Friday, November 13, 2009

இந்தி இசையின் மறுமலர்ச்சி

எனது தனிப்பட்ட தளம் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே பலரும் எதிர்பார்ப்பது எனது இசை துறை சார்ந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்பதுதான். எனது இசை அனுபவம் ஏறக்குறைய 15 வருடங்கள் கொண்டது. சாதாரண இசை ரசிகனாக தொடங்கி விரிவு கண்டது. இன்னும் விரிந்துக் கொண்டே செல்வது. அதோடு எனது இசை மற்றும் இசை தொழில் சார்ந்த அனுபவங்களின் தொடக்கப் புள்ளியாகவும் தவிர்க்க முடியாத அங்கமுமாகி இருப்பது இளையராஜாவும் அவரது இசையும். பெறுமளவு அவருடனான அவரை சார்ந்த அனுபவங்கள், அவருடைய இசையின் மீதான எனது வேட்கை, பிரமிப்பு, தேடல் என மீளாது செல்வதால், முழுதும் அவரைப் பற்றிய, அவர் புகழ்பாடும் தளமாக இது ஆகிவிடுமோ என்றும் பின்வாங்கியதுண்டு. அவரைப் பற்றி எழுத வேண்டாம் என்றல்ல, அவருடை தளமாக நான் தொடங்கிய www.ilaiyaraaja.in அதற்கான முயற்சியில் இருக்கும் போது, எனது அனுபவங்களை நான் எழுதுவது அந்த தளத்திற்கு எந்த முட்டுக்கட்டையையும் உண்டக்கிடக்கூடாது என்ற பயம் தான்.

எனது பயணத்தை பின் நோக்கி பார்க்கும் முன்பாக, சமீபத்தில், அதாவது செப்டெம்பரில், நான் ரசித்த சில இசை தொகுப்புக்களை பற்றி பேச நினைக்கிறேன். ஆனால் இங்கே நான் சிறந்தது என்று குறிப்பிடுவதெல்லாம், அதுமட்டும்தான் சிறந்தது என்றல்ல, எனது பார்வைக்கு வந்து என்னை சில காரணங்களால் கவர்ந்த இசை, அவ்வளவுதான். முக்கியமாக சொல்லியாக வேண்டியது இசை தொழில் சார்ந்த அறிவு இருக்குமளவு இசை அறிவு எனக்கில்லை. எனது இசை ஞானமும், ரசனையும் அனுபவங்கள் சார்ந்ததும், எனது ஆன்மாவிற்கு நெருக்கமானதுமாகும்.

எப்பொழுதும் எங்கு வெளியூர்களுக்கு சென்றாலும், நான் அதிகம் செலவிடுவது இசை தட்டுக்களுக்குதான். அதிகம் இருப்பதும் சுற்றுவதும் இசை விற்பனை நிலையங்களுக்குதான். அப்படி இந்த முறை டில்லி சென்ற போது ஏராளமான சிடிகள் வாங்கி வந்தேன். அதில் இன்னும் எத்தனை  என்னால் கேட்கப்படாமல்  இருக்கிறது என்று தெரியாது, இன்னும் பிரிக்கப்படாமல் எத்தனை கிடக்கிறது என்றும் தெரியாது. அப்படி நான் கேட்டவற்றுள். நான் விரும்பி ரசித்தவை லவ் அஜ் கள் (Love Aj Kal) மற்றும் கமினேய் (Kaminey) என்ற இந்தி திரை இசைப் பாடல் தொகுப்பு.

ஒன்றை தீர்மானமாக சொல்லியே தீர வேண்டும். இந்தி பாடல்கள் தமிழ் பாடல்களை பின் தள்ளிவிட்டு அதிவேகமாகவும் நிதானமாகவும் முன்னோக்கி செல்கிறது. சமீபத்திய தமிழ் திரை இசைப் பாடல்கள் மிகவும் தரம் மலிந்துவிட்டது. ஜேம்ஸ் வசந்தன், சதீஸ் சக்கரவர்த்தி, தமன் என்று சிலர் கவனத்தை ஈர்த்தாலும் புதுமைகள் இல்லாத வறட்சியான இசை பெருகிவிட்டது. இந்தி புது உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கியுள்ளது.

அதுமட்டும் அன்றி தமிழில் காப்பியடிக்கும் போக்கு அதிகமே இருக்கிறது. ஆங்கில பாடல்கள், ஜப்பான், சீனம், இந்தோனீசிய என்று திசைகளை விஸ்தாரமாக்கியிறுக்கிறது. அதோடு எங்கெங்கோ சென்று யார் யாருடனோ இணைந்து என்ன என்ன இசையையோ வடிவமைப்பதாக பேட்டிகள் எல்லாம் தருகிறார்கள் ஆனால் மிஞ்சுவது சாம்பிள் அல்லது லூப்ஸ் என்று சொல்லப்படும், நேற்று, யாரோ தயார் செய்த, சின்ன சின்ன இசை தொடர்கள்தான். இது தவறல்ல ஆனால் இந்த சாம்பிள் அல்லது லூப்ஸை தேர்வு செய்வதிலும் எந்த கற்பனைத்திறனும், தொழில் நூட்பத்திறனும் அற்ற, கற்பனை வரண்ட, பொறுப்பற்றதனம்தான் தெரிகிறது. இசையமைப்பது இன்றைய சூழலில் கற்பனை சிரத்தையே இல்லாத ஒரு செயலாக ஆகிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர்களின் செலவுகள் மட்டும் குறைந்த பாடில்லை. இன்றைய தேதியில் வியாபார வெற்றிக்கான அனைத்து அம்சங்களுடன் 5 பாடல்களை உருவாக்குவது என்பது குறைந்தது பத்தாயிரம் மலேசிய ரிங்கிட்டில் செலவுகளை அடக்கிவிட முடியும். சினிமா பிரபலங்கள் என்பதற்காகவே இதை பத்து மடங்கு ஆக்கலாம். ஆனால் தயாரிப்பாளர்களின் செலவோ குறைந்தது ஐந்து லட்சம் ரிங்கிட்டை எட்டுகிறது. க்ரியேட்டிவ் துறை, கலை, professional charges என்று நியாயமான காரணங்களை இந்த செலவுகளுக்கு நிகராக சொல்லலாம். ஆனால் இன்று தமிழ் திரையிசையில் திறனற்ற டெக்னிக்கல் நிபுணர்கள்தான் கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்கிறார்களே தவிர இசையமைப்பாளர்களென்று யாரையும் அடையாளம் காணமுடிவதில்லை.

ஒரு சிலர் அதிகமாகவே கவனத்தை ஈர்ந்திருக்கிறார்கள். சுப்ரமண்யபுரத்தின் பின்னனி இசையில் ஜேம்ஸ் வஸந்தன், ஈரத்தின் பின்னனி இசையில் ஸ் தமன், லீலை பாடல்களில் சதீஸ் சக்ரவர்த்தீ, நாடோடியின் பின்னனி இசையில் சுந்தர் சி பாபு, தசவதாரத்தின் பின்னனி இசையில் தேவி ஶ்ரீ பிரசாத். இவர் ஏற்கனவே 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' திரையில் கவனத்தை ஈர்த்தவர்.

ஆனால் இந்தியில் நிகழ்ந்துவரும் இசை மாறுதலுக்கு முக்கிய காரணம், அவர்களின் உலகளாவிய வியாபார வாய்ப்புகள் மற்றும் உலக அங்கீகாரத்திற்கான அவர்களின் வேட்கை. அதுமட்டுமன்றி பெரும்  இசை நிறுவனங்களான சோனி, யுனிவெர்சல், வார்னர் போன்ற நிறுவனங்களின் இந்திய சந்தை மீதான மோகம். இல்லையென்றால் ஆங்கில, இந்தோனிசிய பாடல்களோடு நமது இளையராஜாவையும் ரஹ்மானையும் திருடி இசை செய்தவர்கள், இந்த அபார மாறுதலுக்கு தங்களை தயார் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. இசை மீதான அவர்களின் ரசனையும் மதிப்புகளும் மாறியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ தென்னிந்தியாவே இளையராஜாவை கொண்டாடிய காலத்தில், அவரை அதிகம் பொருட்படுத்தாதவர்கள், இன்று பல படங்களுக்கு அவரை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவின் சீநி கம் ( Cheeni Kum) பின்னனி இசையின் டெக்னிக்கல் பரிணாமமும், சேர்க்கையும் அற்புதமானது. இதற்கு முன் எந்த தென்னிந்திய படைப்புகளிலும் ஒலி சேர்க்கை சம்பந்தப்பட்ட டெக்னிக்கல் விஷயங்களில் அவர் அவ்வளவு சிரத்தை எடுதிருக்கவில்லை (ஆனால் பெரும்பாலான அவருடைய ரிக்கார்டிங், live performance வகை என்பதாலேயே ஒலி சார்ந்த நிபுணத்துவம் சாத்தியம் அற்று போனது).

அதன் பிறகு 'நான் கடவுள்' மற்றும் 'பழசிராஜா' அவரின் இசையமைப்பில் அற்புதமான ஒலி சேர்க்கை சார்ந்த நிபுணத்துவத்துடன் வந்திருந்தாலும், இளையராஜாவின் இசையில் 'சீநி கம்' தான் தொடக்கம். அதற்கு வடநாட்டு ஒலி நிபுணர்கள்தான் காரணம் என்பது மறுக்க முடியாதது.  இசையமைப்பு மற்றும் இன்றி, அது சார்ந்த அனைத்து தொழில்நுட்ப கிளைகளிலும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் தொழில் பக்தியுடனும் செயல்படுகிறார்கள் என்று சொல்வதா அல்லது அவர்களுடைய வியாபார சந்தை, தரத்தில் கவனம் செலுத்தும் பொருட்டு பிரத்தியேகமாக பல செலவுகளை தாங்கிக்கொள்ளும் அளவு விசாலமானதா என்று தெரியவில்லை. மிக சாதாரண உதாரணம் வட நாட்டு இசை தொகுப்புக்களின் கவர் மற்றும் packaging. சகல சந்தை மற்றும் கலை சார்ந்த பொருப்புணர்ச்சியுடன் இருக்கும். தமிழ் வெளியீடுகள் ஊதுபத்தி packaging போல் வரும் (தமிழ் நாட்டில்).

லவ் அஜ் கள், இசையமைப்பாளர் ப்ரீத்தம், கமினேய் இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ். இதில் விஷால் பரத்வாஜ் பன்முக திறனாலியும் படைப்பாளியும் கூட. அதற்காக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என தமிழில் இருக்கும் சில படைப்பாளிகள் போல் என்ன வேண்டாம். இவர் உண்மையிலேயே படைப்பாளி. இவரின் படைப்புகளை எனக்கு ஓரளவு அறிமுகப்படுத்தியது சென்னையில் உள்ள எனது நண்பர் ஶ்ரீ.

இந்த இரண்டு திரையின் இசையும் என்னை கவர்ந்ததற்கான முக்கிய காரணம் நவீன, இளைய தலைமுறை ரிதமுடன் அசாத்தியமாக பவனிவரும் இந்திய அடிப்படை இசை மணம். தமிழ் நாட்டு கிராமிய இசையில் இருக்கும் ஈர்ப்பு, வட இந்திய கிராமிய இசையில் எனக்கு எழுந்ததே இல்லை. ஆனால் அதன் சாரத்தை உள்வாங்கி வேறு பரிணாமத்தில் ஒலிக்கும் அசத்தலான அதே சமயம் அசலான இசை, இந்த இரண்டு திரை இசையும். அதிலும் கமினேயில் வரும் ‘டன் தே நான்’, ஒரு பரிசோதனை முயற்சி, Rock, Folk இவைகளோடு என்பதுகளின் ஹீரோயிஸ ரிதமாக சாயல் தரும் இசையையும் இணைத்த புதுமை.ஆனால் இசை எப்பொழுதும் அதன் நுணுக்கங்களுக்காகவோ, மேதாவிதனத்திற்காகவோ அல்லாமல்
நம்மை காரணம் தெரிவிக்காமல் கட்டிபோடும் வசிய ஒலி. சில சமயம் நமது வாழ்க்கை அனுபவங்களை கண்டெடுத்து நமக்கு பொக்கிஷமாக தருவது. உதாரணத்திற்கு வெயில் திரையில் வரும் ஜீ வி ப்ரகாஷின் 'உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே' பாடல் அல்லது யுவன் சங்கரின் 'நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடலை போல. எந்த பரிசோதனை முயற்சியும், நுணுக்கமும், மேதாவித்தனுமும் அற்ற படைப்புகள். ஆனால் நமது ஆன்மாவை, உடல் தாண்டி கடத்திவிடும் சக்தி கொண்டது. சிலசமயம் நமது அனுபவங்கள் சாராமல் அது சாத்தியமும் அல்ல. ஆக, ஒரு பாடலை வெறும் டெனிக்கலாகவோ அல்லது தியொரிட்டிக்கலாகவோ அணுகுவதும் ரசிப்பதும் சரியாகாது. பல சமயங்களில் அருவத்தை தரிசிப்பது போல்தான் இருக்க வேண்டும், இசையை அனுபவிப்பது என்பதும். அதே போல் கமினேயில் வரும் ‘டன் தே நான்’ அதன் நுணுக்கங்களையும் பரிசோதனை முயற்சிகளையும் கடந்து எதோ ஒரு உணர்வுதளத்தில் என்னை ஈர்க்கிறது. நிச்சயமாக பாடல் வரிகளுக்காக அல்ல. எனக்கு இந்தி நஹி மாளும்.

http://www.youtube.com/watch?v=qFZnXIsnDIE

3 comments:

அகிலன் said...

இசை சார்ந்து மலேசியாவில் எழுதப்பட்ட நல்ல பதிவு இது.இன்னும் இசை சார்ந்த நுட்பமான வார்த்தைகளோடு எழுத முடிந்தால் இசை என்னைப் போல் பாமரர்களும் இன்னும் நெருக்கமான புரிதலோடு கேட்க உதவும்.எனக்கு இசை மொழி நஹி மாலும் அகிலன்.நல்ல இலக்கிய பிரதியை போல நல்ல இசை என்னை உலுக்கிவிட்டு செல்வதை பரிதாபமாக உணரும் எளிய ரசிகன்.
தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் - யுவராஜன்

கே.பாலமுருகன் said...

வணக்கம் அகிலன். இசையைப் பற்றி நல்லதொரு பகிர்வு. இசை இரசனையென்பது வெறும் பயிற்சியாலும் தேடலாலும் நிரம்பியவை அல்ல, அது ஒரு தற்செயலாலும் தனக்கான இரசனையை அடையக்கூடும்.
தங்களின் கவிதைகளை ஏற்கனவே காதல் இதழ்களில் படித்துள்ளேன். சாரு இசை கேட்பதைப் பற்றிய விவாதங்களில் இளையராஜாவைத் தாக்கி பேசியதற்கான எனது விமர்சனத்தை என் வலைப்பூவில் பார்க்கலாம்.

http://bala-balamurugan.blogspot.com/2009/09/blog-post_04.html
(சரியாக இசை கேட்பது பற்றியான உயிர்மை விவாதங்களை முன் வைத்து ( இசை ஒழுங்குகளின் உச்சமும் பாமரர்களும்)

செ.சரவணக்குமார் said...

அருமையான கட்டுரை. நவீன தமிழ், இந்தி சினிமா இசை பற்றிய பகிர்வுக்கு நன்றி.