Saturday, October 2, 2010

இசை நிறுவனம் தொடங்குவது எப்படி

இசை விமர்சனம், சாடல்கள், இசைத் திருட்டு என்று பலவற்றை படித்தும், எழுதியும் பார்த்திருக்கிறோம் இந்த முறை இசைத்துறையில் எப்படி ஈடுபடலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். இசைத்துறை ஒரு ஆனந்தமான அதேசமயம் கவர்ச்சிக்கரமான ஒரு துறை. ஆபத்தான துறையும் கூட (சில வகைகளில்).

முதலில் முக்கியமானது. பணம். எந்தத் தொழிலையும் தொடங்க பண முதலீடு அத்தியாவசியம். இதற்கும் அப்படிதான். ஒரு ரூபாயில் தொடங்கினேன், உழைப்பை மட்டுமே நம்பி இறங்கினேன் என்று எங்காவது படித்தோ கேட்டோ இருந்தால் தயவு செய்து நம்பாதீர்கள். கபிடலிஸத்தின் அடிப்படைத் தத்துவமே பணம் உள்ளவர்கள் மேலும் பணக்காரர்களாவதும் பணம் இல்லாதவர்கள் மேலும் ஏழைகளாவதும்தான். ஆக முதலில் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியது, பணத்திற்கு.

அடுத்தது, நிறுவனத்தை பதிவு செய்யுங்கள். இரண்டு பதிவு முறைகளை நீங்கள் பரீசிலிக்கலாம். ஒன்று, தனி நபர் நிறுவனம். மற்றது, ப்ரைவட் லிமிடெட் அல்லது மலாய் மொழியில் செண்டிரியான் பெர்ஹாட்.   இரண்டாவது முறையில் செலவுகள் அதிகம் அதேசமயம் வளர்ச்சியடைய வாய்ப்புகளும் அதிகம்.

அடுத்து நீங்கள் முடிவு செய்ய வேண்டியது எந்த மாதிரியான இசையை வெளியிடுவது என்பது. ஆன்மீக பாடல்கள் உங்களை ஏமாற்றாது. சமயத்தின் பெயரில் இந்தியர்களிடையே நீங்கள் எதை வேண்டுமானாலும் விற்கலாம். சமயப் பாடல்களை தயாரிப்பதெற்கென்று ஒரு தரப்பு தமிழ் நாட்டில் இருக்கிறது. அவர்களை அணுகி 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் 5 இசைத் தொகுப்புகளைக் கூட வாங்கலாம். சினிமா இசையை வெளியிடுவதில் ஆர்வம் என்றால், அதை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.

பெரிய பெரிய படங்களின் ஆடியோக்களை அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டி வரும். நடிகர் விஜயின் காவலன் ஒரு கோடி ரூபாய்க்கு பேசப்படுகிறது. மலேசியா ரிங்கிட் மதிப்பில் ஏறக்குறைய 7 லட்சம் ரிங்கிட் ஆகும். எந்திரன் 7 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக பேச்சு. முதல் முயற்சியிலேயே அகல கால் வைக்க வேண்டாம். சின்ன சின்ன படங்களை சின்ன விலைக்கு வாங்கலாம். சில சமயம் அவைகள்தான் அதிகம் லாபம் ஈட்டித் தரும். உதாரணத்திற்கு சுப்ரமணியபுரம், சித்திரம் பேசுதடி.

அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. ராயல்டி முறையில். இதை இந்திய இசை துறையில் தொடங்கி வைத்ததே எனது அகி மியூசிக் நிறுவனம்தான் என்பதை பெருமையுடன் சொல்வேன். பல பெரிய நிறுவனங்களுடன் எனக்கு தொடர்பிருந்தமையால், இது அவர்களுக்கு தெரியவரும் போது என்னிடம் அவர்களின் ஆச்சரியத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். மலேசியாவிலும் இதற்கு நாம்தான் முன்னோடி.

எனக்குத் தெரிந்தவரையில் டைம்ஸ் மியூஸிக் என்ற மும்பை நிறுவனம் தமிழகத்தில் இந்த ராயல்டி முறை பிரபலப்படுத்தியது. சின்ன சின்ன படங்களின் ஆடியோவை விற்பது பெரிய பாடாக இருந்தது அதன் தயாரிப்பாளர்களுக்கு. ஆடியோ ரிலிஸ் என்பது கோடம்பாக்கத்தில் ஒரு சடங்கு. ஆடியோ வெளியீட்டு நிகழ்வைதான், அவர்களுடையப் படத்தை வியாபாரம் பேசுவதற்கும், வினியோகஸ்தர்களை அணுகுவதற்கும் ஒரு திறவுகோளாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆடியோவில் அவர்கள் லாபம் பார்ப்பதில்லை அதேசமயம் நட்டமே அடைகிறார்கள். ஆனால் பாடல்கள் திரைப்படத்தை தொலைக்காட்சியில் இலவசமாக விளம்பரம் செய்ய பெரிதும் உதவுகிறது. அதற்காகவே பாடல்கள் அவர்களின் சினிமாவில் கட்டாயம் தேவைப்படுகிறது. அதனால் பல சமயங்களில் ஆடியோ விற்பனையைப் பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அப்படி தயாரிப்பாளர்கள் ஆடியோ விற்பனையை கைவிட்டிருந்த நிலையில் ஆடியோவை விற்றுத் தருகிறோம் என்று டைம்ஸ் மியூசிக் முன்வந்தார்கள். ஆனால் எவ்வளவு விற்கிறதோ அந்த லாபத்தை தயாரிப்பாளரும் இசை நிறுவனமும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கப் பட்டது. இதுதான் ராயல்டி முறை.

இந்த வழிமுறையின் அடிப்படையில் இசை நிறுவனம் மிக குறைந்த முன்பணம் தரலாம். அல்லது தராமல் கூட போகலாம். அவர்களின் செலவு அதை உற்பத்தி (Manufacturing) செய்வதும் வினியோகிப்பதும். முன் பணம் குறைவாகவோ அல்லது தரப்படாமலோ இருக்கும் பட்சத்தில், தயாரிப்பாளர் அதன் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வரையரைக்கு மட்டும் இசை நிறுவனத்திற்கு அதை வினியோகிக்கும் உரிமத்தை வழங்கலாம்.  3 வருடம் அல்லது 5 வருடம்.

அதை தொடர்ந்து திங் மியூஸிக், சாகா மியூசிக் என்று பலர் இப்பொழுது அந்த வழியை பின்பற்றுகிறார்கள். போட்டியாளர்களை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுக்தியை கையாளுகிறார்கள். உதாரணத்திற்கு, திங் மியூஸிக், தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தி தருகிறது. பெரிதாக ஒன்றும் இல்லை, அவர்களது சத்யம் சினிமா தியேட்டரை அந்த நிகழ்வுக்கு தருகிறார்கள்.

நீங்களும் ஏதாவது ஒரு வழியில் இந்த தயாரிப்பாளர்களை அணுகலாம். சிலர் வெறும் 500 சிடிகள் அல்லது 600 சிடிகள் தந்தால் போதும் அல்லது ஒரு பேருந்தின் பின்புறம் விளம்பரம் தந்தாலோ அல்லது 3 பத்திரிக்கைகளில் ஒரு நாளைக்கு விளம்பரம் தந்தாலோ போதும் என்றுகூட சொல்வதுண்டு. அதற்காக மொத்த உரிமத்தை உங்களுக்கு தரவும் தயாராக இருக்கிறார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது எதாவது ஒரு ஆடியோவை சிறப்பாக விளம்பரம் செய்து வெளியிட்டால் போதும், தரகர்கள் உங்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

நீங்களே சொந்தமாக இசைத் தயாரிப்பது இன்னொரு வழி அதற்கு கொஞ்சமாவது இசை ரசிப்பு திறனாவது உங்களுக்கு இருக்க வேண்டும். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், ஒலிப்பதிவு என்று மொத்த செலவுகளையும் ஒரு லட்ச ரூபாயில் நீங்கள் அடக்கி விடும்படியாக பட்ஜட் செய்ய வேண்டும். அதிக செலவில் சிறப்பாகக் கூட தயாரிக்கலாம். இன்றைய நிலையில் கள்ளப் பதிப்புகள் மற்றும் இணைய பதிவிரக்க பாதிப்புகளால் இசை விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால். அதிகம் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மேலே கூறியவைகள் எல்லாமே அனைத்துலக விநியோகத்திற்கான விலைப் பட்டியல். அது இல்லாமல் நீங்கள் இந்தியாவிற்கு மட்டும், மலேசியாவிக்கு மட்டும் அல்லது டுபாய்க்கு மட்டும் என்று பிரித்துக் கூட உரிமங்களை வாங்கலாம்.

சினிமா இசைக்கும் தனி இசைத்தொகுப்புக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சினிமா இசை குறைந்தது 6 மாத காலத்திற்குள் அதன் ஆயுளை முடித்து கொள்ளும். அதற்கு பிறகு உங்களால் விற்கவே முடியாது. சினிமா இசையை பொறுத்தவரை என்றும் உங்களால் விற்க முடியும் என்று சொன்னால் அது இளையராஜாவின் இசை மட்டுமே. அதுவும் அவரது நிகழ்கால திரை இசை நீங்கலாக.

ஆனால் தனி இசைத் தொகுப்போ அல்லது ஆன்மீக இசை தொகுப்போ பல நூறு ஆண்டுகள் கூட விற்க முடியும், நல்ல தரத்துடன் இருந்தால். ஒரு சினிமாவின் மீதான மோகம் அறுபது நாள்தான். ஆனால் நல்ல தனி இசை தொகுப்புக்கு அப்படியில்லை. அது பக்தி இசையாக இருக்கலாம், கர்நாடகமா இருக்கலாம் அல்லது பாப் இசையாக கூட இருக்கலாம். ஆனால் தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் தனி இசை (ஆன்மிகம் நீங்கலாக) பிரபலமடையாததற்கு காரணம் சிறந்த அணுகுமுறை இதுவரை இல்லை. ஆனால் நிச்சயமாக சிறந்த எதிர்காலம் உண்டு. அதோடு சினிமா இசையின் ஆயுள் குறைவாக இருந்தாலும் இந்த குறைந்த ஆயுளில் அது எட்டும் தூரம் அதிகம். அதுக்கு காரணம் சினிமா நட்சத்திரங்கள். அவர்களை ப்ரண்ட்ஸ் (Brands) என்று சொல்லலாம். அந்த ப்ரண்டின் காரணமாகத்தான் விற்கப் படுகிறது. தனி இசை தொகுப்புகளில், பாடகர்களுக்கு இந்த ப்ரண்டை உங்கள் மார்கெட்டிங்க திறனால் உங்களால் உருவாக்க முடிந்தால், நடிகர்களுக்கு கிடைக்கும் புகழை இவர்களுக்கும் ஏற்படுத்தி உங்கள் ஆடியோவை விற்கலாம்.

சரி, இப்பொழுது உங்களுக்கு இசை கையில் வந்துவிட்டது. அடுத்தது அதை எப்படி இப்பொழுது வெளியிடுவது என்பதுதான். ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது உங்கள் வருமானத்திற்கான வாயில்களையும் அதன் அளவுகளையும்.

முதலாவது - சிடி விற்பனை, இரண்டாவது - ரிங்டோன் மற்றும் காலர் டோன் எனப்படும் மொபைல் பதிவிரக்கங்கள், மூன்றாவது - டிஜிட்டல் பதிவிரக்கம், நான்காவது - வானொலி, தொலைக்காட்சி  மற்றும் கலை நிகழ்ச்சி பயன்பாடுகள், ஐந்தாவது - விளம்பரம் அல்லது பிற பயன்பாடுகள், ஆறாவது -  மறு பதிப்பு அல்லது ரீமிக்ஸ்.

சிடி விற்பனை - முதலில் எந்த ஏரியாவிற்கு அனுப்புவது, எவ்வளவு சிடிகள் தேவைப்படும் என்பதை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். சிடி விநியோகம் பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் வழிதான் செயல்படுகிறது. மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு வாகனம் உங்களுக்கு இருந்தால் நீங்களே சொந்தமாக விநியோகம் செய்யலாம். அல்லது இங்கும் நீங்கள் ஒரு விநியோகஸ்தரை அமர்த்திக்கொள்ளலாம். குறைந்தது 1000 முதல் 2000 சிடிகளை மட்டும் நீங்கள் உற்பத்தி செய்து விநியோகத்திற்கு ஒப்படைத்து விட்டு, கையிருப்பு முடிய முடிய நீங்கள் மேற்கொண்டு உற்பத்தியை தொடரலாம்.

இதில் மிகப் பெரிய சவால், கடைகளிலிருந்தும் விநியோகஸ்தர்களிடமிருந்தும் விற்பனையான சிடிகளுக்கு பணத்தை பெறுவதுதான். அது உங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தால், நீங்கள் இந்தத் துறையில் நீடித்திருக்கலாம். பெரும்பாலான கடைகள் விற்பனையான சிடிகளுக்கான பணத்தை தருவதற்கு 3 முதல் 6 மாதம் வரை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் நீங்கள் இந்த 6 மாத காலத்தில்  ஒரு சிடி மட்டுமே வெளியிட்டிருந்தீர்கள் என்றால் உங்கள் பணத்தை தருவதில் மிகப்பெரிய அலட்சியம் காட்டுவார்கள். குறைந்தது 2 அல்லது 3 சிடிகளையாவது இந்த 6 மாதக் காலத்தில் வெளியிட்டு விட்டீர்கள் என்றால் உங்கள் குரலுக்கு அதிகாரமிருக்கும்.

ரிங்டோன் அல்லது காலர் டோன் தான் ஆசியாவில் அதிகம் விற்பனையாகும் இசை படிமங்கள். இது ஒருவகையில் உயிரியல் பரிணாமம் போல்தான். டார்வின் தியோரியின் படி நாம் இன்னும் அழிந்துப் போகாமல் இருப்பதற்கு காரணம் இந்த பரிணாம வளர்ச்சிதான். அதுபோல் இசை துறை கணிணி தொழில்நுட்ப வளர்ச்சியில் கள்ளபதிப்புகளுக்கு இலகுவாக இடமளித்து அழிவை நோக்கி போய்க்கொண்டிருந்த நிலையில் அதே தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி அதன் தொடர் வாழ்வுக்கு இன்னொரு வழியை ஏற்படுத்திக் கொண்டது.  இந்த காலர் டியூன் மோகத்தை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. முழு பாடலையும் பதிவிரக்கம் செய்ய இயலாது. அதிலும் முக்கியமாக அதை நீங்கள் கேட்கவே முடியாது, நீங்கள் கேட்பதற்காக உங்கள் பணத்தை நீங்கள் செலவலிக்கவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும், இருந்தும் அதி வேகமாக அதிகமாக விற்பது இந்த படிமங்கள்தான். அதனால்தான் இந்த விந்தை நிகழ்வை நான் டார்வின் தியோரியோடு ஒப்பிட விரும்புகிறேன்.

இதில் பெரும் லாபம் சம்பாதிப்பவர்கள் மொபைல் நிறுவனங்கள்.  ஏறக்குறைய 60% முதல் 70% வரை அவர்கள் எடுத்துக்கொண்டு மீதம் 30% தான் உங்களுக்கு வரும். அதிலும், இதற்கான தொழில் நுட்ப வசதியை மொபைல் நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவதில்லை. அவர்கள் அந்த வசதியை ஏற்படுத்தி தரும் பிற நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாகத்தான் உங்கள் இசை மொபைல் தளத்தில் இடம் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பார்கள். இந்த தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்தி தரும் சில நிறுவனங்கள் காலர் டோன் வழி நீங்கள் பெறும் வருமானத்தில் 10% மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை உங்களுக்கு தருவார்கள். மற்றும் பலர் 50% வரை எடுத்துகொள்வார்கள். அப்படிப் பார்த்தால் நீங்கள் மொத்தமாக 15% தான் உங்கள் வருமானமாக பெற முடியும். இதில் நீங்கள் தயாரிப்பாளர்களிடம் ராயல்டி முறையில் ஒத்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு 7.5% தான் மொத்த வருமானம். மொபைல் நிறுவனங்களின் இந்த ராட்ச ஆக்கிரமிப்பை இந்த முறை மும்பையில் நடந்த NOKIA MUSIC CONNECT நிகழ்வில் பலரும் குற்றம் சாட்டினார்கள். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்று எல்லா நாடுகளும் இந்த முறையைதான் பின்பற்றுகிறது.


அடுத்தது டிஜிட்டல் பதிவிரக்கம். இணைய சட்டவிரோத பதிவிரக்கங்கள் பற்றி நாம் அதிகம் கூச்சலிடுகிறோம். ஆனால் அனுமதிக்கப்பட்ட பதிவிரக்கத் தளங்கள் என்று பார்த்தால எதுவுமே இல்லை. இப்பொழுதுத்தான் இந்திய இசை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ITUNES, AMAZONS போன்ற பதிவிரக்க தளங்கள் வழி தங்கள் பாடல் கிடைக்க வழிவகுக்கிறது. ஆனால் எல்லா தளங்களுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குத் தான் தங்கள் சேவைகளை வழங்குகிறது. அதனால் அதிகபடியான விற்பனையை நாம் இதில் எதிர்பார்க்க முடியாது. இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இன்று NOKIA மற்றும் CDBABY போன்ற தளங்கள் இந்தியா மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு தங்கள் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.  இது இசை நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.  ரசிகர்களுக்கும் தான்.

இந்த இணைய பதிவிரக்க செயலிகள் அல்லது தளங்களுக்கு உங்கள் பாடல்களை தர வேண்டும் என்றால், டிஜிட்டல் விநியோகஸ்தர்களை அணுகலாம். இந்தத் தளங்களுடன் நீங்கள் தொடர்புக் கொண்டால் அவர்களே நல்ல டிஜிட்டல் விநியோகஸ்தர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். நீங்களே நேரடியாக இந்தத் தளங்களுக்கு தருவதென்பது இயலாத காரியம் ஆனால் உங்களிடன் 1 கோடிக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கிறதென்றால் அவர்கள் உங்களை அவர்களது விநியோகஸ்தர்களாக நியமித்து கொள்ளலாம்.  இருந்தபோதும் பாடல்களை அவர்களின் செயலியில் அல்லது தளத்தில் பதிவேற்றம் செய்ய உங்களுக்கு, கணிணி தொழில் நுட்பம் தெரிந்த ஒரு நபர் தேவைப்படும்.

இந்த பதிவிரக்கத் தளங்கள் மொபைல் நிறுவனங்கள் போல் அல்ல. அவர்கள் உங்கள் விற்பனையில் இருந்து எடுத்துக்கொள்ளும் அதிகபடியான லாபம் 10% அல்லது 20% உட்பட்ட லாப விகதிமே. விநியோகஸ்தர்களும் அப்படிதான். சிலசமயம் விநியோகஸ்தர்களும் பதிவிரக்கத் தளங்களும் சேர்ந்தே மொத்தம் 10% மட்டுமே எடுத்துக் கொள்ளும் நல்லவர்களாக இருப்பார்கள். பலர் உங்களுக்கு பதிவிரக்கங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் விற்பனை தகவல்களை தந்து விடுவார்கள். ஆனால், இதில் உங்களுக்கு அந்நிய செலவானிகள், வெளிநாட்டு வரிகள், பண பரிமாற்ற வங்கி செலவுகள் என்று சில செலவுகள் இருக்கும். இவை எல்லாமே ஏறக்குறைய 10% - 20% இருக்கும்.

CDBABY, AMAZON போன்ற நிறுவனங்கள் உங்களுடைய சிடியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கடைகளுக்கு கூட விநியோகம் செய்யும் சேவையை வழங்குவார்கள். இது கொஞ்சம் அதிகபடியான செலவுகளை ஏற்படுத்தும்  சேவைதான். இருந்தாலும் GRAMMY உட்பட சில சர்வதேச விருதுகள் உங்கள் நிறுவன வெளியீடுகளுக்கு வேண்டும் என்றால் நீங்கள் சிடி விற்பனையில் அக்கறை காட்டலாம். காரணம் இந்த விருதுகளுக்கான போட்டிகளில் பங்கெடுக்க நீங்கள் கட்டாயம் சிடி விற்பனையை காட்டியாக வேண்டும். டிஜிட்டல் விற்பனைகள் கணக்கில் எடுத்துகொள்ள பட மாட்டாது.

அடுத்ததாக, வானொலி, தொலைக்காட்சி மற்றும் பொது நிகழ்வு அல்லது கலை நிகழ்ச்சிகள் வழிப் பெறப்படும் வருமானம். அதாவது உங்கள் பாடல்களை பயன்படுத்துகிறவர்கள் உங்களுக்கு தரும் FEE அல்லது பயனீட்டிற்கான தொகை. இவைகள் இரண்டு வகைப்படும். 

ஒன்று Phonograph Public Performance ராயல்டி மற்றொன்று Public Performance Royalty. முதலாவது ராயல்டி உங்கள் வெளியீடுகளை வானொலியில் ஒலிப்பரப்புவதற்காக தரப்படும் ராயல்டி. அல்லது உங்கள் பாடல் தொலைகாட்சியிலோ அல்லது கலை நிகழ்வுகளிலோ பயன்படுத்தப்பட்டால் தரப்படு ராயல்டி. இதை நீங்கள் நேரடியாக வானொலி தொலைக்காட்சிகளிடம் இருந்து பெறலாம். ஆனால் சிறிய நிறுவனங்களை அவர்கள் பொறுப்படுத்துவதில்லை. எந்த இந்திய தொலைக்காட்சியும் இந்த ராயல்டிகளை தருவதில்லை. இந்திய தொலைகாட்சியென்று நான் குறிப்பிடுவது எல்லா நாடுகளில் இயங்கும் தமிழ் இந்தி நிகழ்ச்சிகளை வழங்கிவரும் தொலைக்காட்சிகள்.  முதல் வகை இசைத் திருட்டு, கள்ள பதிப்புகளும் இணைய பதிவிரக்கங்களும் என்றால். இது இரண்டாம் வகை.

எல்லா நாடுகளிலும் இசை நிறுவனங்கள் ஒன்றினைந்து ஒரு இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்களாக நீங்கள் சேருவதன் வழி, அவர்கள் மூலமாக நீங்கள் இந்த ராயல்டிகளை பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, இந்தியாவில் PPL மற்றும் SIMCA, மலேசியாவில் RIM அல்லது PPM.  ஆனால் நீங்கள் உறுப்பினராக இணைய கொஞ்சம் சந்தா செலுத்த வேண்டி வரும்.

அல்லது எல்லா வழிகளும் பணம் தரும் வழியென்று எண்ணாமல், உங்கள் இசை வானொலிகளில் ஒலிபரப்படுவதும், தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படுவதும் உங்கள் பாடல்களுக்கு கிடைக்கும் விளம்பரம் என்று சகித்துக் கொள்ளுங்கள். 

இன்னொரு ராயல்டி உண்மையில் இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் தரப்படுவது. அவர்களுக்கும் 50% தரப்பட்டு மீத 50% சதவிகிதம் பதிப்பாளர்களுக்குத் தரப்படும். இது பெறும்பாலும் வெளிநாடுகளில்தான் நடப்பில் இருக்கிறது. இந்தியாவில் பதிப்பாளர்கள் என்பது என்பதற்கு பதில் ஆடியோ நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறார்கள்.  இந்த ராயல்டியை பெற நீங்கள் காப்புரிமை இயக்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். இது அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்படும் காப்புரிம இயக்கம். இந்தியாவில் IPRS, மலேசியாவில் MACP, அமெரிக்காவில் ASCAP ஐரோப்பாவில்  PRS மற்றும் BMI போன்றவைகள் இத்தகைய காப்புரிம இயக்கங்கள்.

இது தவிர விளம்பரங்களுக்கு உங்கள் பாடல்கள் பயன்படுத்தப்படுவதற்கும், சினிமாவில் சில காட்சிகளுக்கு பயன்படுத்தப் படுவதற்கும், கலை நிகழ்ச்சியில் பாடப் படுவதற்கும் என்று உங்கள் பாடல்கள் எங்கு பயன்படுத்தப் பட்டாலும் அதற்கு உங்கள் பாடலை பயன்படுத்துபவர்கள் ராயல்டி அல்லது பயனீட்டு தொகையை வழங்கியாக வேண்டும்.  ஆனால் இந்தியர்கள் அதிலும் நமது தமிழர்கள் இதை பொருட்படுத்துவதே இல்லை. சரிகாமா போன்ற பெரிய நிறுவனங்கள் வக்கீல் நோட்டீஸ், வழக்கு என்று பயமுறுத்தி சட்ட வழிகளில் மிரட்டி உபயோகிப்பவர்களிடமிருந்து ராயல்டியை வாங்கிவிடுவார்கள். சின்ன நிறுவனங்கள் அந்த சவால்களை எதிர்நோக்கிதான் ஆகவேண்டும். கொஞ்சம் பணமும் செலவு பண்ண வேண்டும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய பயனீட்டுக்கு உங்கள் பாடல்களை தருவதற்கென்றே சில நிறுவனங்கள் உண்டு. அவர்களிடம் உங்கள் பாடல்களை பதிவு செய்துக் கொண்டால் அவர்கள் உங்கள் பாடல்களை விளம்பரப் படுத்தி, அனுமதி பெற்றுத் தருவதோடு அதற்கான ராயல்டியையும் தருவார்கள். ஒரு ஹலிவூட் படத்திலோ விளம்பரத்திலோ உங்கள் பாடல் இடம் பெற்றால் அது மிகப்பெரிய விளம்பரமும் லாபகரமானதாகவும் உங்களுக்கு இருக்கும். இந்தியாவிலும் மலேசியாவிலும் இதைக்கூட ஒரு தொழிலாக நீங்கள் செய்ய நல்ல வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் PUMP AUDIO என்ற நிறுவனம் நல்ல உதாரணம், இதுபோன்ற இசை பயனீட்டிற்கு அனுமதி வழுங்குவதில்.

ஆனால் இதற்கெல்லாமே அடிப்படையாக இருக்கப் போவது உங்களுடைய ஒப்பதங்கள்தான் (AGREEMENTS). தயாரிப்பாளர்களுடன், இசையமைப்பாளர்களுடன், விநியோகஸ்தர்களுடன், என்று எல்லா தரப்புகளுடனும் நீங்கள் செய்துக்கொள்ளும் ஒப்பொந்தங்கள் மிக மிக முக்கியமானது. சிறு தவறுகளோ அல்லது கவனக்குறைவோ உங்கள் மொத்த உழைப்பையும் முதலீட்டையும் பாழ் படுத்திவிடும் அபாயம் உண்டு. அதனால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வழக்குறைஞர் இருந்தாக வேண்டும்.  அதிலும் காப்புரிமம் பற்றிய ஞானம் உள்ளவராக இருத்தல் அவசியம். 

அல்லது இணையங்களில் நீங்கள் தாராளமாக பல ஒப்பந்த சாம்பிள்களை பெற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் ஆங்கில ஞானம் இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் அதில் பல மாற்றங்களை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில் சிறந்த ஒப்பந்தங்களை தயார் செய்து தர வக்கீல்கள் 50,000 ரூபாய் அல்லது 5,000 மலேசிய ரிங்கிட் வரை கேட்பது உண்டு. அப்படியிருப்பின் நீங்களே தயாரிப்பதுதான், சிறந்த வழிமுறை.

இசைத்துறை என்ற தொழில்நுட்பத்தின் ஊடாக பல வாயில்களை இன்று நமக்கு தந்துள்ளது. உதாரணத்திற்கு மொபைல் அப்லிகெஸன் mobile applications, itunes applications, கணிணி விளையாட்டிற்கான இசை, Loops, Samples, மெமொரி கார்டுகளிலும் KIOSK வழி பாடல்களை விற்பது என்று பல வாசல்கள் உங்கள் முன் இருக்கிறது. இதற்கெல்லாம் செலவுகளும் வேலைகளும் அதிகம். சிறந்த அணுகுமுறைகளின் வழிதான் நீங்கள் லாபத்தை ஈட்ட முடியும் இல்லையென்றால் இவைகள் எல்லாம் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய பெரிய பிம்பங்களை உருவாக்க மட்டுமே உதவும், லாபம் ஈட்டித் தராது.

நமது உள்ளூர் கலைஞர்களும், தனி இசை தொகுப்பு வெளியிட விரும்பும் இந்திய இசை கலைஞர்களும் சினிமா இசை மோகத்தில் இருக்கும் இசை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தொடர்புக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தாங்களே சொந்த இசை நிறுவனங்களை நிறுவலாம். மேலை நாடுகளில் இது ஒரு கலாச்சாரமாகி அப்படி நிறுவப்படும் நிறுவனங்களை Independent Labels என்றும் அத்தகைய கலைஞர்களை Independent Artists என்றும் அழைக்கிறார்கள். எனக்கொரு போட்டியாளர் உருவாவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

PEEPLI LIVE

இன்று காலை Sun நாளிதழில் அமிர் க்ஹானின் Amir Khan பீப்லி லைவை (Peepli Live) படம் இந்த முறை வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கார் போட்டிக்கு இந்தியாவால் தேர்ந்தெடுக்கப் பட்டதை படிக்க நேர்ந்தது. சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன்.

மலேசியாவில் அந்தப் படம் இன்னும் திரைக்கும் வரவில்லை விசிடி டிவிடியும் கிடைக்காது. காரணம் அது துளிகூட சினிமா சாயம் இல்லாத அப்பட்டமான கிராமிய சித்திரம். கடந்த மாதம் இந்தியாவில் ஹரியானாவில் உள்ள கர்நாள் என்ற இடத்திற்கு சென்றிருந்த போது காரில் ஒரு பாடலை கேட்க நேர்ந்தது. டேசு மேரா ரங்கு தேசிய பாபு, காட்டு காட்டு மே கட்டா என்று வரும் அசல் வட இந்திய கிராமிய பாடல். எனது வட இந்திய பஞ்சாபி நண்பர் அந்தப் பாடலை நான் விரும்புவதை கண்டு பெரும் வெறுப்பே அடைந்துவிட்டார். அவரோ நாள் முழுக்க விண்ணைத் தாண்டி வருவாயாவில் வரும் ஆஹா அடடா பெண்ணே பாடலில் மெய்மறந்துக் கிடந்தார்.  இந்த பாடலை மேல் எனக்கிருந்த மோகத்தால் அந்தப் படம் திரைக்கு வந்திருப்பதை கூறியதும் நாங்கள் இருவரும் செல்வதென்று முடிவு பண்ணினோம்.

படம் ஒரு டாக்குமெண்டரி போல் இருந்தாலும் அரங்கமே சிரித்துக்கொண்டே இருந்தது. அந்த அளவு படம் முழுவதும் நகைச்சுவை. ஆனால் சத்தியமாக எனக்கு எதுவும் புரியவில்லை. மொழி புரியவில்லை ஆனால் உணர்வையும் செய்தியையும் உள்வாங்கிக் கொண்டேன். நண்பர் சொன்னார், படம் முழுவதும் கொச்சை வார்த்தைகள் அதிகம். எப்படி சென்சர் அனுமத்தித்தார்கள் என்று தெரியவில்லை என்றார். இந்த படம் முழுக்க பாலாவின் நான் கடவுளில் வரும் பிச்சைக்காரர்களையும் அவர்கள் வாழ்க்கையையும் பாலா காட்டியிருந்தது போன்ற பிரமையையே ஏற்படுத்தியது. ஆரியாவின் ஹிரோயிஸம் இல்லாது அந்த பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மட்டுமே எந்த சினிமா பூசலும் இல்லாது எடுத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது இந்தப் படம். இதிலும் அதில் விரைவி கிடந்தது போல நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் கதை நகைக்கக் கூடியது அல்ல.

விவசாயிகள் பலர் தொடர்ந்து தற்கொலைகள் செய்துக்கொள்கிறார்கள். காரணம் விளைச்சல் முன்போல் இல்லை, அரசாங்க உதவி இல்லை என்று பல. அரசாங்கம் அவர்களுக்கு தரும் நஷ்ட ஈடும் கடனும் அரசியல் வாதிகளால் சுரண்டப்படுகிறது. கடனை கட்ட வழியில்லாதவர்கள் நிலத்தை விற்றுவிடுகிறார்கள். விவசாய அமைச்சரோ, இதற்கெல்லாம் தீர்வு, தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கி நாம் செல்வதுதான் என்கிறார். இதைப் பற்றி கட்டுரை எழுத வற்புறுத்தப்பட்டு, சமூக அக்கறையும் கொஞ்சம் கொண்ட ஒரு நிருபரை பிப்லி என்ற அந்தக் கிராமத்திற்கு அனுப்புகிறார் பத்திரிக்கை ஆசிரியர். அவருடைய வேலை, சமீபத்தில் இறந்த ஒரு விவசாயியின் குடும்பத்தைப் பற்றி செய்தி சேகரித்து வருவது. அவர்கள் இது பற்றி பேசி முடிக்கும் நிலையில் மின்சாரம் வருகிறது. அப்பாட என்று அச்சு வேலைகள் ஆரம்பிக்க ஆயுத்தமாகும் போது மீண்டும் மின்சாரத் தடங்கள் என்று இது போன்ற நிகழ்கால் இந்தியாவை பல இடங்களில் எந்த விமர்சனமும் செய்யாமல், பொறுப்படுத்தாமல் யதார்த்த இந்திய குடிமகனின் மனநிலைபோல் பல காட்சிகள் நகர்ந்து செல்கிறது.

நிருபர் அந்த விவசாயியை தேடிப்போகும் போது வழியில் ஒரு வயதான முதிய விவசாயியை காண்கிறார். அவரிடம் விசாரிக்கிறார். அவரோ இவரை பொறுப்படுத்தாமல் குழித்தோண்டிக் கொண்டிருக்கிறார். ஏழ்மையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது அவர் தோற்றத்தில் தெரிகிறது. அவர் இப்படி தினம் தினம் தன்னை வருத்தி குழி தோண்டிக் கொண்டேயிருக்கிறார். அவரை யாருமே பொருட்படுத்தவே இல்லை. இந்த நிருபரும். கடைசியில் அவர் தற்கொலை செய்துக் கொண்டபிறகு, அந்த குழியை இந்த நாளுக்காகதான் அவர் இதுநாள்வரை  வெட்டி வந்தார் என்று தெரியும் போது நிலைகுலைந்து போகிறான் இந்த நிருபன். (குழி வெட்டியது கிணற்றுக்காக என்று நணபர் யுவராஜன் இப்பொழுது கூறினார், இதெல்லாம் சினிமா கண் உள்ளவர்களுக்குதான் புரியும் மென்று வழக்கமான ஈவு இரக்கமற்ற தொனியிலே நக்கலடித்தும் விட்டார்).

அவன் தேடிவந்த அந்த இறந்த விவசாயியைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் செய்தி சேகரிக்க முடியாமல் வருத்ததுடன் திரும்பும் வேலையில், அரசாங்க உதவி நிதியை வேண்டி தினம் தினம் அந்த கிராமத்து ஆழுங்கட்சி தலைவரிடம் நடந்து நடந்து ஏமாற்றம் அடைந்து திரும்பும் இரு சகோதரர்கள், இதே நிலை நீடித்தால் நாமும் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டியதுதான், என்று பேசிக்கொண்டு போக, அந்த நிருபர் அவரை பேட்டி எடுத்து, தனது இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு ஏழை விவசாயி என்ற தலைப்புடன், இவரும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார் என்று செய்தி வெளியிட, அது பரபரப்பாகிறது.

சமீபத்தில் விவசாயத் துறை அமைச்சரிடம் பேட்டி எடுத்து பரபரப்பாக்கிய தொலைக்காட்சி நிறுவனமொன்று இந்த தற்கொலைப் பற்றிய செய்தியை தங்களது முந்தைய பரபரப்பு செய்தியுடன் தொடர்புபடுத்தி இன்னும் பிரபலமடைய, அந்த பத்திரிக்கை நிருபரை தொடர்புக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த விவசாயியையும் அவனது குடும்பத்தை சில செயற்கை நாடகங்களுடன் செய்தியாக வெளியிட அது இன்னும் பிரபலமடைகிறது. அதன் வெற்றியால் (PR Rate), எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் அங்கு படையெடுக்கிறது. அந்த விவசாயியோ எதுவும் சொல்ல இயலாதனாயும், அதை தனக்கு எந்த வகையிலும் சாதகமாக பயன்படுத்தி க் கொள்ளத் தெரியாதவனுமாய், நடுக்காட்டில் விடப்பட்டவன் போல் இருக்கிறான். இவனுடைய செய்தி ஏற்கனவே பத்திரிக்கையில் வந்ததற்கு ஆளுங்கட்சி அரசியல் தலைவரின் அடியாட்களிடம் ஏற்கனவே அடியும் வாங்கி இருப்பதால் மேலும் பயந்துப் போய் இருக்கிறான்.

இப்பொழுது அவனுக்கு உதவிகள் கிடைப்பதற்கு மாறாக, அவனது தின வாழ்க்கை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட ஆரம்பித்துவிட்டது. அவன் காலையில் எழுந்து காலைக்கடன் முடிப்பதைகூட படம் பிடிக்க இந்த சேனல்கள் அவனை துரத்திக்கொண்டேயிருந்தது. ரியலிட்டி நிகழ்ச்சிகள் இன்று தொலைக்காட்சியை ஆக்கிரமித்து பல நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதோடு ஒட்டு மொத்த சமூகத்தின் கலாச்சாரத்தையும் பாதித்து வருகிறது. ஒரு ரியலீட்டி நிகழ்ச்சியால் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ‘பிடிக்கவில்லை யென்றால் சேனலை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று சமீபத்தில் டில்லியில் தீர்ப்பு வழங்கியது கவனிக்கப் பட வேண்டும். ஆக இந்த ரியலீட்டி நிகழ்ச்சிகளின் மோகத்தாலும் தாக்கத்தாலும் மீடியாக்கள் இவனது அவலத்தையும் நிகழ்ச்சியாக வழங்க தயாராகிவிட்டது. அவனது வீடும், வாழ்க்கையும், கிராமமும், விவசாயிகளின் சோகமும் ஒரு ரியலீட்டி நிகழ்ச்சிக்கு களமாக மாறி, அவனது வீட்டை சுற்றி செட்டுகள் போடப்பட்டு, விளக்குகள் பொறுத்தப்பட்டு, அன்றாட தொலைக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க பெரும் நாடகம் தினம் தினம் அங்கு அரங்கேரத் தொடங்கியது.

மறு புறம் இதை வைத்து ஒரு தேச அரசியலே அரசாங்கத்தாலும் அரசியல் கட்சிகளாலும் நடத்தப்பட்டது. சாதி அரசியலும் இதில் பங்கு சேர்த்தது. சில அரசு சாரா இயக்கங்கள் அவனுக்கு பிரயோசனமே இல்லாத பல உதவிப் பொருட்களை அந்த விவசாயிக்கு வழங்கி சென்றது. அந்த குடும்பத்தின் வறுமை ஒழியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் இதைப்பற்றி முதலில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கை நிருபன் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று வறுத்தப்படுகிறான். பல சமயங்களில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அவன் முன்னிறுத்தும் கருத்துக்களில் உடன் பாடு இல்லாமல் போகிறது. 

இது எல்லாம் ஒரு புறம் நடந்து வர, ஏற்கனேவ பல நாட்களாய் குழி தோண்டி வந்த ஏழை வயோதிக விவசாயி எலி மருந்து உண்டு இறந்து விடுகிறான். அங்கு ஒரு சிலரே இருக்கிறார்கள். இந்த நிருபரும். அவன் முதலில் விவசாயிகளின் தற்கொலை செய்தியை வெளியிட்டதே இந்த மாதிரியான கொடுமை இனி வரக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் அது மிகப் பெரிய வியாபாரமாகவும் அரசியலாகவும் சில தரப்பால் உருவாக்கப்பட, இன்னொரு விவசாயி இந்த மீடியாக்களையும் அரசியல் வாதிகளையும் கொஞ்சமும் உறுத்தாமல் இறந்து போகிறான். அதிலும் பிறருக்கோ அல்லது அவனை சுற்றியுள்ள மற்ற ஏழை விவசாயிக்கோ சிரமம் வைக்காமல் குழியையும் தோண்டிவைத்து விட்டு இறந்துபோகிறான். 

இதற்கிடையில் தொலைக்காட்சியில் தான் காலைக் கடன் கழிப்பதை யாரும் படம் எடுத்து விடக்கூடாது என்று பதுங்கி பதுங்கி ஒதுக்குப்புறமாய் ஒதுங்கும் அந்த நாயக விவசாயியை ஆளும் கட்சியின் கிராமத்து அரசியல் தலைவன் கடத்தி சென்றுவிடுகிறான். அவனால் ஆட்சிக்கே ஆபத்து வரும் நிலை வந்திருப்பதால் என்று நான் நினைக்கிறேன். இதை அந்த நிருபன் கண்டு பிடித்து விடுவதோடு தான் கூட்டி வந்த தொலைகாட்சி நிறுவனத்திற்கு விசயத்தைச் சொல்ல அவர்கள் ரகசியமாகப் புறப்பட மற்றத் தொலைக்காட்சி நிறுவனங்களும் இவர்களை மோப்பம் பிடித்து பின் தொடர்கிறது. இறுதியில் நடக்கும் கிளைமாக்ஸ் குளுறுபடியில் அந்த விவசாயியை அடைத்துவைத்திருக்கும் வீடு தீக்கிறையாக அதில் அந்த பத்திரிக்கை நிருபன் இறந்து விடுகிறான். அதை இந்த விவசாயிதான் இறந்து விட்டதாக மீண்டும் மீடியாக்கள் செய்திகள் பரப்பிவிடுகிறது.

இப்பொழுது அந்த விவசாயின் அண்ணன் அந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு மீண்டும் தினம் தினம் பல மையில்கள் நடக்கிறான், இப்பொழுது தனது தம்பி இறந்ததற்கு அரசாங்கத்திடமிருந்து இழப்பீடோ அல்லது உதவித் தொகையோ வேண்டி. இப்பொழுதும் அது கிடைக்கும் என்று தோன்றவில்லை.

கேமெரா இப்பொழுது அந்த கிராமத்தை விட்டு வெளியேறிச் சாலைக்கு வந்து, பிறகு நெடுஞ்சாலையை அடைந்து, பிறகு பட்டணத்துக்குள் நுழைந்து டில்லியின் பிரதான நகருக்கு வருகிறது. வாண் உயர கட்டிடங்கள் ஆங்காங்கு எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளும் கூலித்தொழிலாளிகள் பலர் அங்கு வேலைசெய்வதும் காட்டப்படுகிறது. அதில் தூசுப் படிந்த முகத்துடன் கேள்விக்குறியுடன் அந்த நாயகன் தானும் ஒரு கூலித்தொழிலாளியாக அமர்ந்திருக்கிறான்.

1.8 மில்லியனோ அல்லது 18 மில்லியனோ (நினைவிலில்லை) விவசாயிகள் எதோ ஒரு வருடத்தில் (வருடமும் எனக்கு மறந்து போச்சு)இந்தியாவில் விவசாயத்தை கைவிட்டிருக்கிறார்கள் என்ற வாக்கியத்துடன் படம் முடிகிறது. படம் முடிந்து வெளிவரும் வரை அந்த சினிமா உங்களை பாதிக்காமல் நகைச்சுவையுடன் முழுவதும் கொண்டு செல்லப்பட்டிருக்கும். ஆனால் தியேட்டரை விட்டு நீங்கள் வெளியில் வரும் போது அது உங்களை கண்டிப்பாகப் பாதிக்காமல் இருக்காது.

இத்தனைக்கும் ஒரு வசனமும் புரியாமல், என்னால் உள்வாங்கிக் கொள்ளப் பட்டதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். வசனம் புரிந்தால் நிச்சயம் அதன்  பிரமாண்டம் இன்னும் விரியும் என்று ஊகிக்க முடிகிறது. இத்தனைக்கும் நஸ்ருடின் ஷாவைத்தவிர யாருமே சினிமா முகங்கள் அல்ல. அதிலும் அவர்கூட விவசாய அமைச்சராக இரண்டு காட்சிகளில்தான் தலைக்காட்டியிருப்பார். இசையும் கமர்சியல் இல்லாத அசல் கிராமியம்.  (ஒருவேளை பருத்தி வீரன் படம் அமீருக்கு இந்த பீப்லி லைவைத் தயாரிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கலாம்). ஆனால் இந்தப் படம் இந்திய வரலாற்றில் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த முறை. அதுவும் ஆச்சரியம்.

ஆஸ்கார் கிடைக்கலாம்.