Sunday, November 15, 2009

பழசிராஜா - இளையராஜாவின் இன்னுமொரு பெருங்காவியம்


இளையராஜாவின் இசையில் மிக சிறந்த ஒலிப்பதிவு (Mixing மற்றும் Mastering - இதற்கு நல்ல தமிழ் வார்த்தைகளை யாராவது எனக்கு அறிமுகப்படுத்தவும்)தரத்தில் வந்திருக்கும் முதல் திரை இசை தொகுப்பு. மலேசியாவில் வெளியீடு காணும் எந்த திரை இசைதொகுப்புக்களுக்கும் (பெரும்பாலும்) பாடலாசிரியர், ஒலிநிபுணர், மற்ற கலைஞர்கள் விவரங்கள் சேர்க்கப்படாது. இதனால் எந்த செலவுகளை மிச்சப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக இணையத்திலும் என்னால் இந்த விவரங்களை கண்டடைய முடியவில்லை.

மொத்தம் 5 பாடல்கள் உள்ளது. ஜேசுதாஸ் அவர்கள் பாடிய சுலோகத்தை நான் கணக்கில் எடுக்கவில்லை. சமீபத்தில் இளையராஜாவின் இசையில் பல திரை பாடல்கள் வெளிவந்திருக்கிறது, வால்மீகி, அழகர்மலை, ஜகன் மோகினி இவைகளோடு ஒப்பிடும்போது இது மிகச் சிறந்த ஒரு படைப்பு. மற்ற மூன்றும் அவரிடம் இருந்து சாதாரணமாக வெளிவந்த படைப்பாகவே எனக்கு தெரிகிறது. வால்மீகி, எனக்கு அவரிடம் நான் விரும்பும், எதிர்பார்க்கும் ஒரு இசை தொகுப்பு. முக்கியமாக கூட வருவிய பாடலும் ஒளிதரும் சூரியன் பாடலும்.

பழசிராஜாவின் முதல் பாடல் குன்றத்து கொன்றைக்கும் பொன்மோதிரம். இந்தப் பாடலின் தொடக்க இசை அவரின் முந்தைய வெளியீடான திருவாசகத்தின் பூவேருகோனும் புரந்தரனும் மற்றும் உம்பட்கட்ரசே பாடல்களின் இசைபோன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இரண்டும் முற்றிலும் வேறு கோணங்கள் கொண்ட இசை.


இங்கு அவரின் திருவாசகத்தின் ஆர்கெஸ்டரா இசையை கொஞ்சம் கூறிவிட நினைக்கிறேன். காரணம் இந்த குன்றத்து கொன்றைக்கும் பொன்மோதிரம் பாடலும் அருமையான ஆர்கெஸ்டரா இசையில் வந்திருக்கிறது. ஆர்கெஸ்டராவில் வெளிவந்திருக்கும் சிறந்த பாடல் என்று ஒற்றைவரியில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இந்த பாடலில் வரும் ஆர்கெஸ்டரா இசை பகுதி எங்கு எந்த ஆர்கெஸ்டராவில் பதிவு செய்யப்பட்டது என்று சிடி கவரில் குறிப்பிடப்படவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை. அவரிடம் அவரின் எந்தப் பாடலையும் நான் புகழ்ந்ததே இல்லை என்பது யாராலும் நம்பமுடியாத உண்மை.

திருவாசக வெளியீட்டின் போது யாருமே இளையராஜாவின் வெஸ்டர்ன் கிலாஸிக்கல் எனப்படும் மேலை சங்கீதத்தில் அவருக்கு இருக்கும் ஞானத்தை, திறனை பற்றி பேசவில்லை. அந்த முயற்சி ஒரு ஆர்கெஸ்டராவை கொண்டு செய்யப்பட்ட ஒரு புதுமையான முயற்சி என்ற வகையில் மட்டுமே பேசப்பட்டது. சுஜாதா கொஞ்சம் முயற்சித்தார்.

ஆர்கெஸ்டரா என்பது, மேலைநாட்டு சாஸ்தீர சங்கீதத்தை இசைக்கும் மிக அதிகமான இசை கலைஞர்களைக் கொண்ட ஒரு இசை குழு. இவற்றில் சேம்பர் ஆர்கெஸ்டரா, சிம்பொனி ஆர்கெஸ்டர என்று சில பிரிவுகள் உண்டு. உலக அங்கீகாரம் பெற்று இயங்குவது. சிம்பொனி ஆர்கெஸ்டராவென்றால் மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. எல்லா இசை கலைஞர்களும் சிறந்த இசை ஞானமும் திறனும் கொண்டிருக்கவேண்டும். கண்டிப்பாக இசைகருவி வாசிப்பதில் பட்டம் பெற்றிருப்பார்கள். அதற்கான நேர்முகத்தேர்வுகள் மிகவும் கடினமானது. ஒரு வயலின் கலைஞரின் குறைந்த பட்ச மாத வருமானம் குறைந்தது 50,000 ரூபாய் இருக்கும். இரண்டாவது அம்சம். கண்டெக்டர் (Conductor) என சொல்லப்படும் இசை நடுத்துனர். அவரின் முக்கிய வேலை ஒரு இயக்குனர் எப்படி ஒரு நடிகரிடம் இருந்து உணர்வுகளை வெளிகொண்டு வருகிறாரோ அதுபோன்றது. மூன்றாவது அரங்கம். இசையின் வெளிபாடுகள் வெவ்வேறு நிலைகளில் உணரப்படுவதற்காக அரங்கம் பிரத்தியேகமாக அமைக்கப்படும். முக்கியமானது அரங்கத்தில் மைக் அல்லது ஒலிபெருக்கி கிடையவே கிடையாது. மிக துல்லியமான இசையும் சரி பிரமாண்டமான இசையானாலும் சரி நேரிடையாக நமது செவியுணர்வுகளுக்கு வந்தடையும் நுட்பமான அரங்கம். அது தவிர இசை கலைஞர்கள், கருவிகள் மேடையில் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கவேண்டும்.வயலின்கள் ஒரு இடத்திலும்,குழல்கள் ஒரு இடத்திலும் என்று ஒரு அரை வட்ட வடிவத்தில் மேடையில் இசைகலைஞர்கள் அமர்த்தப் பட்டிருப்பார்கள்.

எல்லா சிம்பொனி ஆர்கெஸ்டராவிற்கும் ஒரு பாணி இருக்கும். உதாரணத்திற்கு மோசார்ட்டின் ஒரு இசையில், அதிலிருக்கும் இசை குறிப்பு (notes) தவறாமல், தெம்போ மாறாமல், ஸ்கேல் மாறாமல், ஒவ்வொரு ஆர்கெஸ்டராவும் ஒவ்வொரு விதமான நுண்ணிய உணர்வு தளங்களில் அந்த இசையை வெளிப்படுத்தும். 100 ஆர்கெஸ்டரா இருக்கிறதென்றால் அத்தனையும் அதே இசையை 100 வித நுண் உணர்வுகளில் வெளிக்கொணருவார்கள். இதை நமது கர்நாடக படைப்போடும் ஒப்பிட முடியாது. கர்நாடகமும், மேலை சாஸ்தீரிய சங்கீதம் போல் ஒரே கீர்த்தனையையே வெவ்வேறு கலைஞர்கள் வெவ்வேறு விதமாக வெளிகொணருகிறார்கள் என்று நாம் அறிவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கீர்த்தணையை வேறு பாடகர்கள் பாடினாலும் அவர்கள் அதை வித்தியாசப்படுத்த, வெவ்வேறு இசை குறிப்புக்களுக்குள்ளும், ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் திரும்ப திரும்ப பல்வேறு சங்கதிகளில் வெளிகொணருவதும், பாடலின் நீளத்தை கூட்டுவதும், ஸ்வரங்களை வெவ்வேறு நிலைகளில் பிரயோகிப்பதும் என்று நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை செய்துதான் வித்தியாசப்படுத்துவார்கள். ராகம் மாறாமல் இருத்தல் மட்டுமே அவசியம்.

கர்நாடக சங்கீதம் கேட்பதற்கும் கேள்விப்படுவதற்கும்தான் புதுமைகளை அனுமதிக்காத, வரட்சியான படைப்பாக தோன்றினாலும், அது மிகுந்த சுதந்திரமும் பரீசார்த்த முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுமாகும். அதேசமயம் கர்நாடக சங்கீதம் உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாத, வெறும் சாரீரங்களுக்கும் ஸ்வரப்பிரயோகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதும், தனிநபர் சார்ந்த ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரிகளின் திறனை பிரகடனப்படுத்தும் ஒரு கருவியாக இருந்திருக்கிறது என்று குற்றச்சாட்டையும் பல சமயங்களில் கர்நாடக இசை கலைஞர்களிடம் கூறிவந்துள்ளேன். ஆனால் எனது இந்த நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியது, சாஸ்வதி அவர்களின், மலேசியாவில் நானும் காயத்திரி வடிவேலுவும் ஏற்பாடு செய்திருந்த கர்நாடக கச்சேரியாகும். முதல் முறை கர்நாடக இசையில் உணர்வுகளை அழகாகவும் ஆழமானதாகும் வெளிகொண்டுவர இயலும் என்பதை நான் அனுபவித்தேன். அதை சாஸ்வதியிடம் கூறிய போது அவர் எனக்கு புது விஷயம் ஒன்றை தெரியப்படுத்தினார். அதாவது 'இசையில் கொரியோக்ராப் (Choreograph) செய்தேன்' என்றார். இந்த இசையில் கொரியோக்ராப் (Choreograph) என்ற பதத்தையும் பிரயோகத்தையும் அறிமுகப்படுத்தியது லால்குடி ஜெயராமன் அவர்கள். அவர்தான் சாஸ்வதியின் குருவும் ஆவார். இந்த யுக்தியை கர்நாடக இசை கலைஞர்கள் யாருமே பொருட்படுத்துவதில்லை. அதனால்தான் ராமரை கீர்த்தனைகளால் சென்றடைந்த தியாகராஜரின் கீர்த்தனைகளை கூட நம்மால் ரசிக்கமுடிந்த அளவுக்கு, உருக முடிவதில்லை.

ஆனால் வெஸ்டன் கிலாஸிக்கல், ராகம் மட்டுமல்ல, சுதந்திரமான சுவரப்பிரயோகத்திற்கு அனுமதியில்லை, சங்கதிகளுக்கு அனுமதியில்லை, எழுதிய குறிப்புகள் அப்படியே வாசிக்கப்படவேண்டும். ஆனால் அவர்கள் வாசிக்கும் முறையில் உணர்வுகளை காட்டுவார்கள். கொரியோக்ராப் செய்வார்கள். குழுவாக ஒத்திசைவோடு இசையில் இயங்குவதன் வாயிலாகவும், இசைகருவிகளின் தன்மைகளாலும், இசை அரங்கத்தின் அமைப்பாலும், இசை நடுத்துனரின் திறனாலும் வித்தியாசப்படுத்தி காட்டுவார்கள். இது கொஞ்சம் சிரமமான விஷயம். அதோடு இசை நடுத்துனர் (Conductor) ஆர்கெஸ்டராக்குளுக்கான கொரியோக்ராபை இயக்குபவராக இருப்பார். ஆனால் அவர்கள் கொரியோக்ராப் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை. அது நடனத்துக்கு மட்டுமே பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஒரே இசை வடிவத்தை திரும்ப திரும்ப வசித்து வரும் ஆர்கெஸ்டராக்கள் அனைத்துமே தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதும் இந்த அம்சத்தில்தான். இதை பொதுவாக மேலைநாட்டு மொழியில், ஒவ்வொரு ஆர்கெஸ்டராவிற்கும் ஒரு ஆன்மா இருக்கும் என்பார்கள்

இப்பொழது இளையராஜாவின் இசைக்கு வருகிறேன். யாரிடமும் இல்லாத ஒரு தனித்துவம், இளையராஜாவிடம். என்னவென்றால் இசை குறிப்புகளை எழுதுவதும், அந்த மொழியை தமிழில் நாம் ஒரு கட்டுரையை எழுதுவது போல் மிகவும் சாதாரணமாக எழுதிக்கொண்டு போவதும். இந்தியாவில் எனக்கு பழக்கமான எந்த இசையமைப்பாளர்களுக்கும் சாத்தியமற்ற ஒன்று. மேலை நாட்டில் கூட பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு அது சாத்தியமற்ற ஒன்று. இசை குறிப்பு எழுதத் தெரிந்தவர்களை இசையமைப்பாளர்கள் அரேஞ்சராக (ARRANGER)அமர்த்தி, அவர்களின் வாயிலாக பெரும் ஆர்கெஸ்டராக்களுக்கு இவர்களின் இசை பொருந்தும்படியாக எழுதிக்கொள்வார்கள். அல்லது எல்லா இசைகருவிக்கான இசையையும் கணிணியில் வாசித்து, குறிப்பு எடுத்துக்கொண்டு விடுவார்கள். இதுவும் பல சமயங்களில் உதவாது. காரணம், கீபோர்ட் மூலமாக் கணிணியில் வயலினிக்காகவோ அல்லது குழலுக்காகவோ குறிக்கப்படும் இசை குறிப்பு, கீபோர்டுக்கான நாதத்திற்கும் வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

ஆனால் இளையராஜா அசாத்தியமாக அதை நிகழ்த்திவருகிறார். இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். அதுவும் ஆர்கெஸ்டராக்களுக்கு பொருந்துபடி எழுத வேண்டும் என்றால் முதல் விஷயம். என்ன ஆர்கெஸ்டரா என்பதுதான் கேள்வியாக இருக்கும். அதை ஆர்கெஸ்டரா நடுத்துனர்கள், எண்களில் வகைப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு 16.14.12.10.8./3.3.3.3./5.4.3.1./T.5P.4Hp.4Pf அல்லது 14.12.10.8.6./3.3.3.3./5.4.3.1./T.3P.Hp.Pf என்பதாகும். முதல் குறிப்பு 101 இசை கலைஞர்கள் அடங்கிய ஆர்கெஸ்டரா. இரண்டவது 81 இசை கலைஞர்கள் அடங்கிய ஆர்கெஸ்டரா. இது இன்னும் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ கூட இருக்கலாம். இதில் முதல் ஆர்கெஸ்டராவின் இந்த எண்கள் எதை குறிக்கிறது என்று பார்க்கலாம். 16 என்பது முதல் 16 பேர்கள் கொண்ட வயலின் குழு, 14 என்பது இரண்டாவது வயலின் குழு, 14 பேர்கள் கொண்டது. அடுத்தது வியோல, செலோஸ், டபள் பேஸ், என வரிசையாக நரம்பு கருவிகள், குழல் கருவிகள், மேளங்கள் என குறைந்தது 16 வகையான இசை கருவிகள் கொண்ட குழுக்கள். குறைந்தது 24 வகையான இசை கருவிகள்இருக்கும் இருக்கும். இதில் பெரிய சவால் 24 அல்லது அல்லது அதற்கும் மேலான தனித்தனியான இசை குறிப்புகள் இந்த ஆர்கெஸ்டராக்களுக்கு தேவைபடும். இதில் எந்த இசை குறிப்பும் வெறும் பக்கவரத்தியங்கள் என்று அல்லாமல் தனி மெலோடிகளாக இருத்தல் அவசியம். ஒரு சிம்பொனி என்பது, அதிகமான இசைக்கருவிகளின் சங்கமம் அல்ல அதிகமான மெலோடிகளின் சங்கமம். சுருங்க சொல்வதென்றால் ஒரு சிம்பொனி என்பது 15 அல்லது அதற்கும் மேலான தனி பாடல்களுக்கு சமம் என்று சொல்லலாம். ஆனால் ஆதார மெலோடிதான் அதன் மொத்த வடிவமாக வெளிவரும். ஒரு ஆர்கெஸ்டராவை ஒரு இசையமைப்பாளர் தனது இசை குறிப்புகளை வாசிக்க அனுமதி கேட்கும் போது அவர்கள் முதலில் கேட்பது அந்த இசையமைப்பாளரின் இசைக் குறிப்புகளைதான். அதை கொண்டுதான் அவரின் இசையை தாங்கள் வாசிப்பதற்கு அனுமதி தருவதை முடிவு செய்வார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களின் தரம் சார்ந்த மதிப்பீடுகளில் எந்த சமரசமும் செய்வதில்லை. அது அவர்களின் ஆர்கெஸ்டராவை உலக அங்கீகாரம் இழக்க செய்துவிடும். அதிலும் ஆர்கெஸ்டராக்கள் தனி நபர் சார்ந்தோ, லாப நோக்கு கொண்ட நிறுவனங்கள் சார்ந்தோ இயங்குவதில்லை. அதன் காரணமாகவே அதற்கான அனுமதி எளிதில் அடையக்கூடிய ஒன்றல்ல. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனிதான். ஆனால் அதை கிலாஸிக்கல் க்ரோஸ் ஓவர் என்று வகைப்படுத்தக் காரணம் அதில் வரும் தமிழ் வார்த்தைகளும் இந்திய இசையும்தான். மோஸர்ட் காலத்திலேயே அவரது சிம்பொனிக்கு இத்தகைய பெரும் சர்ச்சைகளும் குழப்பங்களும் இருந்தன. இளையராஜாவின் திருவாசகத்தை காலம் வெளிக்கொணரும் என்று விட்டுவிடுவோம்.

இளையராஜாவின் இசையை லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்டராவும், புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்டராவும் அரெஞ்சரை (Arranger) அமர்த்தாமல் அனுமதிப்பது, சாதாரணமானது அல்ல. அந்த அளவிற்கு அதன் அத்தனை அம்சங்களிலும் தேர்ந்தவர் என்பதோடு ஒரு அசாத்தியமான முறையில் அவரின் இசையமைப்பு நடந்து வருகிறது. இந்த குன்றத்து என்ற பாடலுக்கு இளையராஜா அளித்திருக்கும் அத்தனை அம்சங்களையும், அதாவது அந்தப் பெண்ணின் வெவ்வேறு உணர்வு நிலைகளும், அவளின் அந்த உணர்வுகள் வெளிவருவதற்கான சூழளும், இயக்குனரும், தளம் அமைப்பவரும் (செட்டுகள் அமைப்பவர்) மனதில் எண்ணிய படிமங்களுக்கு வலு சேர்ப்பதாகவும் இருக்கும் அத்தனை அம்சங்களுக்கும் ஒலி வடிவம் அளித்திருக்கும் இந்த பொருப்பை மற்றொரு இசையமைப்பாளர் ஏற்றிருந்தால், இத்தகைய மனவெளி பயணம் சாத்தியப்பட்டிருக்காது. அடுத்து இப்படியான இசைக்கு அவர்கள் எடுத்திருக்கும் காலம் குறைந்தது ஆறு மாதம். நிச்சயமாக.

அதோடு வழக்கமாக அவரது பாணியில் இருக்கும் இந்த ஒரு பாடலில் பொதிந்திருக்கும் அத்தனை இசை கூறுகளையும் அனுபவித்தால், அத்தனையும் தனி தனி இசை படிமங்கள் என்பது தெரியவரும். குறைந்தது 10 புதுப்பாடலுக்கான ஆதார மெலோடிகள் இருக்கும் பாடல். இதை இசையமைப்பாளர்களும் சீரியலுக்கு பின்னனி இசையமைப்பவர்களும் நன்றாக உணர்வார்கள். இதை இனம் காண்பதுதான் அவர்களின் வேலை, அவர்களின் தொழில் சார்ந்த தேவை. அவரின் இந்த ஆதார மெலோடிகள் விரைவி கிடக்கும் பாடல்களும் இசையும் அதிகம் நம்மிடையே வளம் வருகிறது. இந்த அம்சங்களையும் தேவைகளையும் உணர்ந்த மேலைநாட்டு கலைஞர்கள் சாம்பிள் எனப்படும் துணுக்கு இசைகளை வெளியிடுகிறார்கள். பெரும்பாலான நமது தமிழ் இசையமைப்பாளர்கள் இத்தகைய இசைகளைதான் இன்று பயன்படுத்துகிறார்கள். இளையராஜா லூபஸ் (Loops) மற்றும் சாம்பிள் (samples) என்ற வியாபர யுக்தி ஏற்கனவே எனது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். இந்த மாதிரியான எனது தொழில் சார்ந்த ரகசியங்கள் என்னையும் மீறி வெளிவந்துவிடக்கூடாது என்பதாலேயே என் இசை அனுபவங்களை எழுதுவதை தவிர்த்தேன்.

அது இருக்கட்டும், பல்லவி முடிந்து முதல் சரணம் ஆரம்பிக்கும் முன்பு அதாவது 1.15 நிமிடங்களிலிருந்து 1.48 வரைக்குமான இசையில் அவளின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் காதலும் என நமது அக உணர்வு விரிந்துகொண்டே செல்கிறது. அந்தப் படத்தை மலேசியாவில் இன்னும் வெளியீடு செய்யவில்லை. யார்பார்ப்பது? எல்லோரும் இன்னும் இங்கு ஆதாவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனது புரிதலுக்கு மிகவும் அந்நியமாக இருக்கிறது பாடலின் வரிகள். மலையாளம் போலவே புரிந்தும் புரியாமலும் உள்ளது. அந்த கதை களத்தின் காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் இந்த மொழி என்று நினைக்கிறேன். நம்மவர்களுக்கு தெரிந்தவரை இது இன்னொரு தமிழ் அல்லது மலையாள அல்லது தென்னிந்திய திரைப்பாடல். ஆனால் இந்தப் பாடலின் நிஜமான கட்டமைப்பு classical crossover வகையை சார்ந்த உலக இசை. நமக்கு இளையராஜாவிடமிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பழகிவிட்ட இசைவடிவம் என்பதால் சர்வசாதாரணமாக நம்மை கடந்து செல்கிறது இந்தப் பாடல்.

நான் மிகவும் நேசிக்கும் பாடல்களாக இந்த தொகுப்பில் மூன்று பாடல்கள் ஆதி முதல், அம்பும் கொம்பும், அகில மெல்லாம். இதில் அம்பும் கொம்பும் ஆதிவாசிகளை எல்லாவகையிலும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஏற்கனவே சிறந்த வேல்ட் மியூஸிக் (WORLD MUSIC) வடிவத்தில் (GENRE) அமைந்த ஆதிவசிகளின் சங்கீதமாய் ஒலித்தது, ஜானியில் வரும் ஆசையை காத்துல தூதுவிட்டேன் என்ற பாடல். ஆனால் இந்த அம்பும் கொம்பின் மிகப் பெரிய பலம் ஒலிப்பதிவு. ஒலிபதிவு என்பதைவிட மிக்ஸிங் மற்றும் மாஸ்தரிங் என்று சொல்லவிரும்புகிறேன். இசைத்துறை சார்ந்த அதிகமான வார்த்தைகள் தமிழில் இப்பொழுது எனக்கு தேவையாக இருப்பதை உணர்கிறேன். அந்த ஒலிப்பதிவு சிறந்து அமையாமல் இருந்திருந்தால், எந்த மாற்றமும் அற்ற இன்னொரு இளையாராவின் பாடலாகவே இதுவும் உணரப்பட்டிருக்கும். குறிப்பாக நாயணங்கள் மற்றும் குழல் இசை, வழக்கமான இளையராஜாவின் இசை, வழக்கமான அவரின் உணர்வு (அல்லது style என்று சொல்லாம்). ஆனால் நமக்கு புது உணர்வை தருவது ஒலியமைப்பு. (மிக்ஸிங் மற்றும் மாஸ்த்ரிங் வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை சிக்கிவிட்டது என்று நினைக்கிறேன்). மூங்கில் தன்னில் என்ற பாடலும் கூட, வித்தியாசமாக தெரிவதும் அதனால்தான்.

சில விமர்சனங்கள் இந்த ஆதிவாசிப் பாடல் இயல்பானதாக இல்லை, அதிக சினிமாத்தனமாக இருப்பதாக சொல்லலாம். ஆனால் அப்படி எதுவும் விமர்சனங்கள் வந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை. அப்படி இருக்குமானால் அது உண்மைதான். மிக இயல்பாக தொடங்கி பிறகு அது பெரும் பொருளியல் தேவைகளை முன்வைத்து நகர்கிறது. இது சினிமா தொழிலுக்கு மிகவும் தேவையாய் இருக்கிறது. இதில் இயக்குனரோ, தயாரிப்பாளரோ யாரும் சமரசம் செய்துகொள்ளமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ராகுல் நம்பியாரின் குரல், புது முகத்தை அந்தப்பாடலுக்கு அளித்திருக்கிறது.

அவரின் இன்னொரு பெரும் படைப்பு, என்னை மிகவும் கவர்ந்தது அகிலமெல்லாம் பாடல். எனக்கு தெரிந்து முழுமையான இஸ்லாமிய பாடல் இளையராஜாவிடம் இருந்து வருவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். ஆன்மீகம் அன்று இது ஒரு மதம் சார்ந்த பெரும் விழாவை முன்னிறுத்துகிறது. அதன் தேவை திரையில் கண்டால்தான் எனக்கு புரியும். கேரளாவை மையப்படுத்தும் படம் இது, உலகின் இரண்டாவது அதாவது மக்காவை தவிர்த்து உலகின் முதல் மசூதி நிறுவப்பட்ட இடம் கேரளம், அதுவும் நபிகள் காலத்திலேயே. அதுவும் போர்கள் அற்ற இஸ்லாத்தை அடைந்தது கேரளம். அதை உள்வாங்கி அவர் இந்த இசையை அமைத்தாரோ என்னவோ, இந்த உண்மையை நாம் உள்வாங்கி கொண்டு கேட்கும் போது அந்த பாடல் நமது கற்பனையில் எடுக்கும் பிரமாண்டத்தைத் திரை அனுபவம் தருமா என்று எனக்குத் தெரியவில்லை.

பழசி ராஜா இளையராஜாவின் இன்னொரு பெரும் காவியம்.

11 comments:

Anonymous said...

hi agilan,

i am very happy to see you have started writing your music industry experience.

it really gives an excellent perspective.

please keep your writing.

Sridhar

பாலாஜி said...

இளையராஜாவின் இசையை நல்ல முறையில் சொன்னீர்கள்

கோபிநாத் said...

அட்டகாசமாக சொல்லியிருக்கிங்க அகிலன் - வாழ்த்துக்கள் ;))

பழசிராஜா இசைஞானியின் இன்னுமொரு காவியம் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை எனக்கும்.

\\தொழில் சார்ந்த ரகசியங்கள் என்னையும் மீறி வெளிவந்துவிடக்கூடாது என்பதாலேயே என் இசை அனுபவங்களை எழுதுவதை தவிர்த்தேன்.
\\

ஆகா..இப்படி எஸ்கேப் ஆகிட்டால் எப்படி முடிந்த வரையில் உங்கள் இசை அனுபவத்தையும் இசைஞானியை பற்றியும் எழுதுங்கள் ;)

கோபிநாத் said...

\\அது இருக்கட்டும், பல்லவி முடிந்து முதல் சரணம் ஆரம்பிக்கும் முன்பு அதாவது 1.15 நிமிடங்களிலிருந்து 1.48 வரைக்குமான இசையில் அவளின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் காதலும் என நமது அக உணர்வு விரிந்துகொண்டே செல்கிறது......\\

உண்மை தான் கணவர் வரும் செய்தி கேட்டு அவள் பாடும் பாடல் அது. மிக அருமையாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்.

இங்கு ஷார்ஜாவில் 4 காட்சிகள் - மலையாளிகள் கொண்டாடுகிறார்கள் இந்த படத்தை.

துபாயில் வாழும் மலையாளிகள் வருடம் வருடம் சினிமா விருதுகள் கொடுக்கிறார்கள் அதில் இந்த வருடம் இசைக்கு இசை தெய்வத்துக்கு - படம் பழசிராஜா ;))

கோபிநாத் said...

\\இந்த அம்பும் கொம்பின் மிகப் பெரிய பலம் ஒலிப்பதிவு. ஒலிபதிவு என்பதைவிட மிக்ஸிங் மற்றும் மாஸ்தரிங் என்று சொல்லவிரும்புகிறேன்.\\

படத்தின் நீளத்தை கருதி இந்த பாட்டை எடுத்துட்டாங்க. படத்தில் இந்த பாடல் இல்லை.

ஓடத்தாண்டில் பாடும் இல்லை.

\\, என்னை மிகவும் கவர்ந்தது அகிலமெல்லாம் பாடல். எனக்கு தெரிந்து முழுமையான இஸ்லாமிய பாடல் இளையராஜாவிடம் இருந்து வருவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்\\

எனக்கும் இதுதான் இசைஞானியின் முழுமையான இஸ்லாமிய பாடல். படத்திலும் அவர்கள் முறையில் (கேரளா) நடனமும் அமைத்திருப்பார்கள்.

பாடல்களில் இசைஞானியின் பங்கு 100% என்றால் பின்னானி இசையில் 10000% மடங்கு அதிகம். ஒவ்வொரு காட்சியின் நம் மனதில் உட்கார முதல் காரணம் இசைஞானியின் இசை. இழைத்து இழைத்து உழைத்திருக்கிறார்.

படத்தை கண்டிப்பாக பாருங்கள் ;)

மீண்டும் அடுத்த பா படத்தின் சந்திப்போம் ;))

ஸ்ரீனிவாசன் said...

paa paadalgal ketirgala agilan ????

pramadapaduthi irukkar...padam releasekaaga kaathu kondu irukiren !!!!!

செ.சரவணக்குமார் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

நல்ல அலசல். நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
Word verification எடுத்துவிடலாமே

Karthick Krishna CS said...

Amazingly expressed ur feelings... ஏனென்றால் இந்தப் பதிவை விமர்சனம் என்று கூற முடியவில்லை...
இந்த ஒலிப்பதிவு தரத்திற்கு ரெசுல் பூக்குட்டியையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்...

Ramji said...

Wonderful post Agilan. You have very elaborately written about Maestro's western classical knowledge and talent and how he writes the scores himself. This aspect is one which never cease to amaze me.. Excellent post.

@Karthick Krishna CS - Its doubtful whether Resul Pookutty was involved in the song recording. His task is elsewhere, during filming and if the movie has used sync sound recording.

Maha said...

hi,
your blog is good.
pl. tell me how to download the "jeys shree ram " song