Tuesday, December 8, 2009

இளையராஜா - ஏ ஆர் ரஹ்மான், அர்த்தமற்ற விவாதங்களும் பின் நவீனத்துவ இசையும்ஒரு குறிப்பிட்ட இசையும், இசையமைப்பாளரும் நம்மை கவர்வதற்கு என்ன காரணம். நம்மால் எல்லா இசையையும் ரசிக்க முடியவில்லையே, சிலருக்கு சில இசை பிடிப்பதற்கும் சிலர் வெறுப்பதற்கும் என்ன காரணம்? இப்படி சில அடிப்படை விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்தாலும் ஒரு சில காரணங்களால் அதை தவிர்த்திருக்கிறேன். அதில் முக்கியமானது, சில இசை மேதமைகளைப் பற்றிப் பேசும்போது அதிலும் இந்திய இசையைப் பற்றிப் பேசும் போது தவிர்க்கமுடியாமல் சில இசையமைப்பாளர்களின் மேன்மையை பேசுவதாக அர்த்தப்படும், அவரின் பால் நமக்கிருக்கும் ஈர்ப்பையும் மதிப்பையும் பிரச்சாரம் செய்வதுபோல் தோன்றும்.

அதனால் எக்காலத்திலும் அது இசை சார்ந்த நேர்மையான எழுத்தாக யாரும் பார்க்கத்தவறலாம். எனது தொழில் சார்ந்த பல விஷயங்களுக்கு அவை ஒரு தடையாக கூட அமையலாம் என்றும் தவிர்த்திருக்கிறேன். தொழில் ரீதியில் ஒரு இசையை பார்ப்பதும், அது கடந்த ஒரு ரசிக மனப்பான்மையில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வித்தியாசப்படுத்தி தீர்க்கமாக என்னால் சொல்லிவிட முடியுமா என்ற சந்தேகங்களும் எனக்குள் இருந்தது உண்டு.  அதிலும் ஒர் இசையை நான் ரசிப்பதால் அதற்கு நேர்மாறான இன்னொரு இசையை மோசமாக சொல்ல நேரிடலாம் அல்லது ஒரு ரசனையை விளக்க கோட்பாடுகளை சொல்லவேண்டும், அது இசை ரசனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அமைந்துவிடும்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி என்னை உந்தியது சாரு அவர்களின் எழுத்து. அவர் 'நான் கடவுள்' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி உயிர்மையில் எழுதியதை படித்தபோதே எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பிறகு வழக்கம்போல் அது அவருடைய கருத்து, நான் அதற்கு எதிர்மறையாக ஒன்றை நிறுவ நினைத்தால் அது என்னுடைய கருத்தாகும். யாரும் பொதுப்படையாக ஒரு உண்மையை எப்படி நிறுவ முடியும், அது காலத்தின் கையில் அல்லவா இருக்கிறது என்று விட்டுவிடுவேன். ஆனால் மீண்டும் அதைப்பற்றி எழுத எண்ணம் வந்ததற்குக் காரணம், அவருடைய சமீபத்திய குமுதம் சர்ச்சை.  அதிலும் இளையராஜா. அதன் தொடர்ச்சியாக காலம் காலமாக பேசப்படும் ஏ ஆர் ரஹ்மானா இளையராஜாவா என்ற அர்த்தமற்ற விவாதங்கள்.

இது ஒரு விஷயத்தைத் தெளிவாக எனக்கு புரிய வைத்தது, அதாவது இசையை ரசிப்பதோடு நாம் நின்றுவிடுகிறோம். ஒரு இசையை எப்படி அணுகுவது என்பது நமக்கு இன்னும் புரிந்ததில்லை. அதிலும் வார்த்தைக்கு வார்த்தை எங்க ஊரு பாட்டுக்காரனை வம்புக்கிழுப்பதும் சலம்டாக் மில்லினியரை, நான் கடவுளையும் ஒப்பிடுவதையும், சில சமயம் அடிப்படையில்லாமல் சில உதாரணங்களை கூறுவதும், நாம் இசை கடந்து ஒரு தனி நபர் சாடலையும் போற்றலையும்தான் முன்னிறுத்துகிறோம் என்று தோன்றுகிறது. அதுவும் நமது தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது அல்லது நமக்கு பழக்கப்பட்ட, நமது மனதுக்கு நெருக்கமாக உணரும் ஓர் இசை அனுபவத்தின் வழியே நடக்கிறது.

ஓர் இசையை எப்படி அணுகுவது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, ஏன் சில குறிப்பிட்ட இசைப்பிரிவு (Genre) நமக்குப் பிடிக்கிறது என்று பார்ப்போம். முதல் காரணம் நமது கலாச்சாரம், சமூக அரசியல் அமைப்பு, வர்க்க சூழல், இதனுடன் சேர்ந்த நவீன காரணமாக டெக்னோலஜியும். ஓர் இசை உருவாகும் சுழலின் அடிப்படைக் காரணமும் அதுதான்.  காரணம் இசை என்பது ஒரு தொடர்பு சாதனம் என்பதையும் தாண்டி அது உலவி வரும் சமூகத்தின், அதன் கலாச்சரத்தின்  அடையாளமாக இருக்கிறது. சைமன் ப்ரித் (Simon Frith) என்ற இசை ஆய்வாளர், இசை என்பது ஒரு சமூகத்தின் அடையாளம் மட்டுமல்ல மாறாக ஒரு சமூகத்தை கட்டமைப்பதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார். இந்த அற்புத கோட்பாட்டை தமிழில் அழகாகவும் ஆழமாகவும் அணுகியவர் சாரு அவர்கள். அவருடைய கலகம் காதல் இசை என்ற நூலில்.

மிக எளிமையாக விளக்கவேண்டும் என்றால், ஹிப் ஹாப் இசையை எடுத்துக்கொள்வோம்.  ஹிப் ஹாப் இசை, ஆப்பரிக்க அமெரிக்கர்களின் இசையாக 70களில் தோன்றியது.  பிற்படுத்தப்பட்டோரின் உளவியல் காரணமாக வெளிப்பட்ட வன்முறை கலாச்சாரத்தின் ஒரு பிரிவாக இந்த இசை இருந்தது. ஹிப் ஹாப் பாடகர்களின் தோற்றத்தை நினைத்து பாருங்கள். பயமுறுத்தும் தோற்றத்துடன், பெரிய பெரிய இரும்பு சங்கலிகளை மாட்டிக்கொண்டு, தனது உடல் பருமனைவிட இரண்டு மடங்கு பெரிய அளவு ஆடை. பாடல் வரிகளிலும் வன்முறை இருக்கும். இதை இன்னும் நெருக்கமாக புரிந்துக் கொள்ள அது சார்ந்த வரலாற்றை நாம் அணுக வேண்டும். அந்த இசை இப்பொழுது வியாபார சந்தையில் முன்னெடுக்கப்பட்டு இன்றைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த வரியை முடிக்கும் போது சட்டென்று ஒர் உணர்வு,  இதுவரை இதையும் ஒர் இசையாக பார்த்த என்னால் அதன் ஆதார கூறுகளை எழுதியவுடன், இனி இந்த இசையைப்பற்றிய எனது மதிப்பீடு என்னவாக இருக்கும் என்ற அச்சம் பற்றிக்கொள்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  நீங்களுமே இனி ஹிப் ஹாப் கேட்கும் போது, அதன் பாடகர்களை இந்த இசையையும் தாண்டி அவர்களது சமூக பின்னனியையும், உளவியல் நிலைப்பாடுகளையும் என்ன வேண்டி வரும் (ஒருவேளை உங்களுக்கு இது முன்னமே தெரியாமல் இருந்தால்).

ரோக் பாடகர்களின் தோற்றத்தை நினைத்துப்பாருங்கள். ஹெவி மெட்டல் பாடகர்களின் தோற்றத்தை நினைத்து பாருங்கள். ஏன், நமது கர்நாடக பாடகர்களின் தோற்றத்தை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு இசைப் பிரிவை சார்ந்தவர்களும் ஒவ்வொரு அடையாளங்களை முன்னிறுத்துகிறார்கள். ஒவ்வொரு இசைப் பிரிவும்  பெரும்பாலும் ஒரு குறிப்பிட்டப் பாடுப் பொருளையே கொண்டிருக்கும் அல்லது மனோநிலையை பிரிதிபலிக்கும். நமக்கு பழக்கமான கர்நாடகம் இறைவனைப் பற்றியே பெரும்பாலும் பாடுவதுபோல்.  ஏன் இந்த அடிப்படையில் இசை இயங்குகிறது என்றால், அது நமது கலாச்சாரத்தின், அரசியலமைப்பின் அடையாளமாக இருக்கிறது. அதன் ஊடாக மீண்டும் அந்த சமூகத்தின் அடையாளத்தை கட்டமைப்பதாக இருக்கிறது. அது புரட்சியிலும் போராட்டத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை. எல்லா நிலைகளிலும் வெளிப்படுவது.

இப்பொழுது தமிழ் நாட்டு கிராமத்தில் மாடுமேய்க்கும் ஒரு கதாநாயகனை கற்பனை செய்து பார்ப்போம் (தயவு செய்து ராமராஜனை தவிர்த்த கற்பனை). அவனுக்கு ஒரு பாடலை யோச்சிப்போம். எங்க ஊரு பாட்டுக்காரன் அய்யா எல்லாத்திலும் கெட்டிக்காரன் .....  இது நமக்கு பெரிய நகைச்சுவை கொடுக்கும் என்றால் நாம் எதை நகைக்கிறோம்? இசையையா? கிராமத்து மாட்டுக்கார இளைஞனையும் அவனது தோற்றத்தையுமா அல்லது நமது தற்கால மனப்பான்மைக்கு (அதிலும் கணிணி யுகத்தில் இருக்கும், இன்றைய நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பழகிய நமக்கு)  முற்றிலும் அந்நியமாய், விநோதமாய் இருக்கும் அந்த கிராமத்து கலாச்சாரமா?  அப்படி ஒரு தோற்றத்தோடு இருக்கும், கல்வியறிவு இல்லாத இளைஞனின் மனோநிலையையும், வாழ்க்கையையும் உறவுகளையும் அவன் அணுகும் விதத்திலும், மற்ற எல்லா நிலைகளிலும் நமக்கு அந்நியமாகவே இருப்பவன். அவனுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தால்  (அவர் நிச்சயமாக அத்தகைய படங்களுக்கு இசையமைப்பதைத் தவிர்த்திருப்பார். அது ஒரு வியாபார யுத்தி என்பதை நானும் அவரை போன்றோரும் மட்டுமே தெரிந்திருக்கும் ஒன்று), கருத்தம்மா அல்லது கிழக்குச் சீமையிலே எதாவது ஒரு பாடல் போல் இருந்திருக்குமா?  ஏ ஆர் ரஹ்மான் கோர்ட் பிரயோகத்தின் வழி அந்த இசை தமிழ் நாட்டு எல்லைகளை கடந்து ஒலிக்கவேண்டும் என்று தீவிரமாக இருப்பவர்.  அதனால் நிச்சயம் அந்த கிராமத்து இளைஞனுக்கு எந்த வகையிலும் அந்த இசை நெருக்கமாக இருக்கமுடியாது. 

கதகேளு கதகேளு கரிமேட்டுக்கருவாயன் கத கேளடியோ என்ற பாடலாகட்டும் அல்லது கோட்டையைவிட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாட சாமி பாடலாகட்டும்.  கிராமத்து கலாச்சாரமும்,  அவர்களிடம் நிலவிய அடக்கு முறையும், சமூக அரசியல் கட்டமைப்பும் அதன் ஊடாக அந்த மனிதர்களிடம் எழும்பிய உளவியல் கூறுகளும்,  இந்தப் பாடல்களை திரையிசை தாண்டிய  தரிசணத்திற்கு உயர்த்துகிறது.  ஒரு பாடலின் வரவேற்பும் ரசனையும் அது சார்ந்த மக்களிடதான் அதிகம் எடுபடுவதற்குக் காரணம் அது அவர்களின் ஆழ்மன இசையாக அடையாளம் காணப்படுவதால்தான்.  இந்த கிராமத்து வாழ்க்கையையும், பண்பாட்டு கூறுகளையும் பால் நிலாப் பாதை என்ற அவரது நூலில் இளையராஜா கூறியிருப்பார். இந்தப் பண்பாட்டு உளவியல் ஊடாக கேட்கும் போது கோட்டையவிட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாட சாமி நமது உணர்வு வெளியில் பிரமாண்டம் கொள்வதை நிச்சயம் நம்மால் தவிர்க்க முடியாது.

அதனால் இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் அல்லது வேறு ஒரு இசையமைப்பாளரையோ ஒரே நேர்கோட்டில் வைப்பது எந்த வகையில் நேர்மையான பார்வையாக இருக்க முடியும்? அது முற்றிலும் நமது ரசனையில் இருந்து எழுவதுதானே?  அதைவிட அபத்தமானது சலம்டாக் மில்லினியரையும் நான் கடவுளையும் ஒப்பிடுவது.  இரண்டு இசையின் வெளிபாடுகளுக்கும் இரு வேறு பெரும் காரணங்கள் இருக்கிறது. அதை இசையமைப்பாளன் மட்டும் தீர்மானிப்பதில்லை. மற்றொன்று இசையை இரு இசையமைப்பாளர்களும் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் பொருத்தது. அதை மேலும் விரிவாக பேச சில அச்சங்கள் என்னை தடுக்கிறது. காரணம் அதனால் ஒருவரின் இசையை உயர்த்தியும் ஒருவரின் இசையை தாழ்த்தியும் எழுதுவது போல் தோன்றும்.  அதை நான் முற்றிலும் தவிர்க்க நினைக்கிறேன். அதையும் சிலர் எனது தொழில் சார்ந்த மனநிலை என்கின்றனர். நிச்சயமாக இல்லை.  வந்தே மாதரம் போன்ற ஒரு அற்புதமான இசையை இளையராஜா செய்திருக்க முடியாது. திருவாசகம் போன்ற பேரிசையை ஏ ஆர் ரஹ்மான் செய்திட முடியாது. ஜோதா அக்பரை இளையராஜாவும் பழசி ராஜாவை ஏ ஆர் ரஹ்மானும் செய்திட முடியாது. ஆனால் அதற்காக ஒருவரின் இசையைவிட மற்றொருவரின் இசை எப்படி உயர்ந்ததாக ஆகிவிட முடியும்? ஏ ஆர் ரஹ்மான் சிறந்த இசைத் தயாரிப்பாளர் (Music Producer), இளையராஜா சிறந்த இசையமைப்பாளரும் (Composer) இசை ஒருங்கிணைப்பாளரும் (Arranger). இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்து செயல்படும்போது, இந்த அடிப்படை அம்சங்கள் துல்லியமாக புலப்படும். நாம் இசையை அதன் சுய வெளியில் தரிசிப்பதைத் தவிர்த்து சில மனத்தடைகளின் ஊடாக தரிசிக்கிறோம், அதன் விளைவுதான் இந்தத் தொடரும் சர்ச்சைகள்.

ஏன், நமது ரசனை வேறுபடுகிறது? அது எப்பொழுதும் நமக்கு பரீட்சயமான தளத்தில்தான் செயல்படுகிறது. இளையராஜாவின் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா என்ற பாடல் வெளிநாடுகளில் கூலித்தொழிலாளர்களாக இருக்கும் அனைவரின் தாய்மண்ணின் ஏக்கத்தை கிராமிய மனநிலையில் வெளிப்படுத்தும் ஒரு பாடல்.  மலேசியாவில் கார் கழுவும் இடங்களிலும், முடிவெட்டும் நிலையங்களிலும், உணவகங்களிலும், விடியோ நிலையங்களிலும் எங்கெல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இளையராஜாவின் பாடல்கள்தான் கேட்கப்படுகிறது. அது எப்பொழுதும் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  அவர்கள் அவர்களின் தொலைந்துபோன அடையாளங்களை அந்த இசையிலிருந்து மீட்கிறார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது. 

சாஸ்வதியிடம் ஒரு முறை கர்நாடக இசையில் புது முயற்சிகள், புது கீர்த்தனைகள் என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். கர்நாடகத்தின் பிரயோகம் நேரிடையாக வெளிப்படாமல் இருந்தாலும் அசலான கர்நாடகத்தின் எல்லா அம்சங்களும் உள்ள பாடல்கள் பல வந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று. தனக்கு தெரிந்த ஒரு பாடலாக இளையாராஜாவின் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா என்ற பாடலை கூறினார். அதைவிட நுட்பமாக கர்நாடக இசையை பயன்படுத்தி நான் கேட்டதில்லை என்றார். கிராமியமாக தோன்றும் ஒரு பாடல் எப்படி அசலான கர்நாடகமாக அவரால் பார்க்க முடிகிறது என்று ஆச்சரியத்தோடு கேட்ட போது அவர் அந்தப் பாடலை அதே மெட்டில் கர்நாடகத்தில் பாடி காட்டினார். கர்நாடகத்தை பற்றி முதலிலேயே கூறியது போல் சில குறிப்பிட்ட பாடுபொருள்தான் அதன் உள்ளடக்கமாக ஏற்கப்படுகிறது. அதற்கெதிரான முயற்சிகள் கேட்பதற்கு சில அசௌகரியங்களை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால் இந்த பாடலின் வரியை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும், அதை கர்நாடகத்தில் ரசிப்பதற்கு. 

இங்கு முற்றிலும் வேறுப்பட்ட இரு வேறு ரசிப்பு மனப்பான்மை வெளிப்படுகிறது. அதுவும் அவர்கள் பின்புலம் சார்ந்த அவர்களுக்கு பரீட்சயமான ரசிப்பு மனப்பான்மை. திரும்பவும் ராமராஜனையும், சிங்கப்பூரில் அவருக்கு ஒரு பாடலையும் நினைத்தால் மற்றவர்களுக்கு இந்தப் பாடலும் வெறும் நகைச்சுவையாகத்தான் தோன்றும்.  அதையும் தாண்டி ஆப்பரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து அடிமையாய் வாழும் ஒரு கலைஞன் தனது மண்ணை நினைவு கூறும் ஒரு பாடலுடன் இதை ஒப்பிட்டோமென்றால், நமது இசை ரசனை நமக்கு பலகாலமாக பரீட்சயமான ஒரு தளத்தில் மட்டுமே இயங்குகிறது என்று அர்த்தம்.

ஆனால் பெரும்பாலும் இத்தகைய இசை பார்வைகள் செமியோதிக் (Semiotics) கோட்பாட்டின் அடிப்படையில்தான் விவாதிக்கப்படுகிறது. அதாவது பாடல்வரிகளின் அடிப்படையில். வரிகள் அதற்கான அர்த்தங்களுடனும், பண்பாட்டு கூறுகளுடனும், வரலாறுகளுடனும், அரசியல் சமூக அடிப்படையுடன் அணுகப்படும் ஒன்று. அதன் காரணமாகவே அந்தப் பாடலும் இசையும் இந்த அனைத்து விஷயங்களின் அடிப்படையில் அணுகப்படுகிறது.

ஆனால் அதுவே வரிகள் இல்லாத இசையை எப்படி அணுகுவது? இதை இசைகருவிகளின் தேர்ந்தெடுப்பிலும் அதன் பிரயோகத்தின் அடிப்படையிலும் அணுகலாம்.  ஒவ்வொரு இசைக்கருவிக்கும், அதன் பிரயோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட உணர்வை அடையாளப்படுத்தும் தன்மையுண்டு. அதன் அடிப்படையில் இசைப்பிரிவை வகைப்படுத்தலாம். லத்தீன் இசையையும் அரேபிய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் அந்த இசைக்கருவிகளை பிரயோக்கிம் தன்மையையும் வைத்தே அடையாளப்படுத்திவிட முடியும். பல சமயங்களில் இசை குறியீடும் அல்லது சுவரப்பிரயோகமும் அதை அடையாளப்படுத்திவிடும். அதற்கு பாடல் வரிகள் தேவையாய் இருப்பதில்லை. 

ரோக் இசையை எடுத்துகொள்வோம். அதன் முக்கிய அம்சம் கிதார் அல்லது எலெக்டிரிக் கிதார். இந்த கிதாரின் பிரயோகம் ஒரு வித அக்ரெஸிவ் (aggressive) முறையில் பிரயோகிக்கப்படும். அதன் நோக்கமே மன அழுத்தத்தின் உச்ச வெளியேற்றம். (ரோக் இசையிலேயே பல் உட்பிரிவுகள் இருந்தாலும் ஆதார நாதம் இந்த அடிப்படையில்தான் அணுகப்படுகிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருவித அர்த்தமற்ற போக்கையே காண்பவர்கள் இந்த ரோக் இசை கலைஞர்கள். கட்டற்ற ஒருவித வாழ்வியல் விரும்பிகளாகவும் இருப்பார்கள். அவர்களது தோற்றத்தை நினைத்து பாருங்கள். பெரும்பாலும் ஜீன்ஸ் அதிலும் கிழிந்த ஜீன்ஸ், தலைமுடி நீண்டும் ஒழுங்கற்றும் இருக்கும். பெரும்பாலும் விநோதமான தி ஸர்ட் (t-shirt) அவர்களது விருப்ப ஆடை. பெரும்பாலும் மண்டை ஓடு படம் கொண்ட தி ஸர்ட். இந்த மனநிலையை பிரதிபலிக்க கிதாரும் அதை பிரயோகிக்கும் விதமும் அவர்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது.

கோஸ் ரைடர் (Ghost Rider) என்ற ஒரு படம், அதில் கதாநாயகன் அவனது ஆன்மாவை சைத்தானுக்கு அர்பணித்து விடுகிறான். அதனால் அவனும் பேயாக அலைகிறான். ஆனால் நல்லவன். மோட்டர் சாகசத்தில் ஈடுபட்டுள்ளவன். அந்த படத்தின் மொத்த பின்னனி இசையும் ரோக் இசையின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவன் மனநிலையை, வாழ்க்கை முறையை வார்த்தைகள் அற்று, காட்சிகள் அற்று விளக்க அந்த வகை இசைதான் தேவையாய் இருக்கிறது. காட் பாதர் (God Father) ஆகட்டும், க்லேடியேட்டர் (Gladiator) ஆகட்டும், Children of Heaven ஆகட்டும், ஒரு திரைப்படத்தின் பின்னனி இசை இந்த அடிப்படை அம்சங்களை மீறுவதில்லை. அதாவது மைய கதாப்பாத்திரத்தை எல்லா உளவியல், சமூக கலாச்சார கூறுகளுடன் அணுகுவது அல்லது கதையின் மைய கருவை இதே கூறுகளுடன் அணுகுவது.  இங்கு வரிகளற்ற இசைக்கு தேவையாய் இருப்பது வாத்தியங்கள், சுவரப்பபிரயோகங்கள். இதன் ஊடாக ஒரு குறிப்பிட்ட இசைப்பிரிவை அடையாளம் காட்டி நிற்கும். அதை தொடர்ந்து அந்த இசையின் சமூக கலாச்சார கூறுகளுடன் பொருத்தி நாம் அதன் அடுத்தக்கட்ட புரிதலுக்கும் உளவியல் அணுகுமுறைக்கும் நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் ஹலிவூட்டில் இசையமைப்பாளரையும் இசையையும் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போம். முதலில் இந்த ஜோன்ரேவின் அடிப்படையில்தான், பிறகு மியூசிக் சுப்பவைசர் (Music Supervisor). Genre 100க்கும் மேற்பட்டு உள்ளது. விரிவாக காணவேண்டும் என்றால் அமேசோன் (amazon) இசை தளத்தில் பார்க்கலாம். ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தை தொடங்கும் முன்பு, ஒரு சின்ன குறிப்புகளுடன் எல்லா இசை பதிப்பு நிறுவனங்களுக்கும் (music publisher and music production house) தகவலை அனுப்பி விடுவார்கள். வார்னரில் (Warner) நான் இருந்தபோது க்லேடியேட்டர் (Gladiator) படத்திற்கான் இசையமைப்பாளர் தேர்வு நடந்தது. எங்களுக்கு ஒரு தொலைநகல். அதில் சுருங்க அந்தப் படத்தின் கதை. பிறகு அவர்களுக்குத் தேவைப்படும் இசை என்ற குறிப்பில் 180 A.D காலத்தைய ரோமை (Rome), போர், விழாக்கள் என்ற அன்றைய ரோமின் முக்கியமான அடையாளங்களுடன் பிரதிபலிக்கும் இசை. அதற்கு இசை பதிப்பு நிறுவனங்கள் சில சாம்பிள்களை (Samples) அல்லது Demo வை அனுப்பவேண்டும்.  ஹன்ஸ் ஜிம்மர் (Hans Zimmer)ஆகட்டும் ஜோன் வில்லியம்ஸ் (John Williams) ஆகட்டும் இந்த சுழற்சிக்குள் அடங்கியாக வேண்டும்.
 
திரைப்படம் போஸ்ட் பொரோடக்ஷ்னுக்கு (post production) தயாரானதும், கதையின் மைய உணர்வுக்கும் நகர்வுக்கும் தேவையான அனைத்து இசையும் பதிவு செய்யப்பட்டும் விடும். அதற்கு விதிவிலக்காக அமைந்தது டார்க் நைட் (Dark Knight) படம். படம் காட்சிபடுத்தப்படும் முன்பே இசை பதிவு செய்யப்பட்டு விட்டது. இசை கதாப்பாத்திரத்தின்  உளவியலை மட்டும் சார்ந்திருக்கும். அந்த இசையை திரைகதையின் ஒரு கூறாக பயன்படுத்தி காட்சிகளை எடுத்தார்கள்.

இப்பொழுது நாம் வழக்கமான ஹலிவூட் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். உதாரணத்திற்கு சலம்டாக் மில்லினியரை எடுத்துக்கொள்வோம். முக்கியமாக அது வாழ்வின் அவலத்தை பற்றிப் பேசும் படம் அல்ல, வறுமையையும், ஏமாற்றத்தையும் பற்றி பேசுவதல்ல. ஏ ஆர் ரஹ்மானும், அதன் இயக்குனர், இந்த படத்தின் இசையை தீர்மானிக்கும் போது ஒன்றில் மட்டும் தீவிர தெளிவுடன் இருந்தார் என்று கூறியிருக்கிறார். அதாவது எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் நெகடிவ் உணர்வுகளை இசைத் தரக்கூடாது என்பது. அந்தப் படத்தைப் பாருங்கள் வறுமையைக் காட்டும் போதும், பிச்சைக்காரர்களைக் காட்டும் போதும், நம் கண்கள் கலங்கும் எந்த காட்சியிலும் இசை இருப்பதில்லை. முக்கியமாக ஒரு சிறுவனின் கண்களில் காச்சியத் திரவத்தை ஊற்றும் போது கூட இசையில்லை.  ஆனால் மையக் கதாப்பாத்திரத்தின் அடுத்தக் கட்டத்திற்கான ஒவ்வொரு நகர்வின் போது, எதிர்பார்ப்பை நோக்கி அவன் முன்நகரும் ஒவ்வொரு காட்சியின் போதும் இசையிருக்கும். குறிப்பாக சுரங்கப்பாதையில் கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சிறுவன் பிச்சையெடுக்கிறான். அந்த சோகம். அவன் முன்னமே தன்னுடன் சிறுவயதில் இருந்த சிறுவன். வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறான். எதிர்காலம் அற்று நிற்கிறான். இவன் அவனுக்கு 100 டாலர் கொடுக்கிறான். இவன் லதிகாவைப் பற்றி கேட்கிறான். அவனும் விவரங்கள் தருகிறான்.  இவன் ஓடுகிறான், அவளைத் தேடி. அவன் ஓட ஆரம்பித்தபோது இசை வருகிறது. துள்ளலான இசை. ரிங்ரிங்ரிங் ரிங்ரிங் என்று தொடங்கும், பாலியில் தொழில் புரியும் ஒருவளின் மனநிலையை பிரதிபலிக்கு பாடல். ஏ ஆரின் அதே பாணியில் ஏற்கனவே வெளியான ஒரு பாடல், முத்து முத்து மழை முத்தாடுதே. அதிலும் முக்கியமானது இந்தியாவின் இசை ஆன்மா எங்கும் தெரியக்கூடாது மாறாக நவீன இளைஞர்களின் மனநிலைதான் அதன் திரை இசையில் தெரியவேண்டும்.

இந்தப் படத்தில் இசை கையாளப்பட்டிருக்கும் விதம் எல்லா ஹலிவூட் திரைப்படத்தைப் போல் எண்ட் கிரேடிட் (End Credit) அல்லது ஒபென் கிரேடிட் (Open Credit) என்ற வகையிலேயே, அதாவது ஒரு காட்சியின் தொடக்கமாக அல்லது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு நகரும் போது மட்டும் இசை பயன்படுத்தப்படும். இடைப்பட்ட சூழலில் இசை தேவையற்றதாக கருதப்படும். அதுவே இது ஒரு தமிழ் திரைப்படமாக இருந்தால் ஏ ஆர் ரஹ்மானின் இசை எப்படி இருந்திருக்கும்.  இந்தி படமாக இருந்தால் அவரின் இசை எப்படி இருந்திருக்கும் என்பதுதான் விவாதமாக இருக்க முடியுமே தவிர, நான் கடவுளின் இசை ஏன் இங்கு ஒப்பீட்டுக்கு வரவேண்டும்? மேலை கலாச்சாரத்தில் அழுவதற்கென்று இசை பயன்பட்டத்தில்லை. அவர்களது திரைப்படத்தில் நமது கண்கள் நனையும் எந்தக் காட்சியிலும் இசை இருந்ததில்லை. அப்படியிருந்தாலும் மெல்லிய பியானோ இசை மென்ணுர்வுகளை இசைத்துக்கொண்டிருக்கும். இசை அவர்களது காவியங்களில் ஒரு பூடகத்தன்மையுடன்தான்  இருக்கும். உணர்வுகளை துல்லியமாக அடையாளப்படுத்தாது.

இன்னொரு விஷயம் அங்கு எந்தக் காட்சிக்கு எந்த இசை எவ்வளவு நேரம் பயன்படவேண்டும் என்று தீர்மானிப்பவர் இசையமைப்பாளர் அல்ல, மியூசிக் சுப்பவைசர். அவருடைய முக்கிய வேலையே காட்சிகளுடன் இசையை பொருத்துவது. ஏ ஆர் ரஹ்மானின் சமீபத்திய ஹலிவூட் திரைப்படமான Couples Retreat யை எடுத்துக்கொள்வோம். அவரது சவுண்ட்ரெக் (Soundtrack) இசைதொகுப்பில் உள்ள இசையில் பத்து சதவிகிதம் மட்டுமே அந்தத் திரைப்படத்தில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. முக்கியமாக ஆறு இடத்தில் அவர் இசை பயன்படுத்தப்பட்ட ஞாபகம். ஒன்று விடுதியின் நுழைவாயிலை காட்டும் காட்சி, அம்மணமாக்கப்படும் காட்சி. சுறா மீன் காட்சி, படகு பயணத்தின் போது ஒரு பாடல், நீர்வீழ்ச்சியை காட்டும் போது. அனைத்து காட்சிகளிலும் இசை 30 செகெண்டுகளுக்கு மேல் போகாது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்தக் கதை நகர்விற்கு முக்கியப் பங்கு வகிக்கும் காட்சிகள். அது தவிர பல்வேறு இசையும் பாடல்களும் அந்தப் படத்தில் இருக்கும். அவை அனைத்தும் ஏ ஆரின் இசை அல்ல. மியூசிக் சுப்பவைசர் இந்த இசைகளை தேர்வுச் செய்து எந்தக் காட்சியில் எந்த இசை தேவைப்படும் என்று முடிவுப் பண்ணி அதைப் பொருத்துவார். காட்சிகளோடு இசையை பொருந்தச் செய்வதுதுதான் அவருடைய வேலை.

அது தவிரப் பெரும்பாலான உணர்வுகளையும் காட்சியையும் அவர்கள் சவுண்ட் டிசைனிங் மூலம் விளக்க முயற்சிப்பார்கள். வாழ்வின் யதார்த்தங்களை திரையில் கொண்டுவருவதுதான் அதன் நோக்கம். நாம் ஒரு உணர்வுக்குள் அகப்பட்டு கொள்வதும், ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொள்ளவும் நமது யதார்த்த வாழ்வில் இசை காரணமாக இருப்பதில்லையே.  நீங்கள் அழும்போது நமக்கு எதாவது இசை கேட்கிறதா என்ன?  அதனால் திரையில் இசை அந்த பங்கை செய்யும் என்றால், அது யதார்த்தச் சினிமாவாக இருக்காது. பார்த் (Bart) போன்ற ஆய்வாளர்கள் திரை இசை கேட்பதற்காக அல்ல அது திரைக் காட்சியின் ஒரு ஒலி வடிவமாகத்தான் இருக்கிறது என்கிறார். அல்லது திரை காட்சியை அடுத்த பிரேமுக்கு நகர்த்தும் ஒரு கருவியாக பயன்படுகிறது என்கிறார்.  ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்கு அல்லது அந்த பாத்திரத்தின் உணர்வுகளுக்கு இசைத் தேவைபடும் என்றால் அது உளவியல் ரீதியான அணுகுமுறையில் தான் இருக்குமே தவிர அப்பட்டமான இசைவழி மொழிபெயர்ப்பாக இருக்காது.  அதனால்தான் உலக சினிமாக்களில் இசை என்பது மிகக் குறைவாக இருக்கும், யதார்த்தங்களிலிருந்து விலகாமல் இருக்க.  பெரும்பாலும் ஒலி வடிவமைப்பில் யதார்த்த சூழலை கொண்டுவர முயற்சிப்பார்கள்.  இந்த ஒலி வடிவமைப்பின் வழி காட்சியை உணர்வுகளாக மொழிபெயர்ப்பவர் சவுண்ட் டிசைனர் அல்லது சவுண்ட் எடிட்டர்.

யதார்த்தமான சினிமா, முடிந்தளவு இசை இல்லாத சினிமாதான் அவர்களின் கனவு என்றுகூட சொல்லலாம். அதையும் நோ கண்ட்ரி ப்போர் ஒல்ட் மேனில் (No country for an old man) சாதித்திருக்கிறார்கள். சினிமாவின் போஸ்ட் பொரோடக்க்ஷன் வேலையில் மியூசிக் சுப்பவைசர், சவுண் டிசைனர், எடிட்டர், இயக்குனர், இசையமைப்பாளர் எல்லோரும் சேர்ந்து, இசை எங்கு எவ்வளவு நீளத்தில் இருக்கவேண்டும், எவ்வளவு வெளிப்பட வேண்டும், இசையின் ஒலி அளவு எவ்வளவு இருக்கவேண்டும். அல்லது இசை effect ஆக மட்டுமே கேட்கப்பட வேண்டுமா அல்லது இசையாக கேட்கப்பட வேண்டுமா என்றெல்லாம் இந்த போஸ்ட் பொரோடக்க்ஷனில் முடிவு செய்யப்படும். ஆனால் இந்திய சினிமாவில் இசையமைப்பாளரிடம் படம் அதன் இறுதி நிலையில் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டு விடும். இன்னொரு அபத்தம், effect யையும் இசையமைப்பாளரே சில சமயங்களில் தனது இசையமைப்பின் வழி தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

இளையராஜாவின் சமீபத்திய படமான ‘பா’வை பார்ப்போம் அதில் ஒர் இறுதி காட்சி. அந்தப் பையன் இறக்கப் போகிறான், தனது தந்தைக்கும் தாயிற்கும் திருமணம் நடத்துகிறான், திருமணத்திற்கு தீயை சுற்றிச் சுற்றி நடப்பதுபோல், அவர்கள் அவனது படுக்கையைச் சுற்றி சுற்றி நடக்கிறார்கள், அவனது பாட்டி திருமண மந்திரம் சொல்கிறாள். பையன் மன நிறைவு கொள்கிறான். தந்தையின் முகத்தில் சோகம், இப்பொழுதான் பழகியிருக்கிறான் அதுவும் தனது மகன் என்று தெரியாத நிலையில். தெரியும் போது பையன் மரண படுக்கையில், அந்த சமயம் அவன் ‘பா’ என்கிறான். தந்தையின் முகத்தில் சந்தோஷம், ஏமாற்றம், விரக்தி. சற்று நேரத்தில் பையன் இறக்கிறான். ஒரு சில நிமிட சம்பவங்கள் அனைத்தும். இந்த அத்தனை உணர்ச்சிக்கும் இளையராஜா இசை வடிவம் கொடுத்திருப்பார்.  ஒவ்வொரு சின்னச் சின்ன உணர்ச்சிக்கும். மந்திரங்கள் உச்சரிக்கும் போது, தந்தை கவலையாகப் பார்க்கும் போது, சட்டென்று பையன் பா என்று சொல்லும் போது (முதல் முறையாக அவன் வாழ்வில் அவன் உச்சரிக்கும் வார்த்தை, அவன் தந்தை முதல் முறையாக அவனது வாழ்வில் கேட்கும் வார்த்தை) நமது கலாச்சரத்திற்குப் பழக்கப்பட்ட வயலின் நாதம் அந்த இடத்தில் ஒலிக்கும், உடனே அந்த இசை சற்றென்று தடம் மாறுகிறது காரணம் அவன் இறக்கிறான். மிகச் சிக்கலான இசைக் கலவை.

உயர் ரசனையில் இதைப்பார்த்தால் நிச்சயம் இசையை இங்கு இரைச்சலென்பார்கள்.  இளையராஜாவிற்கு இசையமைக்கத் தெரியவில்லை என்றுகூட சொல்லலாம்.  வட இந்தியாவிலும் பலரும் இதைதான் ஒருவேளை சொல்லக்கூடும். ஹே ராம் படத்தின் பின்னனி இசைக்கும் இதுதான் நடந்தது.  காரணம் இங்கு என்ன இசை வந்திருக்க வேண்டும்? அவன் தனது பையனை வந்து பார்க்கும் போது நிசப்தம் அல்லது மெல்லிய, கேட்கப்படாத இசை. பாட்டி திருமண மந்திரம் சொல்லும் போது அவரது குரல் மட்டுமே கேட்கவேண்டும், இசை வடிவில் மந்திரங்கள் அல்ல, பிறகு அனைத்து காட்சிகளும் நிசப்தத்தில்.  அந்த சுழலையும் உணர்வுகளையும் விளக்க நிசப்தத்தை தவிர வேறு  இசை காரணமாக இருக்கவே முடியாது. அந்தப் பையன் பா என்று சொல்லும் போது அவனது குரலை தவிர வேறு உயர்ந்த நாதம் எதுவாக இருக்க முடியும். பிறகு அவன் இறக்கும் போது அவனது நாடி நின்றுவிட்டதின் அடையாளமாக நாடி இயக்க சாதனத்தின் டீன் என்ற நீண்ட ஒலி மட்டும் கேட்கப்பட வேண்டும். 

ஆனால் சர்வ நிச்சயமாக எந்த இசையமைப்பாளரும் இதை நிர்ணயிக்க முடியாது. ஹலிவூட் சினிமாவிலும் உலக சினிமாவிலும் இசையமைப்பாளர் இசை அமைத்தப்பிறகுதான் மற்ற வேலைகள் நடக்கும். மற்ற ஒலி அமைப்பு சார்ந்த அத்தனை விஷயங்களும் பிறகுதான் அரங்கேறும். அல்லது மியூசிக் சுப்பவைசர் இந்த காட்சிக்கு இதுதான் தேவை என்று இசையை எடிட் செய்து விடுவார். பிறகு எது கேட்கப்படவேண்டும் எது கேட்கப்படக்கூடாது என்பது சவுண் டிசைனிங் முடிவு செய்யும், பிறகு இசையின் ஒலி அளவு எவ்வளவு இருக்கவேண்டும் என்பது மின்சிங்கில் (Mixing) முடிவு செய்யப்படும். இறுதியில் நீங்கள் பார்க்கப்போவது சர்வதேச தரத்தில் ஒரு காட்சியை அதற்கு தேவையான இசையுடன். ஆனால் இந்திய சினிமாவில் மட்டும்தான் இறுதி கட்டவேலையாக இசை வேலை நடக்கிறது. திரையில் பார்த்து, காட்சிக்குக் காட்சி இசையமைக்கும் நிர்பந்தம். அதுவும் சில சமயங்களில் ஒலி வடிவமைப்பையும் இவர் நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படும். இந்திய திரைப்படத்தின் எல்லா பலவீனங்களையும் இளையராஜா தனது இசையால் சரி செய்ய முயற்சிக்கிறார் என்று நான் சொல்லமாட்டேன். அதை முழுவதும் உங்களுடையப் புரிதலுக்கு விட்டுவிடுகிறேன்.

ஆனால் இதையெல்லாம் மீறி இளையராஜாவின் இசையைப் போற்ற ஒரே காரணம் ‘பா’ வின் தீம் இசை.  இந்தியாவிலேயே படத்தின் மைய கருவிற்கும், கதாபாத்திரத்திற்கும் ஓர் இசையை தீர்மானித்து அதை படம் முழுவதும் வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. இதிலும் பாவின் தீம் இசை ஆனந்தமாக, துள்ளலாக, சோகமாக என்று அந்த கதாபாத்திரத்தை சுற்றியே இருக்கும். இத்தகைய இசையை திரையின் ஆன்மா என்று கூறலாம். இசை ஒரு தனி கதாபாத்திரமாக அல்லது உளவியல் அம்சமாக ஒலித்துக்கொண்டிருக்கும். Ennio Morricone, John Williams, James Horner இசையமைப்பில் இத்தகைய கூறுகளை நாம் பார்க்கலாம். ஏ ஆர் ரஹ்மானும் அவரது அழகிய தமிழ் மகன் படத்தின் இசைக் குறித்தப் பேட்டியில் இதை சொல்லியிருப்பார். இளையராஜாவின் பின்னனி இசையில் ஒரு மெய்ன் தீம் (Main Theme) படம் முழுக்கவும் இருக்கும், கதாபாத்திரங்களையும் இசையை கொண்டே வித்தியாசப்படுத்தி காட்டுவார் ராஜா என்று.

அடுத்து இளையராஜாவின் திரைப்படத்திற்கான பாடல்கள். காட்சிக்கு தேவையான பாடல்களாகவே இருக்கும். அதை தவிர்த்த இசை ரசனையில் அது செயல்படாது. இதை பா படத்தின் பாடல்கள் பற்றிய வட நாட்டு விமர்சனங்கள் அனைத்திலும் கூறிவிட்டார்கள்.  இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நான் கடவுளில் வரும் செயற்கையான சினிமா பாடல்கள் இயக்குனரின் வேண்டுகோள். அந்த பாடல் பழைய சினிமா பாடல்களாகவும் அது செயற்கையாகவும் இருப்பதற்கான இயக்குனரின் கருத்தியல் தேவையை ஜெயமோகன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

Couples Retreat சவுண்ட் ட்ரெக்கை கேட்டுவிட்டு படத்தை பார்த்தால் இத்தனை அம்சங்களும் உங்களுக்கு புரியும். இந்திய சினிமாவின் நிலையை வைத்து இளையராஜாவின் இசையை மதிப்பிடுவது என்பது எத்தனை அபத்தமானது என்றும் கூட.     சில தொழில் நிர்பந்தங்களும், நமது சினிமாவை நமது தயாரிப்பாளர்களும், இயக்குனரும் ரசிகர்களும் அணுகுவது இன்னமும் இந்த இசை தளத்தில் தான் என்பதாலும் எல்லா காட்சிக்கும் உணர்வுகளுக்கும் நம்முடைய சினிமா, இசையை யாசித்து நிற்கிறது. பெரும்பாலான ஹலிவூட்டின் கமர்சியல் படங்களும் படம் முழுக்க இசையால் நிரம்பியிருப்பதும் இதனால்தான். ஆனால் முன்னமே சொன்னதுபோல் சவுண்ட் மிக்ஸிங்கில் இசையின் ஒலி அளவைக் குறைத்தே வைத்திருப்பார்கள். பெரிய பிரமாண்டமான ஆர்கெஸ்டராவில் இசையை பதிவு செய்திருப்பார்கள், ஆனால் திரையில் மிகவும் மென்மையாகத் தோன்றும். அதை கூர்ந்துக் கேட்டால் அதன் கணம் தெரியும். பாவிலும் அந்த இறுதிக் கட்ட இசையில் சவுண்ட் இஞ்சினியர் இதைச் செய்திருக்கலாம். இளையராஜாவின் சீனி கம் (Cheeni Kum) திரையிசையில் ஶ்ரீதர் அதை சிறப்பாகச் செய்திருப்பார்.

இளையராஜாவை தற்காத்து பேசும் நோக்கமல்ல இந்த எழுத்து, இசையை நாம் ஏன் தவறாக பார்க்கவேண்டும் என்ற ஆதங்கம் தான். ஆனால் இளையராஜாவை மையப்படுத்தியே உலக சினிமா இசையின் விமர்சனங்கள் அமைந்திருப்பதால் அதைப் பற்றி எழுத வேண்டி வந்துவிட்டது.
பின்நவீனத்துவ இசைக்கு வருவோம். இதைப் பற்றி சாரு உயிர்மையில் ஒரு கட்டுறையில் எழுதியிருந்தார். ஆனால் அது தரிசணமற்ற கூற்றாக எனக்குப் பட்டது. அதைப் பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன். சாருவின் மொழியோடும் அனுபவத்தினோடும் ஒப்பிடும் போது, நான் மிகவும் சிறியவன். ஆனால் இசைப் பற்றி எழுத அது ஒரு தடையாக இருக்காது என்று நினைக்கிறேன்.
Jonathan Kramer முன்மொழியும் பின் நவீனத்துவ அடிப்படையில் அணுகப்படும் இசையில் இருக்கும் முக்கிய அம்சங்கள். 

1. அது நவீன இசையின் மறுதலித்தலோ அல்லது அதன் தொடர்ச்சியோ அல்ல மாறாக அந்த இரண்டு நிலைப்பாடும் உள்ளடங்கிய ஒரு இசையின் விரிவாக்கம். Is not simply a repudiation of modernism or its continuation, but has aspects of both a break and an extension.

i. உதாரணம் புற்றிவாழ் அரவம் அஞ்சேன் - திருவாசகப்பாடல். அதன் தொடக்கம் தவிர்க்கப்பட வேண்டியது. இந்த இசை நமது மக்களுக்கு புரியுமா என்ற அச்சத்தின் வெளிப்பாடு. மெலோடி நமது இசை, பின்னனி மேற்கத்திய contemporary classical, Beats நவீன இசை,  ஆனால் அதை அணுகியவிதம் பரீசார்த்த முயற்சி.

ii. புன்னகை மன்னனின் தீம் இசை. மன்றம் வந்த தென்றலுக்கு. தி மியூஸிக் மெஸாய்யா (the music Messiah), அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை.

2. மாறுப்பட்ட அணுகுமுறை. அதாவது சாஸ்தீரிய சங்கீதமாய் இருந்தாலும் அதனுள் பின்நவீனத்துவ ரசனை சாத்தியமே. ஜொனதன், அவர்களின் மேலை சாஸ்தீரிய சங்கீதத்தில் பின் நவீனத்துவத்தைப் பற்றி பேசுகிறார். ரோக் இசையில் பின்நவீனத்துவத்தைப்பற்றி பேசுகிறார். அந்த அணுகுமுறை வலிய நிகழ்வதில்லை. is, on some level and in some way, ironic.

i. பொல்லாவினையேன் - திருவாசகப்பாடல். அலைப்பாயுதே கண்ணா, எத்தனை கோணம் எத்தனை பார்வை படப்பாடல்.  என் கண்மணி உன் காதலன் - சிட்டுக்குருவி, அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை

ii. பின்நவீனத்துவ இசை 1960களிலேயே வெளிப்பட்டிருப்பதாக சிலர் கருதுகிறார்கள். அதனால் பின் நவீனத்துவ இசை என்பது நவீன கால இசையென்று கருதவேண்டாம்.

3. மரபுகளை மீறுவது. does not respect boundaries between sonorities and procedures of the past and of the present.

i. அவருடைய எல்லா பின்னனி இசையிலும் இது வெளிப்படும். ஹவ் டு நேம் இட் (How to name it?) அந்தத் தொகுப்பின் எல்லா இசையும் மரபுகளை மீறியவை. கவிதைகேளுங்கள் - புன்னகை மன்னன் பாடல்.  இந்தப் பாடல் இதுவரை எந்தக் சலனத்தையும் நமது இசை ரசிகர்களிடம் எழுப்பியதே இல்லை என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கிராமியம், நவீனம், சாஸ்தீரியம் என்ற எல்லா இசை வடிவத்தின் மரபுகளையும் தகர்த்திருக்கிறது.

4. இசைக் கோட்பாடுகளை மீறுவது. challenges barriers between 'high' and 'low' styles
இந்த  'high' and 'low' styles என்பது பெரும்பாலும் சுவரப்பிரயோகங்களின் வழி ஒரு கட்டமைப்பை ஒருவாக்குவது. அதுவும் பெரும்பாலும் மேலை சாஸ்தீரிய சங்கீதத்தின் அடிப்படையில் இது பெரும்பாலும் அணுகப்படுவது. அதை முழுவதும் என்னால் விளக்கமுடியும் என்று தோன்றவில்லை. அதற்கு கண்டிப்பாக இசைஞானம் தேவை. இந்த style ஒரு கோட்பாடக அவர்களது சுரப்பிரயோகங்களிலும் இசையமைப்பிலும் பின்பற்றப்படும். இசையில் உயர்வு தாழ்வில்லை என்று நேரிடை மொழியாக்கம் செய்யப்பட முடியாது. இதைப்பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள ஆர்வம் என்றால் The music of the troubadours என்ற Elizabeth Aubrey எழுதிய புத்தகத்தைப் படிக்கலாம்.

i. தானா வந்த சந்தனமே - ஊரு விட்டு ஊரு வந்து, கலைவாணியே - சிந்து பைரவி.

5. அடிப்படை கூறுகளை கேள்விக்குறியாக்குவது. shows disdain for the often unquestioned value of structural unity. இந்த Structural Unity என்ற வார்த்தையையும் இசை மொழியில் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பொருத்துதான் இந்த மொழியாக்கத்தை முன்னிறுத்துகிறேன்.

i. தானா வந்த சந்தனமே - ஊரு விட்டு ஊரு வந்து, கலைவாணியே - சிந்து பைரவி. முத்து நற்றாமம் - திருவாசகம், தி மியூஸிக் மெஸாய்யா (the music Messiah).

6. மேட்டுக்குடி இசை, பாமர இசை என்று வகைப்படுத்தப்படுவதற்கு எதிரான நிலைபாடு. வர்க்க வேற்றுமைகளுக்கு எதிரான நிலைப்பாடு என்றும் சொல்லலாம். இசை மேதமை என்று சொல்லப்படுவது வர்க்கவேற்றுமைகளின் அடிப்படையில் தானே. questions the mutual exclusivity of elitist and populist values.

i. வெட்டி வேரு வாசம் - முதல் மரியாதை, புஞ்சையுண்டு - உன்னால் முடியும் தம்பி

7. பொதுப்படையான ஒரு தன்மை, ஒர் இசை முழுமையும் வெளிப்படுவதை தவிர்த்தல் . avoids totalizing forms (e.g., does not want entire pieces to be tonal or serial or cast in a prescribed formal mold).

i. திருவாசகம், தி மியூஸிக் மெஸாய்யா (the music Messiah), கவிதைக்கேளுங்கள்.
ii. பா படத்தின் இறுதிக் கட்ட இசை

8. இசையை அரசியல், சமூக, கலாச்சாரச் சூழலுக்கு உட்பட்டதாக அணுகுவது considers music not as autonomous but as relevant to cultural, social, and political contexts.

i. பழசிராஜா. பழசிராஜா இசையைப் பற்றி ஏற்கனேவே எழுதியுள்ளேன். அதன் எல்லா பாடல்களும் பின்நவீனத்துவத்தின் உச்சம். 

9. பல்வேறு பண்பாட்டு கலாச்சார கூறுகளை ஒரு இசையினுள் தரிசிப்பது. includes quotations of or references to music of many traditions and cultures.

i. முத்து நற்றாமம் - திருவாசகம், தி மியூஸிக் மெஸாய்யா (the music Messiah).

10. நவீன தொழில் நூட்பத்தை இசையின் உருவாக்கத்திலும் அதன் கட்டமைப்பிலும் பயன்படுத்துவது. considers technology not only as a way to preserve and transmit music but also as deeply implicated in the production and essence of music.

i. இது மிகவும் முக்கியமானது. ஏ ஆர் ரஹ்மான் இதன் உச்சம். அதன் காரணமாகவே பின் நவீனத்து இசையின் முழு பிம்பத்தையும் அவரை சார்ந்தே நாம் அணுகிவிடுகிறோம். இதில் இளையராஜா மிகவும் தேர்ந்தவர் அல்ல ஜெனரேசன் கேப்பும் (Generation Gap) கல்வியும் ஒரு தடையாக இருக்கலாம்.   இருந்தாலும் விருமாண்டியில் வரும் அந்த கண்டமணி ஓசை பாடலில் அதுவும் அந்த percussion இந்த நவீன தொழில் நூட்பத்தின் வெளிபாடு. அதை அவரது ஒலிப்பதிவு கூடத்தில் கட்டம் கட்டமாக உருப்பெற்றதைப் பார்த்தவன் நான்.

ii. அக்னி நட்சத்திரத்தின் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலின் டிரம் இசையும் பீட்ஸும் முற்றிலும் ப்ரோக்கரமிங் செய்யப்பட்டது. அன்றைய சூழலில் அது அசாத்தியமான ஒரு பிரயோகம். இதை நான் சொல்லவில்லை மலேசியா வார்னரின் தலைமை நிர்வாகியும் இசையமைப்பாளருமான கே ஸி லோ (K C Low) சொன்னது. தற்போது நாம் அந்தப் பாடலை கேட்கும் போது ஹைலைட்டாக இருக்கும் இசை மட்டும்தான் கேட்கப்படுகிறது. அதில் கவனிக்கப்படாமல் இருக்கும் அன்றைய தொழில்நுட்பத்தின் பலவிஷயங்கள் அமுங்கி இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் மாஸ்தரிங் தொழில்நூட்பத்தில் அதை வெளிக்கொண்டுவர முடியும். அப்பொழுது அந்தப் பாடல் தரும் பிரமிப்பில் இருந்து நாம் நிச்சயம் விழகவே முடியாது.

11. முரண்பாடுகளை அனுமதித்தல். embraces contradictions.

i. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே - பதினாறு வயதினிலே. இங்கு ஒன்றை சொல்ல நினைக்கிறேன். எல்லா பாடல்களையும் சர்வசாதாரணமாக எதோ மனதுக்குப்பட்டதைப் போகிறப்போக்கில் பட்டியலிடவில்லை. இந்தப் புரிதல் நமக்கு சாத்தியப்பட எல்லா இசையின் பழக்கமும் நமக்கு அவசியப்படுகிறது. இந்த செந்தூரப்பூ திருவாசகத்துக்கு இணையான ஓர் பேரிசை. ஆனால் காட்சிகளோடு நாம் நின்று விட்டோம் என்று நினைக்கிறேன், அதனாலேயே நம்மால் அதை பேரிசைத் தளத்தில் அணுகமுடியவில்லை என்று நினைக்கிறேன். அதுவும் இந்தப்பாடலை பேரிசை என்பது எனது கற்பனை கலந்த தரிசணம் என்று உங்களை எண்ணத் தூண்டலாம். அதுவல்ல, அந்தப் பாடலை நீங்கள் மீண்டும் கேட்டால் ஒரே ஒரு தளத்தில் அது தோற்று நிற்பதை நீங்கள் உணரமுடியும். அது ஒலிபதிவு தரம். ஒலிப்பதிவு தரத்தினால் கூட அந்தப் பாடல் ரசிகனால் சரியாக அணுகப்படவில்லை என்று கூட சொல்லலாம். அதற்காக இந்த பாடலில் உள்ள நாட்டுப்புறமும் மேலை சாஸ்தீரியமும் முரண்பட்டநிலையில் சங்கமிப்பதை ரசிக்காமல் இருக்கமுடியாது.

ii. சுந்தரி கண்ணால் ஒரு சேதி,  இது ஒரு நிலாக்காலம் - டிக் டிக் டிக்.

12. இரட்டை எதிர் முனைகளை மறுதலிப்பது. distrusts binary oppositions.

i. இசை மொழியில் இதை chromatic என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனாலும் அதுகூட சரியான அர்த்ததில் வெளிபடுகிறதா என்று உறுதியாக என்னால் கூறமுடியவில்லை. இதை இளையராஜாவின் இசையில் சர்வசாதாரணமாக கேட்கமுடியும். உதாரணத்திற்கு ஊருசணம் தூங்கிருச்சி பாடல் D# இதில் D minor வரவே வராது. எது வேண்டுமானாலும் வரலாம் ஆனால் இந்த நோட்ஸ் மட்டும் கூடவே கூடாது. ஆண் பெண் போல், இரவு பகல் போல் எதிர் எதிர் முனைகள். ஆனால் அந்தப் பாடலில் அது அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த தகவலை எங்களின் வெளியீடான கண்ட நாள் ஆல்பத்தின் இசையமைப்பாளர் ஜெய் ராகவேந்திரா முருகா முருகா பாடலின் இசையமைப்பின் போது கூறியிருக்கிறார். 

13. சிறு சிறு இசைப்பிரிவுகளையும், தொடர்ச்சியற்ற இசை துணுக்குகளையும் பிரயோகிப்பது. includes fragmentations and discontinuities.

i. இங்கு fragmentations என்ற வார்த்தையை இசை மொழியில் அணுகினால் நமது பார்வை இன்னும் விரிவுப்படும். தி மியூஸிக் மெஸாய்யா (the music Messiah) சிறந்த உதாரணம்.

14. பன்முகத்தன்மையை தருவது மற்றும் ஒரு குறிப்பிட்ட இசைப்பிரிவுக்குள் வரையறுக்க முடியாதது. encompasses pluralism and eclecticism.

i. திருவாசகம்
ii. அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை

15. பல்வேறு அர்த்தங்களையும் காலவெளிகளையும் உருவாக்குவது. presents multiple meanings and multiple temporalities.

i. கோபுர வாசலில் வரும் காதல் கவிதைகள் மற்றும் தாலாட்டும் பூங்காற்று. உச்சம்.

ii. வால்மீகியில் வரும் கூட வருவியா பாடலின் சரணங்களுக்கு இடையிலான இசையும், ஒளிதரும் சூரியனும் நீயில்லை பாடலின் பின்னனி இசையில் அடர்த்தியடைந்திருக்கும் பியானோ இசையும் குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால் முன்பு சொன்ன நவீன தொழில் நூட்பத்தை இசையின் உருவாக்கத்திலும் அதன் கட்டமைப்பிலும் பயன்படுத்துவது என்பது இந்தப் பாடலில் முழுமைப் பெறவில்லை. அதாவது மிக்ஸிங்கில் (Mixing). அதனாலேயே இந்தப் பாடல்கள் உருவாக்கும் பல்வேறு அர்த்தங்களும் காலவெளிகளும் கவனிக்கப்படாமல் போய்விட்டது. அல்லது நாம் சிறந்த ஒலி கருவிகளில் இதைக் கேட்கும் போது கவனிக்கலாம்.

iii. என்னுள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி

iv. பா படத்தின் தீம் இசையும் இறுதிக்கட்ட பின்னனி இசையும்.

16. கேட்பவர்களின் சுய தரிசணப் போக்கிற்கு வழிவகுப்பது. locates meaning and even structure in listeners, more than in scores, performances, or composers.

i. தி மியூஸிக் மெஸாய்யா (the music Messiah), திருவாசகம்

இசையும் இசையமைப்பாளனும் எல்லைகளை கடந்து புகழ் அடைவதைப் பொருத்து நாம் இசையை பின் நவீனத்து வட்டத்துக்குள் கொண்டுவர முடியாது. பிரபலம் அடையும் இசையை Popular Music என்று வகைபடுத்தலாம். ஆனால் அதே சமயம் அது பின் நவீனத்துவ இசையல்ல என்று மறுக்க முடியாது.  எனினும் இசைத்தரிசணம் என்பதை இந்த வரையரைகளுக்குள் நான் கொண்டுவர விரும்பவில்லை 

'எந்த ஆழ்மன எழுச்சி இலக்கியப்படைப்பை உருவாக்கியதோ அதே ஆழ்மன எழுச்சி வாசகத் தளத்திலும் நிகழ்கிறது. எந்நிலையிலும் முற்றிலும் புரிந்து வகுத்துவிட முடியாத பண்பாட்டு ஆழத்தில் படைப்பும் வாசகனும் உரையாடுகிறார்கள். - ஜெயமோகன் - ராஜமார்த்தாண்டனுக்கு அறுபது, தனிக்குரல், உயிர்மை பதிப்பகம்.

இதே நிலையில்தான் இசைப்படைப்பும் ரசிக மனமும் செயல்படுகிறது. ஜெயமோகனின் மொழி ஆளுமையில் இந்தக் கருத்தை அதைவிட சிற்ப்பாக செரிவாக என்னால் சொல்லிவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால்தான் அந்த வாக்கியத்தை அப்படியே இங்குத் தந்து விட்டேன்.  இது தொடர்பாக எனது ஒர் இசை அனுபவத்தை அடுத்தக் கட்டுறையில் கூறுகிறேன். அது கொஞ்சம் அந்தரங்கமானது.

35 comments:

Karthick Krishna CS said...

ரொம்பவே அழகா சொல்லிருகீங்க. இருந்தாலும், நீங்க குடுத்த எடுத்துக்காட்ல, ரஹ்மான் பாடல்கள் சிலதையும் சொல்லியிருக்கலாம்.
படிப்பவர்களுக்கு, நீங்க ஒரு தலைப் பட்சமா எழுதரீங்கன்னே தோணும். (அப்படி இல்லைனாலும்).
முடிஞ்சா, இளையராஜா, அன்றைய சூழல்ல, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய விதம் பற்றி எழுதுங்க. தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. very curious :)

yuvarajan said...

இசையைப் பற்றி வெறும் ஆழ்மன தரிசனங்களாக சொல்லி செல்லாமல் உதாரணங்களோடு முன்வைப்பது உங்கள் எழுத்தின் நம்பகதன்மையை உறுதிப்படுத்துகிறது. எனக்கு இசையைப் பற்றி ஏதும் தெரியாது.அதனால் படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். இசையைப் பற்றி தெரிந்தவர்கள் நீங்கள் முன்வைத்த தரவுகளையொட்டி மாற்று கருத்துகளை முன் வைத்தால் ஆரோக்கியமான உரையாடலாக அமையும். உங்கள் கருத்தை முன்வைப்பதோடு அதன் போதாமைகளை உணர்த்துவது எனக்கு பிடித்திருக்கிறது. யாருடைய கருத்துகளை உங்கள் புரிதலுக்கு பயன்படுத்துவததையும் குறிப்பிட்டுள்ளீர். அதுதான் அறிவியல் முறை. அங்கும் இங்கும் படித்ததை வெட்கமில்லாமல் தன் கருத்தாக பதிவு செய்யும் சில பதிவர்கள் மத்தியில் நல்ல உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளீர் நண்பா.

mani said...

இந்திய திரை படங்களில் உணர்வுகளை மிகசரியாக வெளிபடுத்தும் காட்சிஅமைப்பதில் இயக்குனர்கள் திறன் குறைந்தவளராகவே இருக்கிறார்கள்; அதனால் அந்த குறைகளை நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தங்களை இசைக்கு உண்டாக்கிவிடுகிரார்கள்; இதுதான் இங்கு பிரச்னை ??

சுரேஷ் கண்ணன் said...

அகிலன்,

மிக சுவாரசியமான பதிவு. சில விஷயங்களை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி. என்றாலும் கயிற்றின் மேல் நடப்பது போன்ற ஜாக்கிரதையுணர்ச்சியுடனே எழுதியிருப்பதாக படிக்கும் போது தோன்றிக் கொண்டேயிருந்தது. அது என்னுடைய தவறாகவும் இருக்கலாம். அதைவிட்டு இன்னும் அதிக சுதந்திரத்துடன் எழுத இயலுமா என்று பாருங்கள்.

இசை விவாதம் என்கிற பெயரில் இணையத்தில் நிகழும் வெறும் வெற்றுக் கூச்சலுக்கு மத்தியில் தர்க்கப்பூர்வமான பதிவு. மீண்டும் நன்றி.

புருனோ Bruno said...

//இளையராஜாவை தற்காத்து பேசும் நோக்கமல்ல இந்த எழுத்து, இசையை நாம் ஏன் தவறாக பார்க்கவேண்டும் என்ற ஆதங்கம் தான். //

கூற வந்ததை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் :) :)

chandramohan said...

மிக தெளிவான கட்டுரை .
தமிழ் நாட்டில் என்ன பிரச்னை என்றால் , எழுத்தாளர்கள் தான் இசை பற்றியும் விமர்சனம் (?)
செய்கிறார்கள். தங்கள் இசை அறிவையும் மீறி தனிப்பட்ட சில காரணங்களுக்காக இவர்கள்
எழுதும் இசை பற்றிய கட்டுரைகள் அபத்தம் நிறைந்தவை .
இசை பற்றி நன்கு தெரிந்த உங்கள் போன்றவர்களின் கட்டுரைகள் தான் தற்போது தேவை . .


நன்றி


chandramohan

Anonymous said...

//இளையராஜாவை தற்காத்து பேசும் நோக்கமல்ல இந்த எழுத்து, இசையை நாம் ஏன் தவறாக பார்க்கவேண்டும் என்ற ஆதங்கம் தான். //

நன்றாக சொன்னிர்கள்

இசையீன் ரசிகன்
அருண்

Anonymous said...

//இளையராஜாவை தற்காத்து பேசும் நோக்கமல்ல இந்த எழுத்து //

படிச்சா அப்படி தெரியலியே!!

Anonymous said...

Thank you

பாலாஜி said...

நல்ல வரிகள்

நீங்கள் சொல்வது மிகவும் சரி 
 
தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

Anonymous said...

very nice essay . its depth really attract me . after reading this i feel charu nivedita's essay is just mediocre writing.
you please write more about music.
maximum u tried to avoid bias mentality. that is nice. i like charu writing . but i hate his biased mentality...

Somebody said...

After reading a truckload of crap written by people who do not know squat about music, I was hesitant to even click on the link given in Mr. Jeyamohan's blog. But I have to say that your article really impressed me. You've explained the nuances of film music in a simple manner. Thank you for the informative article.

வஜ்ரா said...

தெரியாத விஷயத்தைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம் என்பதை தமிழ் எழுத்தாளர்கள் உணர்வது நல்லது. இது தான் இந்த அற்புதமான கட்டுரை சொல்லும் பாடம் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

அகிலன்..

நீங்கள் விக்கியின் வலைப்பூவை http://www.raagadevan.blogspot.com/ அறிந்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்.

நன்றாக எழுதியுள்ளீர்கள்!

நன்றி..

செழியன்.

Vijayashankar said...

இசை அனுபவம் இல்லாதவர்கள் எளிய இசையையே விரும்புகிறார்கள். அதில் இளையராஜா டாப்.

ரஹ்மான் பாடல்கள், மாடர்ன் வகை. கிராமத்தில் கஷ்டம். செப்டம்பர் மாதம் வாழ்வின் எல்லைக்கு... என்று, களை பிடுங்கும் ஒரு பெண் பாடினால் அவருக்கு நன்றாகவா இருக்கும்?

பர்சனலாக என்றும் என் நினைவில் நிற்பவை இளையராஜா பாடல்களே. :-)

ரவிஷா said...

Ilayaraja's music was way ahead of its times. I think you forgot to mention this in your blog.

Anyway, nice analysis.

லேகா said...

அகிலன்,

ஜெமோ வின் வலைதள அறிமுகத்தால் இங்கு வந்தேன்.
இசை குறித்த இக்கட்டுரை அருமை.அதீத ஜாக்கிரதையோடு எழுதி உள்ளீர்கள்.

நன் இளையராஜாவின் பரம விசிறி.
சின்ன தாய் படத்தின் "கோட்டையை விட்டு.." மற்றும் "ஏரி கரை..." பாடல்கள் மிக பிடித்தமானவை.தாலாட்டு பாடவா பட பாடல் 'வராது வந்த நாயகன்.." யும் ..இன்னும் என்னில் அடங்கா பாடல்கள் நினைவிற்கு வந்து போகின்றன..

நண்பர்களிடம் அடிகடி சொல்லுவது போல.."Rahman songs are seasonal hits,Raja songs are ever green hits"

இனிய இசை பயணம் சென்று வந்த அனுபவம் தந்தது உங்கள் கட்டுரை.

Ramji said...

//தமிழ் நாட்டில் என்ன பிரச்னை என்றால் , எழுத்தாளர்கள் தான் இசை பற்றியும் விமர்சனம் (?)
செய்கிறார்கள். தங்கள் இசை அறிவையும் மீறி தனிப்பட்ட சில காரணங்களுக்காக இவர்கள்
எழுதும் இசை பற்றிய கட்டுரைகள் அபத்தம் நிறைந்தவை //.

மிக சரியான கருத்தை சொன்னீர்கள் சந்திரமோகன்.

ஒருவர் எழுத்தாளாராய் இருப்பதனாலேயே எதைப் பற்றியும் விமர்சனம் செய்யலாம் என்கிற அவல நிலை இங்கே நிலவுகிறது. மேலும் அவர்கள் பல்வேறு jargonகள் மூலம் ஒரு நம்பகத்தன்மையை வரவழைக்க முற்படுகிறார்கள். இதில் பெரும்பாலும் தங்கள் சொந்த கருத்தினையும் விருப்பு வெறுப்பகளுமே உண்மையான நிலை என்று தோற்றம் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள்.

எந்தத் படைப்பினைப் பற்றியும் அத்துறை சார்ந்த வல்லுனர்களின்/அறிந்தவர்களின் வாயிலாக வருவதே சரி. இந்த வகையில் அகிலனின் கருத்துக்களும், உதாரணங்களும் நன்றாக இருந்தது. பல்வேறு விஷயங்கள் இந்த கட்டுரையின் மூலம் விளக்கியிருக்கிறார்.

நன்றி,
ராம்ஜி.

JP said...

Very in-depth analysis.Keep up the good work. Please write more.

subra said...

உண்மைதான் அய்யா,இருவரும் திறமைசாலிகள் ,அவர் அவர் திறமைக்கு ஏற்ப
இசைகளை நமக்கு கொடுக்கிறார்கள் ,ரசிக்க வேண்டியது நமது விருப்பம் ,
அதைவிடுத்து வாதங்கள் தேவை இல்லைதான் ,எனக்கு ரஹ்மானின் இசை அவ்வளவாக
பிடிக்காது ,ஆனாலும் அவரின் சிலபாடல்களை இன்னும் நான் முனு முனுதுக்கொண்டுதான்
இருக்கிறேன் .

குமரன் said...

இளையராஜாவின் இசை என்பது கிராமத்து மக்களின் வாழ்வோடு இயைந்த இசை மக்களின் உணர்வோடு கலந்த இசை இன்னும் பல கிராமத்து வீடுகளில் இளையராஜா தான் இருக்கிறார்.என்னுடைய துன்பத்திலும்,இன்பத்திலும் என்னுடன் இருக்கும் இசை இளையராஜாவின் இசைதான் எ.கா தளபதி,என் பொம்முகுட்டிஅம்மாவுக்கு,கடலோரகவிதைகள் என சொல்லிகொண்டே போகலாம் ஏதோ சாரு சொல்வதால் அவர் தரம் தாழ்ந்துவிடாது.பாமரனுக்கும் போய் சேர்கின்ற இசையை தருபவன் தான் உண்மையான் இசைகலைஞன் அந்தவகையில் இளையராஜா யார் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை சாருவுக்கு பிடிக்கவில்லை என்றால் மைக்கேல் ஜாக்சன் இசையை மட்டும் ரசிக்க சொல்லுங்கள் தேவை இல்லாத வெட்டி பேச்சை நிறுத்த சொல்லுங்கள்

கபிலன் said...

என்னடா சாருவைப் பற்றி இன்னும் ஜெமோ பேசக் காணோமே என நினைத்துக்கொண்டிருந்தேன்.. எதிர்பார்த்தமாதிரியே ஜெமோ சாருவின் ராஜா பற்றிய விமர்சனத்தின் மீதான அவரது பார்வையையும், உங்களது இணையத் தள கட்டுரையின் சுட்டியினையும் கொடுத்திருந்தார்.

"ஜெயமோகனின் மொழி ஆளுமையில் இந்தக் கருத்தை அதைவிட சிற்ப்பாக செரிவாக என்னால் சொல்லிவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. "

என்று முடிவடையும் உங்கள் கட்டுரை முழுதும் படித்தபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது ..

எழுத்தாளர்களான சாருவும், ஜெமோவும் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு ராஜாவை பற்றி நல்லதோ கெட்டதோ எழுதி தனது இணையத்தளத்திற்கு நிறைய மனிதர்களை கவர்ந்த வண்ணம் இழுக்கின்றனர்.

"இளையராஜாவை தற்காத்து பேசும் நோக்கமல்ல இந்த எழுத்து" := கட்டுரையைப் படித்தால் அப்படி தெரியவில்லை.

"உயர் ரசனையில் இதைப்பார்த்தால் நிச்சயம் இசையை இங்கு இரைச்சலென்பார்கள்." := நீங்கள் சொல்வதை பார்த்தால், மியூசிக் சுப்பவைசர் ஒருவர் இல்லாத இந்திய திரையுலகில் ராஜா இசையமைத்த, இசையமைக்கும் எந்த திரைப்படமும் சர்வதேச அளவில் ரசனைக்கு உட்பட்டதாக இருக்காது அப்படித்தானே!

யார் இந்த சர்வதேச தரத்தை நிர்ணயிக்கிறார்கள்?

"ஏ ஆர் ரஹ்மான் சிறந்த இசைத் தயாரிப்பாளர் (Music Producer), இளையராஜா சிறந்த இசையமைப்பாளரும் (Composer) இசை ஒருங்கிணைப்பாளரும் (Arranger)." :=

-- இதை இன்னும் விவரித்து எழுதவும். ஏ ஆர் ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் இல்லையா? அப்போ அவருக்கு கிடைத்த ஆஸ்கர் விருது எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடவும். ரஹ்மான் பாடல்களை Compose செய்வதில்லையா?

Siddarth said...

Good post Agilan. However, as far as my understanding goes, music producing may also include composing and arranging. (example Dr.Dre). Then,how do you classify Rahman as just a producer and Ilaiyaraja as a composer and arranger? Plz explain.

inigo said...

Agilan avarkalukku,
Thangaludaya blog sameepathil parthen.
IR-AR Alagaaha, nunukamaaha eluthi irukeergal.
Oru chinna vishayam, manathil pattathai pahirnthu kolkiren.
Naan, AR yai, Hi-tech MSV/RmMrty yaaga taan pala samayangalil paarkiren.
Melum, taangal, AR yai Indiavin Isai enbathupol sonna visayathil,
muluvathumaaga othupoga mudiavillai.
Hindi cinema Jaambavangalil, Yash Chopra kulumam, Roshan Kulumam,
Karan Johar Kulumam, Sooraj Barjatiya kulumam ellam innum AR yai bayanpaduthikollavillai.
Hindi cinema isaiyilaye AR mulumai perathepoluthu, evvaru India cinema isayil enru kooralam?

melum sila vishayangalai ungalidam pahirnthu kolkiren.
Taangal sonnathupol, Vanthematharam taana, pala thirai isai saara albumkal vara vazhi seithathu?
Satellite Channel kalin varavu allavaa muthalum, mukiamaana kaaranam.
Enaku terinthu,Thirai isai saara Bidduvin Disco Diwane, Jehangirin
Hawa Hawa ponra albumgal, munname saathithirukinranave.
En appavidamo, thaathavidamo kaetaal, innum sila albumkal kooda solla koodum.Sari Taane?
Piragu, Niraya isai amaipaalargal inru vara taangal koori irukum
kaaranam mulumai aanathaa?
Inru niraya per varuvathuku karanam, entha tani isai amaipaalaraalum,
ella vitha directorskalin/Cinemakalin tevaiku aerppavo,athavathu,Ennikaiyaium, Tarathathiyum
balance seiya mudiyaamal povathaal taane, niraya peruku vaaippu
kidaikirathu?
Director Selvaragavan sonnathupol, Isai amaipalarin aathikam malai
erivittathu inru enbathum oru kaaranam taane?

கிருஷ்ண பிரபு said...

இளைய ராஜாவின் இசை மீது தீராத மோகம் உடையவன். இசையைப் பற்றிய பல விஷயங்கள் உங்கள் கட்டுரை மூலம் தெரியவந்தது.மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

nothing new said...

Dear Agilan,

I liked the way you had tried to put an end to the ARR and Raaja arguement, great work!!!!
i really feel saddened and angered when popular writer says 'ilayaraja doesn't know music', this sentence came off from a popular writer just fed days back, on a stage.......

my request is that can you send your collection of thoughts about ilayaraaja's music?? i mean like the articles which you have posted about King's and Kovacs' views on him?

வால்பையன் said...

நல்ல அலசல்!

Anonymous said...

//ஜோதா அக்பரை இளையராஜாவும் பழசி ராஜாவை ஏ ஆர் ரஹ்மானும் செய்திட முடியாது//
ஏனென்று விளக்க முடியுமா?

//பழசிராஜா இசையைப் பற்றி ஏற்கனேவே எழுதியுள்ளேன். அதன் எல்லா பாடல்களும் பின்நவீனத்துவத்தின் உச்சம்.//
இந்த வரிகளை படித்தால் இந்த முழு பதிவுமே, ஒரு இளையராஜா பக்தனின் பிதற்றல் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

raja said...

நீங்கள் தொடரந்து எழுதுங்கள் ... உங்கள் கட்டுரை மிக விபரமானதாக எனக்கு படுகிறது..உ.ம். துன்பக்காட்சிகளில் இசை இருந்தால் மிக மலினமானது இயக்குனரின் ரசனை என்று மார்ட்டின் ஸ்கார்சிசெ கூறியிருக்கிறார் ..வாழ்த்துக்கள் அகிலன் மிக அர்த்தப்பூர்வமான கட்டுரையை எழுதியதற்க்காக...

Nisha said...

Dear Ahilan,

I was reluctant to read this article first, thinking that it would be a waste of time... but as I read it, I found your words so meaningful, so true.

Indeed, the debate"Who is the Best" is completely absurd. For my part, I am a "Bakthai" of Raja music, because I can feel all my emotion in his music : Thiruvasaham, Geethanjali (I am not a hindu and I am slightly atheist, but still .... his music shows me a certain form of God"), many film music, Punnahai Mannan THeme and Don't compare, How to Name it.

As he said in this album.. we cannot compare one's music with another one. As you said, we should more compare the musical skills (??) within a frame, a given situation with a given means.

Thank you for your article. I am expecting to read more from you. Pleas give me links with such interesting news...

Nisha

asifdems said...

அன்பு அகிலன் அவர்களுக்கு ,
உங்களிடம் இது வரை வியாபார விஷயமாக பார்த்துள்ளேன். உங்களின் இசை அறிவு பிரமிக்க வைக்கிறது. இப்படியும் அகிலனக்குள் இவ்வளவு இசை காதலா .?
நாம் அடுத்த முறை சந்திப்பில் தேநீரோடு பேசுவோம் .
ஆசிப் தா
பிரிக் பீல்ட்ஸ்
கோல லம்பூர்

தருமி said...

பாதிதான் புரிந்தது; அவ்வளவு ஆழமான, இசைத் தொடர்பான கட்டுரை. இசை தெரிந்தவர் எழுதிய கட்டுரை என்பதால் முனைந்து படித்தேன்.

கட்டுரைக்கு நன்றியும் வாழ்த்தும்.

Anonymous said...

Best joke is ARR not a best arranger and only best Music producer...

H.Shridhar, SPB still a lot more has accepted him as a best arranger. This post is completely for Illayaraja fans. As u said illayaraja is back due to generation gap, the same may be applied for u. You will not and u cannot enjoy ARR's compositions..

Arinarayanan said...

ஜெமோவின் வலைப் பக்கத்திலிருந்து இங்கு தாவினேன். தங்களின் கட்டுரை என்னை ஈர்த்தது. உண்மை என்னவென்று பட்டென்று போட்டு உடைத்துவிட்டீர். இசையின் வகைதொகை புரியாமல் இணையத்தில் வம்புவளர்ப்போர் ஏராளம். நவீனத்துவ இசைஅல்லது Avant Garde, Experimental, Ethno, இன்னும் பல வகை இசைக்கூறுகளைத் தெரிந்திராமல் பிதற்றுவது தவறு என்பதை உணர்த்தியுள்ளீர். நன்று. நன்றி.

kk kannan said...

i ever seen this kind of music article in tamil, well congrats