Sunday, February 26, 2012

இவனை கொல்வதா?


எந்த அளவுக்கு 
அடிமைப் படுத்தினாலும்
அதைவிட படுபயங்கரமாய் 
வளர்கிறான்.

இன்னமும் என் சிறையில்தான்
இருக்கிறான்
ஆனால் எவ்வளவு நாள் 
இவனை சிறைப்பிடித்திருக்க முடியுமென்று
தெரியவில்லை. 

பூமியின் எல்லையில்
சக்தி வாய்ந்த 
ஆயுதமொன்று இருப்பதாகவும் 
அதைக் கொண்டு
இவனை அழித்துவிடலாம் என்றும்
இறைவன் சொல்லியிருந்தான். 

பூமியின் 
இறுதி எல்லையை நோக்கிய 
நீண்ட பயணத்தை
நானும் தொடங்கினேன்
உடன்  இந்த மந்திர
சிறைக் கூண்டையும்
இதில் இவனையும் 
இழுத்துக் கொண்டே
செல்ல வேண்டியிருந்தது. 
எனது உயிரின் ஒரு பகுதி
இவனிடம் இருந்தது.
இவனை விட்டு என்னால் 
எங்கும் சென்றுவிட முடியாது.
விநோதமான இந்த முடிச்சு
எப்படி எவரால் என்று
எனக்கு சபிக்கப் பட்டது என்பது
தெரியவில்லை
மூலம் தேட அவகாசமில்லை
அழிப்பது ஒன்றே 
விமோசன வழி

அப்படியே விட்டுவிடும் வேளையில்
நரகத்தின் 
மிக பிரமாண்ட சாத்தானையாய்
இவன் உருமாறிவிடுவான்
அன்று 
நான் மட்டுமல்ல 
நான் நேசிக்கும், வெறுக்கும்
வணங்கும் எல்லோருமே
அழிந்துப் போக நேரிடும்
அழிவு மட்டுமே அவனது சுபாவம்.
இப்படிதான் இவனைப் பற்றி 
எனக்கு சொல்லப் பட்டிருந்தது.

ஆனால் இவன் 
இதுவரையில் எனக்கு
என்னைப் பற்றி 
நானும் பிறரும் அறியா
பிரமாண்ட உண்மைகளை மட்டுமே
சொல்லி வருகிறான்
என்னை நானே நேசிக்க
வற்புறுத்துகிறான்
இன்புற்றிருக்க கோருகிறான்
என்னை மதிக்கவும் துதிக்கவும்
போற்றவுமே வேண்டுகிறான்
இறைவனைப் போல அல்ல
இவன் 

இறைவன் எனக்கு 
கற்றுத்தந்தது எல்லாமே
எனக்கு துன்பத்தைத் தவிர
வேறொன்றும் தந்ததில்லை
இறைவனோ 
சுவர்க்க வாசல் 
எனக்காக என்றோ 
திறந்தாகி விட்டது 
என்கிறான்
அவ்வப்போது 
விரும்பிய வெற்றிகளை தந்து
உண்மையின் பாதையில் 
என்னுடன் என்றும் இருப்பதாக
உறுதி கூறுகிறான்

இவனோ 
இறைவனின் கொள்கையை 
நான் நம்பும் வரைதான்
அவனின் இருப்பு.
அவனை அழிக்க
எந்த ஆயுதமும் தேவையில்லை
நான் அவனை மறுக்கும் 
அந்த நொடியே அவன் 
மரித்துப்போவான்
என்கிறான்

சாத்தானின் வேதம்
இது என்று
இறைவன் முன்னமே
எனக்கு சொல்லியிருந்ததால்
நான் இவனை 
இன்னும் நம்பவில்லை

ஆனால் 
இந்த நெடும் பயணத்தில்
எனது வழிதுணை இவன் மட்டுமே
இனிய நினைவுகளும்
கசந்த நினைவுகளுமாக
இவனை தவிர்த்து சொல்லிவிட முடியாதபடி
நீக்கமற நிறைந்துவிட்டிருந்தான் 
என் பயணம் முழுவதிலும்

எனது அனைத்து ரகசியங்களும் 
இவன் அறிவான்
எனது அனைத்து சோகங்களும்
இவன் அறிவான்

இவனை 
விரோதியாக வெறுத்தாலும்
நண்பனாகவும்
நேசிக்கிறேன் 

இவனை அழிக்கத்தான் வேண்டுமா?
இவனை அழிக்கத்தான் வேண்டுமா?

ஒன்று செய்யலாம்… 
எனது உயிரின் மறுபாதியையும் 
இவனில் விட்டுவிடுவது
அல்லது 
இவன் உயிரின் மறுபாதியை
நான் எடுத்துக் கொள்வது

அந்த ஆயுதம் எவருக்கும் 
இனி கிடைக்காத வண்ணம்
வேறு ஒரு கிரகத்தில் 
ஒளித்துவிடலாம் 

Saturday, February 25, 2012

கோமாளி


ஒற்றைச் சக்கரத்தில் 
சாகசம் செய்பவன் நான்
சாகசத்தின் உச்சத்தில் 
கைத்தட்டும் கூட்டம்
விழும் போதும் கைத்தட்டி சிரிக்கிறது
எனது வாழ்க்கை
அவர்களது பொழுதுபோக்கு

என் வலியும் ரணமும் தெரியா வண்ணம்
கோமாளி வேடமிட்டிருக்கிறேன்.  
என் தலைவர் சொல்லியிருக்கிறார்
“உன் கண்ணீரை பார்ப்பதற்கில்லை இந்த கூட்டம்
உன் திறனை மட்டுமே காட்டு”

இரண்டு சக்கரத்தை
நான் பயன்படுத்தும் போது
காணாமல் போகும் 
இந்தக் கூட்டம். 

அவர்களை எல்லாம் 
திரும்ப அழைத்து 
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்


இரட்டைச் சக்கரத்தை 
மண்ணில் மட்டுமல்ல
விண்ணிலும் ஓட்டுவேன்
என்னைவிடவும் திறமைசாலி 
எவரும் இல்லை இவ்வுலகிலே 


அதை நிரூபிக்க வேண்டிய 
அவசியமும் எனக்கில்லை. 
அவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கப்போவது
காற்றோடு தொலைந்துபோகும் 
இன்னுமொரு சப்தம் மட்டுமே
அது எனக்கு 
எந்த ஒரு சந்தோஷமும் உற்சாகமும்
நம்பிக்கையும் நிம்மதியும் 
அளிப்பதில்லையே !

Sunday, February 19, 2012

அத்வைதம்

கவனக்குறைவாகவோ
கைதவறியோ
உடைந்து விட்டது
உன் சிலை

உன் நினைவாக 
என்னிடம் இருந்தது 
அது மட்டுமே
என்றும் இல்லாத அளவு 
நானும் உடைந்திருந்தேன்


முடிந்தவரை 
சிதறிய துகள்களை ஒட்டி
என் ஆழத்தில் புதைந்திருந்த
உன் உருவை 
மீண்டும் 
மீட்டெடுத்தேன்.
மங்கிய நினைவுகளையும்.

கை உடைந்து
மூக்கு பாதியாகி
இன்னும் கணக்கிடாத
பல சேதங்களுடன் 
அடையாளம் இழந்து இப்பொழுது
கலையாக உருமாறியிருந்தாய்.

சிலையாக இருந்த போது
நீ வெறும் நினைவு
அடையாளம் இழந்து இப்பொழுது நீ
எனது சுயம்

நாளை ஒரு நாள்
என் குழந்தைகள்
விளையாட்டாக அதை 
மீண்டும் உடைத்து விடக்கூடும்.
ஒட்ட முடியாத படி
அது முற்றிலும் 
சேதமடைந்துவிடலாம். 

அப்பொழுதும்
ஒரு சின்ன துகளாவது 
எனது பணப்பையிலோ
அல்லது தாயத்திலோ 
உன் நினைவாக என்னில் 
எஞ்சிவிடக் கூடும்

அன்று அதை
நம்பிக்கையும் 
சக்தியும் 
வெற்றியும் தரும் 
மந்திரக்கல்லாக (துகளாக)
நான் கருதக்கூடும்

ஒன்று மட்டும் நிச்சயம்
என் நினைவிலிருந்து
நீ முற்றிலும் மறைந்துப் போகும் 
அந்த ஒரு நாள் -
நான் நீயாகவே
உருமாறியிருப்பேன் 

உன்னை 
நினைத்து கொண்டிருப்பது மட்டும்
காதல் அல்ல 
மறப்பதும்.