Tuesday, April 22, 2014

என் வானம்

உங்களுக்கு வேண்டியதையெல்லாம்
என்னிடம் இருந்து
பெற்றுக்கொள்ளுங்கள்
எனக்கான 
வானத்தை மட்டும்
விட்டுக்கொடுங்கள்

உங்களிடத்தில்
இதை கேட்பதில்
தோற்றுவிடுகிறேன்
உங்கள் தேவைகளில்
என்னுடைய சிறகுகளும்
அடங்கும்

பறக்கவிடுவதன் மூலம்
என்னை தொலைக்க நேரிடும்
என்று அச்சம் கொள்கிறீர்கள்
வானத்தின் விசாலம்
என்னை திரும்பாதவனாகவே
செய்துவிடும் என்று
சந்தேகம் கொள்கிறீர்கள்

இன்னும் இன்னும் 
பெரிய கூண்டாக செய்து
என்னை சிறைப்பிடிக்கிறீர்கள்

நான் கூண்டில் இருப்பதுதான் 
உங்களுக்கும் எனக்குமான
அன்பையும் உறவையும்
காப்பாற்றும் என்று
நியாயம் கற்பிக்கிறீர்கள்
இது நேசத்தின் வெளிபாடு
என்கின்றீர்

வானம் 
என் சிறகுகளுக்கு
எவ்வளவு அவசியமோ
அதுபோல்தான் எனக்கான
உங்களின் கூண்டும்

நான் மீண்டும் மீண்டும்
திரும்பி வந்து 
இந்த கூண்டில் என்னை
சிறைப்படுத்திக் கொள்வேன்
உங்களுக்காக மட்டுமல்ல
எனக்காகவும் கூட

என் மொழியில்
இதை புரியவைக்க
எவ்வளவோ முயற்சிக்கின்றேன்.

கூண்டு செய்வதை
கொஞ்சம் நிறுத்தி
என் மொழியை 
கற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் பயங்கள்
அழியும்

என்றாவது நான் 
விரக்தியடைந்தால்
சிறகுகள் விரித்து
இந்த கூண்டை மட்டுமல்ல
இந்த வீட்டையும் சேர்த்த 
வானத்திற்கு எடுத்து செல்வேன்

அந்த விசாலம் முழுவதுமே
எனக்கானது
உங்களுக்கான இடமோ
இந்த மண்ணில் மட்டுமே
அதை இழக்காதீர்கள்

என்னை பறக்க விடுங்கள்
அதிலும் உங்களுக்கான 
மகிழ்வை தேடுங்கள்
பாதுகாப்பை உணருங்கள்
நான் திரும்பி வருவேன்
நம்புங்கள்

மண்ணில் மட்டும்தான்
இருக்க முடியும்
நான் விரும்பும்
கூண்டு

Saturday, April 19, 2014

இது மட்டும் போதும்


தொலைந்த குழந்தை
தாயை தாவி
அணைப்பது போல்

வீடுவரும் எஜமானனிடம்
வாலாட்டி ஓடிவரும் 
நாயைபோல்

வரண்ட பூமியில் 
விவசாயி 
மழையில் நனைவது போல்

தீர்ப்பு வந்ததும் 
அழுத 
திருநங்கைகள் போல்

லாட்டிரி விழுந்த 
பரம 
ஏழையைப் போல்

மீண்டும் மீண்டும் என்னை
புதுப்பிக்கிறது
பேரானந்தம் தருகிறது
நம்பிக்கை வளர்க்கிறது

இது மட்டுமே என்னை 
நகர்த்துமாயின்
இது மட்டுமே என்னை
ஜீவித்திருக்க செய்யுமாயின்
இதனால் மட்டுமே
எதுவும் சாத்திமாய்விடில் 

இது மட்டுமே போதும்

காதல் போயின் சாதல் 

கண்ணாடி

நமது ஆசைகள்
கனவுகள் 
நம்பிக்கைகள்
அனைத்தும்
இந்த கண்ணாடிக்குள்

நமது பிம்பங்கள்
உண்மையாக ஒருபோதும்
இதில் தெரிந்ததே 
இல்லை
நமது ஆசைகள்
கனவுகள் 
நம்பிக்கைகளின்
பிம்பங்களை மட்டும்தான்
தினம் தினம் 
காணுகின்றோம்
பெருமைக்கொள்கின்றோம்
திருப்தியடைகின்றோம்
அன்றாட வாழ்வை
நகர்த்துகின்றோம். 

உண்மையில் 
நான் எப்படி இருப்பேன்?
சிரிக்கும் போது 
என் கண்கள் 
எப்படி இருக்கும்?
அழும்போது
என் முகம்
எப்படி இருக்கும்? 


கண்ணாடிக்குள்ளிருந்து
நிஜத்துக்கு இழுக்க
முடியவில்லை
கனவுகளை 
பிம்பாமாய் உள்நுழையவும்
முடிவதில்லை

நானே கண்ணாடியானால்,
உணரக்கூடும்
நான் எதுவென்று !

காண்போனும் அற்று
காணப்படுவதும் அற்று.

அந்த நாளுக்காக 
காத்திருப்போம்
இருப்பில்லா நிலையில்
கண்டடைவோம்
உடையும் வேளையிலும்
ஆயிரமாய் உருப்பெறுவோம் 
ஒன்றுக்குள் ஒன்றாய்
முதலும் முடிவுமற்று

திளைப்போம்

Monday, April 14, 2014

முடிவற்ற யாத்ரீகன்

இதுவரை கடந்து வந்த
சுவடுகள் 
எதுவுமே நினைவில்லை
சற்றுமுன் கடந்த
விநாடிகள் கூட

எங்கு வந்திருக்கிறேன்
என்று நிதானித்தப் பிறகே
விவரம் தெரிகிறது.

இவ்வளவு தூரம்
இந்த வழியில் 
எப்படி வந்தேன்?
எத்தனை நிமிடங்களாக வந்துக்கொண்டிருக்கிறேன் ?

தற்சமயம், எங்கு இருக்கிறேன்
எந்த வாகனத்தில் இருக்கிறேன்
எங்கு போக வேண்டும் 
என்பது மட்டும்
தெளிவாக தெரிகிறது

உதய வெளிச்ச தேசம்
எங்கும் தங்கம் மின்னும்
கட்டிடங்கள் - மனிதர்கள்
சந்தோஷத்தின் உச்சம்
முடிவற்ற வாழ்வு
இன்பமட்டுமே தீர்வு
அதை நோக்கிய 
இந்தப் பயணம்

கொஞ்ச நேரத்தில் 
தூங்கி எழுந்தவன் போல்
எங்கு இருக்கிறோம்?
எப்படி வந்தோம்?
எவ்வளவு நேரமாக வருகிறோம்?
மீண்டும் 
குழம்புகிறேன்

மறுபடியும் 
இருக்கும் இடமும்
பயணிக்கும் வாகனமும்
அடைய வேண்டிய தேசமும்
நினைவில் வர
ஆனந்த எல்லையில் 
பயணம் தொடர்கிறேன்

இதுவே மீண்டும் மீண்டும்
நீண்டு கொண்டே இருக்கிறது.
எத்தனை யுகங்களாய் ?
எத்தனை பிறவிகளாய் ?

மீண்டும் இருண்டு தெளிகிறேன்
எங்கு இருக்கிறோம்? 
எப்படி வந்தோம்?
என்ன அனுபவங்களை 
கடந்தோம், கற்றோம்?  

இப்பொழுதும் 
அந்த தூர தேசம்
நினைவில் வர


மீண்டும் பயணிக்கிறேன். 

Thursday, April 3, 2014

பிரகாசிக்கட்டும் இந்த அண்டம்

என் கால வெளி பயணத்தின்
ஒளி வேக ஊர்தி

நான் அதிசயிக்கும் 
பால் வெளி

என் ஆதி ஒளி

என்னில் ஏற்றிடு
உன் தீயை
பிரகாசிக்கட்டும் 
இந்த அண்டம்

மகா அண்டம்

இரவின் நிசப்தம்
ஆழ்கடல் அச்சம் 
பிரபஞ்ச மர்மம்

இதுவல்ல நான் என்ற 
என் மாயை அகற்றி 
சுயம் காட்டும் உன்னை
எப்படி அழைப்பது?

புத்த புன்னகை?
தனிமையின் நிறைவு?
என்னை நிரப்ப முடிந்த
முடிவற்ற வெளி?
காலம்?
இறைவி?

நீ 
எதுவாக இருப்பினும்
காலங்கள் தாண்டி
வருகிறேன்
உன் கருப்பையை நாடி

நான் அடக்காமாகும் 
இறுதி இடம் அதுதான்
என்னை மீண்டும்
உயிர்ப்பிக்கும் 
மகா அண்டமும் அதுதான்