Tuesday, January 28, 2014

லயிலா

அவர்கள் 
என் லயிலாவை
பிடுங்கிக் கொள்ளலாம்
என் காதலை அல்ல

என் சூத்திரங்களை
சூறையாடலாம்
என் உணர்வை அல்ல

என் கோவில்களை
இடிக்கட்டும்
என் குரல்வளைக்கு
அருகிலும் ஒன்றுண்டு

நூற்றில்
ஒன்றைதானே
கோறுகிறார்கள்?
மீதம் இருப்பதில்
அழைப்பேன்.
எல்லாவற்றையும் கோறினாலுமே
பெயரற்று தொழுவேன்

ஆணவத்தாலும்
அச்சத்தாலும்
சட்டங்கள் போடுகிறார்கள்,
என் உடலுக்குதான்

தியாகத்தின் பெயரில்
தொலை தூரம்
செல்லவிருக்கும் தோழர்களே!
என் வாசல் எப்பொழுதும் 
திறந்தே இருக்கும்,
வாருங்கள்

என் லயிலாவை
பகிர்ந்து கொள்வதில்
எனக்கு பொறாமையேதும்
இருக்கப் போவதில்லை


Sunday, January 26, 2014

சென்னை புத்தகச் சந்தை ஜன 2014

சென்னைப் புத்தகச் சந்தையில் வாங்கிய பல புத்தகங்களில் சில முக்கியமான புத்தகளை பகிர்ந்துக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி தரும் என்று நினைக்கிறேன். அந்த சிலதிலும் இன்னும் நான் படிக்காமல் சிலது உண்டு என்றாலும் மேலோட்டமாக சிலதை பகிர்ந்துக்கொள்கிறேன்.  

ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம். மிகவும் அற்புதமான ஒன்று.  (Men Are From Mars, Women Are from Venus). இது மிக பழைய புத்தகம் என்றாலும் ரொம்ப அற்புதமானது. பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள். ஆண்கள் ஏன் சட்டென்று எரிச்சல் அடைகிறார்கள் என்று ஆண் பெண் பற்றிய பல்வேறு மனோவியல், நடத்தைகள் குறித்து ஓர் ஆழமான பார்வை. அதோடு ஆண்களின் மொழி அகராதி, பெண்களின் மொழி அகராதி, அவர்களுக்கிடையேயான உரையாடல்களின் சொற்றொடர் அகராதி என்று ஏராளமான ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதில் உண்டு. கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். 
வெளியீடும் மஞ்சுள் பதிப்பகம்.  அவர்களின் வெளியீடுகளை ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம். http://manjulindia.com/index.php?cPath=42_43&osCsid=s09e7a18c3opc975f5sudnkrp5

அடுத்து நான் படித்தது  இஸ்லாம் - தொடக்கநிலையினருக்கு.  இஸ்லாம் பற்றிய புரிதலுக்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான புத்தகம். சித்திரங்களும் படங்களுடனும் இஸ்லாம் பற்றிய பொதுவான நம் புரிதலை செம்மை படுத்தக்கூடியது. மதங்கள் பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் படிப்பதும் தெரிந்துக்கொள்வது எனது மிகப்பெரிய ஆர்வங்களில் ஒன்று. அதன் காரணமாகவே அவப்போது திருக்குரான் படிப்பது, பைபள் படிப்பது என்பது உண்டு. இந்தப் புத்தகம் இஸ்லாம் பற்றிய நமது பல்வேறு தவறான புரிதல்களை சரிசெய்கிறது. இது இஸ்லாம் அல்லாதவர்களுக்கு மட்டும் அல்ல, இஸ்லாத்தை பேணுபவர்களுக்கும் நிச்சயம் உதவக்கூடியது.  காரணம் நமது மலேசியா நாட்டில்  மின்னல் எப் எம் வானொலியில் ஒரு முறை இஸ்லாமிய நிகழ்ச்சியில் ஒருவர் இஸ்லாமிய பெண்கள் தன்
உள்ளங்கையைத்தவிர மற்ற எல்லா பகுதிகளையும் முழுவதும் மூடும்படி உடை உடுத்தவேண்டும், கைகள் உட்பட. காரணம் அவர்கள் வீட்டில் சகோதரர்களுக்கோ அல்லது தந்தைக்கோ கூட பெண்களின் கைகளை பார்த்தால் கூட காம உணர்வு ஏற்படலாம். அதனால் பெண்கள் இந்த ஒழுக்க நெறியை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. அதை கேட்டு நான் அதிர்ச்சியானதோடு, பல விதங்களில் முரண்பாடுபட்டுள்ளேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தபோது எத்தனை நம்பிக்கைகள், கலாச்சாரத்தாலும், மனிதனின் அறிவு குறைப்பாட்டாலும் மதத்தின் பெயரால் எழுந்த நம்பிக்கைகள் என்று தெரியவந்தது. மாறாக இஸ்லாமின் போதனைகளுக்கும், நபி மொழிக்கும் இதுபோன்ற விசயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர முடிந்தது. அதனால்தான், இது இஸ்லாமியர்களுக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான நூல் என்று நினைக்கிறேன். நமது பாடப்புத்தகங்களில் கூட இஸ்லாத்தை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் போதிக்கப்படுகிறது. அவை எல்லாவற்றையும் விட இது பல மடங்கு மேலான, எளிமையான புத்தகம்.

நம்பிக்கை, பழக்கங்கள், வழிபாடுகள், தீவிரவாதம் என்று மொத்தத்தையும் அலசுகிறது, மிகவும் எளிமையான முறையில். குழந்தகள் கூட படிக்கலாம். நம் மலேசியா நாட்டு கல்வி முறைக்கு இதுதான் சிறந்த புத்தகம் என்று நினைக்கிறேன். இப்பொழுது உள்ள அவர்களின் கல்வி நமக்கு அதிகம்
இஸ்லாத்துக்கு முன்பிருந்த ஜஹிலியாவையும் இஸ்லாத்துக்கு பின்பான போர்களையும் தான் அதிகம் நமக்கு சொல்லித்தருகிறது. ஆக இதுபோன்ற புத்தகங்கள்தான் நம் அரசாங்கத்தின் தேர்வாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.  வெளியீடு அடையாளம் பதிப்பகம்.

அடயாளத்தின் மற்ற வெளியீடுகளையும் வாங்கியுள்ளேன் ஆனால் இன்னும் படிக்கவில்லை.  அதில் சில
மானுடவியல் கோட்பாடுகள், மனநல மருத்துவர் இல்லாத இடத்தில் (மனநல பராமரிப்பு கையேடு),
கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் போன்றவைகள். இந்த புத்தகத்தையும் நான் இன்னும் படிக்காவிட்டாலும் இது நிச்சயமாக ஒரு முக்கியமான நூல் என்றே நினைக்கிறேன். காரணம் நாம் எப்பொழுதுமே எல்லா அறிவிற்கும், நம்பிக்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், மேலை சிந்தனையாளர்களின் கால்களிலேதான் விழுகிறோம். Sigmund Freud, Karl Marx, Adam Smith இப்படி நாம் கணக்கிளடங்காத மேலை சிந்தனையாளர்களை கண்மூடித்தனமாக நம்புகி
றோம். அதில் பல சமயம் வடிவேல் காமெடியில் வருவதுபோல், சிகப்பா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பதுதான் நமது நம்பிக்கையாக
உருபெற்றிருக்கிறது.  உதாரணத்திற்கு Sigmund Freud சிந்தைனைகளுக்கு எதிரான மாற்று சிந்தனை என்றாலுமே வேறு மேலை சிந்தனையாளர்களின் உதவியைதான் நமது அறிவு நாடுகிறது. ஆனால் எத்தனையோ கீழைச்சிந்தனையாளர்கள் மேலை சிந்தனையாளர்களின் கோட்பாடுகளை சித்தாந்தங்களை சந்தேகத்துள்ளாக்கியதோடு அவர்கள் அதை மறுபரிசீலனை செய்ய அவர்களுக்கே உதவியிருக்கிறார்கள். அதை நாம் தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. இல்லையென்றால் அவர்களின் குப்பைகளையும் பொய்களையும் காலப்போக்கில் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவேண்டி வரும்.

உயிர்மையில் சில புத்தகங்கள் மட்டுமே இந்த முறை வாங்கினாலும் அதில் நான் மிகவும் வியப்பும் களைப்பும் அடைந்த ஒரு புத்தகம் என்றால் அது, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? 

மதங்களின் மீதும் கடவுளின் மீதும் எவ்வளவு ஆர்வமோ அதே அளவு வானவியல், அறிவியல் ஆர்வமும் மிகவும் அதிகம். அண்டம் பற்றிய ஆழமான தத்துவங்கள் என்னை நாத்திகனாக்குவதைக் காட்டிலும் மேலும் மேலும் இறையின் மீது ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. அறிவியலின் பற்பல கண்டு பிடிப்புகள் பிரமிப்பை உண்டு பண்ணினாலும் அவர்களின் எண்ணற்ற தோல்விகள், சிந்தாந்த மறுபரீசிலனைகள், இன்னும் அவர்கள் ஏதோ ஓர் உயர்ந்த உண்மையை தேடிக்கொண்டிருப்பதை தெளிவாக காட்டுவது, மதங்களின் இறையின் மீதான எனது ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம். 

அந்த புத்தகத்தை எனது மகன் ஆர்வமாக கொண்டு வந்து நீட்டி படிக்கச் சொல்லும்போது நாளை படிக்கிறேன் என்று அலுத்துக்கொண்டேன். அவன் மேலும் மேலும் வற்புறுத்தவே வேறு வழியில்லாமல் சில பக்கங்களை புரட்டி படித்த போது அது இன்னும் இன்னும் ஆழமாக என்னை கிரகித்துக் கொண்டது. பற்பல ஆச்சரியமூட்டும் அறிவியல் சித்தாந்தங்கள் அதில் விரவிக்கிடந்தது. உதாரணத்திற்கு அண்டம் 3 டைமென்சன் கொண்டது என்று நம்பிவந்ததை சில காலத்திற்கு பிறகு 4 டைமென்சன் என்று விஞ்ஞானிகள் நம்ப ஆரம்பித்தனர்.  இந்த நான்கு டைமென்சனை அவர்கள் நம்பியவுடன், காலம் என்பது மாயை, அந்த காலத்தினூடாக நாம் பயணிக்க முடிந்தால் நாம் இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் போக முடியும் என்று நம்புகிறார்கள். இதையெல்லாம் என் மகனுக்கு எங்களது அன்றாட வாழ்க்கையில் நடந்த, நடக்கும் சம்பவங்களை உதாரணம் காட்டி நான் விளக்கினது எனக்கே மிகவும் சுவாரிசயமானதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அவனும் ஆர்வமாகி சில சிந்தனைகளை முன் மொழிந்தது எனக்கு ஆச்சரியம் ஊட்டியதோடு இதுவரை அவனக்கிருக்கும் ஆர்வம் என்னால் கவனிக்கப்படாமலேயே இருந்திருக்கிறதே என்ற வருத்தையும் உண்டு பண்ணியதோடு, நமது கல்வி அமைப்பும் ஆசிரியர்களும் எந்த வகையிலும் அவன் விரும்பும் கல்வியை தரவே முடியாது என்ற
விரக்தியும் உண்டாக்கியது.

இப்பொழுது விஞ்ஞானிகள் பிரபஞ்சம் 4 டைமென்சன் கொண்டதல்ல மாறாக 11 டைமென்சன் கொண்டது என்ற நம்பிக்கைக்கு வந்தாக படித்தபோது உண்மையிலேயே களைப்படைந்து விட்டேன். இதில் சொல்லப்படாமல் விட்ட பல விசயங்கள் மேலும் மேலும் தேடிப் படிப்பதற்கு நமக்கு ஆர்வத்தை தூண்டுகிறது குறிப்பாக அண்டத்தின் கரும் சக்தி, கரும் பொருள் போன்றவைகளும், பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கிறது போன்ற தகவல்களும் இன்னும் இன்னும் நமது ஆர்வத்தை தூண்டுவதாகவே இருக்கிறது.

மஞ்சுள் பதிப்பகமும் அடையாளமும் இந்த முறை எனக்கு அதிகம் கவனம் ஈர்த்ததாக எண்ணுகிறேன்.  பொதுவாகவே எல்லா தமிழ் பதிப்பகங்களைப்போல் இலக்கியம், சமயம், தன்முனைப்பு என்றில்லாமல் பல்வேறு சிந்தனைகளையும் தளங்களையும் உள்ளடக்கிய எண்ணற்ற புத்தகங்களை இவர்கள் வெளியிட்டுள்ளார்கள். பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உட்பட.

கரும் சக்தி

வண்ண வெளிச்சங்கள் 
நினைத்தேன்
இல்லா வெளியில்
பெரும் வெடிப்பு வந்தது
ஆச்சரிய மகிழ்வில் 
வண்ண ஒளிகளாகவே
அது ஸ்தம்பக்கட்டுமே என்றதும்
கிரகங்கள் ஆனது

வெளியெங்கும் நிரம்பினேன்
கறுந்துவாளையும் எண்ணற்ற சூரியனும்
எல்லைக் காணா வெளி வெள்ளத்திலும்
காற்றாய்
மிதந்தேன்

களைப்பார நினைத்தேன்
பூமி வந்தது
இளைபாரா நினைத்தேன்
மரம் முளைத்தது
மணம் நினைத்தேன்
மலர் பூத்தது
ருசி நினைத்தேன்
கனி விழுந்தது
ஒடுங்க நினைத்தேன்
பெண் வந்தாள்
ஒடுங்கி கடந்து 
உள் நுழைந்தேன்
காதலும் வந்தது
கடவுளும் வந்தான்
காலமும் வந்தது

சில யுகங்களுக்கு பின்

மனமாகி

எல்லாம் என்னுள் ஒடுக்கி

மீண்டும்

வெளியானேன்
கரும் சக்தியானேன்

நானே படைக்கிறேன்
கொடுக்கிறேன் எடுக்கிறேன்
அழிக்கிறேன்
மீண்டும் விழிக்கிறேன்

சூன்யத்தை நிரப்பி
வண்ணங்கள்

தூவுகிறேன்

Tuesday, January 14, 2014

அன்பை வேண்டி கடவுள்

அநாதீர் ஆனவன் என்பதால்
அவன் அனாதையானவன் தான்
பக்தர்கள் 
அவனது உறவுகள் அல்ல
அவர்கள் அன்பும் 
உண்மையல்ல

குறை நீங்க
நலம் நீள
பக்தியும் அன்பும்

அது எப்படி உண்மையாகக் கூடும்? 
அபிஷேகம் அலங்காரம்
காணிக்கை பூஜைகள்
எப்படி அன்பாகக் கூடும்? 

அவனுடைய உலகில் 
அவன் எப்படி 
ஆனந்தமாக இருப்பான்?

அன்பின்மையின் விரக்தியும்
காதலின் வறட்ச்சியும் 
எப்படி அவனை 
அவனாக வைத்திருக்கும்?

பேரிடர்களும் அசம்பாவிதங்களும்
அவன் நிலைகுலையும் போதுதானோ?

சர்வமும் அவன் தான் என்பதால்
துர் சம்பவங்களுக்கும் 
அவன் தானே காரணம்?

மனிதன் போல் 
அன்புக்கு ஏங்குபவனால்
எப்படி அமைதியை
உலக்கு தரமுடியும்?
சுபிட்சமும், ஆனந்தமும்,
தேவைகளுற்றுமாய் அல்லவா
இந்த உலகம் இருந்திருக்க வேண்டும்?

நிச்சயம் அவனும் 
நம்மைப் போலவே
அன்பின் வெளிச்சம் வேண்டி
பிரபஞ்சத்தின் எங்கோ
ஓர் இருள் மூலையில்
தன்நலனுக்காகவே வாழும் 
மனித மனத்தின்
இருள் அறைகளில் 
கலங்கிக் கொண்டுதான் 
இருக்க வேண்டும். 

அன்பே சிவம் என்பது
மனிதனுக்காக கற்பிக்க பட்டதாக இருக்க முடியாது
தன்னகத்தே அன்பில்லாதவன்
தரணியை காக்க இயலாது என்று 
யாரோ ஒரு ஞானி 
அவனுக்கு விட்ட 
எச்சரிக்கையாகவே இருக்கக்கூடும் 

எல்லா சக்தியும் 
அவனிடத்திலிருந்தும்
எல்லா செல்வங்களும் 
அவனிடத்தில் இருந்தும்
அவன் பரம ஏழையாக 
இருக்கிறானே? 

பலவீனனாக
தேவைகள் வேண்டி நிற்கும் 
நம்மைவிட
அன்பையும் காதலையும் வேண்டி நிற்கும் 
அவன்
எவ்வளவு பரிதாபத்திற்குரியவன்? 

காதலை வேண்டி 
பரம்பொருள்
பக்தர்களின் காலடியில்

தன்னல சமூகம் 
தன்போக்கில் திரிகிறது
காணிக்கை மட்டும் 
அவனுக்கு போதுமென்று. 

பரிதாபத்திற்குரிய 
என் இறைவனின் கண்ணீர்
யார் அறியக்கூடும்?

யாரும் அறியாத வரைதான்
அவன் 
கடவுளாக இருக்க முடியும்

Thursday, January 9, 2014

கே பி சுந்தராம்பாள் பாகம் 2


கே பி சுந்தரம்பாள் பற்றிய அற்புதமான வீடியோ


மரணம்

தற்காலிக சந்தோஷங்களில்தான் 
வாழ்க்கை நகர்ந்துக்கிட்டு இருக்கு

நிறந்த தீர்வு தேடுறோம்.. 
அது மரணத்தில் மட்டுமே உண்டு

சில மடையர்கள் 
மரணத்திற்கு பின்பான வாழ்வு
என்று மதங்களை நாடுகிறான்

அப்படி என்னடா 
மரணித்தும் வாழ நினைக்கிறாய்??

காலையில் வேலைக்கு செல்கிறாள்
வீடு வந்ததும் கணவனுக்கு சமைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
இரவு முழுவதும் தூங்காத குழந்தைக்கு
தோழியாகிறாள் 
விடியலை வீட்டாருக்கு அழைக்கிறாள்
மீண்டும் வேலைக்கு செல்கிறாள்
இவளுக்கு என்னால் கொடுக்க முடிந்த நிம்மதி
மரணம்

வயது முதிர்ந்தும் உழைக்கிறார்
பிள்ளைகளின் இருளில் விளக்காய் எரிகிறார்
இன்னமும் மார்பில் எத்தும் 
வயது வந்த குழந்தைகளை
பாறையாய் சுமக்கிறார்
இவருக்கு என்னால் கொடுக்க முடிந்த ஓய்வு
மரணம்

ஆன்மீகம் என்ற போதையில் 
வீட்டைவிட்டு விட்டு
காடு சென்று கடவுளைத்தேடும்
விரக்தி பக்தனா நீ?
புத்தியுள்ள பிள்ளை ஆசிரமம் அமைத்து 
காசு பண்ணும்
தான் “யோகி” என்ற ஆணவத்தால் 
இன்னொறு பிள்ளை 
காவியில் பிச்சை எடுக்கும்.
உங்களுக்கான முக்தியும்
என்னிடம் மட்டுமே உண்டு
அது மரணம்

நிம்மதி தொலைத்தவனை
மரணத்தால் ரட்சிக்கிறேன்
நிம்மதியோடு சமரசம் செய்தவனையும்
மரணத்தால் அணைக்கிறேன்

பெண்கள் தேடும் ஓய்வையும் 
மரணத்தால் அங்கீகரிக்கிறேன்
நீங்காத அன்பால் மாடாய் உழைப்பவனையும்
மரணத்தால் அழைக்கிறேன். 
நீ யோகியாய் இருந்தாலும்
அயோக்கியனாய் இருந்தாலும்
உன்னை மரணம் என்ற சமத்துவத்தின் பேரில்
ஆசிர்வதிப்பேன்

ஆனால் யாருக்குமே
என்றுமே தெரியப்போவதில்லை
எனக்கே நான் 
இந்த மரணத்தை கொடுக்க முடியாது என்பது

மரணத்தால் உண்டு பண்ணியவன்
எப்படி மரிக்க முடியும் ? 

அப்படியே நீங்கள் நினைக்கும்
மரணம்
எனக்கே நேர்ந்தாலும் 
மரணத்தின் பின்பும் 
இருப்பவன் நான் மட்டுமே
மீண்டும் மீண்டும் மரணத்தால்
இந்த உலகை காப்பவனும் 

நான் மட்டுமே