Tuesday, December 15, 2009

இயற்கையுடன் துண்டிக்கப்படும் நமது உறவுகள்

கடந்த வெள்ளியன்று மகனை கணித வகுப்பில் சேர்த்துவிட்டு மனைவி மகளுடன் ஸாப்பிங் சென்றேன். பெண்களுடன் ஸாப்பிங் செல்வது கொஞ்சம் சலிப்பூட்டுவது. அவருக்கு என்னுடன் இசை நிலையங்களுக்கும் புத்தக கடைகளுக்கும் வருவது சலிப்பூட்டுவது. அதனால் காரிலேயே இருந்துவிட்டேன்.


அந்த ஸாப்பிங் செண்டருக்கு எதிரே ஒரு சிறிய காட்டுப்பகுதி. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு ஏரியும் அதை ஒட்டியதுபோல் ஒரு சின்ன வீடுபோல் ஒன்றும் தென்பட்டது. அதை இத்தனை நாள் நான் கவனித்திருந்தாலும் எனக்குள் எந்த உந்துதலும் வந்ததில்லை.  இன்று உற்சாகத்துடன் எனது 3 வயது மகளையும் அழைத்துக்கொண்டு அடர்ந்த புதர்களை கடந்து உள்ளே சென்று பார்த்தேன். அழகிய, அமைதியான ஏரி. சுற்றிலும் மரங்கள். உட்கார்ந்து இயற்கையை ரசிப்பதற்கும், மெளனமாய் நீருடனும், பூச்சிகளுடனும், மரங்களுடனும் உறவுக்கொள்ள யாரோ கட்டிவைத்திருந்த சின்ன இளைப்பாரும் பலகையால் ஆன இருப்பிடமும். பயன்படுத்தி தூக்கியெறிந்த பழைய சோபாக்களும் நாற்காலிகளுமாக மீன் பிடிப்பதற்காக யாரோ கட்டிய தடுப்பு இல்லாத வீடுபோல் இருந்தது.


நான் அங்கு அமர்ந்து இயற்கையின் இதயத்துள் நுழைந்தபோது, மனம் லேசானது, அமைதியானது,  வெளிகளில் கலந்து பேதமையற்றது. தியானம் தேவையில்லை, இயற்கையோடு இணைவது அதைவிட நிதானத்தையும் அமைதியையும் தருவதை உணர முடிந்தது. வெறுப்புகள், கோபங்கள், விரக்தி, வலி எல்லாவற்றையும் இரண்டு கைகளையும் ஏந்தி எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனோடு அன்பையும், அடக்கத்தையும் அமைதியையும் தருகிறது இந்த இயற்கை.

என் மகளும் அதிகம் சந்தோஷமாகி நீரைப்பற்றியும், மரங்களை பற்றியும், தரையிலும், தண்ணீருலும் தென்பட்ட பூட்சிகளை பற்றியும் வாய் ஓயாமல் கேள்விகேட்டு கொடுமை பண்ணினால். அவளது எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்கும் பொறுமையை அந்தச் சுழல் தந்தது.


ஆனால் அந்த ஸாப்பிங் செண்டரில் அவ்வளவு கூட்டம் இருந்தும், எங்கள் இடத்தில் இருந்து ஒரு பத்து அடி தூரத்தில்  வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தும், யாரும் இந்த இடத்தை நெருங்கவில்லை.

ஒன்றை உணர முடிந்தது, இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவாக இயற்கையைப் பொருட்படுத்துவதில்லை. இன்னும் சில மாதங்களிலோ வருடங்களிலோ இல்லை நாட்களிலோ இந்த மரங்களை அழித்து, எங்கோ ஒரு மலைமேட்டுக் காட்டை அழித்து, அங்கிருந்து கொண்டுவரப்படும் மணலால் இந்த ஏரியை மூடி, இங்கு ஒரு குடியிருப்போ அல்லது அலுவலகங்களோ, கடைவீதிகளோ கட்டப்படும்.

அதேபோல் இங்கு இரண்டு பெரிய ஏரிகளை மூடி ஒரு இடத்தில் சிறிய காலனியும் மறு இடத்தில் பெரிய நெடுஞ்சாலையும் கட்டி வருகிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம், இங்குள்ள மீன்களெல்லாம் இறந்துவிடுமே, இங்கு இருக்கும் இந்த வெள்ளை நாரைகள் எல்லாம் எங்குப் போகும், இதனால் இந்த இடத்தின் ஈகோலோஜி என்ன ஆபத்துக்களை சந்திக்கும், இதனால் நமக்கு என்ன பாதிப்பு வரும் என்று, மேலும் அது தொடர்பாக அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அமைச்சர்கள், நகராண்மை கழகங்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறதே என்று வெற்று அரசியல் பேசி எனது பொறுப்பின்மையையும் கையாளாகாதனத்தையும் மறைத்திருக்கிறேன்.


இங்கு அமர்ந்திருந்த போது, அது தனக்கு நேர்விருக்கும் அழிவை உணர்ந்தும் அமைதியாக கரியமிலவாயுவோடு சேர்த்து எனது அசிங்கங்களையும் வாங்கிக்கொண்டு என்னில் புதிய புதிய கனவுகளையும் நம்பிக்கைகளும் புகுத்திக் கொண்டிருப்பதை உணரலாமல் இருக்க முடியவில்லை.

வீடு வந்து, எனது கைதொலைப்பேசியில் நான் எடுத்தப் படங்களை என் மகனுக்கு காட்டியபோது, அவனும் உச்சாகமாகி அடுத்த முறை தன்னையும் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்திக்கொண்டே இருக்கிறான்.

இயற்கையோடு நாம் துண்டித்துக்கொள்ளும் உறவு நம்மை இயந்திரமாக ஆக்கிவருகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடன் ஓர் அங்கமாய் இருக்கும் இயற்கையை விட்டு நாம் விலகி நடக்கும் ஒவ்வொரு அடியும் நாம் நம் இதயத்தைத் துருப்பிடித்த இரும்பு பிண்டமாய் ஆக்கிவருகிறோம் என்றே  தோன்றுகிறது. இந்த இயற்கைக்கு தரமுடியாத அன்பை எப்படி நாம் நமது குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும், சக மனிதனுக்கும் தர முடியும். ஏதோ ஒரு தேவையை முன்னிறுத்தி நாம் போலியாகத்தானே ஒருவருக்கொருவர் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.

அந்த இடத்தை விட்டு வெளிவரும் போது, இறுகிப்போன மனிதர்கள் இங்கு மரங்களாகவும். மரமான நான் இலைகள் உதிர்த்து, கிளைகள் ஒடுக்கி கைகால்கள் முளைத்து மனிதனாகி நடந்து வருவதாக உணர முடிந்தது.

1 comment:

Yuwa Yuwaji said...

அழகான ஒரு கட்டுரை அகி.. இதைப் பற்றி ஒரு பாட்டு எழுதினால் என்ன என்று எனக்கு ஆர்வத்தை தூண்டுகிறது...