Sunday, December 6, 2009

டடவாவும் (Dadawa) ஈ ஷந்தியனும் (He Xuntian)டடவாவின் இசையை எனக்கு அறிமுகம் செய்தவர், நான் வார்னர் மியூஸிக்கில் காப்புரிமை (Copyright) மற்றும் ரோயல்டி (Royalty) சார்ந்த வேலையில் இருந்தப் போது எனது மேலாளராக இருந்த ஆங்கிலேயரான அலெக்ஸ் மெக்கெந்தோஷ். அப்பொழுது இந்தப் பாடகரின் பாடலுக்கு அதுவும் சிஸ்தர் டிரம் (Sister Drum) என்ற ஒரே இசைதொகுப்பிலிருந்து மட்டும அதிகம் ரோயல்டி உலகெங்கும் இருந்து வந்துக்கொண்டிருந்தது. கேள்விப்படாத ஆல்பம், பிரபலம் இல்லாத பாடகி. அதுவும் 1995ல் வெளியீடு கண்ட இசைத் தொகுப்பு 2000ம் ஆண்டு வரை அதிகமானோரை ஈர்த்திருக்கிறதே என்று ஆர்வம் மேலிட, அதைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு அவரிடம் விசாரித்தேன். அவர் அந்த இசையின் தீவிர ரசிகர்களுள் ஒருவராக இருந்தார் என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது. நான் விசாரித்ததும் உச்சாகத்துடன் அந்த இசைத்தொகுப்பை எனக்கு வழங்கினார். ஹாங்காங்கில் டடவாவின் இசை நிகழ்வுக்கு வார்னரின் சார்பாக சென்று அந்த இசையிலிருந்து மீளமுடியாதவனாய் வந்தேன் என்றார். நிச்சயம் உனக்கும் பிடிக்கும் என்றார்.

இது எனது ஹியர் போனில் நுழைந்ததுமே காற்றில் என்னை ஏற்றிக்கொண்டு இந்தப் பிரபஞ்ச ஆதாரத்தின் வாசல்கள் நோக்கிப்பயணிப்பதுப்போன்ற  உணர்வை என்னுள் ஊடுருவவிட்டது. இதுபோன்ற இசையை உள்வாங்கிக் கொள்ளப் பயிற்சி தேவை. இல்லையென்றால் பின்நவீனத்துவ எழுத்துக்களின் முன் அயர்ந்துவிடும் பயிற்சியில்லாத வாசகனின் நிலைபோல் ஆகிவிடும் நமது இசை ரசனையும். பல்வேறு இசையை தரிசிக்கும் போக்கும் எனக்கு இளையராஜாவின் இசையிலிருந்துதான் பெறப்பட்டது. இசையில் உயர்ந்தது தாழ்ந்தது என்ற மதிப்பீடுகள் கிடையாது. இசையின் தரமென்பது முற்றிலும் நமது மனம் சார்ந்தது என்பதையும் எல்லா இசையும் எதாவது ஒரு நிலையில் அதற்குரிய உயர்ந்த தரிசணங்களை கொண்டிருக்கும் என்பதையும் இளையராஜா அவருடனான எனது முதல் சந்திப்பில் கூறியிருக்கிறார். அதனால், இந்த இசை கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு வியந்த அர்ச்சுணன் போல் ஆன்மீகமும் அச்சமும் ஆச்சரியமும் கொண்ட மனநிலையில் என்னை இழுத்துகொண்டு சென்றதுக்கு காரணம் எனது அத்வைத மனநிலையா அல்லது அந்த இசையின் ஒலி அதிர்வுகளா (frequency) அல்லது இசை என்பது என்ன என்று எனக்கு நான் இஅதுவரை வரையறுத்துக்கொண்ட சில இலக்கணங்களை தகர்த்துவிட்டு சென்ற முற்றிலும்  வேறான இசை மேதமை இதில் இருப்பதாலா என்று தெரியவில்லை. என்னை மிகவும் வசியம் செய்தது டடவாவின் குரல். அது வானத்திலிருந்து இசைக்கப்படும் அசரீரியாக எனக்கு ஒலிக்கிறது. ஒன்றை மறந்தேவிட்டேன். டடவா ஒரு சீன பெண் பாடகர். இதுவரை என்ன இந்த டடவா என்று குழம்பியவாறு உங்களை படிக்கவிட்டதற்கு மன்னிக்கவும்.

அந்த இசையின் ஒலி வடிவமைப்பு (sound designing) வீச்சில் இருந்து இன்றுவரை நான் மீளவில்லை. எனது நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ‘கண்ட நாள்’ இசை தொகுப்பிற்கான உந்துதலை அங்கிருந்துதான் பெற்றுக்கொண்டேன். ஆனால் நிச்சயமாக ‘கண்ட நாளும்’ ‘சிஸ்தர் டிரமும்’ பல்வேறு நிலைகளிலிருந்து விலகி வித்தியாசப்படும் படைப்புகள். 

டடவா இதுவரை மூன்று இசைத்தொகுப்புகளை மட்டுமே வெளியீடு செய்திருக்கிறார். முதலாவது சிஸ்தர் டிரம் (Sister Drum) 1994 வெளியீடு கண்டது. அதன் அபார வெற்றிக்குப் பிறகு 1997 வோய்ஸஸ் ப்ரோம் தி ஸ்காய் (Voices from the sky) வெளியீடு கண்டது. அதன்பிறகு 9 வருடங்கள் கடந்து 2006ல் அவரது செவன் டேய்ஸ் (Seven Days) வெளியீடு கண்டது. மொத்தம் மூன்றே ஆல்பம், அவர் இசைத்துறையில் அறியப்பட்ட நாளிலிருந்து இதுவரை. ஏறக்குறைய 17 வருடங்களில். நாம் பரவலாக அறிந்த இசை உலகங்களின் எந்த உயரிய அவார்டும் வாங்கியதாக தகவல் இல்லை. மேலை இசைக்கலாச்சாரங்கள்தான் இன்று எது சிறந்த இசை என்று தீர்மானிக்கும் சூழலில் குவங்டோ, சீனாவில் பிறந்த,  திபேத்தையும், லாமாவையும் போற்றும் டடவா கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியமானதில்லை.


இந்த சிஸ்தர் டிரம், நியூ ஏஜ் (New Age) வகை சார்ந்த இசைப்பிரிவு. பொதுவாக தியானத்திற்கும், விழிப்புணர்வு பயிற்சிகளுக்கும் பயன்படும் இசையைதான் நியூ எஜ் வகை என்பார்கள். அது சில குறிப்பிட்ட ஒலியை, சுருதியை மீண்டும் மீண்டும் எழுப்பி நமது உணர்வுகளை குறிப்பிட்ட சில மனோநிலைகளில் வைத்திருக்கும். ஆனால் டடவாவின் இசையில் அது தனது அடுத்தக்கட்டத்திற்குப் பயணித்திருக்கிறது. அதுவும் இந்த சிஸ்தர் டிரம், இசையை மீறி அதன் ஒலி வடிவமைப்பு (sound designing) நம்மை வியக்கவைக்கிறது. இதன் இசையமைப்பாளர் ஈ ஷந்தியன் (He Xuntian) மிடி தொழில் நுடபத்தின் வழி இசையமைத்திருக்கிறார் என்று சொல்வதைவிட ஒலி வடிவமைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். என்ன காரணத்தினாலோ ஒலியமைப்புக்கு (மிக்ஸிங், மாஸ்திரிங்) யார் பொருப்பு என்று எழுதப்படவில்லை.  அதிலும் டடவாவின் மூன்றாவது ஆல்பம் ஒலி வடிவமைப்புக்காகவே பிரத்தியேகமாகச் செலவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த இசைத்தொகுப்பு சாதாரண ஆடியோ சிடியாக வெளிவராமல் XRCD2 - Extended Resolution CD என்ற அதிநவீன இசை தட்டு தொழில் நூட்பத்தில் வந்திருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தைப்பற்றி விக்கிபீடியாவில் மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த சிடியை நான் ரிங்கிட் மலேசிய 109 வெள்ளிக்கு வாங்கினேன். ஏறக்குறைய ஆயிரம் ரூபாய்க்கும் மேல். விலையை கேட்டு அதிர்ந்து இருந்தபோது, இந்த இசைத்தட்டின் தொழில் நூட்பத்தை எளிமையாக விளக்கினாள் மலேசியாவில் எம்கோர்ப் மோலில் இருக்கும் விக்டோரியா மியூசிக் நிலையத்தின் பணியாள். எங்கும் கிடைக்காதத் தொகுப்புகள் கூட இந்தக் கடையில் கிடைக்கும். அலெக்ஸிடம் இருந்து சிடி பெற்று அதைகேட்டவுடன் திருப்பித் தந்துவிட்டு எங்கெல்லாமோ தேடி இறுதியில் விக்டோரியாவில் கண்டு முக்தியடைந்தேன். அதை அலெக்ஸிடமிருந்து எனது கணிணியில் பதிவுச் செய்யவோ அல்லது இணையத்தில் சட்டவிரோதமான வலைகளிலிருந்து பதிவிரக்கம் செய்யவோ இல்லை. காரணம் இயற்கை நியதியின் படியோ அல்லது கருடபுராணத்தின் படியோ கண்டிப்பாக நாம் தண்டிக்கப்படுவோம். நம்புங்கள். மற்றவர்கள் உழைப்பைத் திருடியதற்காக.

சிஸ்தர் டிரம் இசைதொகுப்பிற்கான முதல் விதை அதன் இசையமைப்பாளர், திபேத் நாட்டின் கலாச்சார இசை நிகழ்வொன்றில் பங்கெடுத்தப்போது உருவானதாக சிடியின் உள்ளடக்கத்தில் குறிப்பிடுகிறார். அது அவருக்கு பெரிய உந்துதலை அளித்து அந்த நாட்டின் கிராமியப் பாடல்களை தொகுக்க ஆரம்பித்தார். பிறகு அதன் சாரம்சங்களை எடுத்துக்கொண்டு சீன கவிஞர்களிடமிருந்து லாமாயிஸம், ஜென் ஆன்மீக சிந்தனையின் தொடர்ச்சியான பின்நவீனத்துவ மீட்சியாக கவிதைகளை பெற்று இசைத்தொகுப்பாக்கியிருக்கிறார். இந்த தொகுப்பில் அவர் குறிப்பிடுகிறார், நாங்கள் திபேத்தையும் அதன் நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் கண்டடைய சென்றோம் ஆனால் நாங்கள் கண்டடைந்தது எங்களை என்று. 


டடவாவின் செவன் டேய்ஸ் முழுக்க முழுக்க கவிதைகளின் தொகுப்பு. மனுஷ்ய புத்திரன்  என்னிடம் பலமுறை பின்நவீனத்துவ தமிழ்கவிதைகளை இசை தொகுப்பாக வெளியிட முயற்சி செய்யுங்கள் என்று கூறிவருகிறார். அதன் சாத்தியங்கள் எனது மனதில் பிரமாண்டம் கொள்ள முக்கிய காரணம் டடவாவின் இந்த ஆல்பங்கள்தான். அதிலும் மனுஷ்ய புத்திரனின் நீராலானது என்ற தொகுப்பில் இடம்பெற்ற ஒரு கவிதை -  பெரிய ஏமாற்றத்தில் பிரமாண்ட மரம் ஒன்று தனது வேர்களை பிடுங்கிக் கொண்டு திரும்புவதான காட்சிப்படிமம் இப்பொழுதும் எனக்கு இசையாகத்தான் உணரமுடிகிறதே தவிர வரியாக இல்லை. அந்த கவிதையும் தலைப்பும் மறந்துவிட்டது, நான் அந்த தொகுப்பை தேடி, இந்த கட்டுரைக்காக அந்தக் கவிதையின் சரியானத் தலைப்பைத் தரவேண்டும் என்று என்னவில்லை காரணம் அந்த கவிதையின் உணர்வுகளிலிருந்து மீளமுடியாமல் நான் இருப்பது அதன் இறுக்கமான இலக்கிய வரிகள் என்பதையும் விட, அது என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பேரிசையிடம் சென்றடைந்தது என்பதாலேயே. அதனால் அந்தக் கவிதையின் மொத்த அர்த்தங்களும் எனக்கு இப்பொழுது தேவையாக இல்லை. இது வெறும் வார்த்தை அலங்காரங்கள் அல்ல என்பதை அந்த கவிதை என்னில் கண்ட இசையுடன் தொகுப்பாக வெளிவரும்போதுதான் உணரப்படும். கூடிய சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ நிச்சயம் வெளிவரும். சிஸ்டர் டிரம் தொகுப்பின் ஒரு இடத்தில் ஈ ஷந்தியன் கூறுகிறார், மொழியும் வார்த்தையும் நமது உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள ஒரு ஊடகம் ஆனால் சில சமயங்களில் எவ்வளவு முயன்றாலும் அவைகளே நமது உண்ர்வுகளை அடையாளம் காணவும் பகிர்ந்துக்கொள்ளவும் பெரும் தடையாக அமைந்துவிடுகிறது என்று. அதனால்தானோ என்னவோ அவருக்கு இத்தகைய இசைத் தொகுப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. 

இதை நியூ எஜ் பிரிவில் (Genre) இசைவிற்பனையாளர்கள் வகைப்படுத்தியிருந்தாலும் நான் இவரின் இசையை நியூ எஜ் அடங்கிய வேர்ல்ட் மியூஸிக் பிரிவில் வகைப்படுத்தவே விரும்புகிறேன். வேர்ல்ட் மியூஸிக் எனப்படுவது பண்பாட்டு கலாச்சார பின்புலம் கொண்ட இசை. டடாவவின் எல்லா இசை தொகுப்பிலும் நியூ எஜ் இசைவடிவத்துடன் இந்த வேர்ல்ட் மியூஸிக்கின் அம்சமும் இணைந்தே இருக்கிறது. இந்திய இசையிலும் நாம் அதிகமான நியீ எஜ் இசை பிரிவை சார்ந்த இசையை கேட்டிருக்கிறோம். ஆனால் அவைகள் பெரும்பாலும் இந்து மந்திரங்களின் நவீன ஒலி தரிசணமாகவே இருக்கிறது. ஜார்ஸுர் நிறுவனம் வெளியீடு செய்த பாம்பே ஜெயஶ்ரீயின் ஸர்வணம் மிகச்சிறந்த கர்நாடக நியூ ஏஜ் வகை. அந்த இசைதொகுப்பை ஒரு ஆன்மீக இசையிலிருந்து நியூ எஜ் இசைக்கு உயர்த்தியது பாம்பே ஜெயஶ்ரீயின் குரல்தான்.

யன்னி (Yanni), கிதாரோ (Kitaro), என்யா (Enya), வங்கலிஸ் (Vangelis), எணிஃமா (Enigma)  என்று பலர் நியூ எஜ் இசையிலும் பிரபலமடைந்திருந்தாலும் டடவாவின் இசைதொகுப்பு ஆன்மீகமும் மனிதமும் சாரமாய் கொண்ட இசை தரிசணமாக எனக்குப்படுகிறது. அதனால் இவர்களோடு ஒப்பிட்டு டடவா - ஈ ஷந்தியனின்  இசை உயர்ந்தது என்று கூறவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் எல்லா இசையும் அதன் அதன் நிலையில் சில உயர் தரிசணங்களைக் கொண்டது. கிதாரோவிடம் இருந்து சில காலங்கள் மீள முடியாமல் இருந்தது உண்டு, வங்கலீஸும், எணிஃமாவும் இன்னும் என்னிலிருந்து நீங்காதவர்களாகவே இருக்கிறார்கள்.

இவ்வளவு நேரம் நான் பிதற்றிக் கொண்டிருக்கும் டடவா -ஷந்தியனின்  பின்நவீனத்துவ வரிகளும் நியூ எஜ் இசையும் அவர்களின் இசையில் அதி அற்புத தரிசணங்களின் காரணங்கள் என்று சொல்லவதற்கு சில உதாரணங்கள். செவன் டேய்ஸ் என்ற ஆல்பத்தின் ஆறாவது பாடல் அதாவது அவர்களின் தரிசணத்தில் ஆறாவது நாள். தலைப்பு - உலகை கடந்து செல்லுதல் (Passing By The Earth). அந்த தலைபின் கீழ் குறிப்பு போல் அழகிய தரிசணம் (Awareness of Beauty) என்று ஒரு குட்டி தலைப்பு, பிறகு கவிதை தொடர்கிறது. கவிதை முழுவதையும் மொழிபெயர்க்கும் அவசியம் எனக்கு தேவையாய்  படவில்லை. அதன் இறுதி வரி இப்படி முடிகிறது.

‘உயிரற்ற உனது முகம்
எனது இன்னும் பிறவா
இரண்டு கண்களை
கண்டடையும் என்று
நினைக்கிறாயா?’

எவர் ப்ண்ட், டெபார்தெட் போன்ற வரிகளுக்கு இன்னும் நுட்பமான தமிழ் வார்த்தைகளை பிரயோகித்தால் அந்த வரிகளின் முழுதரிசணம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

Do you think that your departed face could
ever find my unborn pair of eyes.


ஆனால் இதுவே சீன மொழியில் இருக்கும் அந்தப் பாடலின் ஆங்கில ஆக்கம்தான். சீனத்தில் அதன் ஆழங்கள் இன்னும் அதிகமென்றே தோன்றுகிறது. காரணம் ஒரு வார்த்தை அதன் நேரிடை அர்த்தங்களை மட்டும் தாங்கி வருவதில்லையே, அது சார்ந்த சமூகத்தின் நம்பிக்கை, பண்பாடு, வாழ்வு, அரசியல் என பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியது.

ஏழாவது நாள் - அதாவது ஏழாவது பாடலின் தலைப்பு - இருப்பற்ற நிலையின் தரிசணம் (முடிந்தளவு தமிழாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறேன் - நண்பர் யுவராஜனுக்கும் நன்றி).  Awareness of Non Existence. இந்த பாடலின் சீன வரிகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. அது சாத்தியமற்றது என்று அவர்களே எண்ணியிருக்ககூடும். இசையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியாது, அது காப்புரிமை சட்டத்தை மீறும் செயலாகும். www.last.fm வேண்டுமானால் தேடிப்பாருங்கள்.  இந்த பாடலின் வரிகளை பாடவில்லை மாறாக உணர்வொலிகள் எழுப்பியிருக்கிறார், டடவா. இப்பொழுது ஓரளவு உங்களுக்கு புரியலாம் எனக்கு ஏன் இந்த இசை ஒப்பற்றதாக தோன்றுகிறது என்று.

No comments: