Thursday, November 19, 2009

நண்பர் யுவராஜனுக்கு

"உங்கள் பதிவை வரவேற்கிறேன்.ஆனால் மேலோட்டமாக சொல்லி நகர்ந்து விடுகிறீர்.இன்னும் விரிவாக உங்களுக்கு பிடித்ததை/பிடிக்காததை எழுதினால் நலம்.ஜெயமோகனின் தேர்வு பற்றிய கட்டுரைக்கு பெருமாள் முருகன் காலசுவடுவில் மாற்று கருத்து வெளியிட்டுள்ளார்.மாற்று கருத்துக்கள் சிந்தனை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.- யுவராஜன்"
நன்றி யுவராஜன். 


பலர் எனக்கு எழுதுவது மகிழ்ச்சியாய் இருந்தாலும் யாருக்கும் நான் பதில் அனுப்புவது இல்லை. மன்னிக்கவும். எல்லோருக்கும் இதன் மூலம் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் யுவராஜனின் கருத்து சில கேள்விகளை முன்னிறுத்துவதால் இதற்கு மட்டும் பதில் அளிக்க நினைக்கிறேன்.  


எனது வலைப்பூ தொடங்கும் எண்ணம் தற்செயலாகவும் விளையாட்டாகவும் எழுந்த ஒன்று இருந்தாலும் (என்னுடைய மெக் மடி கணிணியில் முரசு தமிழ் அடங்கியுள்ளது எனவும் அதை எப்படி பயன்படுத்ததுவது என்று முத்துநெடுமாறான் சொல்லிய அடுத்த நிமிடமே வலைப்பூ தயாராகி விட்டது. அவருக்கு எனது நன்றி).


நான் எழுத தொடங்கும் முன்பு சில வரையரைகளை எனக்கு நானே வகுத்துக்கொண்டேன். அதில் முதலாவது எந்த காரணத்திற்காகவும் எனக்குப் பிடிக்காததை எழுதுவதில்லை என்பதும் யாரையும் விமர்சனம் செய்யப்போவதில்லை என்பதும்தான். நண்பர் நவீன் எத்தனையோ முறை எனது கவிதையை மோசமாக யாரோ விமர்சித்திருக்கிறார்கள் என்று உசுப்பிவிடுவார். அப்பொழுதும் புன்னகையை மட்டும்தான் வெளிபடுத்தியிருக்கிறேன். அவருக்கு நான் எழுத வேண்டும் அதிகம் எழுத வேண்டும் என்ற அக்கறை எல்லோரைவிடவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அதுதடைப்பட்டுக் கொண்டே போனது. 


இப்பொழது எழுத தொடங்கியிருப்பது எனது இறுக்கங்களுக்கு, தனிமைக்கு ஒரு எதிர்மறையான செயல்பாடாக எனது எழுத்தை பார்க்கிறேன். அது கைகொடுப்பதாகவும் நினைக்கிறேன். அதனாலேயே ஏன் எனக்கு பிடிக்காதவற்றை பற்றி எழுத வேண்டும் என்றும் மற்றவர்கள் எழுத்துக்களில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை நிறுவி ஏன் எனது எழுத்துகளுக்கு அடையாளங்கள் தேடவேண்டும் என்றும் நினைக்கிறேன். சில சமயங்களில் யாரைவாது காயப்படுத்தவும் கூடும் அதையும் பெருமளவு தவிர்க்க நினைக்கிறேன். மாற்று கருத்துகள் சிந்தனையை மேலும் விரிவுபடுத்தும் என்பது முற்றிலும் உண்மை ஆனால் எனது மாற்று கருத்துகள் இன்னொருவருடைய சிந்தனையை நேரிடையாக பாதிப்பதை தவிர்க்க நினைக்கிறேன்.  


இந்த எனக்கு பிடித்தவையில் நான் கருத்துரைத்திருக்கும் நூல்களைப் பற்றி இன்னும் அதிகமாக உள்நோக்கி செல்ல நான் விரும்பவில்லை. எல்லோருடைய எழுத்தும் வாசகனால் உள்ளவாரே உள்வாங்கிக் கொள்ளப்படாது. அவனது வாழ்வியல் வாசிப்பு அனுபவங்கள் சார்ந்துதான் அந்த புரிதல் நடைபெறும். அதற்கு ஏதும் குறிக்கீடு நான் செய்துவிடவேண்டாம் என்று நினைத்தேன். அதோடு தேர்வு கட்டுரையை பெருமாள் அணுகியது அதில் வரும் சிறு சம்பவத்தின் அடிப்படையில். அதாவது அரசாங்க பள்ளிகள் பற்றிய தமிழ் நாட்டு மக்களின் போக்கு. எனக்கு அது சம்பந்தமில்லாத சிந்தனையும் அனுபவமுமாகும். பல பகுதிகள் அந்த நூலில் எனது வாழ்வின் பல்வேறு நிலைகளை நினைவு கூற உதவியது. எனது சில நிலைப்பாட்டுகளை தகர்த்திருக்கிறது. நான் எதிர்நோக்க இருக்கும் நிச்சயமில்லாத எனது வருங்கால நிகழ்வுகளுக்கு நான் உணராமலேயே அந்த நூல் என்னை தயார்படுத்தியிருக்கிறது என்பதும் தெரியும். ஆனால் இப்படி ஆழமாக செல்வது அவரின் பெரிய அபிமாநியாக என்னை காட்டிக்கொள்ளக்கூடும் அதனால் நான் சொல்வது பல சந்தேகங்களையும் எழுப்பலாம். அதனால் எனது கருத்து அந்த நூற்களுக்கு ஒரு  எளிய முன்னோட்டமாக மட்டும்  இருக்கட்டும் என்றுதான் எழுதினேன். அதில் இடம் பெற்ற பிரிவின் விஷம் மிகவும் அந்தரங்கமான சில உணர்வுகளுக்கு என்னை இட்டு சென்றது, நமது கைகளில், வர்கீஸின் அம்மா, பெண் எப்போது அழகாக இருக்கிறாள் என்று இன்னும் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் அவசியமிருப்பதாக எனக்கு தெரியல்லை. குறிப்பாக குழந்தைகளிடம் இன்னும் இன்னும் நெருக்கமாகவும் அவர்களின் உலகத்தைப் பற்றிய ஓரளவு புரிதலையும் ஜெயமோகன் எழுத்தில் அதிகம் அடைவது எனக்கு பிடித்திருக்கிறது. எனது குழந்தைகளுடனான எனது உறவுக்கு அது பலவகையில் ஒன்றிப்போவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  


தேர்வைப்பற்றி மற்றும் அன்று குறிப்பிட இன்னொரு முக்கிய காரணம் இன்று கல்வி என்பது குழந்தைகளுக்கு அதிகம் சுமைதருவதாக இருக்கிறது என்பதை எப்போதும் நான் எண்ணிவந்துள்ளேன். பெற்றோர்களும் தங்கள் இயலாமையை, இழந்த கனவுகளை பிள்ளைகளின் மூலம் நிறைவு செய்யவதற்காக அவர்களுடைய உலகை அவர்களிடமிருந்து பறித்து விடுகிறார்கள்.  எனது பையனை எப்பொழதும் நான் படிக்க சொன்னதேயில்லை. நான் அவனுக்கு விரும்பி சொல்லி தந்தது கணிணியை பயன்படுத்தவும், அவனுக்கு ரொம்பவும் பிடித்தமான படம் வரைவதும், வண்ணம் தீட்டுவதையும் கூட கணிணியிலேயே செய்வதற்கும்தான். அவனுக்கு இப்பொழுதுதான் 5 வயது. 4 வயதிருக்கும் போது ஏற்கனவே கொஞ்சம் மோசமாக இருந்த எனது எஸர் மடி கணிணியின் கட்டைகளையும் மானிட்டரையும் உடைத்துவிட்டான். அதை அவன் என்னிடம் இருந்து மறைக்க நினைத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் அவனை திட்டவில்லை இப்பொழுது மெக் மடி கணிணியை பயன்படுத்த அனுமதித்து விட்டேன் சில அறிவுரைகளுடன். அவன் என் கணிணியை தொட்டாலே என் அம்மாவும் மனைவியும் பதருவார்கள். எனக்கு அது எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை. அதிகம் பணம் இருக்கிறதென்றில்லை, எதையும் திரும்பப்பெற்றுவிடலாம், இழக்கும் தருணங்களை தவிர. அத்தகைய தருணங்களை என் குழந்தைகளுக்கு நான் கொடுக்க நினைக்கிறேன். வெறும் அறிவுரைகளும் பள்ளி படிப்புகளையும் அல்ல. எனது நிக்கோன் கமிராவில் என்னைவிட அழகாக படம் எடுப்பான். அதையும் அவனுக்கு நான் தடைவிதித்ததில்லை. 


தோம் ன் ஜெரி முதல் மிக்கி மௌஸ் வரை அனைத்தும் காதல் செய்வதைப்பார்த்து ஒரு பெண் தோழிக்கு இதயம் படம் வரைந்து அவனது கிண்டர்கார்டன் பள்ளிப் பையில் வைத்திருந்தான். என் மனைவி அதைப்பார்த்து என்னிடம் கவலைப்பட்டார். என்னை கண்டிக்க சொன்னாள். நான் அவனிடம் அந்தத் தோழியைப் பற்றி கேட்டுத்தெரிந்துக்கொண்டேன். என் தாய், மனைவி எனது நண்பன் என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள் நான் குழந்தை வளர்ப்பது சரியில்லை என்று. நானே என் பையனின் எதிர்காலத்தை கெடுக்கிறேன் என்று. ஒருமுறை பள்ளியில் யாரையோ தள்ளிவிட்டுவிட்டான் என்றும் கெட்டவார்த்தைப் பேசிவிட்டான் என்றும் பெரிய பிரச்சனையாகிப் போனது. எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.  அவனுக்கு ஆங்கிலமே தெரியவில்லை வீட்டில் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள் என்று பெரிய புகார்போன்று பாவனையில் இந்திய பெண் ஆசிரியை வேறு கூறிவிட்டார். அவனுக்கு இன்னும் கல்வி சுமையை அதிகரித்தால் சரியாகிவிடும் என்று எனது தங்கையின் ஆலோசனைப்படி குமொன் வகுப்பில்  சேர்த்தோம். குறிப்பாக ஆங்கிலத்திலும் கணிதத்திலும். ஆனால் அந்த சம்பவத்தின் போது நான் அவனிடம் கேட்டேன் நடந்தது என்ன என்று. அவன் தன்மீது எந்த தப்புமே இல்லை என்றும் அவன் நண்பன்தான் அதை செய்ததாகவும் கூறினான். நான் நம்பினேன். ஒருவாரம் வீட்டில் அதே புராணம், நான் பிள்ளையை கண்டிப்பதில்லை என்று. நான் பதில் எதுவும் சொல்லவில்லை. பெரும்பாலும் எல்லோரிடமும் பல விஷயங்களுக்கு என் நிலைப்பாடு இப்படிதான் இருக்கும். மறுவாரம் அதேபள்ளியிலிருந்து மனைவிக்கு அழைப்பு, எங்களை மன்னித்துவிடுங்கள் உங்கள் மகன் எந்தத் தப்பும் செய்யவில்லை வேறொரு மாணவன் செய்ததவறு, சாமர்த்தியமாக உங்கள் மகன் மீது பழிபோட்டு விடுகிறான் இன்று மாட்டிகொண்டான்.  எங்களை மன்னித்துவிடுங்கள், உங்களுக்கு மன உலைச்சல் தந்ததற்கு என்று. அப்பொழுதும் என் மனைவி பள்ளியை மாற்றிவிடுவோம் என்றார் கோபமாக. 


அதிலும், அவனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எங்களின் நண்பர்களின் பிள்ளைகள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள், பேசுவதை புரிந்துகொள்கிறார்கள் என்றும் புலம்பிக்கொண்டே இருப்பார் என் மனைவி.  எனக்கு எல்லாம் அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். பெற்றோர்கள் தங்களின் தாழ்வுமனப்பாண்மையால் பிள்ளைகளுக்கு சில விஷயங்களை வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள் என்றுகூட தோன்றும் . இப்படி திணிக்கப்படும் போதனைகளும் கல்வியும் எப்பொழுதும் அறிவார்ந்த நிலையில் நிகழ்வதேயில்லை. கல்வி நிலையங்களை எடுத்துக்கொண்டால் மாணவர்களை எதையும் நினைவில் இருத்திக்கொள்வதற்குதான் முக்கியதுவம் தருகிறது. அதனால்தான் நமது இந்திய மாணவர்கள் பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் தற்கொலை செய்துகொள்வது அதிகம் நம்மிடையே காணப்படுகிறது. அதைவிட பெரிய அவலம் 6ஆம் படிவத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாடே விழ எடுப்பது. இது என்ன கலாச்சாரம் என்று தெரியவில்லை. ஒருமுறை பாரதி இளைஞர் இயக்கத்தின் சார்பாக நாங்கள் நடத்திய இலவச வகுப்புகளில் பங்கெடுத்த மாணவர்களில் இரண்டு பேர் நல்ல தேர்ச்சி எடுத்தார்கள். 2 ஏக்கள்தான். அதில் ஒரு மாணவியின் தந்தை ஏன் 6 ஏக்கள் எடுக்கவில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் அறைந்துவிட்டார். எங்கள் பார்வையில் வாழ்க்கையின் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் சில குணாதிசயங்களோடு எப்பொழுதும் உற்சாகத்தோடு இருந்த அந்த மாணவியை ஏக்களுக்கு ஆசைப்பட்டு அறைந்து அவமானப்படுத்தினார். அந்த வடு எத்தகைய மனோவியல் மாறுதல்களை அந்த மாணவியிடம் உருவாக்கியிருக்கும் என்று நினைக்கும் போது இன்னும் நெஞ்சம் கணக்கிறது.


அதோடு பாடத்தின் போது அவனுடைய கவனம் ஓரிடத்தில் இல்லை என்பதும் வழக்கமான குற்றச்சாட்டு. அதையும் நான் காதில் வாங்கிகொள்வதில்லை. மனைவியிடம் மட்டும், அவன் கற்பனா சக்தி அதிகம் உள்ளவன் அப்படிதான் இருப்பான் என்று சொல்லிவைப்பேன். வீட்டில் அட்டகாசங்கள் பண்ணும் போது கண்டிப்பதில்லை, அதிகம் களைப்பாக தெரிந்தால் குமொன் வகுப்புக்கு லீவு விட்டுடலாம் என்று சொன்னால் அதிக சந்தோஷத்துடன் ஆமோதிப்பான். அவனுக்கு சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன், அதாவது பாலர்பள்ளிக்கு போக அன்று பிடிக்கவில்லையென்றால் அப்பாவிடம் லீவு அப்ளிகேஷன் போடு என்று. இது எல்லாம் எங்குபோய் முடியுமோ என்று புலம்பிக்கொண்டே இருப்பார் என் தாய்.  அவனும் இப்பொழுதெல்லாம் நான் சொல்வதைதான் கேட்கிறான், வீட்டில் யாருடைய பேச்சுக்கும் கட்டுபடுவதில்லை. அவன் சொல்லும் காரணம் வீட்டில் அவன் சொன்னால் கேட்பது நான் மட்டும்தான் . அதுமட்டுமல்லாது வீட்டில் ஆங்கிலமே பேசாதவன் வெளியில் அவன் வயது நண்பர்களிடம் அவனுக்கு தெரிந்த ஆங்கிலம் பேசி விளையாடிக்கொள்கிறான். ஒருமுறை குழந்தைகள் விளையாட்டு மையத்திற்கு சென்றபோது அவரது சீன நண்பனை கண்டு பேசி, விளையாடி திரும்பும்போது நாளைக்கும் வா என்று அந்த பையன் சொல்லி வழியனுப்பினான். பாறையில் மலர்கள் மலர்வதுபோல் பையன்கள் தானாக வளர்ந்துக்கொள்வார்கள் என்று அவரின் அந்த தேர்வு பதிப்பில் ஒரு வரி என்னை பெரிதும் சிந்திக்கவைத்தது. 


இன்று மாலை அவனது பள்ளி இறுதி பரீட்சை முடிவு வந்திருந்தது 500 க்கு 444.5 எடுத்திருக்கிறான். இந்த தேர்வு பதிப்புக்கான எனது கருத்தை சொல்வதற்காக இதை நான் செயற்கையாக சொல்லவில்லை. எல்லாம் தற்செயலாக நடந்ததிருக்கிறது. எனக்கும் இது ஆச்சரியமாகவே இருந்தது. இப்படி என் வாழ்வின் பல சம்பங்களை நான் திரும்பிப்பார்க்கவும், எதிர்கொள்ளவும் நல்ல அனுபவமாக இருந்தது அவருடைய நூல். அதையெல்லாம் எழுதவேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இப்பொழதுகூட இதை எழுதியது அவசியமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும், யுவராஜன். எனது அனுபவங்களின் பகிர்வாகவே எனது எழுத்துக்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதையும் தாண்டி கருத்தாக்கங்களை அவைகள் முன்வைத்தால் மகிழ்ச்சி ஆனால் நான் அதை ஒரு எனது எழுத்தின் நோக்கமாக கொள்ளப்போவதில்லை. 

1 comment:

தோமா said...

அகிலன் ,
இந்த பதிவு மிக அருமை
குழந்தைகளை அவர்களின் போக்கில் வளர்க்கவேண்டும் என்பதே என் கருத்தும்.
பெற்றோர்கள் அவர்களுக்கு வாழ்வின் சவால்களை சமாளிப்பது எப்படி என்று சொல்லிகொடுத்து, தன்னம்பிக்கையுடன் வளர்ப்பதே கடமை