறு யாராவது முதல் தமிழன் அல்லது இந்தியன் சிம்பொனி இசையமைத்தவர் என்று புகழப்படுமா? நீங்கள் செய்யக்கூடிய சுலபமான ஆனால் முக்கியமான வேலை இதுவென்று நினைக்கிறேன். 


ஈ. எத்தனையோ ரசிகர்கள் அவரது இசையைப் பற்றிய ஆய்வுகளை அனுபவங்களை எழுதிவருகிறார்கள். பலர் அருமையாகவே தமிழர் அல்லாதவர்களை மனதில் வைத்து எழுதிவருகிறார்கள். அவர்களை எல்லாம் இதில் இணைக்கலாம்.  அவர்களை நீங்களாக மரியாதையுடன் அணுகுங்கள்.  உதவ கண்டிப்பாக தயாராக இருப்பார்கள். ஆனால் நாமோ அவர்களை கண்டிப்பாக இணைய வேண்டும் என்று அதிகாரம் செய்வது கட்டளை இடுவது, அவர்களை விலகிதான் போகச்செய்யும். காரணம் இங்கு இணைவதினால் அவர்கள் இன்புற்று செய்யும் இந்த ஆய்வுகளை நிறுத்தப்படலாம். தங்கள் செயல்பாடுகள் முடக்கப்படலாம் என்ற பயமொன்றே காரணமாக அமையும். இவர்கள் யாரும் பிரபலத்திற்காக செய்யாத இசை இன்பர்கள் மட்டுமே என்பது அவர்கள் பதிவுகளை படிக்கும்போதே தெரிந்துக்கொள்ளலாம். நான்கு கைகளில் காட்சி தரும் நடராஜானைவிட, பல ஆயிரம் கைகளுடன், முகங்களுடன் திசைகளையே மறைத்து நின்ற கிருஷ்ணரின் விஸ்வரூபம் எனக்கு அதிகம் பிடிக்கும்.  


2. டிஜிட்டல் பதிவு செய்வது.  

அ. அவர் தற்பொழுது பதிவு செய்யும் அனைத்து இசைக்கோர்வைகளையும் டிஜிட்டலில் கண்ணி சேர்வரில் (Server) சேமிப்பது. குரல் தனி, எல்லா இசைகருவிகளும் தனி தனி என பல நூறு டிராக்குலாக சேமிப்பது.  பாடல் வரிகள், இசைக் குறிப்புகள் என்று எல்லாவற்றையும் டிசிட்டலில் சேமிப்பது, சிறந்த விசயமாக இருக்கும். இதன் தேவைகளை பற்றி சொல்லலாமா என்று யோசித்து சொல்கிறேன். கண்டிப்பாக இப்பொழுது இல்லை.  ஆனால் முக்கியமான தேவை அது அவரது இசைதான் என்ற ஆதாரம். 
அவர் இருக்கும் போதே அவருக்கு மிகவும் நெருக்கமானவர் இந்தப் பாடலின் மெலொடி, இசை கோர்ப்பு எல்லாம் என்னுடையது என்று ஒரு பிரபலமான இளையராஜா பாடலைப் பற்றி வானொலி பேட்டி கொடுக்கிறார். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் எதற்கும் ஆதாரம் தேவையில்லையா?. இல்லையென்றால் பிற்காலத்தில் இளையராஜாவின் பாடல்களும் இசைஞானமும் புராணக்கதைகள் போல் தெரியும். 

ஒருகாலத்தில் இளையராஜாவின் பாடல்கலை விநியோகம் செய்துவந்த பிரபலமான இசை நிறுவனத்தின் நிறுவனர் அப்பொழுது வெளிவந்த இசைஞானியின் பாடல்கள் அனைத்தும் தனது மேற்பார்வையிலும் தனது சிந்தனையிலும்தான் உருவானது. அதை இளையராஜா மெருகேற்றினார். அதனால்தான் இன்றளவும் அவைகள் பிரபலம் என்றார். அவரும் அடிப்படியில் ஒரு இசையமைப்பாளர் என்பதோடு பல இசை மேதைகளின் நட்பையும் கொண்டிருப்பதால் சிலர் நம்பவும் செய்கின்றனர்.


ஆ. 2004 அவர் என்னிடம் மியூசிக் மேசையா என்ற இசை தொகுப்பை வழங்கினார், அதை மாஸ்டர் நிபுணரிடம் கொடுத்தபோது, அந்த டேப்பில் காளன்கள் வந்துவிட்டது என்றும் அது ஒரு பகுதி இசைக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது என்றும் நிபுணத்துவத்துடன் அதை சரி செய்தார். அப்பொழுது ராஜாவிடம் எல்லாவற்றையும் டிஜிட்டல் மயமாக்குவது பற்றி விளக்கினேன்.  இன்னும் அவரது இசைகூடத்தில் பலநூறு டேப்புகள் தூசுகளாலும் காளன்களாலும் சேதமடையகூடிய நிலையிலேயே இருக்கிறது, முக்கியமாக பல இன்னும் வெளியிடப்படாத தொகுப்புகள்.

இ. அவரது இசை பதிவுகளை முறைப்படுத்தும் வழி தெரியாததால், பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் அல்லது இசை, எங்கு இருக்கிறது என்பது கூட அவர் நினைவில் இருப்பதில்லை. அதை அவருக்கு வேண்டியவர்கள் எங்காவது கண்டுப்பிடித்தால் அதை மறுப்பதிவு செய்து அவர்களின் பெயரிலேயே வெளியிடுவார்கள். வெளியிட்டும் இருக்கிறார்கள். 

அவர் நம்மை விட்டு இல்லாமல் போகும் ஒரு காலத்தில் அவரின் இசைக்கு உரிமைகொண்டாடி வரும் கூட்டங்கள் இப்பொழுது பலநூறு காத்திருக்கிறது.  

உ. காப்புரிமை சட்டத்தின் படி படைப்பாளர் இறந்து 50 வருடங்கள் கழித்து ஒரு படைப்பு பொது சொத்தாகிவிடும்.  அன்று யார் வேண்டும் என்றாலும் அந்த படைப்பு இலவசமாகவும் எப்படி வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மோஸார்ட் அறக்கட்டளையா அல்லது ஒரு சிம்பொனி இசை குழுவோ எதுவென்று சரியாக நினைவில் இல்லை. அவர்கள் மோஸார்ட்டின் இசையை குறிப்புகளாக எழுதி இதுதான்  மோஸார்ட்டின் திரிபடையாத உண்மையான இசை குறிப்பு எனவும், இதுவரை பதிவு செய்து வந்தவைகள் எல்லாம் அசல் அல்ல என்று நிறுவி, இதன் பிறகு இந்த இசை குறிப்புகளின் வழி பதிவு செய்யப்படும் அனைத்து இசைகளுக்கும் காப்புறிமை வாங்குகிறார்கள்.  ஆனால் இசை பதிவு நடைபெறாத காலத்தவர் என்பதால், மோஸார்ட்டின் இசைக்கு இன்னும் உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இளையராஜாவின் இசை அனைத்தும் அவர் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுது என்றாலும் நாளை எல்லா இசையின் குறிப்புகளை அச்சு பிசராமல் ஒருவர் எழுதி வந்து இதை பார்த்துதான் ராஜா பாடல்களை பதிவு செய்தார், என் அப்பாதான் உண்மையில் இவைகளை எழுதினார் என்று வழக்குத் தொடுத்தால் ஒருவேளை செண்டிமெண்ட் காரணங்களுக்காக இளையராஜா வெல்லலாம், ஆதாரம்?  திரட்டுங்கள் இன்னும் காலம் இருக்கிறது, எதுவும் நாளை கட்டுக்கதைகளாக பேசப்படக்கூடாது. 

ஊ அவரின் அனைத்து பழைய இசைகளையும் பிரித்து இசை சாம்பிளாக பதிவு செய்யலாம் (Sampes). இதற்கு மேலும் இதை விளக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் வியாபாரமாக பார்க்காமல், உரிமை என்று கோருவதற்கும் இது உதவியாக இருக்கும். இன்று இருக்கும் மியூசிக் கைரேகை பதிவின் மூலம் இதை காப்புரிமம் செய்யலாம். சினிமா, சீரியல். விளம்பரங்கள் என்று யாரும் அவரின் இசையை தங்களின் வணிகத் தேவைக்கு இலவசமாக பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.  

எ. ஆனால் எல்லாவற்றையும் யாரையும் நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ராஜா கொடுப்பாரா என்பதே முதன்மை கேள்வி. ‘ஊ’ வைத்தவிர மற்றதை மீண்டும் மீண்டும் அவருக்கு அறிவுருத்துங்கள். “ஊ” வை நீங்களே செயல்படுத்தலாம்.  இளையராஜா இசை வங்கி, இளையராஜா இசையகம் போன்றவைகளை கற்பனை செய்து பாருங்கள். 

ஸீரடி செல்வதற்கான் விமானம் இன்னும் ஒரு மணி நேரத்தில், அக இதோடு நிறுத்திவிட்டு எனது மற்ற வேலைகளை முடிக்கிறேன்.  அடுத்தவாரம் அல்லது மிக விரைவில் அவகாசம் வரும் பொழுது, ஹாலிவூட் வாய்ப்புகள் பெறுவதுற்கு எப்படி முயற்சிக்கலாம், அதிக செலவில்லாமல் எப்படி ராஜாவின் புது முயற்சிகளை பதிவு செய்யலாம், இன்னும் 10 அல்லது அதற்கும் மேலான வருடங்களுக்கு தேவையான இசையை எப்படி அவரின் மூலம் இப்பொழுதே தயார் செய்வது. என்றென்றும் அவரின் வாரிசுகள் எப்படி அவரின் இசை வழி ராயல்டி பெறுவது பற்றியெல்லாம் எழுதுகிறேன்.