Saturday, November 21, 2009

எம். நஸிர்

என் இசை உலகின் பல்வேறு வாசல்களையும் சாத்தியங்களையும் திறந்துவிட்டது எம். நஸிரின் (M.Nasir) நட்பும் அவரது இசையும்.


இசையின் மீது தீராத ஒரு தேடல் உருவாகி நான் பயணித்துக் கொண்டிருந்த தருணம் அது. 19 அல்லது 20 வயதிருக்கும். ஒரு முறை டிவியில் அவரின் 'மெந்தெர செமெரா பாடி' (Mentera Semerah Padi) என்ற பாடலின் வீடியோ கிளிப்பை பார்த்து அசந்து விட்டேன். இந்தப் பாடலின் வரிகள் தேசத்தையும் பண்பாட்டையும்
நேசிக்கும் ஒரு மலாய் மாவீரனின் மனோநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. சரியாக அர்த்தப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்படி சொல்ல காரணம் அவரின் பாடல்களில் மொழி புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அவர் பிரயோகிக்கும் வார்த்தை அதிகம் புலக்கத்தில் இல்லாத, அவர்களின் கலாச்சார பின்புலம் இல்லாது அர்த்தப்படுத்த முடியாத வார்த்தைகளாக இருக்கும். ஆனால் என்னை கவர்ந்த அம்சம் அதுவல்ல, நான் கேட்டறியாத விநோதமான இனிமையான இசை.

மலாய்காரர்களின் இசையில் நாம் ஒலியமைப்பையும் இசையமைப்பின் நுட்பத்தை அதிகம் எதிர்பார்க்கமுடியாத அளவு சாதரமாணதாகத்தான் இருக்கும்.  அவர்களுடைய இசை பெரும்பாலும் மேலைநாட்டின் ரோக், போப் வகை கலாச்சாரங்கள் சார்ந்தே இருக்கு. ஆனால் எம் நஸிரின் இசை இந்த எல்லைகளை   மீறிய மெட்டும், இசையும்,  ஆன்மாவை கரையவிடும் குரலும் தான் அதன் பலம் என்று நினைக்கிறேன் . சில குரல்களுக்கு மட்டும் அந்த ஆன்மீகதத்தன்மை உண்டு. இளையராஜா, பாம்பே ஜெயஶ்ரீ அவர்களை குறிப்பிடலாம் (என் இசைவிருப்பத்தின் அடிப்படையில்). அத்தகைய பிரபஞ்ச நாதம் எம் நஸிருடைய குரல்.  அந்தப் பாடலை டிவியில் பார்த்தவுடன் இசை நிலையத்தில் அதிகம் சிரமப்படாமல் அடைய பெற்றேன் அந்த அளவுக்கு அவர் பிரபலமானவராக இருந்தார். அந்த இசை தொகுப்பின் பெயர் 'சங்கோங் மெண்டோனான்' (Canggung Mendonan). சங்கோங் மெண்டோனான் என்றால் திக்கற்ற  யாத்திரிகன் என்றும் சொல்லலாம். இதில் எல்லா பாடல்களும் அடர்த்தியான வரிகளை கொண்டிருந்தது. அந்த இசை தொகுப்பை கேட்டபோது ஒன்று மட்டும் தெளிவாக உணர முடிந்தது. தமிழ் பாடல் வரிகள் எட்டாத தூரங்களில் எம் நஸிரின் பாடல்கள் இருக்கிறது என்று. நமது பாடல்கள் இன்னமும் இசைக்கும் மெட்டுக்கும் தலைவணங்கி போகும் நலிந்த வரிகளோடு இருப்பவை, ஆனால் எம் நஸிரின் பாடலில் ஒவ்வொரு வரியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் வேறொரு இலக்கி படிவமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு கவிஞராகவும் நவீன ஓவியத்தில் கல்லூரி படிப்பு முடித்தவராக இருந்தார் என்பதால் என்றும் சொல்லலாம்.  அவருடைய பெரும்பாலான பாடல்களை அவரைத்தவிர அவரது ஆஸ்தான கவிஞராக இருந்த லோலோக் (Loloq) எழுதினாலும் எம் நஸிரின் பாடல்களில் மட்டும் வரிகள் தனித்துவம் பெற அதுவே காரணம்.


அவருடைய அனாக் அனாக் கீதா (Anak Anak Kita), நமது குழந்தைகள் என்ற தலைப்பிலான பாடலை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.  அதில் ஒரு வார்த்தை வரும் 'குராங் அஜார்' என்று. அதாவது தவறான வளர்ப்பு என்று சொல்லலாம். மலாய்காரர்களின் குழந்தைகள் தெருவில் வாகனங்களுக்கு பயமில்லாமல், காணாமல் போய்விட கூடும் என்ற பயமில்லாமல் திரிந்து கொண்டிருக்கும். யாருக்கும் பயப்படாமல் அடங்காமல் நடக்கும் ஒரு போக்கு அவர்கள் குழந்தைகளுக்கு அதிகம். வங்கிகளுக்கோ பெரிய நிறுவனங்களுக்கு பெற்றோர்களுடன் செல்ல நேரிட்டால் எந்த கூச்சமும் அச்சமும் இல்லாமல் எல்லா பொருள்களையும் எடுப்பதும், சேதப்படுத்துவதும் சர்வ சாதாரணமாக நிகழ்வது, ஆனால் அவர்களின் பெற்றோர்கள் கொஞ்சம் கூட கண்டிப்பு, அதட்டல் என்று எந்த சலனும் இல்லாமல் இருப்பார்கள். இது ரொம்பவும் விநோதமானது.  தெருவில் வேகமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ வரும் வாகனங்கள் பற்றி எந்த கவலையும் இல்லாது விளையாடும் பிள்ளைகளை பற்றி எந்த பிரக்ஞைகளும் அற்று இருப்பார்கள் பெற்றோர்கள். அப்படி விபத்து நடந்து விட்டால், அதிலும் வேறு இனம் விபத்துக்கு காரணமானதாக இருந்தால், அதுவும் அந்தப் பகுதியில் மலாய்காரர்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்வின் கடைசி தருணம் இது என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். அவர்கள் குழந்தைகளின் மேல் அதிகம் அக்கறையில்லாதவர்கள் போல் தெரிய முக்கிய காரணம், அவர்களுக்கு குறைந்தது 10 குழந்தைகள் இருக்கும். இரண்டு இருந்தாலே சமாளிப்பது சிரமம், பத்து இருந்தால்? விட்டுவிட வேண்டியதுதான், தலைவலி குறையும். ஆனால் அவர்களிடம் வளர்ப்பை பற்றி சொல்லிவிட்டீர்கள் என்றால் அவ்வளவுதான், அது ஒரு மிகப்பெரிய அவமானமாக கருதுவார்கள். அதிலும் இந்த குராங் அஜார் என்ற வார்த்தையை தங்கள் இனத்தை அவமானப்படுத்தும் ஒரு கெட்டவார்த்தையாகவே நினைப்பவர்கள்.  ஆனால் எம் நஸிர் தானே எழுதி பாடிய அனாக் அனாக் என்ற பாடலில் அதை பயன்படுத்துவார். அந்த பாடல் தொடக்கம்,
'நமது குழந்தைகளா அது,
அம்மணமாக வெயிலில் திரிந்தபடி
நமது பயத்தைப் பற்றி பாடுபவர்கள்?

நமது குழந்தைகளா அது
பண்பாட்டை மறந்த
நமது பிழைகளை சுமந்துக்கொண்டு
திரிவது?

அவர்களை கூப்பிடுங்கள்
தவறான வளர்ப்பைபற்றி
அப்பா அவர்களுக்கு சொல்லித்தர விரும்புகிறேன்
இனிமேலும் அவர்கள்
பொய்யானவர்களிடமோ
சினிமாகாரர்களிடமோ
தொழிலதிபர்களிடமோ
பாழடைந்த அரசியல்வாதிகளிடமோ
புனித நூல்களை ஏந்தியவர்களிடமோ
மனோவியல் நிபுணர்களிடமோ
அந்த கடவுள்களிடமோ
அடிமைகளாக வாழாமல் இருக்க

ஆனால் இந்த பாடல் அல்லாமல் எல்லா பாடல்களிலும் என்னை முதலில் கவர்வது, இல்லை இல்லை எப்பொழுதும் கவர்வது இசையும் அதன் நுணுக்கமும்தான். அந்த வகையில் இந்த பாடல் நமது உணர்வுகளின் எல்லா வாசல்களையும் திறப்பது அதன் இசையால்தான். இதுவரை கமர்ஸியல் தளத்தில் யாருமே பயன்படுத்தாத மலாய்காரர்களின் கிராமிய இசையையும் இசைக்கருவிகளையும் அறிமுகப்படுத்திய விதம். முன்பே கூறியது போல் அதையெல்லாம் மீறி நிற்கும் அவரது உச்சஸ்தாயில் அமைந்த அவரது குரல். குரானையும் ஹசானையும் இனிமையான குரலில் கேட்கும் போது ஏற்படும் ஒரு ஆன்மீக உணர்வு அவரது குரலில் பிரதிபலிக்கும் (தயவு செய்து மலேசியாவில் பாடப்படும் ஹசானோடு ஒப்பிட்டுப்பார்க்காதீர்கள்).


அவரது காதல் பாடல்கள் பலவும் மிகவும் பிரபலமடைந்தவை, அதன் பிரபலத்தைப்பற்றி அவரிடம் ஒருமுறை நான் பேசும்போது சொன்னார்,  மேலோட்டமாக பார்த்தால் எல்லா பாடல்களும் காதலைப்பற்றியும் காதலியைப்பற்றியும்தான் இருப்பதாக தோன்றும் ஆனால் நான் பாடுவது இறைவன் என்ற காதலனைப்பற்றி என்றார். அதுவரை எனக்கு தெரியாது அவருடைய பாடல்கள் பெரும்பாலும் சூபிஸத்தை தழுவியது என்று.  சூபிஸம் மலேசியா இஸ்லாமிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு இருந்தது. அவர்பாடல்களை பற்றி அவர் வெளிப்படையாக பேசாததற்கு அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் அவருடைய எந்தப் பாடல்களைப் பற்றியும் அவர் உயர்வாக பேசியதும் இல்லை.  அவருடய சிறந்த பாடல்களின் தொகுப்பு வெளியீடு கண்டபோது,  அவருடைய நிறுவனம் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. மிகப் பெரிய ஸ்டார் ஓட்டலில். அந்த இசைதொகுப்பில் இரண்டு பாடல்கள்தான் புதிய பாடல்கள் அதில் ஒன்று ஒரு சூபி ஞானி ஒருவருடைய வரிகளை கொண்டு, கடவுளை நான் மசூதியில் தேடினேன், கோவில்களில் தேடினேன், காடுகளில் தேடினேன், கலைத்துப்போய் வீடு வந்தபோது, அவர் என் வீட்டில் இருப்பது கண்டு பயந்து போனேன் அதுவும் அனல் கக்கும் சிவந்த கண்களுடன் அமர்ந்திருந்தார் என்று இவருடைய பாடல் வரிக வரும். அடுத்த பாடல் அண்டாலுஸிய என்ற இஸ்லாத்தின் பொற்காலத்தில் இருந்த ஒரு நகரைப்பற்றிய பாடல். அந்த பொற்காலம் இனி வருமா என்று எதிர்பார்ப்புகளை முன்வைக்கும் பாடல்.  இதன் வெளியீட்டில் கலந்துகொண்ட ஒரு நிருபர், 'ஏன் உங்களுடைய பாடல்களில் நமது பாரம்பரிய மலாய் இசைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?' என்று கேட்டார். அரங்கமே அவரது பதிலுக்கு காத்திருந்தது. அப்பொழுது அவரது 5 வயது மகன் இங்கும் அங்கும் ஓடிகொண்டும் குதித்துக்கொண்டும் இருந்தான். அந்த சமயம் எல்லோருக்கும் தயாராய் இருந்த உணவை பார்த்து உற்சாகமாக,  'சாப்பாடு, சாப்பாடு' என்று கத்தினான். அந்த நிருபர் கேள்வியை நிறுத்தவும் இந்த பையன் கத்தினதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. அவர் சிரித்தபடி 'என் பையன் பதில் சொல்லிவிட்டான், - சாப்பாட்டிற்கு' என்றார். எல்லோரும் சிரித்துவிட்டு அவரது தொடர்ச்சிக்கு காத்திருந்தார்கள். ஆனால் அதுதான் அவரது விடையாக இருந்தது அவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவே இல்லை. அந்த நிருபர் அப்படி கேட்க காரணம் அன்றைய சூழலில் மலாய் இசை மேலை கலாச்சாரம் சார்ந்ததாகதான் இருந்தது. எம் நஸிரை தவிர மலாய் இசையின் மரபை யாரும் அவர்களுடைய இசையில் பயன்படுத்தியதும் இல்லை, அதன் பிறகு பயன்படுத்தியவர்கள் இவர் அளவு புகழ் பெற்றதும் இல்லை.

52 வயதாகும் எம் நஸிர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். பிற்காலத்தில் மலேசியாவில் குடியுரிமை பெற்றார். அவரது தனிப்பபாடல்கள் எல்லாம் சூபிஸத்தையும், மலாய்க்கார்களின் கலாச்சார வேர்களை முன்னிறுத்துபவன. தாகூரின் வாசகர், இளையராஜாவின் ரசிகர் என்று இந்தியர்களுக்கு நெருக்கமாக இருப்பதாலேயே சில சமயங்களில் அவரது இசை இந்திய இசைப்போல் இருக்கிறதோ என்று நினைத்ததுண்டு. ஆனால் அவர் ஒருமுறை என்னிடம் கூறினார் அரபியர்களின் இசையும் இந்திய இசையும் அல்லாது மலாய்க்காரர்களுக்கு என்று சுய இசைவடிவம் கிடையாது என்று. அவர்களுடைய இசைக்கு ஸ்வர வரிசைகள் கிடையாது. தமிழ் நாட்டு கிராமிய இசைப்போல் முற்றிலும் செவிவழி வளர்ந்து வந்த ஒரு இசைக்கலை அவர்களுடையது. எம் நாஸிரின் இசையில் இந்திய அரேபிய இசைகளுடன் ஸ்பானிஸ் இசையும், லத்தின் இசையும் கலந்திருக்கும்.  அவரது இசையில் மேலும் ஆர்வம் ஏற்பட அவருடை எல்லா பழைய இசை தொகுப்புகளையும் வாங்க ஆரம்பித்தேன். அவரது இசை மலேசிய இசைக்கலாச்சாரத்திற்கு புது அர்த்தங்கள் கற்பித்தது. அதன் தொடர்ச்சியாக ஜைனால் அபிடின், ரம்லி சாரிப் என்று மலாய் கலாச்சார இசை முயற்சிகளில் பலரும் வெற்றிகரமாக ஈடுபட தொடங்கினர்.

நான் அவருடைய இசையில் பித்து முற்றி அவரது ரசிகர் மன்றத்தில் இணைந்தேன். அது முற்றிலும் அவரது மேற்பார்வையில் நடந்து வந்த ரசிகர் மன்றம். நான் ஒருவன் மட்டுமே இந்தியன். எனது பல்கலைக்கழக படிப்பின் போது விடுமுறையில் அவரது நிறுவனத்தில் இசைத்துறை சம்பந்தப்பட்ட  தொழில் விஷயங்களை கற்றுக்கொள்ள அனுமதி கேட்டு எழுதியிருந்தேன். ஆச்சரியமாக அனுமதியும் வந்தது. எனது இசைதுறை வாழ்க்கை அங்குதான் தொடங்கியது.  இளையராஜாவைப்போல் ஏ ஆர் ராஹ்மானைப்போல் ஆன்மிகத்தை தீவிரமாக பிடித்துக்கொண்டு இசையுலகில் அதன் தரிசனத்தை வெளிக்கொணர்ந்தவர். அதையெல்லாம் தாண்டி அவரிடம் நான் பிரமித்த ஒரு விஷயம் இருந்தது.  அவரது ரசிகர் மன்றம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பெருநாளின் போது திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும். அதில் பிரபலங்கள் பலர் கலந்துக்கொள்வார்கள். அவர்களுடன் அந்த விருந்தில் கலந்துக்கொள்ள ரசிகர்களும் ஒரு பிரமுகர்கள் போல் அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு எந்த தடையும் விதிகளும் கிடையாது. சில சமயங்களில் அவர் அந்த விருந்தில் பாடி, ரசிகர்களுடன் ஆடி கலைஞன் ரசிகன் என்ற இடைவெளியை தகர்திருக்கிறார். ரசிகர் மன்றத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு இலவச பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளது. எப்படி பாடல் இயற்றுவது, இசை ஆல்பங்கள் எப்படி தயாரிப்பது, இசையமைப்பது எப்படி என்று தரமான கற்பித்தலும் கலந்துரையாடலும் இலவசமாகவே நடத்தப்படும். ரசிகர்கள் அவரின் ரசிக மன்ற அடையாள அட்டையின் மூலமாக கழிவு விலையில் அவருடைய சிடிக்களையும், கலைநிகழ்வுக்கான டிக்கெட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். அதோடு 3 மாதத்திற்கு ஒரு முறை சிறிய இதழும் நமது விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவருடைய ரசிகர் மன்றத்தில் இணைய வெறும் 30 மலேசியா ரிங்கிட் மட்டும்தான். ஏறக்குறைய 350 இந்திய ரூபாய் மட்டும்தான், வருடத்திற்கு.  அவருடன் இருந்த காலங்களில் மட்டும்தான் ரசிகன் என்பவன் ஒரு கலைஞனால் எப்படி போற்றப்படுகிறான் என்ற விநோதமான முரண்பாடான நிகழ்வை அனுபவித்திருந்தேன். அவரது ரசிகர் மன்றத்தை எல்லோரும் போல் ரசிகர் மன்றம் என்று பெயரிடவில்லை மாறாக எம் நஸிர் நண்பர்கள் மன்றம் என்றுதான் பெயரிட்டுள்ளார்.  நான் அங்கு வேலை செய்யும் பொருட்டு எழுதிய கடிதத்தில், இசைதுறை சார்ந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் பல்கலைகழக மாணவன், எனது விடுமுறையின் போது வேலையுடன் சேர்ந்த ஒரு பயிற்சியாக இதை பெற விரும்புகிறேன். அதற்கான எந்த வருமானமும் உங்களிடமிருந்து எதிர்பார்க்காமல் ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக கருதி எனது எதிர்கால கனவுகளுக்காக இதை மேற்கொள்ள விரும்புகிறேன் என்று எழுதியிருந்தேன். எனது பல்கலைகழக்கத்தின் டீனிடம் பரிந்துரை கடிதம் தயார்செய்து அதில் அவர் கையொப்பம் ஒன்றை மட்டும் போட்டு பல்கலைகழத்தின் முத்திரையை பதிக்க கேட்டுக்கொண்டேன். அவர் ஒரு விநேதமான நபராக பல்கலைகழகம் முழுவதும் அறியபட்டிருந்தார். பாடம் நடத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் படித்துக்கொண்டே இருப்பார். நடக்கும் போதும், சாப்பிடும் போதும் என்று எல்லா காலங்களிலும் அவரது முகத்துக்கு நேர் ஒரு புத்தகம் இருக்கும். தட்டில் என்ன உணவு எதை சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்க மாட்டார். எனது கடித்ததை பார்த்து ஒரு முறை என் முகத்தை பாரத்துவிட்டு எந்த கேள்வியும் இல்லாமல் கையொப்பமிட்டு ஸ்தாம்பிட்டு கொடுத்துவிட்டு புத்தகத்தில் மூழ்கிப்போனார். ஒருவேளை அந்த தருணம் அவரது வாசிப்பிற்கு நான் தடையாக இருப்பதாக எண்ணி என்னை சற்றென்று தவிர்க்க அந்த அனுமதியை தந்ததார் போலும்.

நான் எம் நஸிரின் நிறுவனத்திற்கு வேலை செய்ய இரண்டு மின்சார் ரயில் எடுத்து, பிறகு இருபது நிமிடம் நடந்தே செல்வேன். ஒரு நாளைக்கு என்னுடைய மதிய உணவையும் சேர்த்து எனக்கு ஏறக்குறைய 10 மலேசிய ரிங்கிட் செலவு ஏற்படும். அம்மா மட்டும் வேலை (அப்பா, எனக்கு 5 வயதிருக்கும் போது இறந்து விட்டார்), நான் பல்கலைக்கழகம் போனபோதுதான் தங்கையும் வேலைக்கு போக ஆரம்பித்திருந்தார், மேலும் படிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி (கொஞ்சம் அடம்பிடித்து). அந்த சூழ்நிலையில் நான் விடுமுறையில் வழக்கமாக எங்காவது சென்று வேலை செய்து திரும்பவும் பல்கலைகழகம் செல்லும் முன் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொள்வேன் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, இப்படி சம்பளம் பெறாமல் இசை ஆர்வத்தினால் பிரயோசனம் அற்ற வேலைக்கு செல்வதோடு தினமும் எனது செலவுகளுக்கு அவர்களிடம் எதிர்பார்த்தது அவர்களுக்கு பெரும் பாரமாக இருந்தது. தினம் தினம் அதற்காக அம்மாவிடம் திட்டு.

ஒரு முறை எம் நஸிரின் தம்பி மதிய உணவின் போது நான் இங்கு வேலைக்கு வர எவ்வளவு செலவாகிறது, மதிய உணவிற்கு எவ்வளவு செலவாகிறது, குடும்பம் என்று எல்லாவற்றையும்  போகிற போக்கில் கேட்டார். அவர்தான் அந்த நிறுவனத்தின் மேலாளர். எம் நஸிரின் மனைவி நிறுவனத்தின் இயக்குனர். அது ஒரு சாதாரண உரையாடலாகவே இருந்தது. ஆனால் அதன் நோக்கம் மூன்று மாதங்கள் நான் என் பல்கலைக்கழக விடுமுறை முடிந்து இவர்களிடமிருந்து விடைபெறும்போதுதான் தெரிந்தது. இந்த மூன்று மாதத்திற்கும் நான் செய்த செலவுகளை நான் அங்கு பணிபுரிந்ததற்காக (இல்லை உதவியாக இருந்ததற்காக) ஊதியமாக தந்தார்கள், அதற்கு அவர்களுக்கு எந்த அவசியமும் இல்லாதிருந்தும்.

 இந்த எனது மூன்று மாதகால அனுபவம்தான் எனக்கு வார்னர் மியூஸிக் நிறுவனத்தில் வேலைகிடைக்கவும், இந்திய இசை மேதைகளான இளையராஜா, எ ஆர் ரஹ்மான் அவர்களின் நட்பை பெறவும் பெரும் காரணமானது. அதுவும் வார்னரின் நேர்முகத்தேர்வில் பல நூறு பேரில் நான் ஒருவன் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதில் முதல் காரணம் எம் நஸிர் நிறுவனத்தில் வார்னர் எதிர்பார்க்கும் காப்புரிமை, ராயல்டி சம்பந்தமான வேலையிலும் நான் பயிற்சி பெற்றிருந்தேன் என்பதும், என்னை பற்றி எம் நஸிர் நிறுவனத்தில் விசாரித்தபோது நல்ல விதமாக முன்மொழிந்திருக்கிறார்கள் என்பதும்தான். அவருடைய ரசிகன் என்ற தகுதி மட்டுமே என்னை இந்த உயரத்துக்கு வர உதவி செய்திருக்கிறது என்பதும் அதற்கான வாய்ப்புகளை அவர் எப்பொழுதுமே திறந்த மனத்துடன் அனுமதித்திருக்கிறார் என்பதும் இன்றுவரை எந்த கலைஞரிடமும் நான் ஒப்பிட்டு பார்க்கமுடியாத ஒரு விஷயம். (இளையராஜா நீங்கலாக, அதுவேறு அவருடனான எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் போது எழுதுகிறேன்).  அவருடைய நிறுவனம் இன்று வாய்ப்புகள் தேடி அலையும் எத்தனையோ திறமையான மலாய்கலைஞர்களின் புகலிடமாக உள்ளது.  ரசிகன் என்பவன் அவருடைய இசை பயணத்தில் சக பயண நண்பனாக இருந்துவருபவனாகவே அவர் நினைக்கிறார். மலாய் இசைத்துறையில் மிகவும் பிரபலமான மற்றொருவர் ஜமால் அப்டில்லா. அவர் ஒரு காலகட்டத்தில் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி வாழ்க்கையையும் அவர் அதுவரை சம்பாதித்திருந்த புகழையும் இழந்துவிட்டிருந்தார். சமூகமே அவரை கைவிட்டிருந்தது. அவரை மீண்டும் அதே புகழின் உச்சியில் கொண்டு நிறுத்தினவர் எம் நஸிர். ஜமால் அந்த நன்றி உணர்வை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.


அவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும்போதுதான் மலாய் கலையுலகில் எம் நஸிருடைய உண்மையான ஆளுமையை என்னால் உணரமுடிந்தது. சுடீர்மான என்ற ஒப்பற்ற மலாய் கலைஞன் தொடங்கி, அமி சேர்ச், அவி, எலா, என்று எல்லா புகழ்பெற்ற கலைஞர்களின் புகழ்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் இவருடையது.  மலாய்பாடல்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றிருந்த இந்தியர்களான எலி கேட்ஸ் (Alley Cats) இவருடைய பலபாடல்களால்தான் புகழ்பெற்றனர்.  அமி சேர்ச் எவி மெட்டல் கலைஞர், எலி கேட்ஸ் ரேகேய் கலைஞர், எலா பெண் ரோக் கலைஞர், அவி ஒரு போப் கலைஞர். அவர்கள் எல்லோருக்கும் எந்தப்பாடல் புகழ்தரும் எந்த மெட்டு எந்த இசைப்பிரிவுக்கு வெற்றியைதரும் என்று கச்சியதமாக உணர்ந்திருந்தார். இசை தயாரிப்பிலும் அந்த அந்த இசைப்பிரிவுக்கு ஏற்றாற்போல் இசைநுணுக்கங்களை பயன்படுத்தும் கலை அறிந்தவர். இசை தயாரிப்பு என்பது இந்தியர்கள் நினைப்பது போல் பணம் முதலீடு செய்யும் துரையல்ல, அது முற்றிலும் வேறு ஒரு துரை. அதைப்பற்றி பின்னாளில் எழுதுகிறேன்.  இந்திய இசைத்துரையில் இந்த அடையாளத்தை அறிமுகப்படுத்தியது எனது அகி மியூஸிக்தான், இளையராஜாவின் குரு ரமண கீதம் வாயிலாக. இதை இங்கு குறிப்பிடுவதால் அதிகம் கர்வம் என்று நினைக்கவேண்டாம். வேறு யாரும் சொல்லப்போவதில்லை. காரணம் ஏ ஆர் ரஹ்மானுக்கே அவரது வரலாறு (காட்பாதர்) திரை இசைதொகுப்புக்கு, 'இசை தயாரிப்பு ஏ ஆர் ரஹ்மான்' என்று முதலில் அடையாளப்படுத்தியது அகி மியூஸிக்தான். இப்பொழுது அவரது வெளியீடுகளில் எல்லாவற்றிலும் அந்த வார்த்தை தவறாமல் இடம் பெறுகிறது. அந்த அலையில் இந்த உண்மை அடித்து செல்லப்பட்டுவிடும்.


சரி மீண்டும் எம் நஸிரிடம் வருவோம். நாட்டில் முதன்மையில் இருக்கும் பாடலாசிரியராக, இசைதயாரிப்பாளராக இசை கலைஞனாக அவர் இருக்கிறார் என்றும் அதிகமான ராயல்டிகளை பெறும் முதன்மை நபராகவும் மலேசியாவில் இருந்திருக்கிறார் என்றும் அவரிடமும் வார்னரிலும் வேலை செய்யும் வரை நான் அறிந்திருக்கவில்லை. ஹாங்காங்கில் அவருடைய சில பாடல்களை சீனத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஈகல்ஸ் என்ற மேலை ரோக் குழுவின் ஒரு கம்போஸருடன் சேர்ந்து ஆங்கில பாடலும் பதிவு செய்திருக்கும் முதல் மலாய் கலைஞர்.  அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு பன்முக கலைஞராகவும் விளங்கி வந்துள்ளார்.  ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் ஒரு ஓவியர், கவிஞர் என்பதோடு, அவர் ஒரு திரை இயக்குனராக, இசையமைப்பாளராக, இசை தயாரிப்பாளராக, நடிகராக, பாடகராக, பல்வேறு நிலைகளில் அவரது படைப்பு மனம் செயல்பட்டிருக்கிறது. ஒருமுறை அவரது கவிதை வாசிப்பின் போது, ஒரு நிருபர் அவரிடம் மகாதீரை பற்றி ஒரு கவிதை வாசிக்க முடியுமா என்று கேட்டார், அதற்கு எம் நஸிர் சிரித்துக்கொண்டு யார் மகாதீர் என்று கேட்டுவிட்டார். இந்த கேள்வி நமக்கு விட்டு செல்லும் விளக்கங்கள் ஆயிரம் ஆனால் அது மிகப்பெரிய தேசச் சர்ச்சையாகி, அரசாங்கம் அவருடைய பாடல்கள், திரைப்படங்கள் என்று அவரின் பங்களிப்பு உள்ள எதையும் இனி மலேசிய தொலைகாட்சிகளிலோ, வானொலிகளிலோ ஒலிபரப்ப தடைவிதித்தது. அப்பொழுது வரை யாரும் உணரவில்லை, மலேசியா இசையிலும் மலாய் இசையிலும் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தில் அவரின் பங்களிப்பு இருந்தது என்று. அவருடைய இசையமைப்பாலும், பாடல்வரிகளாலும், இசைத்தயாரிப்புகளினாலும் நாட்டின் முன்னனி பாடகர்களாக கலைஞர்களாக இருந்த அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டனர். அவருடைய பங்களிப்பு இல்லாத இசை எங்கிருக்கிறது என்ற ஒரு தேசபயத்தை மலாய் கலைஞர்கள் உணர ஆரம்பித்தார்கள். அரசாங்கத்திடமும், எம் நஸிரிடமும் வேண்டுதல்களை எல்லா கலைஞர்களும் முன்வைத்தனர். எம் நஸிரிடம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை ஒன்றுதான். பிரதமரிடம் மன்னிப்பு கேட்டுவிடுங்கள் என்பதுதான். அவரும், பிரதமரை அவமானபடுத்தும் நோக்கில் நான் அந்த வார்த்தையை சொல்லவில்லை அப்படியொரு அவமானத்தை அது அவருக்கு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்னார். அதன் பிறகு உடனடியாக அவரின் படைப்புகள் மீதிருந்த எல்லா தடைகளையும் அரசாங்கம் மீட்டுக்கொண்டது. ஆனால் இந்தியர்கள் மத்தியில் இன்றும் மகாதீரையே யார் என்று கேட்டவர் என்றுதான் எம் நஸிர் என்ற ஒப்பற்ற படைப்பாளன் அறியப்படுகிறான்.