Monday, February 15, 2010

My Name Is Khan மை நேம் இஸ் க்ஹான்

‘மை நேம் இஸ் க்ஹான்’ என்ற சொன்னவுடன் நம் நினைவை தொடரும் அடுத்த வார்த்தை ‘நான் தீவிரவாதியல்ல’ என்பதுதான். அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும் வசனமும் திரைக்கதையும் கொண்டப் படம் மை நேம் இஸ் கான். சமீபத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பான படமாக நான் பார்த்த ஒரே படம் உன்னைப் போல் ஒருவன். ஆனால் அந்தப் படத்தைவிட பல மடங்கு சிறந்த ஒரு படம் ‘என் பெயர் க்ஹான்’. ஷாருக் க்ஹான் நாயகனாக நடித்திருந்தது.

படம் ஆரம்பித்தவுடனே அமெரிக்க விமான நிலையத்தில் அவர் சோதனைக்கு உட்படுத்தப் பட்ட சொந்த அனுபவத்தை பதிவு செய்ய முயற்சிக்கும் ஒரு சாதாரண படம் என்று கொஞ்சம் வெறுப்பானேன். படம் அப்படிதான் தொடங்குகிறது. சோதனைக்குப் பிறகு அவர் காவலாளிகளிடம் சொல்கிறார். என் பெயர் க்ஹான், நான் தீவிரவாதியல்ல. படம் முழுவதும் இந்த வரிதான் பேருருவம் கொள்கிறது. ஆனால் அந்த அனுபவம் ஒரு மிகப்பெரிய சமூக அக்கறையையும் இஸ்லாமியராக அவர் சார்ந்த சமூகத்தின் மீதான பொருப்புணர்வையும் அகலப்படுத்தியிருக்கிறது என்பதை  படம் பாதி தூரம் செல்லும் போது நிரூபித்திருக்கிறது. அதை திறமையாக அதன் இயக்குனர் கரன் ஜோஹர் கையாண்டும் இருக்கிறார்.

இந்த படத்தை தயாரித்தது ஷாருக் க்ஹானின் சொந்த நிருவனமான ரெட் சில்லி. விநியோகித்திருப்பது ஹலிவூட்டின் Fox Century. எனக்கு பிடித்தமான இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்களான சங்கர் ஹெசான் லோய் இசையமைத்திருக்கிறார்கள்.

Asperger's syndrome எனப்படும் ஒருவித உளவியல் தொடர்புடைய மனக் கோளாறுக்கு உட்பட்டவன் நாயகன். அமெரிக்காவிற்கு வந்து அங்கு தனக்கென ஒரு வாழ்க்கையை தொடங்குகிறான், தனது அம்மாவின் விருப்பத்திற்காக. படத்திலும் அவர் முஸ்லீம். படத்திலும் ஓர் இந்து பெண்ணை விரும்பி மணக்கிறார்.  அவள் விவாகரத்து பெற்றவள். ஆறு வயது மகனும் இருக்கிறான். சந்தோஷமான அவர்களுடைய வாழ்வு 9/11 பிறகு இஸ்லாமியர்கள் மீதான வன்முறையால் பாதிக்கப்படுகிறது. அந்த வன்முறையில் அவர்களுடைய மகன் இறக்கிறான்.

இஸ்லாமியரை மணந்ததற்காகவும், தனது இஸ்லாமிய கணவரின் பெயரை தனது பெயருக்கு பின்னும் தனது மகனின் பெயருக்குப் பின்னும் சேர்த்தற்காக முதல் தடவையாக கோபமும் வெறுப்பும் கொள்கிறாள் மந்திரா என்ற அவனுடைய மனைவி. ஒரு சின்ன பெயர் தங்கள் வாழ்க்கையில் என்ன பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிடப்போகிறது என்று நினைத்தவள், ஒரு சின்ன பெயர் தன் வாழ்க்கையையே இல்லாமல் ஆக்கிவிட்டதை எண்ணி, தனது குழந்தையை உண்மையில் கொன்றது தான்தான் என்று குற்ற உணர்வுக்கு ஆளாகிறாள். க்ஹானை தன் வாழ்விலிருந்து வெளியேரும் படியும் கூறுகிறாள். அவன் அப்பாவியாக ‘நான் எப்பொழுது திரும்பி வருவது’ என்று கேட்கிறான். அவள் வெறுப்பில், ‘உன்னால் என்ன செய்ய முடியும், வேண்டுமென்றால் அமெரிக்க ஜனாதிபதியிடம் போய் சொல்லு உன் பெயர் க்ஹான் என்றும் நீ தீவிரவாதியல்ல என்றும், பிறகு திரும்பி வா’ என்று ஆத்திரப்படுகிறாள்.  அதை அவன் தீவிரமாக எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். அந்த காட்சியைப் பார்த்த பொழுது, அப்பாவி இஸ்லாமியர்கள் ஏன் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவேண்டும் என்ற ஓர் அழுத்தமான இரக்கத்தை பார்வையாளர்கள் மீது வலிய தினித்து நமது பரிதாபத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் அப்படியொரு மனக்குறையுள்ள ஒருவரை இஸ்லாமியராக காட்ட முயற்சித்திருக்கிறார்களோ என்று தோன்றியது.

ஆனால் விக்கி பீடீயாவில் படித்தப்பிறகுதான் தெரிந்தது அந்த கதையை நகர்த்த  அத்தகைய கதாபாத்திரத்தால் மட்டுமே சாத்தியம் என்பது. அதோடு அந்த Syndrome உள்ளவர்களின் குணங்களில் முக்கியமானது அவர்கள் சகஜமான பொது தொடர்பு திறன் அற்றவர்கள் என்பது. சகஜமாக யாருடனும் பழகாதவர்கள், பேசாதவர்கள். விடாபிடியாக சில விஷயங்களை தொடர்ந்து செய்பவர்கள். இந்த குணங்கள் அமெரிக்காவில் இருக்கும் இஸ்லாமியர்களின் குணாதிசயங்களை கட்சிதமாக பொருத்துகிறது என்று நினைக்கிறேன். அதோடு அத்தகைய குறையுள்ளவர்களுக்கு சில தனித்துவமான திறமைகளை கொண்டிருப்பதாகவும் சொல்வது, கதையோட்டத்திற்கு தேவையாகவும் இருக்கிறது.  அது மட்டுமல்லாது இந்த நோய் அமெரிக்காவில் பரவலாக அறியப்படுவதாகவும் இருக்கிறது.

புகழின் உச்சியில் இருக்கும் எந்த இஸ்லாமயிரும் இதுவரை தீவிரவாதத்திற்கு எதிராக தன்னை ஒரு முஸ்லிமாக முன்னிறுத்தி எந்த எதிர்வினையும் செய்யாத நிலையில், இது கவனத்திற்குரிய திரைப்படமாகப் படுகிறது (ஜனரஞ்சக சினிமா சூழலில்). அதோடு 9/11க்கு பிறகு அமெரிக்காவில் வாழும் சராசரி இஸ்லாமியர்களின் நிலையை பிரதிபலிக்கும் திரைப்படமாகவும் இது இருக்கிறது. 

ஆனால் இதில் மிகத் தீவிரமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே விஷயம் மனிதர்களை குணங்களை கொண்டு மதிப்பிடலாமே தவிர மதங்களை கொண்டு அல்ல. உலகில் இரு தரப்பு மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு தரப்பு நல்லவர்கள், ஒரு தரப்பு கெட்டவர்கள். இதுவும் படம் முழுவதும் பயணம் செய்யும் வாசகம். இந்துக்கள் தீயவர்கள் என்று சிறுவயதில் அவன் மனதில் பதிந்ததை அவனுடைய தாய் ஒரு எளிய விளக்கத்தின் மூலம் அவனது அடிப்படை சிந்தனையை மாற்றிப் போடுகிறாள். அதுவே அவனது பயணம் முழுக்க வழிதுணையாக வருகிறது. மனிதர்களை நேசிக்க அவனுக்கு மதம் தடையாக இல்லாமல் போனதற்கு அழுத்தமான காரணத்தை முன்வைக்கிறது.

அதோடு இஸ்லாமியர்கள் எந்த சூழலிலும் தங்கள் அடையாளத்தை துறக்காமலும் அதேசமயம் வெறுப்பிற்கும் வன்முறைக்கும் தனது உள்ளத்தை பழியாக்காமலும், சக மனிதனை மதங்களையும் தாண்டி அன்போடு நோக்கும் குணங்களை விதைக்க முற்படும் ஒரு செய்தியாகவும் நம்மை கடக்கிறது இந்தப் படம்.

உலகில் போருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் சொந்த நாட்டில் வறுமைக்கெதிராகவும், கடைநிலை மக்களின் அடிப்படை வாழ்க்கைக்காக முக்கியத்துவம் தருவது பற்றியும், போரை முன்னிலைப் படுத்தும் ஊடகங்களை விடவும் மனிதத்துவத்தை முன்னிலை படுத்தும் ஊடகங்கள் எவ்வளவு வலியது என்றும் திரை முழுவதும் அற்புதமான விஷயங்களை உபதேசத் தொனியில்லாத, ஒரு சராசரி காதல் படமாகவே முன்னகர்த்துகிறது இந்தப் படம்.

நாயகி படத்தின் இறுதியில் ‘வெறுப்பால் நாங்கள் சாதிக்க முடியும் என்று நினைத்ததை நீ அன்பால் சாதித்திருக்கிறாய்’ என்று சொல்லும் போது, காந்தியம் நமக்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

‘மை நேம் இஸ் க்ஹான், நான் தீவிரவாதியல்ல’ என்று இறுதியில் அவன் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்லும் போது, அவன் தன்னை முன்னிலைப் படுத்துவது மறைந்து, தன்னிரக்கம் வேண்டுவதும் மறைந்து, எல்லா ஆழ்மனங்களையும் நோக்கி மீண்டும் மீண்டும் நாம் தீவிரவாதியல்ல என்று ஆழ பதியவைக்கும் ஒரு முயற்சியாகவே இது படுகிறது. அதன் உச்சத்தில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று எல்லோருமே மதங்களை கடந்து ‘நான் தீவிரவாதியல்ல’ என்று சொல்லும்போது, அது நிகழ்கால குரலாக தெரிவதைக் காட்டிலும் எதிர்கால பிரக்ஞையோடு ஒலிப்பதாகவே தெரிகிறது.

தீவிரவாதம் யார் மனதிலும் மீண்டும் தலையெடுக்காமல் இருக்கட்டும் என்று சொல்லும் ஒரு சராசரிப் படம். எந்த அவார்ட்டுக்கும் பாராட்டுக்கும் ஆசைப்பட்டு எடுக்கப்பட்ட படாத ஒரு சாதாரண ஷாருக் க்ஹான் படமாக எடுத்திருப்பதுபோல் தெரிந்தாலும் இது கவனிக்கப் படவேண்டிய படமாக எனக்குப் படுகிறது. உலக அளவில் ஷாருக் க்ஹானுக்கு இருக்கும் மார்க்கெட், நிச்சயம் சில நல்ல விளைவுகளை பார்ப்பவர் மனங்களில் விதைக்ககூடும்.

http://www.mynameiskhanthefilm.com/

1 comment:

சுரேஷ் கண்ணன் said...
This comment has been removed by a blog administrator.