Monday, May 26, 2014

நானும் இசைஞானியும் 3

மியூசிக் மெசாய்யா வெளியிட்டவுடனேயே அது போல் இன்னும் நான்கு ஆல்பங்கள் இருக்கிறது. வரிசையாக அதையும் நீங்களே வெளியிடுங்கள் என்றார் இளையராஜா அவர்கள். அன்றைய எனது பொருளாதார சிக்கல்களும், அதே சமயம் அவர் நம்பிக்கையை காப்பாற்றியாக வேண்டும் என்ற கவனமும் என்னை அதிலிருந்து பின்வாங்க வைத்தது. “சார் இப்பொழுதுதான் இதை வெளியிட்டு இருக்கிறோம், நல்ல விற்பனையை உங்களுக்கு காட்டிவிடுகிறேன், பிறகு மற்றவைகளை பேசலாம் என்றேன். அதே சமயம் நீங்கள் இதற்காக நிறைய செலவு செய்திருப்பீர்கள். நான் ராயல்டி முறையில் வாங்க விரும்பவில்லை. உங்களுக்கு மனநிறைவு வரும்படி நான் நடந்து கொண்டபிறகு அவைகளை எனக்கு கொடுங்கள்” என்று பதில் சொன்னேன்.  

2007 அவரிடமிருந்து அம்மா பாமாலை என்ற ஆல்பத்தை வாங்கினேன், முதல் முறையாக முழு உரிமையை நாங்கள் வாங்கிய ஆல்பம் என்றால் அது அன்னை மூகாம்பிகையின் மீது அவர் இயற்றிய அம்மா பாமாலை பாடல் தொகுப்பாகும். அது நடந்தது சிங்கப்பூரில் அன்றுதான் முடிவானது அவருடைய மற்ற எல்லா பழையப் பாடல்களையும் நானே வெளியீடு செய்வதென்பது. எனக்கு அதில் தயக்கமிருந்தது காரணம் எகோ, மியூசிக் மாஸ்டர், சரிகமா, யுனிவெர்சல், இன்ரீக்கோ என்று பலரும் அவருடைய இசைக்கு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கும் பொழுது நான் எப்படி இதில் நுழைவது என்பதும் சட்டப்படி இது சாத்தியமா என்பதும்தான். 

“யாரும் ராயல்டி தருவதில்லை எனக்கும் சரி, தயாரிப்பாளர்களுக்கும் சரி. எங்களின் ஒப்பந்தப்படி அவர்கள் ராயல்டி தரவேண்டும், ஆனால் இதுவரை யாரும் அதை செய்வதில்லை. என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது” என்றார்.  அவர் பேச்சை நான் நம்பிதான் ஆக வேண்டும். அதனால் தலையசைத்தேன். 

பிறகு நடந்தது நான் பார்த்த இளையராஜா கட்டுறையில் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் 2007 பெற்ற உரிமத்தை பணம் செய்ய முடியவில்லை காரணம் மார்கெட்டில் இதற்கு முன்னமே இருந்த ஆடியோ நிறுவனங்கள் மொபைல் டிஜிட்டல் சிடி என்று எல்லா நிலைகளிலும் ஆழுமையுடன் இருந்தார்கள். மொபைல், வானொலி என்று எங்கும் நுழையமுடியவில்லை. அவர்களிடம் இருக்கும் உரிமம் எப்படி உங்களுக்கு வந்தது? அவர் அதை உங்களுக்கு தந்திருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? ஒப்பந்தங்கள் இருந்தும் அதை ஏற்க மறுத்து, நம்ப மறுத்து கதவுகளை சாத்தினார்கள்.  வக்கில் நோட்டிஸ் எல்லாம் அனுப்பி பணம் செலவழித்து பார்த்தாகிட்டது. ஒன்றும் பிரயோஜனம் இல்லை.  

இரண்டு வருடங்கள் இப்படியே செலவுகளால் கரைந்தது. இறுதியாக 2010 ஜனவரி மாதம் ஒரு பத்திரிக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம். அவரே அதை தெளிவு படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்று முடிவானது. அவருக்கு தொடர்புக் கொண்டு இதைப் பற்றி விளக்கி அவரை சந்திக்க நினைத்திருந்தேன்.  

இந்த இரண்டு வருடம் யாரும் எங்கள் உறவில் தலையிடவில்லை என்று சொல்ல முடியாது. ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது கூட வர்னர் பிரதர்ஸில் நான் இருந்த போது ஏற்பட்டத் தொடர்பாலும் அவருக்கு அந்த அவார்ட் கிடைக்க நான் தான் காரணம் என்றும் கூட சொல்லியிருந்திருக்கிறார்கள். காரணம் 2007 நான் ஏ ஆர் ரஹ்மானின் காட்ஃபாதர் (வரலாறு) வெளியிட்டிருந்தேன். எப்படி நாங்கள் வெளியிடும் எல்லா ராஜா பாடல்களும் ஏ ஆருக்கு ஒரு சிடி அனுப்பி வைக்கப்படுகிறதோ அதேபோல் காட்ஃபாதர் சிடியும் இளையராஜா அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில மலேசிய வெளியீடுகளான ஶ்ரீ ராகவேந்திரா மற்றும் கண்ட நாள் என்று அனைத்தும் அவர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரு முறை அவரிடம் அந்தத் தொகுப்புகள் பற்றி கருத்து கேட்ட போது. எல்லாம் இசைதானே இதுதான் சரி இது தவறு என்று நான் எப்படி சொல்வது என்றார். இன்றைக்கு உள்ள இசை தரமில்லாமல் இருப்பது போல் தெரிகிறேதே என்று கேட்டதற்கு. இசை ஒரு சமுத்திரம் அதில் எவ்வளவு உங்களுக்கு தெரியும் அதில் தரம் குறைந்திருக்கிறதா இல்லையா என்பதும் உங்களுக்கு எப்படி தெரியும்? யாருடைய இசையையும் தனிப்பட்ட முறையில் அவர் அவமதித்ததே கிடையாது. 

ஆனால் ஏ ஆருக்கு ஆஸ்கார் கிடைக்க நான்தான் காரணம் என்பன போன்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் எப்படிதான் தேடிப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எதற்கு இதை செய்கிறார்கள். இதனால் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை. எனக்கு அது மிகப்பெரிய காமெடியாக இருந்தது. கோபத்திற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது. அவரிடமே ஒருவர் சார் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டியது என்று ஜால்றா தட்டியபோது “அவரவருக்கு எது என்று எழுதியிருக்கிறதோ அதுதான் நடக்கும். அவர்களுடைய வேலையை அவர்கள் செய்கிறார்கள்,  என்னுடைய வேலையை நான் செய்கிறேன் இதில் என்ன இருக்கிறது?” இதுதான் அவருடைய பதிலாக இருந்தது.  

2010 இல் பத்திரிக்கை சந்திப்பு என்று முடிவானதும். அவரிடம் செய்தியை சொல்லி அதற்கான காரணத்தையும் விளக்கி சம்மதம் கேட்டேன். சம்மதித்தார். 5 ஆம் திகதி ஜனவரி மாதம் 2010. ஒரு வாரம் கால அவகாசம்தான் இருந்தது. எங்கு நடத்தலாம் என்று சிலரிடம் ஆலோசனை கேட்டதற்கு அவர் மிகப்பெரிய நபர், ஒரு மிகப்பெரிய ஹோட்டல் அல்லது பெரிய தியேட்டர்களில் நடத்தினால்தான் அவருக்கு மரியாதை என்று சொன்னார்கள். விசாரித்தவரை அதை நடத்த செலவு பல லட்சங்களாக இருந்தது. என்னால் அவ்வளவு தொகை செலவழிக்கும் சக்தியில்லை.  யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை என்று நானே தேடி இறுதியாக சென்னை ப்ரெஸ் கிளாப்பில் (Chennai Press Club) நடத்தலாம் என்று முடிவு செய்தேன். வாடகை 350 ரூபாயோ அல்லது 3,500 ரூபாய் மட்டுமே. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு 30 ஆயிரத்துக்குள் முடித்து விடலாம் என்று தைரியம் வந்தது.  

இப்பொழுது பிரச்சனை ஆரம்பமானது. சில அக்கறையாளர்கள் எப்படி நீங்கள் அங்கு நடத்த முடியும்? அவருடை பெயருக்கும் கவுரவத்திற்கும் இது சரிப்பட்டு வராது என்றனர். இடத்தை உடனடியாக மாற்ற சொல்லி வற்புறுத்தினர். பத்திரிக்கையாளர்களுக்கு இந்த நிகழ்வைப் பற்றி தெரியப்படுத்திய போது அவர்களும் இதைதான் கேட்டார்கள். “சார், அவர் இது போன்ற இடத்திற்கெல்லாம் வருவாரா?. அவரு என்ன சாதாரண ஆளா?. நீங்கள் சொல்றீங்கனு நாங்க அங்கு வந்து அவர் வரவில்லைனா அசிங்கமாயிடும்னு” எச்சரித்தார்கள். கொஞ்சம் பதற்றமானது. எல்லாவற்றையும் தனியாளாக இருந்து செய்ய சிரமமாகவும் இருந்தது.  அவர் வருவாரா வர மாட்டார என்று அச்சம் வேறு தொற்றிக்கொண்டது.  

அப்பொழுது அவரிடமிருந்து அழைப்பு. “இங்கு வக்கீல் ஒருவர் வந்திருக்கிறார், இந்த பத்திரிக்கை சந்திப்பைப் பற்றி பேச வேண்டும், வீட்டுக்கு வருகிறீர்களா?” என்றார். பகீரென்றது. “அசிங்கமாயிடும்” என்று பத்திரிக்கையாளர்கள் சொன்னது ஞாபகம் வந்தது. பதற்றத்துடன் வீட்டிற்கு சென்றேன். நினைத்தது போலவே இருவர், இளையராஜா அவர்களின் நெருங்கிய ஒருவருக்கு நட்பாக இருப்பவர்கள். இளையராஜா அவர்களை அந்த சந்திப்புக்கு செல்லவேண்டாம். அதனால் பல சட்ட சிக்கல்களை அவர் எதிர் நோக்க நேரிடம். மற்றவர்கள் உரிமை பாராட்டிக்கொண்டிருக்கும் உரிமங்களை எப்படி நீங்கள் இவருக்கு தரமுடியும். தப்பு நடந்துவிட்டது, ஆனால் அதை நீங்கள் பத்திரிக்கை அறிக்கையாக வெளியிட்டீர்கள் என்றால் அது சட்டப் பிரச்சனையானால் உங்களுக்கு பெறும் சிக்கலாகிவிடும் அதோடு உங்கள் நற்பெயரும் பாதிக்கப்படும்” என்றெல்லாம் அச்சுறுத்தினார்கள். அதில் ஒருவர் பிரபல நடிகரும் கூட. வார்த்தைக்கு வார்த்தை அப்பா என்பதும் உங்கள் மீதிருக்கும் அன்பினால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதாலும் தான் இதை சொல்கிறோம் என்றெல்லாம் அன்பு பாராட்டினார்கள்.

அவர் அமைதியாகவே இருந்தார். நான் “சார் இப்போ என்ன செய்வது? எல்லா ஏற்பாடுகளும் நடந்துவிட்டது, பத்திரிக்கைகளுக்கு எல்லாம் தெரியப்படுத்தியாகிவிட்டது” என்றேன். அவர் “ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் நான் ரமணாஸ்ரமம் சென்றுவிடுவேன் அங்கு சென்றப் பிறகு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டார். தூக்கி வாரிப்போட்டது. எங்கிருந்து இவர்கள் எல்லாம் வருகிறார்கள். எதற்காக என்னை மட்டும் இப்படி குறி வைத்து தாக்குகிறார்கள் என்று விளங்கவே இல்லை. சரி என்று கூறி மெளனமாக வெளியே வந்தேன். என்ன செய்வது? எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. ரமணரிடம் செல்கிறார். அவர்விட்ட வழி என்று ஹோட்டலுக்கு சென்று அமைதியாக படுத்துவிட்டேன். 

இரவு இளையராஜா அவர்கள் அந்த நடிகரின் வீட்டுக்கு சென்று எல்லா ஒப்பந்தங்களையும் தரும்படி கேட்டுக்கொண்டார். நான் அவர் வீட்டிற்கு சென்றேன், ஒப்பந்தங்களையெல்லாம் வாங்கியவர் அதை படித்துவிட்டு ஏதும் ஆலோசனை கூறுவார் என்றுப் பார்த்தால். உங்களுக்கு “அப்பா” எப்படி பழக்கம், எவ்வளவுக்கு வாங்கினீர்கள்? ஏன் உங்களுக்கு தந்தார் இப்படியான கேள்விகள்தான் நிறைந்திருந்தன. அவரால் நன்மை எதுவும் இல்லை ஆனால் அப்போதைக்கு அந்த பத்திரிக்கை சந்திப்புக்கு முற்றுபுள்ளி வைப்பதில் மட்டும் குறியாக இருந்தார். 

4ஆம் திகதி அதாவது பத்திரிக்கை சந்திப்புக்கு முதல் நாள் அவருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். “சார், எப்படி, வருகுறீர்களா?’ என்று. எந்த இடம் என்று கேட்டார், சென்னை ப்ரெஸ் கிளாப் என்றேன் தயக்கத்துடன். சரி, நீங்கள் வேலைகளை கவனியுங்கள் என்றார். மகிழ்வாக இருந்தாலும், ஒரு நாளில் என்ன செய்வது தனியாளாக? 

நினைவிற்கு வந்தது Ilaiyaraaja Yahoo Group. டாக்டர் விஜயிடமும் நரசிம்மனிடமும் உதவிக் கேட்டேன். தயக்கமின்றி வந்து எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார்கள். பேனர் கட்டுவது முதல். இதே போல் மியூஸிக் மெசாய்யா வெளியீடு போதும் அவர்கள்தான் உறுதுணையாக இருந்தார்கள். இப்பொழுதும் அவர்கள் எனக்காக பேசும் போது “ரிங்கிட்” பேசுகிறதா என்று ஒருவர் கேட்டது மனதுக்கு மிகவும் வலியாக இருக்கிறது. 

அன்று காலையிலிருந்து எந்த வேலையும் என்னை செய்யவிடாமல் உண்மையில் ஒரு முதலாளிப்போலவே பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு எந்த பணமும் நான் தரவில்லை. பத்திரிக்கையாளர்கள் வரதொடங்கினார்கள். எல்லோரும் திரும்ப திரும்ப அவர் கண்டிப்பா வருவாரா வருவாரா என்றுதான் கேட்டார்கள். 

இளையராஜா அவர்கள் திடீரென்று போன் செய்து அந்த இடம் எங்கிருக்கிறது என்றுத் தெரியவில்லை நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டார். எனது மேற்பார்வையிலேயே எல்லாம் நடந்ததால் எப்படி வருவது என்று தெரியாமல் யோசித்தப்போது டாக்டர் விஜய் நினைவுக்கு வந்தார். அவர் எப்பொழுதுமே இளையராஜா அனுமதியோடு இது நடக்கிறதா என்று எல்லா நிகழ்வுகளிலும் கேட்டு கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்குவார். அவரை பொறுத்தவரை இசைஞானி அனுமதியில்லாமல் எதையும் செய்வதில்லை என்பதுதான். ஆனால் அதனாலேயே அவர்மீதும் சந்தேகமும் சின்ன வெறுப்பும் எப்பொழுதும் இருந்தது. ஆனால் அன்று அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. காலையிலேயே இதற்காகத் தயாராக இருந்தார். ஆனாலும் இசைஞானி வருவார என்ற சந்தேகம் அவருக்கும் இருந்தது.

இளையராஜாவிடம் நான் டாக்டர் விஜய்யை அனுப்புகிறேன் சார் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன். இசைஞானியின் காரிலேயே அவரை அழைத்து வந்தார். அதன் பிறகே என் மூச்சு சீராக தொடங்கியது சரியாக 9 மணிக்கு நிகழ்வு என்று நினைக்கிறேன். சரியாக அந்த நேரத்திற்கு வந்திரைங்கினார். நிகழ்வின் தொடக்கதில் கீழே அமர்ந்திருக்கும் பொழுது விஜய்யைக்காட்டி யார் இவர் எல்லா நிகழ்வுகளிலும் இருக்கிறாரே என்று கேட்டார்.  அவரையும் Ilaiyaraaja Yahoo Group பற்றியும் சொன்னேன். தலையசைத்துக்கொண்டார். 

நான் பொதுவில் பேசும் முதல் மேடை பேச்சு இதுதான். நிகழ்வு முடிந்ததும். பேசுவதற்கு முன் எல்லோருக்கும் வணக்கத்தை கூறிவிடுங்கள். அதுதான் முறை என்றார்.  நிகழ்வு முடிந்து பத்திரிக்கைக்காரர்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து நண்பர் நரசிம்மன் வாங்கி வந்த ரமணா சரணம் என்ற சிடிகளை கொடுத்தேன். நிகழ்வுக்கு வந்தவர்களில் ஒருவர் என்னை தனியாக அழைத்து பத்திரிக்கைக்காரர்களுக்கு “கவர்” தர வேண்டும். சிடி எல்லாம் வேலைக்காகாது, நாளை செய்தி வராது என்று சொல்லிவிட்டார். என்னிடம் தருவதற்கு பணமில்லை சார் என்று முடிந்தவரை சொல்லிவிட்டேன். 


ஆனால் எல்லோரும் சொன்னது போல் அல்லாமல், மறுநாள் எல்லா பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் இதுதான் செய்தி. பத்திரிக்கையாளர்கள் மீது மரியாதை அதிகமானது. 

ஆனால் அடுத்த நாள் ஆரம்பமானாது அடுத்த பிரச்சனைகள்.  

http://www.thehindu.com/news/national/tamil-nadu/ilayaraja-calls-for-stringent-copyright-laws/article75875.ece

நானும் இசைஞானியும். 2

மியூசி மெசாய்யாவிற்கு இளையராஜா அவர்கள் வைத்திருந்தப் பெயர் மூட்ஸ் ஆப் இளையராஜா Moods of Ilaiyaraaja. இந்தத் தொகுப்பு பற்றியும் ரமணர் கான ரதம் பற்றியும் எனக்குத் தெரிய வந்தது அப்பொழுது அவருடைய அதிகாரப்பூர்வ இணைய தளமாக இயங்கி வந்த ராஜாங்கம் என்ற வலைத்தளம் மூலமாக. அதை பிரஸாத் கோபாலும் வேறு சில நண்பர்களும் நடத்தி வந்தார்கள். அவர்கள் இன்னமும் எனது நெருங்கிய நண்பர்களாக இருந்தும் அவர்கள் பெயர்களை நான் இங்கு வெளியிடாததற்கு முக்கிய காரணம் அவர்கள் எல்லோரும் இப்பொழுது எதிலும் கலந்துக்கொள்ளாமல் ஒதுங்கியிருக்கிறார்கள், சில கசப்பான காரணங்களால். 

அந்த வலைத்தளத்தில் அடுத்த வெளியீடு மூட்ஸ் ஆப் இளையராஜா என்றும் அதன் சில நிமிட இசை சாம்பளையும் வெளியிட்டு இருந்தார்கள். அந்த தொகுப்பு இந்த முறை நான் வெளியிட இளையராஜா அவர்கள்   அனுமதியளித்திருந்தார். அதன் டிஏதி (DAT) கேசட்டை தரும்பொழுது இதில் 10 இசைப் பாடல்கள் உண்டு ஆனால் எல்லாம் தனிதனியாக பிரிக்கப்படாமல் இருக்கிறது நீங்களே பிரித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.  நானும் சரியென்று சொல்லிவிட்டேன். 

அந்த இசையை கேட்க தொடங்கியதும் பல்வேறு குழப்பங்கள் வரத்தொடங்கியது. அதில் முதன்மை குழப்பம் என்னவென்றால் இதை எப்படிப் பிரிப்பது என்பதுதான். காரணம் பல இடங்களில் நிசப்தமும் இடைவெளியும் வரும். தொடர்ச்சியற்ற இசைப்போல் தோன்றும் இடங்களையெல்லாம் பிரித்து பார்த்தபோது மொத்தம் 17 இசைப் பாடல்கள். அவர் பத்துதானே சொன்னார், எப்படி 17 வருகிறது என்று தெரியவில்லை. இசை தொழில் நூட்பத்தில் இது முதல் அனுபவம் என்பதால் இசை ஆளுமை கொண்ட நண்பர் ஜெய் ராகவேந்திரா அவர்களின் உதவியை நாடினேன். 

அவர் பிரித்த எடுத்தப் போது இளையராஜா அவர்கள் கூறியிருந்தது போல் 10 இசைப் பாடல்கள்தான் கிடைத்தது. அப்பொழுது ஜெய் சொன்னார், “சார் இசையில் சில இடங்களில் நிசப்தம் வருவது மெளனம் போல்” என்று. இசையையும் மெளனத்தையும் நான் புரிய நல்ல அனுபவம் அது. மெளனம் என்பது பேச்சின் முடிவோ அல்லது நிராகரிப்போ அல்ல. மெளனத்திற்கு எப்பொழுதுமே அர்த்தம் இருப்பதுபோல் இசையில் மெளனம் என்பதும் அர்த்ததுடனேயே நகர்கிறது. எங்கு இசை முடிகிறது, எங்கு இசையின் மெளனம் முடிவல்ல என்பதை விளக்கினார். 

பிறகு அந்த இசையை கேட்கத் தொடங்கினேன். அது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். அப்படியொரு இசை அனுபவம் இதுவரை இருந்ததில்லை.  அதிலும் இந்தியாவில் யாருமே இப்படி ஒரு இசையை இதுவரை வெளியிட்டதில்லை. அது ஏற்கனவே வெளியாகிய குரு என்ற மலையாளப் படத்தின் பின்னனி இசை. ஆனால் ராஜா அவர்களால் காட்சியையும் மீறி இசையை நீட்டி இதை உருவாக்கியிருந்தார். ஹாலிவூட் படங்களில் இது போன்ற இசை தொகுப்புகள் வருவது சகஜம் ஆனால் இந்தியாவில் இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். 

இதை எப்படி வெற்றியடைய செய்வது. காரணம் காட்சிகள் இல்லாமல் இதுபோன்ற இசையை ரசிக்கும் பக்குவம் தமிழ் ரசிகர்களுக்கு இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அந்த இசையில் தொடக்கம், நடு, கிளைமெக்ஸ், முடிவு என்று ஒரு நேர்த்தியை உணர முடிந்தது.  ஆனால் எப்படி ஒவ்வொரு பாடலுக்கும் பெயரிடுவது. ஆல்பத்திற்கே என்ன தலைப்பிடுவது. இந்த யோசனை பல மாதங்கள் இழுத்தடித்தது. 2004 இல் பெற்ற ஆல்பத்தை வெளியிட எனக்கு 2 வருடங்கள் ஆனது. இளையராஜா அவர்களும் பல முறை இதை கேட்டு வந்தார், “ஏன் இன்னும் தாமதம்?” என்று. 

பிறகு இதற்கு ஒரு அற்புதமான கதை உருவாக்கி இந்த இசையை ரசிகர்கள் உள்வாங்கிகொள்ளும் படி செய்யலாம். அந்த கதையின் கற்பனை அவர்களை இசையினூடே வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும் என்று தோன்றியது. உடனே தமிழ் நாட்டில் சில பிரபல எழுத்தாளர்களை அணுகி இசையை கொடுத்து கதை எழுத கேட்டிருந்தேன். எல்லோரும் இசையை கேட்டார்கள் ஆனால் யாராலும் உள் வாங்க முடியவில்லை, கதைக்கான கருவும் களமும் அவர்களுக்கு வரவில்லை. 

வேறு வழியில்லாமல் ஒரு சாதாரண கதையை நானே எழுதினேன். கதை எழுதும் கற்பனையும் திறனும் எனக்கில்லை. ஆனால் இந்த இசையை உள்வாங்கவும், கற்பனையும் இசையும் சங்கமிக்கும் ஒரு சூழலை உருவாக்கும் விதமாகவும் ஒரு சின்ன கதையை நானே உருவாக்கினேன். அதன் வழி அந்த 10 இசை பாடலுக்கும் என்னால் தலைப்பு இடு முடிந்தது. அதன் காரணமாக தோன்றிய அந்த இசை தொகுப்பின் தலைப்பே மியூசிக் மெசாய்யா. இந்த மெசாய்யா என்ற வார்த்தையும் டைமஸ் ஆங்கில பத்திரிக்கையில் அந்த சமயம் வந்த ஒரு கணிணி சார்ந்த கட்டுறையின் மூலமாக வந்த யோசனை.

அதை அவரிடம் தெரியப் படுத்தியதும் மூட்ஸ் ஆப் ராஜாதான் சிறப்பாக இருக்கும் காரணம் இதில் பலவிதமான மூட்ஸ் இருக்கிறது. முழு இசையும் ஒரே போக்கில் இல்லை அதே சமயம் இதை பின்னனி இசை என்றும் சொல்ல முடியாது அதனால் மூட்ஸ் ஆப் இளையராஜா என்று வைத்துவிடும் படி கூறினார். பிறகு நான் எல்லா காரணங்களையும் தெரியப்படுத்தினேன். சற்று நேரம் அமைதியாக இருந்தவர் பிறகு சம்மதம் தெரிவித்தார்.  

இந்த முறை இந்தியாவில் வெளியிடுவது என்று முடிவு செய்தேன். கவிஞர் மனுஷ்ய புத்திரன் மூலமாக அதற்கு ஏற்பாடுகள் எல்லாம் நடந்தது. இங்குதான் பிரச்சனையும் வந்தது. சில ரசிகர்கள் அவரிடமும் என்னிடமும் இது என்ன மியூஸிக் மெசாய்யா? ஒரு கிருஸ்துவ ஆல்பம் போன்ற தோற்றத்தை தருகிறது. திருவாசகத்தை வெளியிட்ட இவருக்கு இப்படியொரு இமெஜ் தேவையில்லை, மாற்றுங்கள் என்றனர்.  அதிலும் பாடல் தலைப்புகளும் அப்படிதான் இருக்கிறது. கதையில் இந்திரன் போன்று பல இந்து தேவர்கள் சொல்லப்பட்டிருந்தாலும் தலைப்பு ஒவ்வொன்றும் கிருஸ்துவத்திலும் பைபளிலும் வருவது போன்று உள்ளது என்று நெருக்கடிகள் கொடுத்தார்கள். 

அதிலும் திருவாசகம் ஒரு கிருஸ்துவ அமைப்பால் வெளியிடப்பட்டது. இப்பொழுது இந்த ஆல்பமும் கிருஸ்துவ தோற்றத்தோடு வந்தால் பலரும் இளையராஜா அவர்களை கிருஸ்துவ அமைப்போடு தொடர்படுத்த முன்வருவார்கள் என்று இதை நிறுத்தம் படி கேட்டனர்.  எல்லா வேலைகளும் நடந்துவிட்டது. மொத்தம் 20 பக்கங்கள் அதன் கவரில். எல்லாவற்றையும் எப்படி மாற்றுவது. பெரிய நட்டமாகிவிடும். எனக்கு வேறு வழி தெரியவில்லை. நாட்களும் நெருங்கிக் கொண்டிருந்தது. 

அவரை சென்று சந்தித்து, இப்படியான நெருக்கடிகள் எனக்கு வருகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை என்றேன். “உங்களுக்குதான் மார்கெட்டிங் தெரியும் எனக்கு இசைதான் தெரியும். எது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதையே செய்யுங்கள்” என்று சொன்னார்.  

சந்தோஷமாக பணியில் இறங்கினேன். வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்திருந்தேன் ஆனால் உறுதி எதுவும் தராமல் பார்க்கலாம் என்று கூறிவிட்டார். பல முறை கேட்டும் இதேதான் பதில். இதற்கு அர்த்தம் தெரியவில்லை அப்பொழுது வருவாரா இல்லையா என்று தெரியவில்லை. 


இப்பொழுது இன்னொரு பிரச்சனை, அவருடைய இசையை நீங்கள் வெளியிடுகிறீர்கள் ஆனால் அவரே வரவில்லையென்றால் என்ன? உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனையா? என்று சினிமா பிரபலங்களே தயக்கம் காட்டினார்கள். என்னிடம் பதில் இல்லை. பலர் ஒருவேளை இது அவர் விருப்பம் இல்லாமல் நடக்கிறதோ என்று சந்தேகப்பட்டார்கள், மறுத்தார்கள். ஆனால் பாலு மகேந்திரா, நடிகர் நாசர், சேரன், நா முத்துக்குமார், திரு பாண்டியராஜன் மற்றும் டைரக்டெர் சரண் அவர்கள் வருவதாக உறுதியளித்தனர்.  ஏற்பாட்டாளரே அதை ஒருங்கிணைத்திருந்தார். இளையராஜா வருவார் என்று நம்பி அவர்களும் வந்திருந்தார்கள். அவர் வருவில்லை என்பதை அங்கு வந்தப்பிறகே அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் இதில் என் தலையீடு இல்லை என்பதால் எந்த இடியும் என் தலையில் விழவில்லை, நல்ல வேளையாக. 

அதிலும் சில ரசிகர்கள் நடிகர் விவேக் மற்றும் பார்த்தீபன் அவர்கள் வந்திருக்கிறார்கள் அவர்களை மேடையில் அமர வழிசெய்ய வேண்டும் என்றனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன். அவர்கள் ஒரு ரசிகராகதான் வந்தார்கள், நிகழ்ச்சி நிரலில் இல்லாத விசயங்களுக்கு இடம் தர எனக்கு விரும்பமில்லை.

இது போன்ற நெருக்கடிகளால், இளையராஜா அவர்கள் வராததும் எனக்கு கோபத்தை உண்டு பண்ணியது.. உறுதியாக சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அவரிடமிருந்து ஒரு எஸ் எம் எஸ் வந்தது. நான் ரமணாசிரமத்தில் இருக்கிறேன். நிகழ்ச்சி நல்ல படியாக நடக்க எனது வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் என்று. இது நடந்தது 7 ஜனவரி 2007. எனது கோபம் அப்படியே தணிந்து போனது. அக்கறையாலும் அன்பாலும் வந்த எஸ் எம் எஸ் என்பதை உணர முடிந்தது. 


அடுத்த சம்பவத்தைப் பற்றி அடுத்த முறை எழுதுகிறேன்.

நானும் இசைஞானியும். 1

நான் அகி மியூசிக்கில் வெளியிட்ட இளையராஜாவின் முதல் ஆல்பத்தை டிசைன் செய்தவர் நண்பர் நீல்ஸ் (நீலகண்டன் சங்கர்). அது குரு ரமண கீதம். இன்றுவரை அதை போன்ற அற்புதமான டிசைன் எனது தொகுப்பில் இல்லை என்றே சொல்லவேண்டும். அந்த சிடியை வாங்கியவர்கள் உணர்ந்திருப்பார்கள். குரு ரமண கீதத்தின் உண்மையான தலைப்பு ரமணர் கான ரதம். ஆனால் நீல்ஸ் குரு ரமண கீதம் என்று மாற்றினார். முதலில் அந்த சிடியை பெரும் போது தலைப்பை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்ட இசைஞானி அவர்கள் பிறகு முழு கவரையும் உள்ளடக்கத்தையும் பார்த்துவிட்டு, Ilayaraja என்றிருந்த அவரது பெயரை Ilaiyaraaja என்று இனி மாற்றிவிடுங்கள் அதுதான் சரியான முறை என்று மட்டும் சொன்னவர், தலைப்பை மாற்றியதை பொருட்படுத்தாது விட்டுவிட்டார். 

அதன் பிறகு நீல்ஸ் செய்து தந்தது திருவாசகம், லைவ் இன் இத்தாலி, அம்மா பாமாலை. எனக்கு அவரிடம் பிடித்தது ஒவ்வொரு வர்ணத்தேர்வுக்கும் காரணம் சொல்லுவார். Watermark போல் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் சில வேலைபாடுகளுக்கும் காரணம் சொல்வார். அவ்வளவு நுணுக்கமான வேலைகள் அவரிடமிருந்து கிடைக்கும். 

திருவாசகம் இந்தியாவில் வெளியான பொழுது இளையராஜா அவர்களின் மேற்பார்வையில் ஒரு வடிவமைப்பாளர் இசைஞானி எப்படியெல்லாம் கேட்கிறாரோ அப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தார். நானும் அருகில் இருந்தேன். எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ராஜா அவர்கள் இசையில் மேதை ஆனால் வடிவமைப்பை பொருத்த வரை திறமையான ஒருவரின் சுதந்திரத்திற்கு விட்டுவிடலாமே என்று தோன்றியது. அதனால் நான் அகி மியூஸிக் மூலம் வெளியிடப்போவதில் முற்றிலும் வேறு வடிவமைப்பை உருவாக்குவது என்று முடிவெடுத்தேன். காரணம் அது காலத்தால் அழியாத ஒப்பற்ற காவியம். அதன் வடிவமைப்பும் package-உம் ரொம்ப முக்கியம் என்று கருதினேன்.  ஆனால் எனக்கு அந்த சிடியும் படங்களும் வந்த கிடைத்தது மிக மிக தாமதமாக, அதுவும் சென்னையில் ரிலீசான பிறகே வந்தது.  அப்பொழுது நான் நீல்ஸ் இடம் சொன்னது, “இது ஒரு விலை மதிப்பற்றப் பொக்கிஷம். அதை பிரிதிபலிக்கும் படி டிசைன் இருக்க வேண்டும்”. அதோடு அது ஒரு டிஜி பேக் எனப்படும் வித்தியாசமான package அதில் எத்தனை பக்கங்கள் என்றும் சொல்லிவிட்டேன். அவர் ஒரு அற்புதமான டிசைன் செய்து கொடுத்தார். ஆனால் உண்மையில் என் சிந்தையில் இருந்தது முற்றிலும் வேறு.  அது அவருக்கும் தெரியும். ஆனால் எங்களுக்கு போதிய அவகாசம் இல்லை. தாமதித்தால், கள்ளப் பதிப்புகள் இங்கு வந்துவிடும். ஆக அவசர அவசரமாக அதை வெளியிட்டோம். ஆனால் மிகவும் பிரமாதமான வடிவைமைப்பு அது. 

எங்கள் சுதந்திரமான வடிவமைப்பு பற்றி உடனேயே தகவல் இளையராஜா அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் போன் செய்து, “அதை மாற்றியது தவறு, உலகம் முழுவதும் ஒரே வடிவமைப்புதான் வேண்டும், என் அனுமதியில்லாமல் எப்படி மாற்றலாம்” என்றார். சரி என்றும் அடுத்த முறை மாற்றி விடுகிறேன் என்றும் அவரிடம் உறுதி கூறினேன். 

ஆனால் அவர் சொன்ன டிசைனை என் உள் மனது ஒத்துக்கொள்ளவில்லை.  காரணம் அது உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படப்போகும் சாதாரண இசையல்ல. அது ஒரு செய்தி. அதனால் இந்த முறையும் அவர் கட்டளையை மீறி வேறு வடிவமைப்புக்கு நீல்ஸ் உதவியை நாடினேன். இந்த முறை நான் எண்ணியவைகள்,  தேவைப்படும் பக்கங்கள் தரப்போகும் விசயங்கள் என்று எல்லாவற்றையும் தெளிவாக முடிவெடுத்திருந்தேன். 

கூடவே, இளையராஜா அவர்களின் இசையில் வெளிவந்த திருவாசகத்தை மலேசியாவில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்த மலேசிய இந்திய அரசியல் கட்சி மற்றும் சில ஆன்மீக இயக்கங்களின் அதிகபடியான நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.  பத்திரிக்கைகளில் தாறுமாறாக எழுதினார்கள். அதுவெல்லாம் வேறு விசயம்.  

இந்த முறை நீல்ஸ் ஒவ்வொரு திருவாசக சிடி கவரின் ஒவ்வொரு வடிவமைப்புக்கும் அழகான காரணம் வைத்திருந்தார்.  இந்த முறை ஒரு புத்தகமும் உள்ளடக்கப்பட்டது. இந்தியாவில் வெளியானது போல் இளையராஜா அவர்களின் கையெழுத்தில் எழுதப்பட்ட மாணிக்கவாசகரின் திருவாசகமும் அடங்கும். ஆனால் எனது வெளியீட்டில் அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கக் குறிப்பும், எழுதப்பட்ட காலமும் இடமும் என்று இன்னும் சில தகவல்களும் அடங்கியிருந்தது. இதற்கு உதவியவர் அமெரிக்காவை சேர்ந்த திரு சிவா அவர்கள். 

அகி மியூசிக் இந்த முறை வெளியிட்ட சிடி கவர் மொத்தம் ஆறு பக்கங்கள் அடங்கிய ஒரு கவர். அதில் ஒன்று இசைஞானி எழுதிய முன்னுறை, மற்றொரு பக்கம் மாணிக்கவாசகரின் வரலாறு என்று பல குறிப்புகள். இறுதியாக இதுவரை இசைஞானியின் இந்த முயற்சியைப் பற்றிப் புகழ்ந்தவர்களின் பேட்டி குறிப்புகள், அது எந்தப் பத்திரிக்கையில் எந்த திகதி வந்தது என்ற ஆதாரமும் உண்டு. ஏ ஆர் ரஹ்மான், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா என்று பலருடைய ஆனால் முக்கியமான கருத்துக்கள் எல்லாம் சிடி கவரின் பின் அட்டையில் அச்சிடப்பட்டது. சிடி வாங்க எண்ணம் இல்லாதவர்களுக்கும் இந்த விசயம் செல்லட்டும் என்பதுதான். இதில், இளையராஜா அவர்களின் முன்னுறை, மற்றும் இதர பொருளுடக்கங்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து மற்ற தகவல்கள் சேகரிப்பு என்று பல உதவிகள் செய்தது திருமதி இந்திரா ஐயர், ஹரி கோவிந்தன் மற்றும் T. R. சங்கர் என்பவர்கள். 

இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைவிட இந்த தொகுப்புக்கு வேறு மரியாதையை யாரும் செய்ய முடியாது என்று சிலர் ஆனந்தம் அடைந்தனர். ஆனால் இது எங்கள் வியாபாரத்தை பாதித்தது காரணம் இதன்  கவர் தயாரிப்பு அத்தனை சிறப்பாக இருப்பதற்கு நிறைய செலவானது, ஆக விலையை அதிகரிக்க வேண்டியானது.  அதனால் பலர் பாடல் கேட்டால் போதும் மற்றவை நமக்கெதற்கு என்று தமிழ் நாட்டிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதியானதையும், கள்ளப்பதிப்புகளையும் வாங்கினார்கள். என் கண் முன்னேயே நடந்தது. சில சமயம் நிலவரங்களை தெரிந்துக்கொள்வதற்காக கடைகளுக்கு நானே செல்வதுண்டு. யாருக்கும் தெரியாது நான்தான் அகி மியூசிக் ஆள் என்பது. அது எனக்கு வியாபார நிலவரங்களையும் மக்கள் எதிர்பார்ப்புகளையும் மனோநிலையையும் புரிந்துக்கொள்ள பெரிதும் உதவும்.  

அப்படி போன சமயம் சிங்கப்பூரில் ஒருவர் ஒரு கடையில் தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதியான சிடியையும் எங்களது சிடியையும் திருப்பி திருப்பி பார்த்து இறுதியில் தமிழ் நாட்டு இறக்குமதியை வாங்கி சென்றார். அவரை வழிமறைத்து ஏன் இதை வாங்குகிறீர்கள் அதை ஏன் தவிர்த்தீர்கள் என்று ஒரு சாதாரண வாடிக்கையாளர் போல் கேட்டேன். அதற்கு அவர் அதன் விலை இதைவிட இரண்டு மடங்கு என்றார். ஆனால் அதில் பாடலுடன் சேர்த்து பல விசயங்கள் எழுதப்பட்டிருக்கே என்றேன், அதற்கு அவர் நாங்கள் பாடல் கேட்டால் போதும் சார், மற்றதெல்லாம் தேவையில்லை என்றார். 

பிறகு லாபம் குறைந்தாலும் பரவாயில்லை என்று விலையை குறைத்தேன். ஆனால் என்ன ஆச்சரியம் சிலர் போன் செய்து இப்படி ஒரு ஆல்பத்திற்கு இப்படி ஒரு கவர், கூடவே பல விசயங்கள் - இதற்கு என்ன விலை போட்டாலும் தகும் ஏன் குறைந்த விலையில் விற்கிறீர்கள் என்றார். :-) எப்பொழுதுமே எல்லா விசயத்திலும் இப்படி எதிர்மறையான கருத்துக்களை எதிர் கொண்டிருக்கிறேன். 

இப்பொழுது இளையராஜா அவர்களின் அபிப்ராயத்தை பார்ப்போம். மீண்டும் அதே போல் தொலைபேசி அழைப்பு மீண்டும் அதே கண்டிப்பு. அவர் பேச்சை நான் கேட்பதே இல்லை, அவர் மீது எனக்கு மரியாதையே இல்லை என்று அவர் நினைத்தார். காரணம் இப்படியான அவரின் அபிப்பராயத்தையும், கண்டிப்பையும் பொருட்படுத்தாது ஒவ்வொரு முறையும் அதை மீறிய ஒரு ரசிகனை அவர் சந்தித்ததில்லை. என்னிடமோ பதில் இல்லை. ஒரு நிசப்தத்தில் எங்கள் உரையாடல் அன்று முடிந்தது. 

மறுநாள் அவருக்கு எங்கள் திருவாசக சிடிக்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதில் இல்லை. ஒருமாதம் கழித்து திரும்ப அழைக்கிறார். “அகிலன் உங்கள் வெளியீட்டில் இருந்து ஒரு 20 சிடிகளை எனக்கு அனுப்பி வையுங்கள்.வெளிநாடு செல்கிறேன், சில முக்கியமானவர்களை சந்திக்க. அவர்களுக்கு தருவதற்கு. உங்களுடைய வெளியீடு ரொம்பவும் பிரமாதமாக இருக்கிறது. எல்லா தகவல்களும் நிறைவாய் இருக்கிறது.”  என்றார்.  நான் நன்றி என்று மட்டும் பதிலாக அளித்தேன். ஆனால் அவர் மீது எனக்கிருக்கும் மரியாதையை பாசாங்கு வார்த்தைகளிலும் செயல்களிலும் இல்லாமல், என் வேலையின் வாயிலாக உணர்ந்தார், என்பதில் நான் மன நிறைவடைந்தேன்.

பிறகு, அவப்போது என்னிடம் இருந்து அகி மியூசிக்கின் திருவாசக சிடிகளை கேட்பார் எங்காவது அவர் சென்றாலோ அல்லது யாராவது அவரை சந்திக்கவிருந்தாலோ அதை அவர்களிடம் கொடுப்பதற்கு.

அம்மா பாமாலையை அகி மியூசிக் வெளியிட்டப்பிறகு, அதை கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்ற பொழுது அவரும் ஜீவா அம்மா அவர்களும் கொல்லூர் சென்றுக் கொண்டிருந்தார்கள். சிடி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். கொல்லூரில் இருந்து அவர் திரும்பிய பிறகு, அகி மியூசிக் வெளியிட்ட அம்மாபாமாலை அற்புதமான டிசைன், மிகவும் அழகான வண்ணம். என்னைவிட ஜீவா அம்மாவுக்கு
ரொம்ப பிடித்து போனது என்றார் புன்னைகையுடன். அந்த சிடியில் என்றோ அவர் கொல்லூர் அனுபவத்தை பற்றி எழுதிய குறிப்பையும் இணைத்திருந்தோம்.

எப்படி ஒவ்வொரு முறையும் அவரை நானும் என்னை அவரும் எதிர்கொண்டோம் என்பதை இனி தொடர்ந்து எழுதுகிறேன். பலரும் பலமுறையும் நான் அவரை அவமதிப்பதாக சொல்லியிருந்தார்கள். அவருடன் நான் நேரில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தவர்கள் எப்படி இப்படி மரியாதை தெரியாவனிடம் நீங்கள் பழகுகிறீர்கள் என்று கூட கேட்டிருக்கிறார்கள். 

ஒரு முறை அவர் கையைப்பிடித்து குலுக்கிவிட்டு விடைப்பெற்று வெளியே வந்ததும் யாரும் அவரை தொடுவதை அவர் விரும்புவதில்லை. நீங்கள் அவர் கையை தொடுவது சரியில்லை என்றனர். அவர் ஏதும் சொல்லவில்லையே என்றதற்கு ஒருவேளை உங்களிடமிருந்து ஒரு நல்ல வைப்ரேஷன் வருகிறது என்று நினைக்கிறோம் என்றார்கள். 

அவர் ஸ்டூடியோவில் நடந்து போனால் எதிர்படுபவர்கள் எல்லோரும் அவர் காலில் விழுவார்கள், ஒதுங்கி ஓரமாக நின்று வணக்கம் சொல்வார்கள். கொஞ்ச நாளில் எனக்கு அது உறுத்தத் தொடங்கியது. காரணம் மற்றவர்களின் உறுத்தல் பார்வையும் நான் இதுவரையில் அவர் காலில் விழுந்தது இல்லையே என்பதும்.

இது மிகவும் உறுத்தலாக தொடர்ந்துக்கொண்டே இருக்க அவரிடமே ஒருமுறை கேட்டேன், “ சார் (நான் மற்றவர்கள் போல் அய்யா, அப்பா என்றெல்லாம் கூப்பிட்டதில்லை) நான் உங்கள் காலில் விழுந்ததே இல்லையே எனக்கு மரியாதை தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்று. அவர் சிரித்துவிட்டு மரியாதை என்பது மனசுல இருந்தா போதாதா? அவர்கள் விழுகிறார்கள் அது அவர்கள் விருப்பம் என்னால் தடுக்கவும் முடியவில்லை. அதே சமயம் நீங்களும் அப்படி செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது அவரவர் விருப்பம்”  இது நடந்தது 2005 இல்.


அடுத்து அவருடைய இசையில் நான் வெளியிட்டது மியூசிக் மெசாய்யா Music Messiah என்ற தொகுப்பு. இதைப்பற்றி நாளையோ அதற்கு மறுநாளோ சொல்கிறேன். 

Thursday, May 8, 2014

இது காதலா ?

தூரத்தில் இருந்து
இந்த பெளர்ணமியை 
ரசிக்க முடியவில்லை

இடைஞ்சல் தராமல்
இந்த இயற்கையை
கொண்டாட முடியவில்லை

தீண்டாமல்
இந்த விக்ரஹத்தை
பூஜிக்க முடியவில்லை

உரிமை பாராட்டாமல்
இந்த கலையை
அனுபவிக்க முடியவில்லை

ஒன்றி விடுவதும்
கரைந்து விடுவதும் தான்
தீர்வு

Monday, May 5, 2014

உறங்குவதற்கான இசை தொகுப்புகள்

எப்பொழுதும் எதாவது இசையை ஓடிக்கொண்டிருந்தாலோ அல்லது தொலைக்காட்சி இல்லை எதாவது ஒரு சப்தம் இருந்துக்கொண்டிருந்தால்தான் என்னால் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடியும். நிசப்தம் என்னை விழித்திருக்கவே செய்யும்.

எந்த சூழ்நிலையானாலும் எந்த இடத்தில் படுத்தாலும் படுத்ததும் உறங்கிவிடுகிறேன், அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று பலர் பொறாமை பட்டிருக்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் தூக்கமே வரமால் ஏன் குறைந்தது 2 நாட்கள் கூட அதாவது 48 மணிநேரத்திற்கு மேலும் தூங்காமல் இருந்திருக்கிறேன். அந்த மாதிரியான Insomnia அவதிகள் எனக்கு மட்டுமே தெரியும். தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே இருப்பேன். வேலை அதிகம், முடித்தாக வேண்டும் என்ற எனக்கு நானே இட்டுக்கொண்ட கட்டளைகள் என்று அதில் கர்வப்பட்டிருக்கிறேன். அப்படி வேலை செய்வதற்கும் அதிகம் உற்சாகமாய் இருப்பேன்.  48 மணி நேரம் தூங்காதது கூட ஒருவித வலிமையான, உற்சாகமான ஒரு செயல் என்று நினைத்திருந்தேன். Insomnia பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், நான் முழித்திருப்பதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதும் எனக்கு மன அழுத்தம் தரவில்லை, அசதியை உண்டாக்கவில்லை என்பதால் அது Insomnia வாக இருக்க முடியாது மாறாக எனது சுய மன கட்டுப்பாடு என்று நினைத்திருந்தேன்.  

ஆனால் இப்பொழுதெல்லாம் ஓய்வு தேவை என்பதால் பல சமயங்கள் வேலை இருந்தாலும் நிறுத்திவிட்டு முறையாக படுக்கைக்கு சென்றுவிடுகிறேன். ஆனால் தூங்க முடிவதில்லை, நானே விரும்பினாலும். பழக்கப் பட்டதாலோ இல்ல ஒருவகை நோயா என்று இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை. விடிய விடிய வேலை செய்ய முடிகிறது ஆனால் நானே விரும்பினாலும் தூங்க முடியவில்லை. 

இந்த முறை எந்த சப்தமும் இசையும் கூட என்னை தூங்கவிடுவதில்லை. இரவில் உறங்குவதற்காக எந்த இசையை கேட்டாலும் இரைச்சலாகவே தோன்றுகிறது. காலையில் 8 முதல் மாலை 6 மணிவரை இளையராஜாவின் இசையிலேயே மூழ்கிவிடுவதால் (வேலை காரணமாக), இரவு அந்த இசை எனக்கு அழுப்பு தட்டுகிறது. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு இரவும் ஒரு இசை தேவைப்படுகிறது. சில இசைத்தொகுப்புக்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலும் சில சமயம் 1 வாரத்திற்கும் மேலும் கேட்க முடிகிறது, தூங்கவும் முடிகிறது.

என்னை பொறுத்தவரை இசையை நான் மூன்றுவகையாக பார்க்கிறேன். 

ஒன்று உங்களை வெளிக்கடத்துவது
இரண்டு உட்கடத்துவது
மூன்று அதே இடத்தில் இருத்துவது.  

இளையராஜாவின் இசை என்னை வெளிக்கடத்துவது.  உங்களை வேறு ஒரு உலகத்துக்குள் பயணிக்க செய்யும் அதற்கு முக்கியக் காரணம் அதன் இசைக்கோர்வைகள். ஒரு பாட்டுக்கள் பல்வேறு பரிணாமங்களில் பல்வேறு நிலைகளில் பயணிக்கும் அடர்த்தியான இசைகோர்ப்புகள் அவர் இசையில் இருக்கும்.  இத்தகைய இசை கோர்ப்புகள் சிம்பொனி இசையின் அடிப்படை விசயமாக இருந்தாலும், சிம்பொனி இசைகள் எதுவும் என்னை வெளிக்கடத்தியது இல்லை.  இளையராஜாவின் இசை மட்டுமே, பல்வேறு சமயங்களில்.

இந்த அம்சத்தினாலேயே பலர் இன்னமும் இளையராஜாவின் இசைக்குள் செல்ல மறுக்கின்றனர். அவர்களது ரசனையில் இசை என்பது இவ்வளவு நுணுக்கமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது பாடலின் ஒருமித்த ஒரு உணர்வை இல்லாமல் செய்கிறது. பாடலுக்குள் நாம் லயித்திருக்கும் சமயத்தில் அதன் திடீர் இசை சஞ்சாரம் நம்மை அந்தப் பாடலின் மையத்திலிருந்து தூக்கி எறிந்துவிடுவதாக நினைக்கின்றனர்.  அது உண்மைதான். 

எம் எஸ் விஸ்வநாதன், ஏ ஆர் ரஹ்மான் இசை அதை செய்வதில்லை. பாடலின் மையம் சிதையாமல் நம் மனம் களையாமல் ஒரே பாதையில் இட்டு செல்லும்.  ஆனால் இளையராஜாவின் இசையின் நோக்கம் அதுவல்ல.  உடலை கடந்த மனவெளி சஞ்சாரத்திற்கு இட்டு செல்வது அவரின் இசை.இரண்டாவது வகை உட்கடத்துவது.  

ஒரு இசை உங்களை தியானம் செய்வதுபோல் மேலும் மேலும் உள் நோக்கிய அழைத்து செல்கிறது, நமது மனத்தின் இருண்ட குகையின் ஆழம் வரை கொண்டு செல்கிறது, அமைதிப் படுத்துகிறது, தூங்கவும் செய்கிறது என்றால் அது உட்கடத்துவது.  இளையராஜாவின் இசையில் சிறந்த உதாரணம், ரமணா சரணம் மற்றும் ஶ்ரீ ரமணா ஆரம். இந்த மூன்றைத்தவிர அவரின் இசையில் என்னை உட்கடத்தக்கூடிய இசையாக வேறெதையும் நான் அனுபவித்ததில்லை. 
இன்று வரும் பல fast food music எல்லாமே நம்மை அந்த கணத்தை மகிழ்விக்க செய்யும் இசை. உணவு உண்பதுபோல் சினிமா பார்ப்பதுபோல் அந்த தருணத்தை அனுபவிக்க செய்யும் இசை. எல்லாம் அல்ல, பெரும்பாலும்.  

சிரமம் இல்லாமல் தூங்க தொடங்குவதற்கும், தடையில்லாமல் தூங்கவும் சிறந்த இசை உங்களை உட்கடத்த உதவும் இசை. 


1. Philip Glass இன் Metamorphosis தொகுப்புக்கள் அனைத்தும் எனது முதல் தேர்வு.  அது எனது சிந்தனையை ஒருமுகப்படுத்தும். சுவாசத்தை சீராக்கும். நாம் விளக்குகளை அடைத்து கண்களை மூடி இருந்தாலும் தூங்க முடியாமல் போவது நமது மனக்கண்ணில் நம்மை சுற்றி இன்னும் பிரகாசமான வெளிச்சம் இருந்துக்கொண்டே இருக்கும். மனம் நாம் உறங்கும்போது கூட இயங்கிகொண்டே இருக்கும். ஆனால் இந்த இசை என்னை நிதானப்படுத்தி, இருளை கொண்டு வந்து எனது மன இயக்கைத்தை நிறுத்திவிடுகிறது. கண்டிப்பாக இரண்டாவது பாடலுக்கு செல்லும் முன்னோ அல்லது இரண்டாவது பாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போதோ கண்டிப்பாக தூங்கிவிடுவோம்.  
2. எனது அடுத்தத் தேர்வு Jose Luis Bieito அவர்களின் Reflections என்ற கிதார் இசைத் தொகுப்பு. இந்த  இசை என்னை தாலாட்டுவதுபோன்ற ஒரு உணர்வைத் தரும்.  இந்த தொகுப்பில் வரும் Carol Of The Bells என்ற இசையை ஏதோ ஒரு தமிழ் படத்தில் நான் கேட்டிருக்கிறேன். எந்த படம் என்று நினைவில் வர மறுக்கிறது.


3. அடுத்து Chinmaya Dunster என்பவரின் Buddha Moon. இதைவிட வேறெதுவும் உங்களை சாந்தப்படுத்த முடியாது, அமைதி படுத்த முடியாது, அடுத்த விடியலைப் பற்றி நம்பிக்கைத் தரமுடியாது என்று சொல்ல முடியும் என்று நம்புகிறேன். 
4. Chinmaya Dunster இன் Meditation Ragas என்பதும் நல்ல தொகுப்பு. அதில் முக்கியமாக Heart Meditation என்ற பாடல்  சிறப்பானது.  5. Ahmet Bulent Ekin என்பவரின் Sufi’s Journey என்ற துர்க்கியின் சூஃபி இசை தொகுப்பு. இதுவும் நான் பரிந்துரைக்கும் தொகுப்பு. எல்லா சூஃபி இசையும் இப்படி இருப்பதில்லை. இன்று சூஃபி என்ற சித்தாந்ததின் புகழை பயன்படுத்தி பல சூஃபி இசை தொகுப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது. இந்தியின் ஹிமேஸ் ரேஷ்மையாவின் இசையைக் கூட பலரும் சூஃபி இசைதான் என்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. Sufi Trance என்று வேண்டுமானால் சொல்லலாம். 6. George Harrison இன் Psychedelic வகை முயூஸிக் எனது மற்றொரு தேர்வு. ஆனால் இந்த வகை இசையில் விருவிருப்பான பாடல்களும் உண்டு. அது நிச்சயம் உங்களை தூக்கத்திற்கு இட்டு செல்லாது.   நான் இங்கே இடுக்கை இட்டுள்ள பாடல்கள் அனைத்தும் George Harrison இன் ஹரே கிருஷ்ணா பாடல்கள்.  ஹரே கிருஷ்ணாவின் பழைய கீர்த்தனைகள் இவரின் இசையால் அந்த இயக்கத்தின் பக்தி மார்க்கத்தை உலகெங்கும் கொண்டு செல்ல உதவியது. ஏதோ தேவலோக இசைப்போல் தோன்றும். :) ஆனால் நிச்சயமாக நான் தேவலோக இசையை கேட்டதில்லை. இந்த வித்தியாசமான இசையை வேறு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இதில் ஒரே சிக்கல் இந்த பாடல்கள் iTunes அல்லது Deezer  இல் கிடைப்பதில்லை.  YouTube ஒன்றுதான் வழி. 
மேற்கு நாட்டவர்களை பொறுத்தவரை இத்தகைய இசையை Psychedelic வகை முயூஸிக் என்று வகைப்படுத்துகிறார்கள். எந்த வகையாய் இருந்தால் என்ன. நமக்கு தூக்கம் வந்தால் சரி.  7. Niall என்பவரின் Tibet Spiritual Journey என்ற இசை தொகுப்பு எனது இன்னொரு தேர்வு. 

8.  Terry Riley என்பவரின்  Atlantis Nath என்கின்ற இசை தொகுப்பும் சிறந்த ஒன்று.


9. Micheal Nyman என்பவரின் Drowning By Numbers என்ற இசை தொகுப்பு.  இது மேற்கு நாட்டின் செவ்வியல் இசை தொகுப்பு. அந்த இசைக்கே உரித்தான ஏற்றம் இரக்கமும் அடர்த்தியும் இருந்தாலும் அதில் ஒரு minimalist வகை இசைக்கான தன்மை இருக்கும். நான் இதுவரை குறிப்பிட்ட எல்லா இசையிலும் minimalist தன்மையை உங்களால் உணர முடியும். இந்த minimalist இசையைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய Philip Glass பற்றிய கட்டுறையில் நீங்கள் படித்திருந்தாலும் இவ்வகை இசையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விகிபீடியா அல்லது http://www.classicfm.com/discover/periods/modern/minimalism-guide/ நுழைந்து பார்க்கலாம்.  


http://youtu.be/3NRzj0JZk9M


10. இறுதியாக Flower Goddess I என்ற சீன இசை தொகுப்பு.  இந்த இசை தொகுப்புகள் அனைத்தையும் நீங்கள் உறங்க போகும் போது youtube மூலமாக இயக்குவது சிரமம். iTunes வழி வாங்கலாம் ஆனால் அப்படியும் பணம் செலவழிக்க முடியாதவர்கள் உங்கள் Smart Phone இல் அல்லது iPod இல் Deezer பதிவிரக்கம் செய்து, மாதம் பதினாங்கு வெள்ளி சந்தாவின் மூலம் (மலேசியாவில்)  எண்ணற்றப்  பாடல்களை கேட்கலாம். இணைய வசதி இல்லாமல் கூட நீங்கள் கேட்க முடியும்.  உறங்குவதற்கு சரியான போதுமான நேரத்தை செலவிடுங்கள் இல்லையென்றால் இருதய நோய் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகிவிட கூடும்.