Monday, May 26, 2014

நானும் இசைஞானியும். 1

நான் அகி மியூசிக்கில் வெளியிட்ட இளையராஜாவின் முதல் ஆல்பத்தை டிசைன் செய்தவர் நண்பர் நீல்ஸ் (நீலகண்டன் சங்கர்). அது குரு ரமண கீதம். இன்றுவரை அதை போன்ற அற்புதமான டிசைன் எனது தொகுப்பில் இல்லை என்றே சொல்லவேண்டும். அந்த சிடியை வாங்கியவர்கள் உணர்ந்திருப்பார்கள். குரு ரமண கீதத்தின் உண்மையான தலைப்பு ரமணர் கான ரதம். ஆனால் நீல்ஸ் குரு ரமண கீதம் என்று மாற்றினார். முதலில் அந்த சிடியை பெரும் போது தலைப்பை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்ட இசைஞானி அவர்கள் பிறகு முழு கவரையும் உள்ளடக்கத்தையும் பார்த்துவிட்டு, Ilayaraja என்றிருந்த அவரது பெயரை Ilaiyaraaja என்று இனி மாற்றிவிடுங்கள் அதுதான் சரியான முறை என்று மட்டும் சொன்னவர், தலைப்பை மாற்றியதை பொருட்படுத்தாது விட்டுவிட்டார். 

அதன் பிறகு நீல்ஸ் செய்து தந்தது திருவாசகம், லைவ் இன் இத்தாலி, அம்மா பாமாலை. எனக்கு அவரிடம் பிடித்தது ஒவ்வொரு வர்ணத்தேர்வுக்கும் காரணம் சொல்லுவார். Watermark போல் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் சில வேலைபாடுகளுக்கும் காரணம் சொல்வார். அவ்வளவு நுணுக்கமான வேலைகள் அவரிடமிருந்து கிடைக்கும். 

திருவாசகம் இந்தியாவில் வெளியான பொழுது இளையராஜா அவர்களின் மேற்பார்வையில் ஒரு வடிவமைப்பாளர் இசைஞானி எப்படியெல்லாம் கேட்கிறாரோ அப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தார். நானும் அருகில் இருந்தேன். எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ராஜா அவர்கள் இசையில் மேதை ஆனால் வடிவமைப்பை பொருத்த வரை திறமையான ஒருவரின் சுதந்திரத்திற்கு விட்டுவிடலாமே என்று தோன்றியது. அதனால் நான் அகி மியூஸிக் மூலம் வெளியிடப்போவதில் முற்றிலும் வேறு வடிவமைப்பை உருவாக்குவது என்று முடிவெடுத்தேன். காரணம் அது காலத்தால் அழியாத ஒப்பற்ற காவியம். அதன் வடிவமைப்பும் package-உம் ரொம்ப முக்கியம் என்று கருதினேன்.  ஆனால் எனக்கு அந்த சிடியும் படங்களும் வந்த கிடைத்தது மிக மிக தாமதமாக, அதுவும் சென்னையில் ரிலீசான பிறகே வந்தது.  அப்பொழுது நான் நீல்ஸ் இடம் சொன்னது, “இது ஒரு விலை மதிப்பற்றப் பொக்கிஷம். அதை பிரிதிபலிக்கும் படி டிசைன் இருக்க வேண்டும்”. அதோடு அது ஒரு டிஜி பேக் எனப்படும் வித்தியாசமான package அதில் எத்தனை பக்கங்கள் என்றும் சொல்லிவிட்டேன். அவர் ஒரு அற்புதமான டிசைன் செய்து கொடுத்தார். ஆனால் உண்மையில் என் சிந்தையில் இருந்தது முற்றிலும் வேறு.  அது அவருக்கும் தெரியும். ஆனால் எங்களுக்கு போதிய அவகாசம் இல்லை. தாமதித்தால், கள்ளப் பதிப்புகள் இங்கு வந்துவிடும். ஆக அவசர அவசரமாக அதை வெளியிட்டோம். ஆனால் மிகவும் பிரமாதமான வடிவைமைப்பு அது. 

எங்கள் சுதந்திரமான வடிவமைப்பு பற்றி உடனேயே தகவல் இளையராஜா அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் போன் செய்து, “அதை மாற்றியது தவறு, உலகம் முழுவதும் ஒரே வடிவமைப்புதான் வேண்டும், என் அனுமதியில்லாமல் எப்படி மாற்றலாம்” என்றார். சரி என்றும் அடுத்த முறை மாற்றி விடுகிறேன் என்றும் அவரிடம் உறுதி கூறினேன். 

ஆனால் அவர் சொன்ன டிசைனை என் உள் மனது ஒத்துக்கொள்ளவில்லை.  காரணம் அது உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படப்போகும் சாதாரண இசையல்ல. அது ஒரு செய்தி. அதனால் இந்த முறையும் அவர் கட்டளையை மீறி வேறு வடிவமைப்புக்கு நீல்ஸ் உதவியை நாடினேன். இந்த முறை நான் எண்ணியவைகள்,  தேவைப்படும் பக்கங்கள் தரப்போகும் விசயங்கள் என்று எல்லாவற்றையும் தெளிவாக முடிவெடுத்திருந்தேன். 

கூடவே, இளையராஜா அவர்களின் இசையில் வெளிவந்த திருவாசகத்தை மலேசியாவில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்த மலேசிய இந்திய அரசியல் கட்சி மற்றும் சில ஆன்மீக இயக்கங்களின் அதிகபடியான நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.  பத்திரிக்கைகளில் தாறுமாறாக எழுதினார்கள். அதுவெல்லாம் வேறு விசயம்.  

இந்த முறை நீல்ஸ் ஒவ்வொரு திருவாசக சிடி கவரின் ஒவ்வொரு வடிவமைப்புக்கும் அழகான காரணம் வைத்திருந்தார்.  இந்த முறை ஒரு புத்தகமும் உள்ளடக்கப்பட்டது. இந்தியாவில் வெளியானது போல் இளையராஜா அவர்களின் கையெழுத்தில் எழுதப்பட்ட மாணிக்கவாசகரின் திருவாசகமும் அடங்கும். ஆனால் எனது வெளியீட்டில் அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கக் குறிப்பும், எழுதப்பட்ட காலமும் இடமும் என்று இன்னும் சில தகவல்களும் அடங்கியிருந்தது. இதற்கு உதவியவர் அமெரிக்காவை சேர்ந்த திரு சிவா அவர்கள். 

அகி மியூசிக் இந்த முறை வெளியிட்ட சிடி கவர் மொத்தம் ஆறு பக்கங்கள் அடங்கிய ஒரு கவர். அதில் ஒன்று இசைஞானி எழுதிய முன்னுறை, மற்றொரு பக்கம் மாணிக்கவாசகரின் வரலாறு என்று பல குறிப்புகள். இறுதியாக இதுவரை இசைஞானியின் இந்த முயற்சியைப் பற்றிப் புகழ்ந்தவர்களின் பேட்டி குறிப்புகள், அது எந்தப் பத்திரிக்கையில் எந்த திகதி வந்தது என்ற ஆதாரமும் உண்டு. ஏ ஆர் ரஹ்மான், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா என்று பலருடைய ஆனால் முக்கியமான கருத்துக்கள் எல்லாம் சிடி கவரின் பின் அட்டையில் அச்சிடப்பட்டது. சிடி வாங்க எண்ணம் இல்லாதவர்களுக்கும் இந்த விசயம் செல்லட்டும் என்பதுதான். இதில், இளையராஜா அவர்களின் முன்னுறை, மற்றும் இதர பொருளுடக்கங்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து மற்ற தகவல்கள் சேகரிப்பு என்று பல உதவிகள் செய்தது திருமதி இந்திரா ஐயர், ஹரி கோவிந்தன் மற்றும் T. R. சங்கர் என்பவர்கள். 

இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைவிட இந்த தொகுப்புக்கு வேறு மரியாதையை யாரும் செய்ய முடியாது என்று சிலர் ஆனந்தம் அடைந்தனர். ஆனால் இது எங்கள் வியாபாரத்தை பாதித்தது காரணம் இதன்  கவர் தயாரிப்பு அத்தனை சிறப்பாக இருப்பதற்கு நிறைய செலவானது, ஆக விலையை அதிகரிக்க வேண்டியானது.  அதனால் பலர் பாடல் கேட்டால் போதும் மற்றவை நமக்கெதற்கு என்று தமிழ் நாட்டிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதியானதையும், கள்ளப்பதிப்புகளையும் வாங்கினார்கள். என் கண் முன்னேயே நடந்தது. சில சமயம் நிலவரங்களை தெரிந்துக்கொள்வதற்காக கடைகளுக்கு நானே செல்வதுண்டு. யாருக்கும் தெரியாது நான்தான் அகி மியூசிக் ஆள் என்பது. அது எனக்கு வியாபார நிலவரங்களையும் மக்கள் எதிர்பார்ப்புகளையும் மனோநிலையையும் புரிந்துக்கொள்ள பெரிதும் உதவும்.  

அப்படி போன சமயம் சிங்கப்பூரில் ஒருவர் ஒரு கடையில் தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதியான சிடியையும் எங்களது சிடியையும் திருப்பி திருப்பி பார்த்து இறுதியில் தமிழ் நாட்டு இறக்குமதியை வாங்கி சென்றார். அவரை வழிமறைத்து ஏன் இதை வாங்குகிறீர்கள் அதை ஏன் தவிர்த்தீர்கள் என்று ஒரு சாதாரண வாடிக்கையாளர் போல் கேட்டேன். அதற்கு அவர் அதன் விலை இதைவிட இரண்டு மடங்கு என்றார். ஆனால் அதில் பாடலுடன் சேர்த்து பல விசயங்கள் எழுதப்பட்டிருக்கே என்றேன், அதற்கு அவர் நாங்கள் பாடல் கேட்டால் போதும் சார், மற்றதெல்லாம் தேவையில்லை என்றார். 

பிறகு லாபம் குறைந்தாலும் பரவாயில்லை என்று விலையை குறைத்தேன். ஆனால் என்ன ஆச்சரியம் சிலர் போன் செய்து இப்படி ஒரு ஆல்பத்திற்கு இப்படி ஒரு கவர், கூடவே பல விசயங்கள் - இதற்கு என்ன விலை போட்டாலும் தகும் ஏன் குறைந்த விலையில் விற்கிறீர்கள் என்றார். :-) எப்பொழுதுமே எல்லா விசயத்திலும் இப்படி எதிர்மறையான கருத்துக்களை எதிர் கொண்டிருக்கிறேன். 

இப்பொழுது இளையராஜா அவர்களின் அபிப்ராயத்தை பார்ப்போம். மீண்டும் அதே போல் தொலைபேசி அழைப்பு மீண்டும் அதே கண்டிப்பு. அவர் பேச்சை நான் கேட்பதே இல்லை, அவர் மீது எனக்கு மரியாதையே இல்லை என்று அவர் நினைத்தார். காரணம் இப்படியான அவரின் அபிப்பராயத்தையும், கண்டிப்பையும் பொருட்படுத்தாது ஒவ்வொரு முறையும் அதை மீறிய ஒரு ரசிகனை அவர் சந்தித்ததில்லை. என்னிடமோ பதில் இல்லை. ஒரு நிசப்தத்தில் எங்கள் உரையாடல் அன்று முடிந்தது. 

மறுநாள் அவருக்கு எங்கள் திருவாசக சிடிக்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதில் இல்லை. ஒருமாதம் கழித்து திரும்ப அழைக்கிறார். “அகிலன் உங்கள் வெளியீட்டில் இருந்து ஒரு 20 சிடிகளை எனக்கு அனுப்பி வையுங்கள்.வெளிநாடு செல்கிறேன், சில முக்கியமானவர்களை சந்திக்க. அவர்களுக்கு தருவதற்கு. உங்களுடைய வெளியீடு ரொம்பவும் பிரமாதமாக இருக்கிறது. எல்லா தகவல்களும் நிறைவாய் இருக்கிறது.”  என்றார்.  நான் நன்றி என்று மட்டும் பதிலாக அளித்தேன். ஆனால் அவர் மீது எனக்கிருக்கும் மரியாதையை பாசாங்கு வார்த்தைகளிலும் செயல்களிலும் இல்லாமல், என் வேலையின் வாயிலாக உணர்ந்தார், என்பதில் நான் மன நிறைவடைந்தேன்.

பிறகு, அவப்போது என்னிடம் இருந்து அகி மியூசிக்கின் திருவாசக சிடிகளை கேட்பார் எங்காவது அவர் சென்றாலோ அல்லது யாராவது அவரை சந்திக்கவிருந்தாலோ அதை அவர்களிடம் கொடுப்பதற்கு.

அம்மா பாமாலையை அகி மியூசிக் வெளியிட்டப்பிறகு, அதை கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்ற பொழுது அவரும் ஜீவா அம்மா அவர்களும் கொல்லூர் சென்றுக் கொண்டிருந்தார்கள். சிடி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். கொல்லூரில் இருந்து அவர் திரும்பிய பிறகு, அகி மியூசிக் வெளியிட்ட அம்மாபாமாலை அற்புதமான டிசைன், மிகவும் அழகான வண்ணம். என்னைவிட ஜீவா அம்மாவுக்கு
ரொம்ப பிடித்து போனது என்றார் புன்னைகையுடன். அந்த சிடியில் என்றோ அவர் கொல்லூர் அனுபவத்தை பற்றி எழுதிய குறிப்பையும் இணைத்திருந்தோம்.

எப்படி ஒவ்வொரு முறையும் அவரை நானும் என்னை அவரும் எதிர்கொண்டோம் என்பதை இனி தொடர்ந்து எழுதுகிறேன். பலரும் பலமுறையும் நான் அவரை அவமதிப்பதாக சொல்லியிருந்தார்கள். அவருடன் நான் நேரில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தவர்கள் எப்படி இப்படி மரியாதை தெரியாவனிடம் நீங்கள் பழகுகிறீர்கள் என்று கூட கேட்டிருக்கிறார்கள். 

ஒரு முறை அவர் கையைப்பிடித்து குலுக்கிவிட்டு விடைப்பெற்று வெளியே வந்ததும் யாரும் அவரை தொடுவதை அவர் விரும்புவதில்லை. நீங்கள் அவர் கையை தொடுவது சரியில்லை என்றனர். அவர் ஏதும் சொல்லவில்லையே என்றதற்கு ஒருவேளை உங்களிடமிருந்து ஒரு நல்ல வைப்ரேஷன் வருகிறது என்று நினைக்கிறோம் என்றார்கள். 

அவர் ஸ்டூடியோவில் நடந்து போனால் எதிர்படுபவர்கள் எல்லோரும் அவர் காலில் விழுவார்கள், ஒதுங்கி ஓரமாக நின்று வணக்கம் சொல்வார்கள். கொஞ்ச நாளில் எனக்கு அது உறுத்தத் தொடங்கியது. காரணம் மற்றவர்களின் உறுத்தல் பார்வையும் நான் இதுவரையில் அவர் காலில் விழுந்தது இல்லையே என்பதும்.

இது மிகவும் உறுத்தலாக தொடர்ந்துக்கொண்டே இருக்க அவரிடமே ஒருமுறை கேட்டேன், “ சார் (நான் மற்றவர்கள் போல் அய்யா, அப்பா என்றெல்லாம் கூப்பிட்டதில்லை) நான் உங்கள் காலில் விழுந்ததே இல்லையே எனக்கு மரியாதை தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்று. அவர் சிரித்துவிட்டு மரியாதை என்பது மனசுல இருந்தா போதாதா? அவர்கள் விழுகிறார்கள் அது அவர்கள் விருப்பம் என்னால் தடுக்கவும் முடியவில்லை. அதே சமயம் நீங்களும் அப்படி செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது அவரவர் விருப்பம்”  இது நடந்தது 2005 இல்.


அடுத்து அவருடைய இசையில் நான் வெளியிட்டது மியூசிக் மெசாய்யா Music Messiah என்ற தொகுப்பு. இதைப்பற்றி நாளையோ அதற்கு மறுநாளோ சொல்கிறேன். 

1 comment:

Krubhakaran said...

Expecting more experiences sir. Write more.