என் வழியில்
நான் விட்டு செல்லும்
பாத சுவடுகள்
என்னையும் விட
பெரிதாகி வருகிறது
அதே வேளையில்
நான் கொஞ்சம் கொஞ்சமாய்
சிறுத்து வருகிறேன்
முழுவதும் தீர்ந்துப்போகுமுன்
எது எல்லை என்று
தீர்மானித்துவிட நடக்கிறேன்
முன்னமே தீர்மானிப்பதற்காய்
நின்றுவிடுவேனெனில்
என் சுவடே என்னை
விழுங்கி விடுமோ
என்ற அச்சம் வேறு
ஒரு சமயம்,
நான் எறும்பினும் சிறிதாகி
பின்பு இல்லாமலேயே போனேன்
ஆனால் என் சுவடோ
பிரமாண்டமாய் பெருத்து
உலகையே மறைத்திருந்தது
கொஞ்சம் அழித்தும் இருந்தது.
அடியால் உலகளந்தவன்
என்று மட்டுமே
இன்று நான்
அறியப்படுகிறேன்
0 comments:
Post a Comment