Saturday, December 8, 2012

அவள்


இரவின் சூரியன்
நிசப்த இசை
வெறுமையின் அழகு
அவள்

நாத்திகனின் கடவுள்
தனிமையின் இன்பம்
எளிமையின் செல்வம்
எங்கே அவள்? 

என் இல்லாமையின் இருப்பு
என் இருப்பின் இல்லாமை
இங்கே அவள்

Saturday, July 14, 2012

நான் 4

யாரையாவது பலியிடுவதனால் மட்டுமே
உலகங்களுக்கு இடையிலான
இந்தப் போரை
நிறுத்த முடியும்

இதுபோன்ற இக்கட்டான
நிலைவரும் போதெல்லாம்
இறைவன்
என்னைதான் தேர்ந்தெடுப்பான்

எனது குருதியில்
நனைந்தால் மட்டுமே
இந்த பூமி
மீண்டும் அமைதி பெரும்
குழந்தைகளின் சிரிப்புகள்
மீட்டெடுக்கப்படும்
உண்மைகள் காக்கப்படும்
கோவில்கள் திறக்கப்படும்

வழக்கம் போலவே
என் வலியை
இறைவன்
பொருப்படுத்தப் போவதில்லை
எனது கண்ணீர், வெறுமை
அபலம் அவன் மனதை
அசைக்கப் போவதில்லை

காரணம்
யாரும் அறிய ஒரு ரகசியம்
என்னைப் பற்றி
அவன் மட்டுமே அறிவான், அது
மரணமில்லா என்னை
மீண்டும் மீண்டும்
கொல்ல முடியும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழ செய்யவும்
முடியும் என்பது.

நான் 3


நான்
நிஜமல்ல.
உங்கள் கற்பனை.

நான் நிஜமல்ல.
உங்கள் உணர்வுகளின்
உருவம்.

நான் நிஜமல்ல.
உங்கள் விரக்தியின்
எச்சம்.

நான் நிஜமல்ல.
உங்கள் காதலின் 
காமம்.

நான்,

நீங்கள் விழிக்கும் போது
கலைபவன்.

நான் 2

காலங்கள் அழிக்க முடியா
கற்பனை நான்

கடவுளே அச்சப்படும்
பெரும் மாயை நான்

வெளிச்சங்களை விழுங்கும்
கறுந்துவாரம் நான்

உயிர்களின் 
அகால மரணம் நான்

ஊழி நான்
ஊழி நான்
ஊழி நான்

நான் 1


வெளிக்குள் அடங்கா
பெரும் தீ நான்
உன் “அணைப்பு” 
என்னை “அணைத்து”விட முடியும் என்று
நினைத்தேன்
உன் நினைவாக இன்று
சாம்பல் மட்டுமே 
மிச்சம்

இன்னும் எரிகிறேன்
பெரும் ஜோதியில்

Matrix

நான்
அழுவதில்லை
சிரிப்பதில்லை
கனவு காண்பதுமில்லை 

வலியில்லை இன்பமில்லை 
ஆணுமில்லை பெண்ணுமில்லை 
அலியுமில்லை

நிஜங்களை
நிஜங்களாக
இருக்க செய்வது மட்டுமே
எனது பணி 

நான் நிஜமல்ல
உங்களை பதிவு செய்துகொண்டிருக்கும்
ஒரு அணித் தரவு (Matrix)

Thursday, July 12, 2012

அணை


நீ திரண்ட போது
ஆயிரம் அணைகளை எழுப்பியிருந்தேன்
எல்லாம் உடைத்து இன்று
உன்னுள் விழுகிறேன்
நீயே அணையாய் எழும்பி நிற்கிறாய்

Monday, June 11, 2012

ஆன்மா?

நான் நேசிக்கும்
அனைவரிடமும் கேட்டு விட்டேன்
என் ஆன்மாவை திருப்பித் தரும்படி
அது எங்கு யாரிடம் இருக்கிறது
என்பது தெரியாததால்
கண்ணில் தெரிந்தவர்களிடமும்,
என் ஆன்மா அவர்களிடம் இருக்கக் கூடும்
என்ற நம்பிக்கையில்
மண்டியிட்டு
யாசகம் கேட்டேன்

ஆன்மா இல்லாது
எவ்வளவு நாள்தான் பேயாய்
இந்த மனிதர்களின் உலகில்
வாழ்வது?
ஜாடிக்குள் அகப்பட்ட பூதமாய்
கதறியிருக்கிறேன்.
என் ஆன்மாவை திருப்பி தருபவர்களுக்கு,
அவர்கள் கேட்கும் வரத்தை யெல்லாம்
தருகிறேன் என்று
சத்தியம் செய்திருக்கிறேன்.
ஆனால் வரங்களை மட்டும்
முன்னமே வாங்கிக் கொண்டு
எனது ஆன்மாவை
யாரும் தரவேயில்லை.

பின்பொரு சமயம்
நான் எதிர்பாரா ஒரு சந்தர்ப்பத்தில்
சாதாரணமாய் என் காதில் சொல்லப் பட்டது
நான் ஆன்மா இல்லாமல்
படைக்கப் பட்டவன் என்று


Monday, May 14, 2012

இருட்டுக்குள் செல்ல மாட்டேன்


எனது கையை
இதமாக மூடிக்கொள்ளும்
உனது இரு கைகளாகட்டும்
நடக்கும் போது
தனியே விடாது 
எனது சுண்டு விரலை
கொக்கி போல் மாட்டிக்கொள்ளும்
உனது சுண்டு விரலாகட்டும் 

ஆச்சரிய இமை உயர்த்தும் 
விழிகளாகட்டும்
செல்லமாய் சிணுங்கும் 
குறும்பு விழிகளாகட்டும்
வெற்றிகளோடு வரும் போது
என்னை நானாக மட்டுமே
வரவேற்கும் 
ஆனந்த விழிகளாகட்டும்
எல்லாம் தொலைத்து வரும் போது
என்னில் நம்பிக்கை தொலைக்காத
தெளிந்த விழிகளாகட்டும்

கூட்டத்தில் பிறர் அறியா
ரகசிய மொழி பேசும் 
உதடுகளாகட்டும்
உற்சாகப்படுத்தும் 
புன்னகையாகட்டும்
கலைப்பு நீக்கும் 
தோள்களாகட்டும்
காமம் கழிக்கும் 
முத்தமாகட்டும்
மீட்டுத்தரும் அணைப்பாகட்டும்  

தனிமையில் விடாத “ஸ்எம்ஸ்”களாகட்டும் 
அச்சம் கொல்லும் வார்த்தைகளாகட்டும்
உன் கோபமாகட்டும் 
கண்டிப்பாகட்டும்
என்னை விட்டுத்தராத
பிடியாகட்டும் 
என்னை முழுவதும் வாங்கிக் கொள்ளும்
காதுகளாகட்டும்

இது எதுவுமே இல்லாத நீ,
நீயாகவே இருக்க
நான், எந்தத் தடையும் 
செய்யப்போவது இல்லை

என் நிழலாகவாவது 
நீ உடன் இருக்க மாட்டாயா? 
என்றும் நான் 
இருட்டுக்குள் 
செல்லவே மாட்டேன் 

வெளிச்சத்திலேயே இருப்பேன். 

Monday, May 7, 2012

என் அடையாளத்தை தேடிக் கொடு

இன்னும் என்ன செய்ய முடியுமோ
செய்துக்கொள்
கண்களை பிடுங்கி கொள்
கைகளை வெட்டிக்கொள்
உனக்கு திருப்தி ஏற்படும் வரை
என்னை அறுத்துக் கொள்
எதையும் நான் 
சட்டை செய்யப் போவதில்லை.

வலிகளையும் வேதனைகளையும் 
உணரும் திறன் இழந்து
யுகங்கள் ஆகிவிட்டது
மானம், பசி, அணைப்பு, அடி
இன்பம், துன்பம், அன்பு, வெறுப்பு
கடவுள், சாத்தான், கோவில், கல்லறை
எந்த வித்தியாசங்களும் தெரிவதில்லை.
நான் யார் என்பதே மறந்து
யுகங்கள் ஆகிறது
என் முகம் கூட 
மறந்து விட்டது.
கண்ணாடியில் நான் தெரிவதில்லை
என் குரல் மட்டும்
எனக்கு கேட்பதேயில்லை.

வேண்டுமென்றால்,
ஒரு யோசனை சொல்கிறேன். 
என் அடையாளத்தை
தேடி கொடு,
என் இருப்பை 
உறுதி செய்.
இதைவிட பெரும் வலியை
எவரும் எதுவும்
கொடுக்கவே முடியாது.

Monday, March 5, 2012

பிராத்தனை


எந்த தேர்ந்தெடுப்பின் மூலம்
நீ மரணத்தை நிகழ்த்துகிறாய்?
தீயவர்கள் கண்டிப்பாக
மாரடைப்பாலோ புற்றுநோயினாலோ 
இறந்தே தீருவார்கள் 
என்ற நியதி இருந்தால்
நிச்சயமாக உலகம் 
நல்லவர்களால் மட்டுமே 
நிரம்பியிருக்கும் அல்லவா?
ஆனால் நீயோ 
நல்லவர்களையும் கொன்றுவிடுகிறாய்.
அகாலமாய் மரிப்பவர்களின் தகுதிகள் 
என்னவாக இருக்கும்
உன் குறிப்பேட்டில்? 
புகையும் மதுவுமாய் 
அறுபது வயதையும் தாண்டிய நடிகன் 
உயிருடன் இருக்கிறான்
அப்பாவி குழந்தைகளை 
காவு கொள்கிறாய். 
போர்களை விரும்பும் 
தலைவர்களை விட்டுவிடுகிறாய்
ஒரு அன்பான அப்பாவை  
கொன்று விடுகிறாய்.  
எப்படி தீர்மானிக்கிறாய்
ஒருவன் முடிவை? 
ஒவ்வொருவரின் முடிவும்
அந்த உயிருக்கு 
நீ தரும் 
இன்னொரு நல்ல வாழ்க்கைக்கான
தொடக்கம் என 
என்னை நான் 
சமாதானம் செய்துக்கொண்டாலும்
ஒருவேளை நீ
முஸ்லிமாகவோ கிருஸ்துவனாகவோ
அல்லது மதமற்றவனாகவோ இருந்தால்
மரணம் என்னவாக இருக்கும்,
உன் அகராதியில்?
அதுதான் இறுதி,
அதற்கு அப்பால் 
ஒன்றேமே இல்லை 
என்பதுதான்
மரணத்தையும் மிஞ்சிய
துக்கத்தைத் தருகிறது.
காலகாலமாக 
இறந்த எல்லோருக்காவும் 
உன்னை வேண்டுகிறேன்
அவர்களுக்கு இன்னொரு 
பிறவிக்  கொடு.
நிம்மதியான இன்பமான 
வாழ்க்கையை கொடு.
இந்த முறை
அவர்கள் மரண நாளை
அவர்களே தீர்மானிக்கட்டும்,
சந்தோஷமாகவே.
அதுவரை அவர்களுக்கு 
வரங்களை மட்டுமே 
தந்துக் கொண்டு இரு
என்றென்றும்.

Sunday, February 26, 2012

இவனை கொல்வதா?


எந்த அளவுக்கு 
அடிமைப் படுத்தினாலும்
அதைவிட படுபயங்கரமாய் 
வளர்கிறான்.

இன்னமும் என் சிறையில்தான்
இருக்கிறான்
ஆனால் எவ்வளவு நாள் 
இவனை சிறைப்பிடித்திருக்க முடியுமென்று
தெரியவில்லை. 

பூமியின் எல்லையில்
சக்தி வாய்ந்த 
ஆயுதமொன்று இருப்பதாகவும் 
அதைக் கொண்டு
இவனை அழித்துவிடலாம் என்றும்
இறைவன் சொல்லியிருந்தான். 

பூமியின் 
இறுதி எல்லையை நோக்கிய 
நீண்ட பயணத்தை
நானும் தொடங்கினேன்
உடன்  இந்த மந்திர
சிறைக் கூண்டையும்
இதில் இவனையும் 
இழுத்துக் கொண்டே
செல்ல வேண்டியிருந்தது. 
எனது உயிரின் ஒரு பகுதி
இவனிடம் இருந்தது.
இவனை விட்டு என்னால் 
எங்கும் சென்றுவிட முடியாது.
விநோதமான இந்த முடிச்சு
எப்படி எவரால் என்று
எனக்கு சபிக்கப் பட்டது என்பது
தெரியவில்லை
மூலம் தேட அவகாசமில்லை
அழிப்பது ஒன்றே 
விமோசன வழி

அப்படியே விட்டுவிடும் வேளையில்
நரகத்தின் 
மிக பிரமாண்ட சாத்தானையாய்
இவன் உருமாறிவிடுவான்
அன்று 
நான் மட்டுமல்ல 
நான் நேசிக்கும், வெறுக்கும்
வணங்கும் எல்லோருமே
அழிந்துப் போக நேரிடும்
அழிவு மட்டுமே அவனது சுபாவம்.
இப்படிதான் இவனைப் பற்றி 
எனக்கு சொல்லப் பட்டிருந்தது.

ஆனால் இவன் 
இதுவரையில் எனக்கு
என்னைப் பற்றி 
நானும் பிறரும் அறியா
பிரமாண்ட உண்மைகளை மட்டுமே
சொல்லி வருகிறான்
என்னை நானே நேசிக்க
வற்புறுத்துகிறான்
இன்புற்றிருக்க கோருகிறான்
என்னை மதிக்கவும் துதிக்கவும்
போற்றவுமே வேண்டுகிறான்
இறைவனைப் போல அல்ல
இவன் 

இறைவன் எனக்கு 
கற்றுத்தந்தது எல்லாமே
எனக்கு துன்பத்தைத் தவிர
வேறொன்றும் தந்ததில்லை
இறைவனோ 
சுவர்க்க வாசல் 
எனக்காக என்றோ 
திறந்தாகி விட்டது 
என்கிறான்
அவ்வப்போது 
விரும்பிய வெற்றிகளை தந்து
உண்மையின் பாதையில் 
என்னுடன் என்றும் இருப்பதாக
உறுதி கூறுகிறான்

இவனோ 
இறைவனின் கொள்கையை 
நான் நம்பும் வரைதான்
அவனின் இருப்பு.
அவனை அழிக்க
எந்த ஆயுதமும் தேவையில்லை
நான் அவனை மறுக்கும் 
அந்த நொடியே அவன் 
மரித்துப்போவான்
என்கிறான்

சாத்தானின் வேதம்
இது என்று
இறைவன் முன்னமே
எனக்கு சொல்லியிருந்ததால்
நான் இவனை 
இன்னும் நம்பவில்லை

ஆனால் 
இந்த நெடும் பயணத்தில்
எனது வழிதுணை இவன் மட்டுமே
இனிய நினைவுகளும்
கசந்த நினைவுகளுமாக
இவனை தவிர்த்து சொல்லிவிட முடியாதபடி
நீக்கமற நிறைந்துவிட்டிருந்தான் 
என் பயணம் முழுவதிலும்

எனது அனைத்து ரகசியங்களும் 
இவன் அறிவான்
எனது அனைத்து சோகங்களும்
இவன் அறிவான்

இவனை 
விரோதியாக வெறுத்தாலும்
நண்பனாகவும்
நேசிக்கிறேன் 

இவனை அழிக்கத்தான் வேண்டுமா?
இவனை அழிக்கத்தான் வேண்டுமா?

ஒன்று செய்யலாம்… 
எனது உயிரின் மறுபாதியையும் 
இவனில் விட்டுவிடுவது
அல்லது 
இவன் உயிரின் மறுபாதியை
நான் எடுத்துக் கொள்வது

அந்த ஆயுதம் எவருக்கும் 
இனி கிடைக்காத வண்ணம்
வேறு ஒரு கிரகத்தில் 
ஒளித்துவிடலாம் 

Saturday, February 25, 2012

கோமாளி


ஒற்றைச் சக்கரத்தில் 
சாகசம் செய்பவன் நான்
சாகசத்தின் உச்சத்தில் 
கைத்தட்டும் கூட்டம்
விழும் போதும் கைத்தட்டி சிரிக்கிறது
எனது வாழ்க்கை
அவர்களது பொழுதுபோக்கு

என் வலியும் ரணமும் தெரியா வண்ணம்
கோமாளி வேடமிட்டிருக்கிறேன்.  
என் தலைவர் சொல்லியிருக்கிறார்
“உன் கண்ணீரை பார்ப்பதற்கில்லை இந்த கூட்டம்
உன் திறனை மட்டுமே காட்டு”

இரண்டு சக்கரத்தை
நான் பயன்படுத்தும் போது
காணாமல் போகும் 
இந்தக் கூட்டம். 

அவர்களை எல்லாம் 
திரும்ப அழைத்து 
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்


இரட்டைச் சக்கரத்தை 
மண்ணில் மட்டுமல்ல
விண்ணிலும் ஓட்டுவேன்
என்னைவிடவும் திறமைசாலி 
எவரும் இல்லை இவ்வுலகிலே 


அதை நிரூபிக்க வேண்டிய 
அவசியமும் எனக்கில்லை. 
அவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கப்போவது
காற்றோடு தொலைந்துபோகும் 
இன்னுமொரு சப்தம் மட்டுமே
அது எனக்கு 
எந்த ஒரு சந்தோஷமும் உற்சாகமும்
நம்பிக்கையும் நிம்மதியும் 
அளிப்பதில்லையே !

Sunday, February 19, 2012

அத்வைதம்

கவனக்குறைவாகவோ
கைதவறியோ
உடைந்து விட்டது
உன் சிலை

உன் நினைவாக 
என்னிடம் இருந்தது 
அது மட்டுமே
என்றும் இல்லாத அளவு 
நானும் உடைந்திருந்தேன்


முடிந்தவரை 
சிதறிய துகள்களை ஒட்டி
என் ஆழத்தில் புதைந்திருந்த
உன் உருவை 
மீண்டும் 
மீட்டெடுத்தேன்.
மங்கிய நினைவுகளையும்.

கை உடைந்து
மூக்கு பாதியாகி
இன்னும் கணக்கிடாத
பல சேதங்களுடன் 
அடையாளம் இழந்து இப்பொழுது
கலையாக உருமாறியிருந்தாய்.

சிலையாக இருந்த போது
நீ வெறும் நினைவு
அடையாளம் இழந்து இப்பொழுது நீ
எனது சுயம்

நாளை ஒரு நாள்
என் குழந்தைகள்
விளையாட்டாக அதை 
மீண்டும் உடைத்து விடக்கூடும்.
ஒட்ட முடியாத படி
அது முற்றிலும் 
சேதமடைந்துவிடலாம். 

அப்பொழுதும்
ஒரு சின்ன துகளாவது 
எனது பணப்பையிலோ
அல்லது தாயத்திலோ 
உன் நினைவாக என்னில் 
எஞ்சிவிடக் கூடும்

அன்று அதை
நம்பிக்கையும் 
சக்தியும் 
வெற்றியும் தரும் 
மந்திரக்கல்லாக (துகளாக)
நான் கருதக்கூடும்

ஒன்று மட்டும் நிச்சயம்
என் நினைவிலிருந்து
நீ முற்றிலும் மறைந்துப் போகும் 
அந்த ஒரு நாள் -
நான் நீயாகவே
உருமாறியிருப்பேன் 

உன்னை 
நினைத்து கொண்டிருப்பது மட்டும்
காதல் அல்ல 
மறப்பதும்.