Tuesday, December 15, 2009

மிடெம்
மிடெம் என்பது வருடா வருடம் பிரன்ஸில் நடக்கும் இசைத்துறைச் சார்ந்த கருத்தரங்கும், தொழில் நிபுணத்துவக் கலந்துறையாடலும், கண்காட்சி மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுமாகும். ஒவ்வொரு வருடம் பத்தாம் மாதம் தொடங்கி இது தொடர்பாக இணையத்தை வளம்வருவதும், இதில் கலந்துக்கொள்ள கனவு காண்பதும் எனக்கு வாடிக்கையாகிவிடும்.

இதில் கலந்து கொள்ள மட்டும் மலேசிய ரிங்கிட் ஏறக்குறைய 4,500 வெள்ளி செலுத்தவேண்டும். விமான செலவு, தங்கும் செலவு, உணவு செலவுகள் இதில் அடக்கம் இல்லை. மொத்தச் செலவாக எப்படியும் மலேசியா ரிங்கிட் 10,000 முதல் 15,000 வரை இதில் கலந்துக் கொள்வதற்காக செலவாகலாம் என்பது எனது பட்ஜெட்டில் காட்டியது.  ஆனால் இன்றுவரை இது கனவாகவே இருந்து வருகிறது.

இந்த மிடெம் ஏன் எனக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால், இசைத்துறை சார்ந்த அத்தனை நிறுவனங்களும், தலைவர்களும், கலைஞர்களும் இதில் கலந்துக்கொள்வார்கள். இசையின் தொழில்துறை சார்ந்த அடுத்தக்கட்ட வளர்ச்சி பெரும்பாலும் இங்குதான் முடிவுசெய்யப்படும், விவாதிக்கப்படும், நடைமுறைசாத்தியங்கள் அலசப்படும்.  நோக்கியா (NOKIA) தனது இசை பதிவிரக்கத் தளத்தையும், தொலைப்பேசியிலேயே பாடல்கள் உள்ளடக்கப்பட்டு வெளியிடுவது போன்ற திட்டங்களையும் இங்குதான் முதலில் முன்மொழிந்தது.

இசைத்துறைச் சார்ந்த தொழில் சாத்தியங்கள், தொழில் நுட்ப சாத்தியங்கள், சந்தை நிலவரங்கள் என்று அனைத்தும் நம்பிக்கைத் தருவதாகவும் சாத்தியாமாகத் தென்படுவதும் இந்த மிடெம் நிகழ்வில்தான்.  இசைத்துறையின் டைனோஸர்களான சோனி, யுனிவெர்சல், வார்னர் முதல் இசைத்துறையின் மிக சிறிய நிறுவனங்கள் அனைத்தும் இதில் கலந்துக்கொள்ளும். இந்தியாவில் இருந்து வருடா வருடம் கலந்துக்கொள்ளும் நிறுவனம் டைம்ஸ் மியூஸிக் ஒப் இந்தியா.  இசைப் பதிவிரக்க தொழில் நுட்ப நிறுவனங்களான ஐ - டியூன் (i-tune) முதல் சிறிய நிறுவனங்கள் கூட இந்த நிகழ்வைத் தவரவிடாது.

இசையை சிடி மற்றும் இணைய பதிவிரக்கங்கள் வழி விற்பனை செய்வது மட்டுமல்ல இசைத் தொழில், அதையும் தாண்டி இசை தொழில் சார்ந்த அனைத்து ரகசியங்களும் அம்பலப்படுத்தப்படும் ஒரு தூரநோக்கு கருத்துரையாடல் உள்ளடக்கியது இந்த நிகழ்வு.

நாம் யாருடன் வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட, முன்கூட்டியே பதிவு செய்துக்கொண்டால் அதற்கும் ஏற்பாடு செய்துத் தரப்படும். அதில் ஜாம்பவான்கள் முதல் எவருடனும் நாம் கலந்துரையாட முடியும், ஆலோசனைப் பெற முடியும், பணம் தவிர வேரு எந்தத் தடையும் இல்லை.

உலகத் திரைப்படம் முதல்கொண்டு பல கண்காட்சிகளுக்கு பெயர்பெற்ற பிரென்ஸின், கென்னஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் நடைபெறுகிறும் இந்த நிகழ்வில் இந்த வருடமாவது நான் கலந்துக்கொள்ள வாய்ப்புகள் அமையும் என்று மீண்டும் கனவுகாணத் தொடங்கி விட்டேன்.

இசைத்துறையில் இருப்பவர்கள் இதை தவிர விட வேண்டாம்.

http://www.midem.com

இயற்கையுடன் துண்டிக்கப்படும் நமது உறவுகள்

கடந்த வெள்ளியன்று மகனை கணித வகுப்பில் சேர்த்துவிட்டு மனைவி மகளுடன் ஸாப்பிங் சென்றேன். பெண்களுடன் ஸாப்பிங் செல்வது கொஞ்சம் சலிப்பூட்டுவது. அவருக்கு என்னுடன் இசை நிலையங்களுக்கும் புத்தக கடைகளுக்கும் வருவது சலிப்பூட்டுவது. அதனால் காரிலேயே இருந்துவிட்டேன்.


அந்த ஸாப்பிங் செண்டருக்கு எதிரே ஒரு சிறிய காட்டுப்பகுதி. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு ஏரியும் அதை ஒட்டியதுபோல் ஒரு சின்ன வீடுபோல் ஒன்றும் தென்பட்டது. அதை இத்தனை நாள் நான் கவனித்திருந்தாலும் எனக்குள் எந்த உந்துதலும் வந்ததில்லை.  இன்று உற்சாகத்துடன் எனது 3 வயது மகளையும் அழைத்துக்கொண்டு அடர்ந்த புதர்களை கடந்து உள்ளே சென்று பார்த்தேன். அழகிய, அமைதியான ஏரி. சுற்றிலும் மரங்கள். உட்கார்ந்து இயற்கையை ரசிப்பதற்கும், மெளனமாய் நீருடனும், பூச்சிகளுடனும், மரங்களுடனும் உறவுக்கொள்ள யாரோ கட்டிவைத்திருந்த சின்ன இளைப்பாரும் பலகையால் ஆன இருப்பிடமும். பயன்படுத்தி தூக்கியெறிந்த பழைய சோபாக்களும் நாற்காலிகளுமாக மீன் பிடிப்பதற்காக யாரோ கட்டிய தடுப்பு இல்லாத வீடுபோல் இருந்தது.


நான் அங்கு அமர்ந்து இயற்கையின் இதயத்துள் நுழைந்தபோது, மனம் லேசானது, அமைதியானது,  வெளிகளில் கலந்து பேதமையற்றது. தியானம் தேவையில்லை, இயற்கையோடு இணைவது அதைவிட நிதானத்தையும் அமைதியையும் தருவதை உணர முடிந்தது. வெறுப்புகள், கோபங்கள், விரக்தி, வலி எல்லாவற்றையும் இரண்டு கைகளையும் ஏந்தி எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனோடு அன்பையும், அடக்கத்தையும் அமைதியையும் தருகிறது இந்த இயற்கை.

என் மகளும் அதிகம் சந்தோஷமாகி நீரைப்பற்றியும், மரங்களை பற்றியும், தரையிலும், தண்ணீருலும் தென்பட்ட பூட்சிகளை பற்றியும் வாய் ஓயாமல் கேள்விகேட்டு கொடுமை பண்ணினால். அவளது எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்கும் பொறுமையை அந்தச் சுழல் தந்தது.


ஆனால் அந்த ஸாப்பிங் செண்டரில் அவ்வளவு கூட்டம் இருந்தும், எங்கள் இடத்தில் இருந்து ஒரு பத்து அடி தூரத்தில்  வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தும், யாரும் இந்த இடத்தை நெருங்கவில்லை.

ஒன்றை உணர முடிந்தது, இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவாக இயற்கையைப் பொருட்படுத்துவதில்லை. இன்னும் சில மாதங்களிலோ வருடங்களிலோ இல்லை நாட்களிலோ இந்த மரங்களை அழித்து, எங்கோ ஒரு மலைமேட்டுக் காட்டை அழித்து, அங்கிருந்து கொண்டுவரப்படும் மணலால் இந்த ஏரியை மூடி, இங்கு ஒரு குடியிருப்போ அல்லது அலுவலகங்களோ, கடைவீதிகளோ கட்டப்படும்.

அதேபோல் இங்கு இரண்டு பெரிய ஏரிகளை மூடி ஒரு இடத்தில் சிறிய காலனியும் மறு இடத்தில் பெரிய நெடுஞ்சாலையும் கட்டி வருகிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம், இங்குள்ள மீன்களெல்லாம் இறந்துவிடுமே, இங்கு இருக்கும் இந்த வெள்ளை நாரைகள் எல்லாம் எங்குப் போகும், இதனால் இந்த இடத்தின் ஈகோலோஜி என்ன ஆபத்துக்களை சந்திக்கும், இதனால் நமக்கு என்ன பாதிப்பு வரும் என்று, மேலும் அது தொடர்பாக அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அமைச்சர்கள், நகராண்மை கழகங்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறதே என்று வெற்று அரசியல் பேசி எனது பொறுப்பின்மையையும் கையாளாகாதனத்தையும் மறைத்திருக்கிறேன்.


இங்கு அமர்ந்திருந்த போது, அது தனக்கு நேர்விருக்கும் அழிவை உணர்ந்தும் அமைதியாக கரியமிலவாயுவோடு சேர்த்து எனது அசிங்கங்களையும் வாங்கிக்கொண்டு என்னில் புதிய புதிய கனவுகளையும் நம்பிக்கைகளும் புகுத்திக் கொண்டிருப்பதை உணரலாமல் இருக்க முடியவில்லை.

வீடு வந்து, எனது கைதொலைப்பேசியில் நான் எடுத்தப் படங்களை என் மகனுக்கு காட்டியபோது, அவனும் உச்சாகமாகி அடுத்த முறை தன்னையும் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்திக்கொண்டே இருக்கிறான்.

இயற்கையோடு நாம் துண்டித்துக்கொள்ளும் உறவு நம்மை இயந்திரமாக ஆக்கிவருகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடன் ஓர் அங்கமாய் இருக்கும் இயற்கையை விட்டு நாம் விலகி நடக்கும் ஒவ்வொரு அடியும் நாம் நம் இதயத்தைத் துருப்பிடித்த இரும்பு பிண்டமாய் ஆக்கிவருகிறோம் என்றே  தோன்றுகிறது. இந்த இயற்கைக்கு தரமுடியாத அன்பை எப்படி நாம் நமது குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும், சக மனிதனுக்கும் தர முடியும். ஏதோ ஒரு தேவையை முன்னிறுத்தி நாம் போலியாகத்தானே ஒருவருக்கொருவர் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.

அந்த இடத்தை விட்டு வெளிவரும் போது, இறுகிப்போன மனிதர்கள் இங்கு மரங்களாகவும். மரமான நான் இலைகள் உதிர்த்து, கிளைகள் ஒடுக்கி கைகால்கள் முளைத்து மனிதனாகி நடந்து வருவதாக உணர முடிந்தது.