Friday, July 30, 2010

வ‌ற்றிப்போகும் சினிமா இசை!வாழ்க்கையில் பல சமயங்களில் நமக்கு தேவையாய் இருப்பது பிறரின் உதவியல்ல, ஆறுதலான வார்த்தையும் நம்பிக்கை விதைக்கும் சொற்களும்தான். என்னிடம் வரும் பல இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் தங்களுடைய இசையை வெளியிடும் வாய்ப்பைத் தேடி வருவதைக் காட்டிலும் தங்களின் இசையின் மீதும் திறனின் மீதும் பிறருடைய நம்பிக்கையான வார்த்தைகளை எதிர்பார்த்துதான். அதனாலேயே பல சமயங்களில் தேவையில்லாமல் அதிக நேரம் அவர்களுடன் செலவிட வேண்டி வரும். அவர்களை காயப்படுத்தக் கூடாது என்பதற்காகவே. இரண்டு காரணங்கள்தான் எனக்கு. ஒன்று, அவர்கள் இசை பிடிக்கவில்லை என்பதால் அது சிறந்த இசையல்ல என்று அவர்கள் எண்ணிவிடக்கூடாது. மற்றொன்று இந்த இசை விற்காது என்பதாலோ அல்லது விற்க முடியாமல் போகலாம் என்று நான் சொல்லும் காரணத்தாலோ அவர்கள் மனமுடைந்து அவர்களின் இசை முயற்சியை கைவிட்டு விடக்கூடாது.

இன்றைய நிலையில் தொடர் இசை முயற்சிகள் செய்யும் கலைஞர்கள் யாருமேயில்லை. எல்லோரும் பாதியிலேயே மனமுடைந்து போய்விடுகிறார்கள். சினிமா இசை இன்னும் கொஞ்சக் காலத்திலேயே தேங்கிவிடும் என்று எனக்கு பெரிதும் தோன்றுகிறது. இன்றைக்கும், சினிமா இசை விற்கப்படுவதேயில்லை. இது இசைத்தொழிலில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். திருட்டு இசைத் தட்டு, சட்டவிரோத பதிவிரக்கங்கள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி அப்பட்டமாய் தெரியும் மிகப் பெரிய உண்மை, சினிமா இசை தரமிழந்து, ஆன்மா அற்று வருகிறது. ஒலிகள் நிரப்பும் வேலைகள்தான் நடந்து வருகிறதே த‌விர‌ இசை தொலைந்து விட்டது. வியாபாரம் தெரியாதவர்களால் யாருடைய பணமோ எப்படியோ செலவழிக்கப்பட்டு வருகிறது. இந்திய இசைத்துறையில் சரிகமா, டைம்ஸ், முயூசிக் டுடேய் போன்று நிரந்தரமாய் இன்றும் இயங்கி வரும் நிறுவனங்கள் எத்தனை? அதுவும் சினிமா இசையை மட்டுமே நம்பி இருக்கும் நிறுவனங்கள் எத்தனை? இன்று அதிக அளவில், பெரிய பெரிய திரையிசைப் பாடல்கள் வாங்கும் நிறுவனங்களின் வரலாறு எத்தனை ஆண்டுகள் பிற்பட்டது? ஆனால் இவை இசைத்துறையின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு குறுகலான பார்வையை எனக்குத் தருவதைக்காட்டிலும் மாற்று இசைக்கான ஒரு மிகப் பெரிய வாசல் திறந்து கிடப்பதாகதான் தோன்றுகிறது.

சினிமா வட்டத்திற்கு வெளியே, ஆன்மாவிற்குள் பிரபஞ்ச இசையை அடக்கிக்கொண்டு உச்ச வெளிப்பாட்டிற்கான தருணத்திற்காக காத்துகொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம். வாய்ப்புகள் இல்லாமலும், வாய்ப்புகளை உருவாக்கிகொள்ளத் தெரியாமலும் ஒரு பெறும் கூட்டம் புதிய இசை முயற்சிகளை கைவிட்டு நிற்கின்றது அல்லது வெளிக்கொண்டுவர தயங்கி நிற்கிறது. அவர்கள், பல சமயம் தங்களது முயற்சிகளை விட்டு விட்டு அன்றாட வாழ்க்கையில் தொலைந்து விடுகிறார்கள் அல்லது வாய்ப்புகள் சினிமாவில்தான் இருக்கிறது என்று சினிமா வாய்ப்புகளில் தங்களின் சுயத்தை தொலைத்து விடுகிறார்கள். எத்தனை ரியலீட்டி இசை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில், எத்தனை திறமைசாலிகள், யாரால் கவனிக்கப் படுகிறார்கள்? எல்லா திறனாளிகளும் மற்றவர்களின் கல்லாக்களை நிரப்பிவிட்டு வெற்றுப் புகழ்ச்சியால் வழியனுப்பப்படுகிறார்கள்.

எல்லா ஆடியோ நிறுவனங்களும் சினிமா சம்பந்தப்பட்ட வியாபாரிகளாலும் அல்லது இசையல்லாத ஆன்மீகம் விற்கும் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இசை தரிசனமற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அதனால் சினிமா அல்லாத எல்லா இசை முயற்சிகளையும் சட்டென்று நிராகரித்து விடுகிறார்கள். அதனால் புதிய கலைஞர்கள் தங்கள் இசையை எப்பொழுதும் சினிமா இசைச் சாயலில் கொண்டுவருகிறார்கள் அல்லது சினிமா வாய்ப்புகள் தேடுகிறார்கள். என்னிடம் வரும் எல்லா இசையும் 99% சினிமா இசைபோலவோ அல்லது அதன் பாதிப்பிலோ அல்லது அதன் அப்பட்டமான நகலாகவோதான் இருக்கிறது. அவர்களுடையதை நான் சினிமா இசைபோல் இருக்கிறது, வேறு எதாவது வித்தியாசமாக எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் போது அவர்களுக்கு அதிர்ச்சியாகவும் அதேசமயம் ஒன்றும் விளங்காதவர்களாக முழிப்பதும் வாடிக்கையாக இருக்கும். காரணம் எல்லா நிறுவனங்களும் அவர்களை சினிமா இசைச் சாயலில் பாடல் போடும்படிதான் ஆலோசனை வழங்கியிருக்கிறது, ஊக்குவிக்கிறது. சிலர் அந்த தர்ம சங்கடத்தை எனக்கு அளிக்காமல் அவர்களாகவே முன்வந்து ‘இந்த இசை அப்படியே சினிமா பாடல் போலவே இருக்கும் கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள்’ என்று சான்றிதல் தருவார்கள்.

இசையோடு வருபவர்களை காட்டிலும் சினிமா கனவோடு வருபவர்கள்தான் அதிகம். ஒன்றை கண்டிப்பாக நம்புங்கள். சினிமா இசையின் காலம் முடிந்து விட்டது அதன் கடந்த கால வெற்றிகளில்தான் பலரும் அதன் ஆயுளை நீட்டி வருகிறார்கள். புதிய இசைகளுக்கான வாய்ப்புகள் விஸ்தாரமாக இருக்கிறது. அவைகளுக்கான தளம் சினிமா அல்ல. அப்படி வலிய முயற்சிக்கும் போது கார்த்திக்ராஜாவின் அச்சமுண்டு அச்சமுண்டு இசைபோலவோ அல்லது உன்னைப் போல் ஒருவன் இசைப்போலவோ யாராலும் கவனிக்கப்படாமல் போகும். சினிமாவில் இசை கவனிக்கப்படுவது இல்லை. எந்த சினிமா விமர்சனமும் இசையை பொருட்படுத்தியதும் இல்லை.

ஏன், நம்மிடையே நமக்கான வித்தியாசமான இசை முயற்சிகள் விஸ்தரிக்கப்படவில்லை? டும் டும் டும், மாணிக்கம் போன்ற திரையிசைக்குப் பிறகு ஏன் அது போன்ற இசை வளரவில்லை. அல்லது அச்சமுண்டு அச்சமுண்டு போல கர்நாடக நியூ ஏஜ் ஏன் பிரபலமடையவில்லை. ஏ. ஆர். ரஹ்மானின் ஆயுத எழுத்து ஏன் பேசப்படவில்லை? அதிலும் அந்த திரையில் ஒலிக்கும் ‘ப்பானா’ ஏன் போற்றப்படவில்லை. சினிமாவால் அமுக்கப்பட்ட பிரமாண்ட இசையில் இளையராஜாவின் பல முயற்சிகளை சொல்லலாம் குறிப்பாக பழசி ராஜாவில் வரும் 'குன்றத்துக் கொன்றைக்கும்' என்ற பாடல். இளையராஜாவின் அநேக ரசிகர்கள் திரையில் இளையராஜாவின் பாடலை பார்த்து வெறுப்படைந்திருக்கிறார்கள். சினிமாவை தவிர்த்தும் அதை சாராமலும்தான் இளையராஜாவின் எல்லா பாடல்களும் வெற்றியடைந்திருக்கிறது.

ஆனால் இன்று சினிமாவின் கரம் வலிந்து, சினிமா இசைக்காக சில வரையரைகளை வகுத்து அதற்குள்ளாகவே இசையை பயணிக்க கட்டளையிட்டிருக்கிறது. அதனாலேயே பெரும்பாலான திறனாலிகள் கற்பனை வறட்சியுடையவர்களாக தென்படுகிறார்கள். எஸ். தமன், முஹமட் ரிஜ்வான், சதீஸ் சக்கரவர்த்தி என்று பல புதிய திறமைசாலிகளை சினிமா, திரையிட்டு மறைக்கக்கூடும்.

புதிய சிகரங்களை நோக்கிய பயணங்கள் நமது கலைஞர்களுக்கு தேவை. சினிமா இசையை புறக்கணித்து விட்டு உங்கள் ஆன்மாவிற்குள் மூழ்கி அதனுள் ஒலிக்கும் இசையை வெளியே கொண்டுவாருங்கள். மிகப்பெரியப் புறக்கணிப்பையும் தோல்வியையும் சந்திக்கலாம். காலம் கடந்தும் ஒலிக்கும் எல்லா கீதங்களும் அதன் பிறப்பில் புறக்கணிக்கப்பட்டதுதான். இளையராஜா எதிர்கொள்ளாத புறக்கணிப்புகளா? 'போறாளே பொன்னுதாயிக்கு' ஏ. ஆர். ரஹ்மானைக் காயப்படுத்தாத‌ விமர்சனங்களா? அவர்களும் சினிமாவால் புகழ் அடைந்தவர்கள் என்றாலும் அவர்களின் இசை சினிமாவையும் அவர்கள் காலத்து சினிமா இசையையும் மீறிவந்த மாற்று இசை. இன்று சினிமாவிற்கு, இசையென்பது ஓர் அத்தியாவசிய இலக்கணமல்ல. ஒலி எடிட்டர் ஒருவர் போதும் சினிமாவை பேசவைக்க.

இன்றைய சினிமா இசைக்கு ஆயுள் குறைந்து விட்டது (அதிக பட்சம் 3 மாதங்கள்). இசை தயாரிப்பு தொடங்கி விற்பனைவரை சுரண்டல்கள், கற்பனை வறட்சி என்று கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சினிமா இசை வரலாற்றின் இருண்டகாலத்தில் இருக்கிறது. சினிமா இசை மட்டுமே சந்தையில் ஆக்ரமித்துள்ள இந்த நிலையில், அது ஒட்டு மொத்த இசைக் கலாச்சாரத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் தேக்க நிலையை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்திய இசைகள். வட இந்திய திரை இசை, சினிமா அல்லாத இசையின் பிரபலத்தில் தன்னை மெருகேற்றி வரும் வேலையில் தென்னிந்திய சினிமா இசை மாற்று இசை வளர தடைவிதித்திருக்கிறது. இசையை புதிய தளத்திற்கு கொண்டு செல்ல எல்லா தகுதிகளுடனும் கற்பனை திறனுடனும் சிறந்த கலைஞர்கள் பலர் இருந்தும் போலி பிம்பங்களால் குழம்பிப் போய் புதிய முயற்சிகளில் விரக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது மாற வேண்டும்.

கிரீண் டேய் (GREEN DAY) என்ற அமெரிக்காவின் மிகவும் பிரபலமான, நீண்ட காலமாக பேசப்படும் ராக் இசைக் குழு தோற்றுவிக்கப்பட்டது 1988ல். அவர்களின் முதல் இசை தொகுப்பு வெளியானது 1994ல். ஏறக்குறைய 6 வருடங்கள் கழித்துதான் டூக்கி (Dookie) என்ற ஆல்பத்தின் வழி வெளியுலகுக்கு பிரபலமடைந்தார்கள். முதல் ஆல்பம் 14 மில்லியன் சிடிகள் விற்றது, பிறகு தொடர் மூன்று பெரிய தோல்விகள். அஸ்தமனமாகிவிட்டது அவர்களது புகழ் என்றுகூட பேசப்பட்டது. இருந்தும் 3 வருட முயற்சியில் புதிய இசை முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அந்த ஆல்பம் சந்தைக்கு வருமுன்பே மாஸ்டர் டேப் திருடுப்போனது. உடைந்து விடாமல் திடீர் முடிவாக முற்றிலும் மாறுப்பட்ட இசைமுயற்சியாக ராக் ஒபரா (Rock Obera) என்ற வித்தியாச இசை பாணியில் அவர்கள் வெளியிட்ட அமெரிக்கன் இடியட் (American Idiots) அவர்களை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அவர்களின் உச்சம் மிக நீண்ட முயற்சிக்கு பின் அடையப்பட்ட ஒன்று. உலகின் முதல் தர ராக் கலைஞர்களாகப் போற்றப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கால எல்லை அல்லது வரையரை உண்டு என்று இந்த உலகம் பொதுவாக கருதுகிறது. அதையும் கடந்து நாம் நின்று போராடும் போது நம்மை இந்த உலகம் ஒரு மனநோயாளியாக எண்ணி புறக்கணித்து விடும். நம்பிக்கை மட்டுமே தேவைப்படும் அந்தக் கணத்தில் நிராதரவாய் நிற்க நேரிடும். மனம் தளர்ந்து விட வேண்டாம். எல்லாருக்குமான வாய்ப்பை இறைவன் கைகளில் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறான்.

இது ஒரு தன்முனைப்பு கட்டுரை என்று நினைக்க வேண்டாம். ஓர் ஆல்பத்தை வெளியிட்டு அதை சந்தையில் யாருமே கொண்டு செல்ல முன்வராத நிலையில் (நானும் தவிர்த்து விட்டேன் ஒரு சில காரணங்களால்), ஏறக்குறைய 4 வருடங்கள் கடந்து மீண்டும் ஒரு முயற்சியில் இறங்கியிருக்கும் ஒரு குழுவை, நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் தொடர்புகொண்டு, புதிய முயற்சிகளை தொடருங்கள், துவண்டு விடாதீர்கள் என்று சொன்னபோது, பெரிதும் உச்சாகமடைந்தார்கள். காரணம், பெரிய கலைஞராய் அவர்கள் போற்றும் ஒருவர், இவர்களின் வழிகாட்டியாக எண்ணி வந்த ஒருவர் இவர்களுடைய இசையை பகீரங்கமாக, கேவலமாக விமர்சித்து இருக்கிறார். எனக்கு தெரிந்தவரை புதிய தளத்தில் பயணிக்கும் இசை அவர்களுடையது. நான் தவிர்த்த காரணத்தில் மிகவும் முக்கியமான ஒன்று குரல் வளம் அற்றிருந்தது அவர்களின் தொகுப்பு. அதற்காக அவர்களின் இசைத்தீயை அணைத்துவிடக் கூடாது என்றுதான் எனக்கு தோன்றியது. அதனால்தான் அழைத்தேன். எதிர்பாராத இந்த அழைப்பு அவர்களை உற்சாகப்படுத்தியது.

அவர்களிடம் பேசிய பிறகு, எனக்கு வந்த இசை சாம்பிள்களையும், சந்தித்த இசைக் கலைஞர்களையும் எண்ணிப் பார்த்தேன். அதில் யாருமே இன்னும் சொந்தமாகவோ அல்லது பிற நிறுவனங்கள் மூலமாகவோ எந்த இசை தொகுப்புகளும் வெளியிடவில்லை. அதற்காக அவர்கள் திறனற்றவர்கள் என்று கூறிவிட முடியாது. பல சமயங்களில், நான் பதில் கூட தெரிவிக்க அவகாசம் இல்லாமல் நிராகரித்து இருக்கிறேன். அவர்கள் முயற்சிகளை கைவிட்டு விடக்கூடாது என்ற எண்ணம், நீண்ட நாள் எழுதாமல் இருந்த எனக்கு மீண்டும் எழுத ஒரு அவகாசம் அளித்திருக்கிறது. சினிமா இசைப் பற்றிய எனது நீண்ட நாளைய அதிருப்தியை வெளிக்கொண்டுவர உதவியிருக்கிறது.

No comments: