Saturday, November 28, 2009

தென்னிந்திய திரை இசை டிரேண்டும் இசை கலாச்சாரமும்


இந்த தளம் இசை குறித்த ஒரு பகிர்வுப்பதிவாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ஹிந்தி இசை தளத்தில் தமிழ் இசைப் பிரியர்கள் உலாவி வந்தக் காலக் கட்டத்தில், M.S.விஸ்வநாதன் தமிழ் இசைத் துறைக்குள் கொண்டு வரப்பட்டார். புதிய வகை மெலோடி, அதுவரை ஒலிக்காத புதிய ரக இசை ஒலிகள் என தமிழ் இசைத் துறைக்குப் புதிய அலைவரிசையை ஏற்படுத்தினார் M.S.விஸ்வநாதன். M.S.விஸ்வநாதன் கால பாணியமைப்பாளராக(Trend Setter) இருந்தார்.

M.S.விஸ்வநாதன் உச்சத்தில் இருக்கும் போதே தமிழ் இசைத் துறைக்குள் புகுந்த இளையராஜா இன்னொரு கால பாணியமைப்பாளராக(Trend Setter) உருவாகினார்.

அதே போல் இளையராஜா உச்சத்தில் இருக்கும் போதே A.R.ரகுமான் தமிழ் இசை துறையில் நுழைந்து, தமிழ் இசை உலகில் இன்னொரு கால பாணியாளாராக(Trend Setter) இருந்தார்.

இந்த இசை வரலாற்றைப் பார்க்கும் போது .... இன்றைய தேதியில் ஒரு புதிய தமிழ் இசையமைப்பாளர் வந்து ஒரு கால பாணியமைப்பளராக(Trend Setter) உருவாகி இருக்க வேண்டும் ... ஆனால் அப்படி நடக்கவில்லை ... ஏன் என்ற கேள்வி வெகு நாட்களாக என்னை உருத்திக்கொண்டிருக்கிறது .... உங்கள் பார்வையில், இது நடக்காமல் போன காரணம் என்ன?


-மதியழகன் நண்பன் மதியழகனுக்கு 


உங்கள் பதிவிற்கு நன்றி. இந்த டிரண்ட் செத்திங்/டிரேண் செட்டர்  பற்றி எனது கருத்தைதான் பதிக்கமுடியுமே தவிர நிபுணத்துவத்துடன் ஆய்வுகளின் மூலம் இதற்கு பதில் அளிக்க முடியாது. அந்த அளவிற்கு நான் இதில் ஆட்டோரிட்டி இல்லை. அந்த வகையில் நான் சொல்வது உங்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்யாமலும் போகலாம். 


டிரேண்ட் என்பது அன்றைய நிலையில் எந்த வகையான இசையை பெரிதும் விரும்புகிறார்கள் அல்லது வரவேற்கிறார்கள் என்பதைப் பொருத்து அறியப்படும் விஷயம். மேலைநாட்டில் ஒரு டிரேண்ட் நீண்ட வருடங்கள் தாக்குப்பிடிக்கும் ஒன்றல்ல. அது ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு இசையின் வெற்றியை பொருத்து. அதாவது டிஸ்கோ இசை வெற்றி பெற்றதென்றால் ஒரு சில வருடங்கள் அதன் ஆட்சி தொடரும். திடீரென்று ரோக் அல்லது ஹெவி மெட்டல் புகழடைந்தால், அது சில காலங்கள் தொடரும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியிடப்படும் பெரும்பாலான இசை அந்த அந்தக் காலத்தில் வெற்றியடைந்த இசைப்பிரிவை சார்ந்தே இருக்கும். இது ஒரு வியாபார தேவை. அல்லது எந்தப் பிரிவை சேர்ந்த இசை விற்பனை சாதனைப்புரிகிறதோ அதை பொறுத்து டிரேண்டை அடையாளம் காண்பார்கள். அதோடு டெக்னாலாஜியும் இந்த டிரேண்ட் செத்திங்கு முக்கிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் நம்முடைய திரையிசையின் டிரேண்ட், இசை சார்ந்து இருந்ததில்லை. அதாவது, போப், ரோக் என்ற இசைப்பிரிவுகளை சார்ந்து இல்லாது ஒரு தனிநபரின் இசை பாணியை சார்ந்தே வந்திருக்கிறது. அதிலும் இந்த தனிநபர் பாணி ஒட்டு மொத்த சமூகத்தினுடைய இசை கலாச்சாரத்தின் போக்கை மாற்றி அமைப்பதாகவும் இருந்திருக்கிறது.   
எம் எஸ் விஸ்வநாதனை என்னால் ஒரு டிரேண் செட்டராகவோ அல்லது ஒட்டு மொத்த இசை கலாச்சாரத்தையும் பாதிக்கும் வண்ணம் ஒரு பாணியை ஏற்படுத்தியவர் அல்ல என்றே எண்ணுகிறேன். அவர்காலத்தில் கர்நாடக இசை பாதிப்பிலும், மேடை கலாச்சாரத்திலும் இருந்த இசையை, மெல்லிசையாக்கி எளிமை செய்து அவருக்கு பின் வந்த பலருக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். இதில் முழுவதும் அவரை மட்டும் மையப்படுத்த முடியாது. ராமமூர்த்தியையும் இணைத்தாக வேண்டும். அவர்களின் இசை புதுமையானதாக அந்தக் காலத்தில் இருந்திருந்தாலும் அவருடைய காலத்தில் கதாநாயகர்களின் டிரேண்டிற்கு முன்னுரிமை அளிக்கும் பொருப்பில் அந்த இரட்டையர்கள் இருந்திருக்கிறார்கள்.  சில பரிசோதனை முயற்சிகளை அவர்கள் செய்திருந்தாலும் ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த இசைக்கலாச்சாரத்தையும் அவர்கள் மாற்றியமைத்தார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அந்த காலத்தைய சமூகமும் அன்று இது எம். ஜி. யார் பாடல், சிவாஜி பாடல், ஜெமினி பாடல் என்றுதான் அடையாளப்படுத்தினார்கள். அந்த நிர்பந்தம் எம்.ஸ். வி க்கு இருந்தது. அதோடு அன்றைய தமிழ் பாடல்கள் பெரும்பாலும் இந்தி இசை புகழின் பாதிப்பாகவே இருந்திருக்கிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது அவர்களின் இசை, ஒட்டு மொத்த சமூகத்தின் குரலல்ல.  அவருடைய 'பொன் என்பேன் சிறு பூவென்பேன்' என்ற பாடல் சாஸ்வதம் பெற்ற பாடல். ஆனால் அந்தப் பாடலை சிவாஜி தனது பாத்திரத்திற்கு கேட்டபோது அது ஜெமினி கணேசனுக்கு மட்டுமே பொருந்தும் என்று மறுத்தவிட்டதாக ஒரு பேட்டியில் எம் எஸ் வி குறிப்பிட்டிருந்தார். இத்தகைய நிர்பந்தங்களுக்கு உட்பட்ட ஒரு செயல்பாடு இசையின் டிரேண்டை நிர்ணயிப்பதாக இருக்க முடியாது மாறாக அன்றைய புற டிரேண்ட் இசையை நிர்ணயிப்பதாக இருந்திருக்கிறது. அவரின் பாணியையும் அது நிர்ணயிப்பதாக இருந்திருக்கிறது.
ஆனால் இளையராஜாவையும், ஏ ஆர் ரஹ்மானையும் ஒரு தனித்துவமான பாணியை அறிமுகப்படுத்தியவர்கள் என்று நிச்சயம் சொல்லலாம். முன்பே சொன்னது போல் இசை சார்ந்த டிரேண்ட் என்று சொல்வதைக்காட்டிலும் தங்களுடைய இசை பாணியால் இசை ரசனையை மாற்றிய போக்கு என்று சொல்லலாம். தென் இந்திய இசை இளையராஜா மீட்டெடுத்த இசை கலாச்சாரம். ரஹ்மானுடையதோ இன்றைய இந்திய தேசத்தின் இசை கலாச்சாரம். இருந்தபோதும் இந்த மதிப்பீடுகள் எல்லாமே மெயின்ஸ்டிரீம் (Mainstream) இசை ரசனையை சார்ந்தே இருக்கிறது. அதுவும் சினிமா இசையை சார்ந்தே இருக்கிறது.

இளையராஜாவின் இசை சினிமாவிற்கு சில நிர்பந்தங்களை முன்வைக்கத்துவங்கியது. அவரது இசை ஒளி ஊடகங்களை கடந்த ஒலியாக இருந்தது. அன்றைய சினிமா கற்பனையும் காட்சியும் அதற்கு ஈடு செய்ய முடியாதவையாகவே இருந்தது. நாட்டுப்புறமும், கர்நாடகமும், மேற்கத்திய சாஸ்த்திரிய சங்கீதமும் கலந்த ஒரு தென்னிந்திய இசை இளையராஜா கண்டெடுத்தது. திரை இசைகென்று ஒரு கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்டது அவருடைய இசை. அந்த பாணி இன்னும் தொடர்கிறது. அந்த கற்பனையின் உச்சத்தை எட்டமுடியாதபோது, இசையமைப்பாளர்கள் அவருடைய இசையையே மீண்டும் உபயோகிப்பதும் அல்லது அதன் நகலாக இன்னொன்றை கண்டெடுப்பதும், மறுக்கமுடியாத சாட்சிகள். இளையராஜா இல்லாத இன்றைய திரை இசை கற்பனைகளுக்குள் கொண்டுவர முடியாமல் வறட்சியாக காட்சியளிக்கிறது. நம்மால் அது உணரபட முடியாமல் போகும் அளவிற்கு நமது பண்பாட்டு கூறுகளில் ஒன்றாகிவிட்டது அவரது இசை பரிமாணங்கள்.  சர்வசாதாரணமான ஒரு உதாரணம் ஸ்டிரிங் இசையின் (Strings) போக்கு, அதை தென் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா. எம் ஸ் வியின் காலத்தில் அதன் பிரயோகம் அதி தீவிரம் கொண்டதில்லை. அதே சமயம் அது அசலான மேதாவித்தனத்துடன் இருந்ததும் இல்லை (அதற்கு ஒருவேளை டெக்னாலிஜியும் காரணமாக இருக்கலாம்). ஆனால் இன்று எல்லா உணர்வுகளுக்கும், பாத்திரத்திற்கும், காட்சிகளுக்கும். ஸ்டிரிங் இல்லாத உருவகம் வெற்று உருவகம்தான். நம்மால் அந்த காட்சிகளுக்குள் செல்லவே முடியாது. அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளவே முடியாது. அதை இன்று வரை எந்த இசையமைப்பாளரும் நமது மரபில் இருந்து மீட்கவே இல்லை. 


இளையராஜா காலத்தில் இசையின் டிரேண் தமிழ் நாட்டில் இப்படிதான்  இருந்தது என்று கூறமுடியாது போனது. காரணம் அன்றைய டிரேண் இளையராஜா என்ற தனி மனிதனை சார்ந்திருந்தது. ஒரு இருபது வருடங்கள் தென் இந்திய இசை தமிழ் திரை இசை பாணியில் அல்லது டிரேண்டில் இருந்தது. அது இளையராஜாவின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் இணைபாணியாக அவ்வப்போது கர்நாடகம், நாட்டுப்புறம், டிஸ்கோ, தெக்நோ, ரோக் என்ற அலைகள் தென்பட்டாலும் அது இசையின் சில குறிப்பிட்ட குணாதிசயங்களை கடந்து தமிழ் திரையிசையாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இன்று நாம் தெளிவாக இன்றைய திரை இசைப்பாடல்களை வேர்ல்ட் மியூஸிக் என்று வகைப்படுத்துகிறோம் ஆனால் அன்று அந்த பிரக்ஞை நமக்கில்லை. அப்படியொரு பிரக்ஞையோடு அன்றைய காலத்துக்குள் நாம் நுழைந்தால் இளையராஜாவின் இசை புதிய குணாதிசயங்கள் உள்ளடக்கிய இசை என்று உணரமுடியும். அதாவது புதிய பிரிவுக்குள் (Category/Genre) வகைப்படுத்தப்பட வேண்டிய தனித்துவத்துடன் இருந்தது. அதை மேலை இசை கோட்பாடுகளுக்குள் ஒப்பிட்டு வேர்ல்ட் மியூஸிக் என்றோ சவுண்ட் டிரேக் என்றோ வகைப்படுத்த முடியாத தன்னிரைவு கொண்ட தனி கூறுகளுடன் அடங்கியது . அவரின் தொடர்ச்சியாகவே இன்றுவரையிலான  திரையிசை இருக்கிறது. 


ஒரு நீண்ட நெடுங்காலமாக அவர் நிலைத்திருந்த காரணம், உலக இசை டிரேண்டையும் அன்றைய டெக்னாலாஜியின் வளர்ச்சியையும் அவர் உள்வாங்கிக் கொண்ட விதம்.  ஸ்டிரியோ டெக்னோலோஜி வந்தபொழுதும், சிந்தெசைஸர் (Synthesizer) இசை அறிமுகப்படுத்தப்பட்டபோதும், கணிணி பயன்பாடு இசையமைப்பில் நுழைந்தபோதும், அதை முழு வீச்சுடனும் அன்றைய காலகட்டத்தில் சாத்தியமற்றதாக எண்ணகூடிய சில இசை பிரயோகங்களை இந்த டெக்னாலாஜியின் மூலம் சாத்தியப்படுத்திய விதத்திலும் , ஒவ்வொரு கட்டங்களிலும் முன்நகர்ந்துக்கொண்டு சென்றார். அதிலும் இளையராஜா, எம் எஸ் வி போல் ஒதுங்கிவிடாமல் இன்னும் நிலைத்திருக்க இன்னொரு காரணம் 70களில் வேறு பரிமாணங்களில், 80களில் வேறு பரிமாணத்தில், 90களில் வேறு பரிமாணத்தில் இன்று வேறு பரிமாணத்தில் என்று காலமாறுதல்களுக்கேற்ப வித்தியாசப்பட்டிருக்கும் அவரது இசை. அவரது பாடலை கொண்டே அது எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்று கூறிவிடமுடியும். ஒலிபதிவு  அல்லது ஒலி நுட்ப காரணங்கள் அல்லாது இசையின் நுட்பத்தைக்கொண்டு அநுமானித்து விடமுடியும்.
வேறு இசையமைப்பாளர்கள் அவர் காலத்தில் அதிகம் அறிமுகப்படுத்தபடாமல் இருந்ததன் காரணங்கள் தெரியவில்லை. அதற்கான நிர்பந்தங்கள் அன்று யாருக்கும் தேவையாக இல்லாதிருந்திருக்கலாம்.  வருடத்திற்கு நாற்பது முதல் ஐம்பது படங்கள் வரை அவரது இசையமைப்பில், அத்தனையும் புகழ்பெற்றது. அந்த அலையில் அன்று இருந்த மற்ற இசையமைப்பாளர்கள் யாருக்கும் தென்படாமல் போயிருக்கலாம். இது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. 


இளையராஜாவுடைய இசையில் மனவெளிபயணம் சாத்தியமாகிப் போனது. வார்த்தைகள், காட்சிகள், நடிப்பு என்று எந்த தேவையும் அற்று உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் சாத்தியத்தை அவரது இசை ஏற்படுத்தியது. பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் வெளிப்படும் இசை வெவ்வேறு பரிமாணங்களை ஏற்படுத்தும், வெவ்வேறு தளங்களில் பயணிக்கும். திரைகாட்சிகள் இல்லாது அவரது பாடலையும் பாடலின் இடைவெளி இசையும் பின்னனி இசையையும் அணுகுவது பலருக்கு சாத்தியமற்று போகலாம். இப்படி பல்லவிக்கும் சரணத்திற்கும் தொடர்பில்லாததுபோல் தோற்றமளிக்கும் இத்தகைய இசையினாலேயே இளையராஜாவின் இசையை சிலர் வெறுப்பதுண்டு. இத்தகைய இசையையும் பாடலையும் வழக்கத்தில் இருக்கும் எந்த இசையுடனும் ஒப்பிட்டு பார்க்கமுடியாத நிலையில் உலக இசைக்கு புரம்பானதாகவும் இளையராஜாவின் இசை பலருக்கு தோற்றமளிப்பதுமுண்டு. 


பிலிப் க்லாஸை (Philip Glass) எடுத்துக்கொள்வோம். அவருடைய இசை மேற்போக்காக கேட்கப்படும் போது, எந்த நுணுக்கமும், மேதாவித்தனமும் அற்ற இசையாகவே தோன்றும். சுருதிப்பெட்டிப்போல் ஒரே நாதம் திரும்ப திரும்ப இடைவிடாது ஒலிப்பதுபோல் தோன்றும். மிக சில இசை குறிப்புகள் மட்டும் கொண்டு, சிறு சிறு மாற்றங்கள் மட்டும் ஏற்படுத்தி, மிக குறைந்த அளவிலான இசைக்கருவிகள் மட்டும் பயன்படுத்தி, அதிலும் பெரும்பாலும் கீபோர்ட்டை மட்டும் பயன்படுத்தி எந்த ஒரு மாறுதலும் இல்லாத கடல் அலையின் தொடர் நாதம் போன்று ஒரு தொடர் இசையாக ஒலிக்கும். அதை இசை விமர்சனர்களும் வல்லுனர்களும் முற்றாக புறக்கணித்தார்கள்.  அவருடைய பெரும்பாலான இசையை அவர் சுயமாக நிறுவிய அவரது சொந்த இசைக்குழுவை கொண்டுதான் இசைப்பார். அவர் பல சிம்பொனிகள் கூட எழுதி இசைத்து வெளியிட்டிருக்கிறார். அவைகள் சிம்பொனியே இல்லை என்று எல்லா ஆர்கெஸ்டராக்களும் கருத்துரைத்தாலும்,  ஒருவழியாக அவருடைய இசையை வேறு கோணத்தில் அணுகி புரிந்துகொள்ள முற்பட்டவர்கள், இன்று அவருடைய இசையை முற்றாக புறக்கணிக்கப்படும் இசையல்ல மாறாக அது மினிமலிஸ்த் இசை (Minimalist Music) என்று வரையறுத்தனர். அதன் ஆளுமையின் அடர்த்தியால் அவர்கள் இந்த முடிவிற்கு வந்தார்கள். இன்று அவரை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இசைஞானிகளுல் ஒருவராய் புகழ்கிறார்கள். இத்தகைய புறக்கணிப்புகள் பாக் (Bach) போன்றோருக்கும் கூட ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. அவரை சாத்தானின் இசையை இசைப்பவர் என்று புறக்கணித்திருக்கிறார்கள். ஆனால் இன்று கிருத்துவத்தின் பல இசை வடிவங்கள் பாக் உடையது. ஜப்பானில் கிருத்துவம் பரவ பாக்கின் இசைக்கு பெரும் பங்கு இருப்பதாக கூறுகிறார்கள். 


அதேபோல் தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்ற இளையராஜாவின் இசை, இசையின் மேதாவித்தனங்கள் என்று கருதும் சில கூறுகள் இல்லாமல் அது அந்நியப்பட்டிருப்பதாக சிலர் கூறுவதற்கு காரணம் உலகின் வேறு எந்த இசையமைப்பாளரிடமும் இல்லாத ஒரு தனித்துவத்துடன் அந்நியப்பட்டிருந்தது. அது பிரக்ஞையின் அடி ஆழத்தில் இருந்து எழும் பிரவாகமாக, பிரபஞ்ச வெளியில் பயணிக்கும் ஒன்றாக ஒலித்தது. அதற்கு அவருடைய அத்வைத ஆன்மீக கண்ணோட்டம் முக்கிய காரணமாக இருக்கலாம். அவருடைய இசை எப்பொழுதும் ஒரு அத்வைத சிந்தாந்தந்தத்தின் தளத்தில்தான் பயணித்திருக்கிறது.  அவருடைய இசையின் முன், காட்சிகள் தோற்று நிற்கும். அதை பலமாக சிலர் நினைப்பதுண்டு, அதையே பலவீனமாகவும் சிலர் நினைப்பதுண்டு.  அதனாலேயே பலசமயம் அவர் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகி இருக்கிறார். உலக இசையோடு ஒப்பிட்டு புறம்தள்ளி வைத்திருக்கிறார்கள். அல்லது இளையராஜாவின் இசை அவருடைய காலத்திற்கு முற்பட்ட ஒரு இசையாக இருந்திருக்கிறது என்று கூட சொல்லலாம். இருபது வருடத்து முந்தைய இசை இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதும், இந்தியில் இன்று பெரும் புகழ் அடைவதும் அதற்கு மிகப்பெரிய காரணம் என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த அடிப்படையில் அவருடைய இசையை நாம் மற்ற சினிமா பாடல்களின் இசைகளுடன் வரிசைபடுத்தி பார்க்கமுடியாது. என்னை கேட்டால் இளையராஜாவினுடைய இசையை ராஜாயிஸ்ட் (Raajaist music) என்று வகைப்படுத்தலாம். அந்த அளவிற்கு அதற்கே உரிய நுட்பமான அடர்த்தியான இசைக் கோட்பாடுகளை உள்ளடக்கியது அவருடைய இசை பாணி. அது ஒப்பீடுகளுடன் ரசிக்ககூடிய இசையல்ல. 


கிராமிய இசையின் அசல் வடிவம் அவரது கற்பனையில் பிரமாண்டம் அடைந்ததும். கர்நாடகத்தில் contemporary கீர்த்தனைகள் அமைத்ததும், மேற்கத்திய இசை நமக்கு சொந்தமான நாதங்களுடன் இருப்பதுபோல் தோன்றுவதற்கும், அவரது முன்முயற்சிகளே காரணம். முதல் மரியாதை திரைப்பாடல்களை எடுத்துக்கொள்வோம் குறிப்பாக வெட்டி வேரு வாசம் பாடல். கிராமிய மெலடி, பல்லவி முடிந்து வரும் இசை, நம்முடைய கலாச்சாரத்திற்கு பரீட்சயமற்ற ஸ்டிரிங் (Strings) இசை, பேஸ் (Bass), அதன் இசைக்கோர்வைகள் காட்சிகளின் விரிவாக்கத்திற்கு உதவி, வரிகளை கடந்த சொல்லப்படாத உணர்வுகளை பேசி பின் சரணத்திற்கு திரும்புகிறது. சரணத்திலும் பின்னனி இசை மேற்கத்திய சங்கீதம். (மிக்ஸிங்கில் (Mixing) அந்த நாதஸ்வரத்தின் இசையை கொஞ்சம் அடக்கி, புல்லாங்குழலை இன்னும் மென்மையாக்கியிருந்திருக்கலாம்). பீத்தோவனின் fur elise -க்கு சற்றும் குறைந்ததில்லை இந்த இசை. இது மிகைப்படுத்தி நான் கூறவில்லை.  fur eliseன் கற்றற்ற பயணம் இப்படி வெட்டி வேரு வாசமாக மோட்சம் அடைந்திருக்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது. அதற்கு எனது இசை ரசனையும் மனோநிலையும் காரணமாக இருக்கலாம். என் ரசனை எப்பொழுதும் மனவெளிபயணத்தை எதிர்பார்த்திருக்கும் ரசனை, அதை எட்டாத நிலையில் அந்த இசை இன்னும் கொஞ்சம் முன் நகர்ந்திருக்கலாமே, இன்னும் கொஞ்சம் ஆழ பயணித்திருக்கலாமே என்று தோன்றும். அதை நிவர்த்தி செய்வது இளையராஜாவின் இசைதான். ஆனால் இதை யாருமே உலக தரம் என்றும் சொல்லப்போவதில்லை. காரணம் நமக்கு பழகிவிட்டது இளையராஜாவின் இசை.  அதிலும் மேற்கத்திய இசையும், ஸ்டிரீங்ஸ் பிரயோகமும் நமக்கு அந்நியப்படாமல், நமக்கு சொந்தமான இசையாக தோன்றக்காரணமும் அதுதான். அவர் காலத்திலும் சரி, இன்றும் சரி, இந்த சில குறிப்பிட்ட அம்சங்கள் அற்ற ஒர் இசையை நாம் தென்னிந்திய இசையில் கேட்கவே முடியாது.  அப்படி ஒரு உறுதியான வடிவத்தை இந்திய இசைக்கு அவர் கொடுத்திருக்கிறார். அது இன்றைய நிலையில் வேறு ஒரு தளத்தில் பரிணாமம் அடைந்திருக்கிறதே தவிர முற்றாக நீங்கவோ அல்லது வேறு ஒரு புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ளவோ இல்லை. நமக்கோ எல்லாம் பாடலும் ஒன்றுதான் என்ற ஒரு அற்ப மனநிலையில்தான் பிரதிபலிக்கிறது. 


ஏறக்குறைய பதினைந்து இருபது வருடங்கள் ஒப்பீடுகள் இல்லாமல் வளர்ந்து வந்ததால், அதன் பரிணாமம் நம்முடைய தரிசணத்திற்கு எட்டவில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாக நம்மை கடந்து சென்றிருக்கிறது. அந்தவகையில் பார்த்தால் இளையராஜாவை தென்னிந்திய இசையின் டிரேண் செட்டர் என்று சொல்வதைக்காட்டிலும், அதன் அடையாளமாக இருக்கிறார்.


ஏ ஆர் ரஹ்மான் இந்திய தேசத்து இசைக்கலாச்சாரத்தின் புதிய வாசல்களை திறந்துவிட்டவர். அது தனி இசை தொகுப்பாகட்டும், கர்நாடகமாகட்டும், திரையிசையின் அலையில் அமுங்கிப்போயிருந்த எல்லா இசைகளுக்கும், இசை கலைஞர்களுக்கும் நம்பிக்கை அளித்து வெளிகொண்டுவந்த பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அதுவரை திரை இசையை மட்டுமே சார்ந்திருந்த இந்திய இசைக்கு புதிய அர்த்தங்களை உருவாக்கியவர். பல புதிய இசையமைப்பாளர்கள் திரைக்கு வர ஆரம்பித்தனர். பல புதிய இசைக்குழுக்களும், பாப் இசை கலைஞர்களும் வெளிவர ஆரம்பித்தனர். அவரின் வந்தே மாதரம் இசை தொகுப்பு சினிமா அல்லாத இசைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் அனுமதிகளையும் இந்திய சந்தையில் ஏற்படுத்தியது. 


அவர் மிகக்கவனமாக இளையராஜாவின் சாயலையும் இதுவரை இளையராஜா உருவாக்கியிருந்த இசை கலாச்சாரத்தையும் தன் பாடல்களில் பிரதிபலிக்காதவாறு பார்த்துக்கொண்டார். கோர்ட் (Chord) பிரயோகத்திலும், உலகில் பிரபலமாக அன்று விளங்கிய சில இசை வகைகளை நமக்கு அறிமுகப்படுத்தியதிலும் குறிப்பாக, ராப் (Rap), ரெகேய் (Reggae), R & B என்ற தமிழ் மணமில்லாத அதேசமயம் நமக்கு அந்நியப்படாத சாயலில் இருக்கும் இசைவகைகளை அறிமுகப்படுத்தியது, பாடலின் பின்னனி இசையும் பல்லவி சரணத்திற்குமான இடைவெளி இசையும் அதற்கு தேவையான உணர்வுகளில் இருந்து விலகாமல் இருப்பதும் என்று பல புதுமைகளை அறிமுகப்படுத்தி, இளையராஜா உருவாக்கியிருந்த இசை லட்சணங்களை மீறும் முயற்சியாகவே அவரது இசையை வெளிக்கொணர்ந்தார். ஏ ஆர் ரஹ்மான் ஒரு பேட்டியில் அழகான ராட்சஸி  என்ற முதல்வன் படப்பாடலை ரிதிகெளளை ராகத்தில் அமைக்கலாம் என்று முடிவானபோது, இளையராஜாவின் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலின்  பல பரிணாமச் சாயலை அழகான ராட்சஸியே பாடலில் தவிர்க்க முடியாமல் சிரமப்பட்டு அதை மிகவும் கவனமாக எதிர்கொண்டேன் என்றார்.ஏ ஆரின் இசையில் முக்கியமாக சொல்லவேண்டியது, பல்லவி சரணங்களை வழக்கத்திலிருந்து மீறி வடிவமைத்ததும், பாடகர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும் அவர்கள் கற்பனைக்கும் மிக பெரிய சுதந்திரத்தை ஏற்படுத்தி, பாடல்களை ஒரு இயக்கத்தின் படைப்பாகவே நிகழ்த்தினார். அவருடைய இசையும் பாடலும் ஒரு பெரும் நிறுவனத்தின் அல்லது பட்டறையின் நிர்வாகத்திறனுடனும் தொழில்நுட்ப திறத்துடனும் தயாரிக்கப்படும் இறுதிப் பொருள்போல அத்தனை நேர்த்தியுடன் இருக்கும். ஏ ஆர் ரஹ்மானை ஒரு தனி நபர் ஆளுமையாகவோ கற்பனையாகவோ எண்ணுவதை காட்டிலும் ஒரு நிறுவனமாகத்தான் பார்க்கவேண்டும். அது அவருடைய தனி வளர்ச்சிக்கும் புகழுக்கும் மட்டுமல்லாது அவரிடம் வேலைபார்த்த எல்லா கலைஞர்களுக்கும் தொழில் நிபுணர்களுக்கும் தனிப்பட்ட புகழையும் தொழில் சார்ந்த வாய்ப்புகளையும் ஏற்படுத்தியது. ஒலி அமைப்பில் ஶ்ரீதரும், குழலிசையில் நவினும், பாடகர் ஹரி ஹரன், சங்கர் மஹாதேவன், டிரம்மர் சிவமணி, கிதாரிஸ் பிரசன்னா, பாடகி வசுந்தர தாஸ், சுரேஸ் பீட்டர்ஸ், இசையமைப்பாளர் ரஞ்சித் பாரோவ், பிரவின் மணி என்று பட்டியல் நீளம். அவருடன் வேலை செய்த அத்தனைபேரும் இசைத்துறையில் தங்களுக்கென தனி தளத்தை அமைத்துக்கொண்டவர்கள். அதன் எல்லா புகழும் ஏ ஆர் ரஹ்மானையே சாரும். அதேசமயம், அப்படி ஒரு தளம் அமைந்தபிறகும் ஏ ஆருடன் திரும்பவும் தொழில் நிமித்தம் அவர்கள் இணையவும் செய்தனர், அதை ஏ ஆரும் தடை செய்ததில்லை.  அவருடன் பணியாற்றியதாலே தாங்கள் சார்ந்த இசையை பிரபலப்படுத்தி புது ரசிகர் கூட்டம் பெற்று அந்த இசையை விஸ்தாரப்படுத்தியவர்கள் பலருண்டு, குறிப்பாக கர்நாடகத்தில் நித்தியா ஶ்ரீ, கத்ரீ கோபால்நாத், கஜலில் ஹரிஹரன் என்று இதை தனியாக பட்டியலிடலாம். இளையராஜாவின் கர்நாட இசைஞானத்தை செம்மங்குடி போன்றவர்களே சிலாகித்திருந்தாலும் ரஹ்மானின் கர்நாடக பிரயோகம் பல கர்நாடகப் பிரபலங்களால் கொண்டாடப்படுகிறது. இளையராஜாவின் இசை வழி வந்தவர்களுக்கு ஏ ஆரின் கர்நாடக இசையும் சரி மற்ற இசை வடிவமும் மிகவும் எளிமையாகவும், சாதாரணமானதாகவும் தோன்றலாம் காரணம் இளையராஜாவைப்போல் அதி தீவிர கற்பனை வீச்சில் ஏ ஆரின் இசை இருந்ததில்லை, அது தேவையான ஒன்றாகவும் யாரும் கருதவில்லை. இளையராஜாவின் இந்த இசை போக்கு உலக இசையின் சில முக்கிய கூறுகளிலிருந்து விலகி நிற்பது போன்று இருந்தமையால், இவரின் இசை  அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதோடு ஏ ஆர் காலத்தில் இசை சார்ந்த டெக்னாலாஜி விஸ்வரூப வளர்ச்சியடைய ஆரம்பித்திருந்தது. உலகில் எல்லா இசையும் அதன் சாரம்சத்தை உள்வாங்கிக்கொண்டு அசுர வளர்ச்சியடைந்து வந்தது. இந்திய இசை இதிலிருந்து முற்றிலும் விலகி நின்றிருந்தது. அதன் பெரும் காரணம் நமது பாரம்பரிய இசையும் அல்லது மெட்டும், உலக இசையின் போக்கை உள்வாங்கிக் கொள்ளும் திறனற்று இருந்தது. அப்படி செய்யப்பட்ட சில முயற்சிகள் கூட மேலை இசையின் அப்பட்ட நகலாக தோற்றமளித்து நமது ரசனையில் இருந்து விலகியிருந்தது. பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமாய் அதே சமயம் நமது பாரம்பரிய இசை ரசனை பாதிக்கப்படாமலும் ஒரு இசை கலாச்சாரத்தை உருவாக்கியது ஏ ஆர் ரஹ்மானின் சாதனை. அது அவருக்கு சாத்தியமானதற்கு முக்கிய காரணம் உலக இசை கலைஞர்கள் பலருடனும் அவர் பணிபுரிந்திருக்கிறார், பயணித்திருக்கிறார், வலம் வந்திருக்கிறார். அதோடு சாம்பிள்ஸ், லூப்ஸ் என்ற இசை துணுக்குகளை பயன்படுத்தவும், பிற கலைஞர்களின் இசை துணுக்குகளை அனுமதியுடன் பயன்படுத்துவதிலும் அவர் எந்த மனத்தடைகளையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அதை திருடு என்றும் நகல் என்றும் பலர் குறை கூறுவதுண்டு. ஆனால் இத்தகைய யுத்திகள் உலக இசையின் இன்றைய போக்கு, ஆய்வு கட்டுரைகளில் பிற நிபுணர்கள் வெளியிட்ட கருத்தை மேற்கோள்களாக குறிப்பிடுவதுபோல். அப்படி பயன்படுத்த முறையான அனுமதியும் அதற்கான பணத்தையும் செலுத்திதான் அவர் உபயோகித்திருக்கிறார், அல்லது இலவச, ரோயல்டி ப்ரீ  (Royalty Free) துணுக்குகளை பயன்படுத்துவார். முதலிலேயே கூறியதுபோல் இது ஒரு நிறுவனத்திற்கான செயல்பாடுகளோடு ஒத்திருக்கும் ஒன்று. பல உபரிபாகங்களை கொண்டு அதி நவீன இறுதிப்பொருளை தயாரிப்பதுபோல் அவரது இசை தயாரானது. முழுவதும் இதை பின் நவீனத்துவ செயல்பாடு என்று சொல்லிவிட முடியாது என்பதாலேயே இத்தகைய உதாரணங்களை முன்வைக்கிறேன். 

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று எல்லா மொழி பாடல்களிலும் அவரின் பாதிப்பு பிரதிபலிக்க தொடங்கியது. இசைதுரையில் யாரும் நுழையக்கூடிய சாத்திய வாசல்களை எல்லோருக்கும் திறந்துவிட்டது ஏ ஆர் ரஹ்மான். என்றுமே தனது படைப்புகளை உயர்வாகவும் தனது இந்தி படைப்புகளை இந்திய கலாச்சாரமாக, பண்பாட்டு கூறாக முன்னிறுத்தும் பாலிவூடின் இன்றைய இசைமுகம் ஏ ஆர் ரஹ்மானுடையது. இந்தியில் இன்று பெருகி வரும் திரையிசை சாராத இசை தொகுப்புகளுக்கு வழி ஏறபடுத்தித்தந்தவர் ஏ ஆர் ரஹ்மான். அதிலும் பெரிய ஒரு தனித்துவம் என்னவென்றால், ஏ ஆர் இசையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் கேட்சி (Catchy) வரிகளும் ரிதமும். ஒட்டு மொத்தபாடலையும் இந்த ஒன்றிரண்டு கேட்சி ரிதமை கொண்டே முழுவதையும் ரசிகன் உள்வாங்கிக் கொள்ள செய்துவிடுவார். அவரின் எல்லா பாடல்களிலும் இந்த கேட்சி வடிவம் முக்கிய அம்சம் வகிக்கும். இது விளம்பர இசையின் பிரத்தியேக யுத்தி. அவர் விளம்பர இசைகளில் சில காலம் பணி செய்ததில் கற்றுகொண்ட யுத்தி என்று சொல்லலாம். இன்னொரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார், "திரையில் பாடல்கள் வரும்போது எல்லோரும் தம் அடிக்கவோ, கழிவறைக்கோ செல்ல ஆரம்பித்துவிடுவார்கள், ஆனால் திடீரென ஒரு விளம்பர இசை டிவி நிகழ்ச்சியின் இடைவெளியில் வரும் போது நமது கவனம் சற்றென்று அந்த விளம்பரம் நோக்கி செல்வதை கவனித்திருக்கிறேன், குறிப்பாக குழந்தைகளின் கவனம் அந்த இசையின் பால் செல்லுவதையும் அந்த இசை ரசனையில் காட்டும் ஆர்வமும் என்னை சிந்திக்க வைத்தது. அந்த விளம்பர இசையின் நிணுக்கத்தை எப்படி சினிமாவிற்குள் கொண்டுவருவது என்று யோசித்திருக்கிறேன். அதை என்னால் செய்ய முடிந்தால் என் பாடல் திரையில் வரும்போது யாரும் வெளியில் செல்ல மாட்டார்கள் என்றுதான் ஒவ்வொரு பாடலையும் அமைக்கிறேன்", என்றார். இந்த அற்புத விஷயத்தை இன்று வரை மற்ற இசையமைப்பாளர்கள் புரிந்துகொண்டு முயற்சித்தாக தெரியவில்லை. அதுவே அவருடைய மிகப்பெரிய வெற்றி. 


ஆனால் டிரேண்ட் என்று வரும் போது தென் இந்திய திரை இசை ஒரு குறிப்பிட்ட தளத்தில் தேங்கி நிற்கவில்லை. ஏ ஆர் ரஹ்மானுக்குப் பிறகு யாரும் தனித்துவத்தோடு விளங்கவில்லை. இன்றைய நிலையில் இசை டிரேண்டை நிர்ணயிப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ஒரு பாடலின் வெற்றி, இரண்டு இசை கேட்கும் ஊடகங்களின் வளர்ச்சி. ரீமிக்ஸ் டிரேண்ட் ஒரு சில காலம் நிலைத்திருந்து. அதை முதலில் தொடக்கி வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான்தான் என்று நினைக்கிறேன், அவருடைய தொட்டால் பூ மலரும் பாடலின் வழி. ஆனால் அதை ரீமிக்ஸ் என்று சொல்ல முடியாது. அவர் வரிகளை மட்டும்தான் பயன்படுத்தினார்.  ஆனால் அதன்பிறகு பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது டிரேண்டாகிப் போனது. அந்த டிரேண்டை மீற முடியாமல் ரஹ்மானே அழகிய தமிழ் மகனில் ரீமிக்ஸ் செய்தார்.  பிறகு குத்து பாட்டுகளை பிரபலப்படுத்தியதன் மூலம் ஶ்ரீகாந்த தேவா குத்து பாட்டு டிரேண்டை ஆரம்பித்து வைத்தார். இது பல காலங்கள் தொடர்ந்தது. யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹரிஸ் ஜெயராஜின்  ஆர் என் பி (R & B) மற்றும் க்ரூவ் (Groove) டிரேண்ட் சில காலம் ஆக்கிரமித்தது. பிறகு மலேசியா கலைஞர்களின் குறிப்பாக யோகி பி மூலம் ஹிப் ஹோப் (Hip Hop) பிரபலமடைந்து அது சில காலம் நிலைத்தது.  இப்பொழுது விஜய் ஆண்டனியின் பாப் ரோக் டிரேண்ட் (Pop Rock). நாக்கு மூக்காவையும் ஆத்தி சூடியையும் எதில் சேர்ப்பது?  ராப் கூத்து (Rap Kootu)?

பரத்வாஜ் அவரது ஆரம்ப காலத்தில் அற்புதமான ரோக் இசையை தமிழில் அறிமுகப்படுத்தினார். ஆனால் தமிழ் இசை இப்பொழுதுதான் ரோக் இசைக்கு தயார் ஆகியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே அது அப்பொழுது ஒரு டிரேண்டாக நிலைக்காமல் போனது. இருந்தும் இப்பொழுது யாரும் அந்த திசையில் செல்லவில்லை. ரோக் இசைக்கு நல்ல வரவேற்பு தமிழில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அகி மியூஸிக் வெளியீட்டு சிறந்த தமிழ் ரோக் கலைஞர்களை நீண்ட காலமாகத் தேடி வருகிறேன். இன்னும் யாரும் கவனத்தை ஈர்க்கவில்லை. 


யுவனின் மெளனம் பேசியதில் ஒரு ரோக் இருந்ததாக நினைவு. ஹரிஸ் வாரணம் ஆயிரத்தில் அடியே கொல்லுதே என்று ரோக் இசையை பயன்படுத்தினார். ரோக் என்பதே உணர்வுகளின் உச்ச வெடிப்பு, தெரிப்பு.. எனக்கு வார்த்தை சிக்கவில்லை. அது ஒரு அழகிய வெறி. ஹரிஸிடம் அது மென்மையாகத்தான் வெளிப்பட்டது. அதற்காக அதை ஸோவ்ட் ரோக் (soft rock) என்று வகைப்படுத்த முடியாது. அதற்கு முக்கிய காரணம், நம்மில் ரோக் இசைக்கு பொறுந்தும் குரல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. என்னடி மீனாட்சியாகட்டும்  அல்லது கலைஞன் கட்டுக்காவல் விட்டோடும் காற்றை போல என்ற இளையராஜாவின் கலைஞன் படப்பாடல் ஆகட்டும் ஸ்.பி பாலசுப்ரமணியத்தால் அவைகள் நிறைவை எய்தவில்லை. இல்லையென்றால் அது சிறந்த ரோக் அல்லது ஹெவி மெட்டலாக (heavy Metal) ஒலித்திருக்கூடும்.(ஆனால் முன்னம் ஒரு நாள் அந்த அன்னை மடியில் என்ற இடை செருகல் கலைஞனில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்). ஆனால்  போட்டு வைத்த காதல் திட்டம் என்ற சிங்காரவேலன் பாடலில் ரோக் அல்லது ஹெவி மெட்டலுக்கு சிறந்த குரலாக கமலஹாசனையும் மனோவையும் ரசிக்கமுடிகிறது. 
கார்த்திக் ராஜா அவரது மாணிக்கும் மற்றும் டும் டும் டுமில் ரோக் போக் (Rock Folk) என்று சொல்லுமளவு ஒரு வித்தியாசமான முயற்சியை அறிமுகப்படுத்தியிருப்பார். ஏனோ அந்தப்பாடல்கள் அதிக பிரபலமடைந்தும் அவை ஒரு டிரேண்டை உருவாக்கவில்லை. டும் டும் டுமில் ரகசியமாய் பாடலில், குடைக்குள் மழை பின்னனியில், அச்சமுண்டு அச்சமுண்டில் கண்ணில் என்று ஒரு பாடல், இவையெல்லாம் நியூ ஏஜ் (New Age) வகையை சேர்ந்த வித்தியாசமான இசை. கார்த்திக் ராஜாவின் நுட்பமான பாணி. கார்த்திக ராஜாவும் ஆளுமைமிக்க ஒரு பாணியை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்த்த வேலையில் அது நடக்காமல் போனது. திரையிசை அவருக்கான களமாக இல்லாமல் இருக்கலாம். 
இன்று இசையை பலரும் ரசிப்பது, கணிணியில் அல்லது எம்.பி 3 சாதனங்களில், அதையெல்லாம் மீறி கைதொலைப்பபேசியில் ரிங்டோன், காலர் டோன் என்ற வடிவத்தில் பதிவிரக்கம் செய்து கேட்பது. அதற்கு முக்கியமாக இருக்க வேண்டிய கட்டாயங்களில் ஒன்று பீட்ஸ் (beats). ஹர்மொனி, மெலோடி, என்று எதுவும் இந்த சாதனங்களில் ரசிக்க முடியாத இசை அம்சங்கள். அந்த தேவைகளை முன்வைத்து அதற்கு உகந்த சில டிரேண்டை இந்த டிஜிட்டல் டெக்னாலாஜி நிர்ணயித்துக்கொள்கிறது. அந்த உடன்பாட்டோடுதான் பெருவாரியான இசை வடிவங்கள் இப்பொழுது வெளிவருகிறது. விஜய் அந்தோனி, யுவன், ஹரிஸ் இதை உணர்ந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆக முன்பு போல் தனிநபர் பாணியை முன்னிறுத்தி இப்பொழுது ஒரு மாற்றத்தை நாம் எதிர்பார்க்கமுடியும் என்று தோன்றவில்லை. இன்று அதன் ஆளுமை டிஜிடலின் கரங்களில். கலையை அதன் ஆளுமைக்குள் கொண்டுவந்திருக்கிறது. இன்னொரு தனிநபர் பாணி ஆளுமை தென்னிந்திய திரை இசையில் அல்லது இந்திய திரை இசையில் இனி உருவாவது நிச்சயம் அசாத்தியமே. அதற்கான நிர்பந்தங்களும் தெரியவில்லை. காலம் முடிவு பண்ணலாம்.

Saturday, November 21, 2009

எம். நஸிர்

என் இசை உலகின் பல்வேறு வாசல்களையும் சாத்தியங்களையும் திறந்துவிட்டது எம். நஸிரின் (M.Nasir) நட்பும் அவரது இசையும்.


இசையின் மீது தீராத ஒரு தேடல் உருவாகி நான் பயணித்துக் கொண்டிருந்த தருணம் அது. 19 அல்லது 20 வயதிருக்கும். ஒரு முறை டிவியில் அவரின் 'மெந்தெர செமெரா பாடி' (Mentera Semerah Padi) என்ற பாடலின் வீடியோ கிளிப்பை பார்த்து அசந்து விட்டேன். இந்தப் பாடலின் வரிகள் தேசத்தையும் பண்பாட்டையும்
நேசிக்கும் ஒரு மலாய் மாவீரனின் மனோநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. சரியாக அர்த்தப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்படி சொல்ல காரணம் அவரின் பாடல்களில் மொழி புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அவர் பிரயோகிக்கும் வார்த்தை அதிகம் புலக்கத்தில் இல்லாத, அவர்களின் கலாச்சார பின்புலம் இல்லாது அர்த்தப்படுத்த முடியாத வார்த்தைகளாக இருக்கும். ஆனால் என்னை கவர்ந்த அம்சம் அதுவல்ல, நான் கேட்டறியாத விநோதமான இனிமையான இசை.

மலாய்காரர்களின் இசையில் நாம் ஒலியமைப்பையும் இசையமைப்பின் நுட்பத்தை அதிகம் எதிர்பார்க்கமுடியாத அளவு சாதரமாணதாகத்தான் இருக்கும்.  அவர்களுடைய இசை பெரும்பாலும் மேலைநாட்டின் ரோக், போப் வகை கலாச்சாரங்கள் சார்ந்தே இருக்கு. ஆனால் எம் நஸிரின் இசை இந்த எல்லைகளை   மீறிய மெட்டும், இசையும்,  ஆன்மாவை கரையவிடும் குரலும் தான் அதன் பலம் என்று நினைக்கிறேன் . சில குரல்களுக்கு மட்டும் அந்த ஆன்மீகதத்தன்மை உண்டு. இளையராஜா, பாம்பே ஜெயஶ்ரீ அவர்களை குறிப்பிடலாம் (என் இசைவிருப்பத்தின் அடிப்படையில்). அத்தகைய பிரபஞ்ச நாதம் எம் நஸிருடைய குரல்.  அந்தப் பாடலை டிவியில் பார்த்தவுடன் இசை நிலையத்தில் அதிகம் சிரமப்படாமல் அடைய பெற்றேன் அந்த அளவுக்கு அவர் பிரபலமானவராக இருந்தார். அந்த இசை தொகுப்பின் பெயர் 'சங்கோங் மெண்டோனான்' (Canggung Mendonan). சங்கோங் மெண்டோனான் என்றால் திக்கற்ற  யாத்திரிகன் என்றும் சொல்லலாம். இதில் எல்லா பாடல்களும் அடர்த்தியான வரிகளை கொண்டிருந்தது. அந்த இசை தொகுப்பை கேட்டபோது ஒன்று மட்டும் தெளிவாக உணர முடிந்தது. தமிழ் பாடல் வரிகள் எட்டாத தூரங்களில் எம் நஸிரின் பாடல்கள் இருக்கிறது என்று. நமது பாடல்கள் இன்னமும் இசைக்கும் மெட்டுக்கும் தலைவணங்கி போகும் நலிந்த வரிகளோடு இருப்பவை, ஆனால் எம் நஸிரின் பாடலில் ஒவ்வொரு வரியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் வேறொரு இலக்கி படிவமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு கவிஞராகவும் நவீன ஓவியத்தில் கல்லூரி படிப்பு முடித்தவராக இருந்தார் என்பதால் என்றும் சொல்லலாம்.  அவருடைய பெரும்பாலான பாடல்களை அவரைத்தவிர அவரது ஆஸ்தான கவிஞராக இருந்த லோலோக் (Loloq) எழுதினாலும் எம் நஸிரின் பாடல்களில் மட்டும் வரிகள் தனித்துவம் பெற அதுவே காரணம்.


அவருடைய அனாக் அனாக் கீதா (Anak Anak Kita), நமது குழந்தைகள் என்ற தலைப்பிலான பாடலை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.  அதில் ஒரு வார்த்தை வரும் 'குராங் அஜார்' என்று. அதாவது தவறான வளர்ப்பு என்று சொல்லலாம். மலாய்காரர்களின் குழந்தைகள் தெருவில் வாகனங்களுக்கு பயமில்லாமல், காணாமல் போய்விட கூடும் என்ற பயமில்லாமல் திரிந்து கொண்டிருக்கும். யாருக்கும் பயப்படாமல் அடங்காமல் நடக்கும் ஒரு போக்கு அவர்கள் குழந்தைகளுக்கு அதிகம். வங்கிகளுக்கோ பெரிய நிறுவனங்களுக்கு பெற்றோர்களுடன் செல்ல நேரிட்டால் எந்த கூச்சமும் அச்சமும் இல்லாமல் எல்லா பொருள்களையும் எடுப்பதும், சேதப்படுத்துவதும் சர்வ சாதாரணமாக நிகழ்வது, ஆனால் அவர்களின் பெற்றோர்கள் கொஞ்சம் கூட கண்டிப்பு, அதட்டல் என்று எந்த சலனும் இல்லாமல் இருப்பார்கள். இது ரொம்பவும் விநோதமானது.  தெருவில் வேகமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ வரும் வாகனங்கள் பற்றி எந்த கவலையும் இல்லாது விளையாடும் பிள்ளைகளை பற்றி எந்த பிரக்ஞைகளும் அற்று இருப்பார்கள் பெற்றோர்கள். அப்படி விபத்து நடந்து விட்டால், அதிலும் வேறு இனம் விபத்துக்கு காரணமானதாக இருந்தால், அதுவும் அந்தப் பகுதியில் மலாய்காரர்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்வின் கடைசி தருணம் இது என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். அவர்கள் குழந்தைகளின் மேல் அதிகம் அக்கறையில்லாதவர்கள் போல் தெரிய முக்கிய காரணம், அவர்களுக்கு குறைந்தது 10 குழந்தைகள் இருக்கும். இரண்டு இருந்தாலே சமாளிப்பது சிரமம், பத்து இருந்தால்? விட்டுவிட வேண்டியதுதான், தலைவலி குறையும். ஆனால் அவர்களிடம் வளர்ப்பை பற்றி சொல்லிவிட்டீர்கள் என்றால் அவ்வளவுதான், அது ஒரு மிகப்பெரிய அவமானமாக கருதுவார்கள். அதிலும் இந்த குராங் அஜார் என்ற வார்த்தையை தங்கள் இனத்தை அவமானப்படுத்தும் ஒரு கெட்டவார்த்தையாகவே நினைப்பவர்கள்.  ஆனால் எம் நஸிர் தானே எழுதி பாடிய அனாக் அனாக் என்ற பாடலில் அதை பயன்படுத்துவார். அந்த பாடல் தொடக்கம்,
'நமது குழந்தைகளா அது,
அம்மணமாக வெயிலில் திரிந்தபடி
நமது பயத்தைப் பற்றி பாடுபவர்கள்?

நமது குழந்தைகளா அது
பண்பாட்டை மறந்த
நமது பிழைகளை சுமந்துக்கொண்டு
திரிவது?

அவர்களை கூப்பிடுங்கள்
தவறான வளர்ப்பைபற்றி
அப்பா அவர்களுக்கு சொல்லித்தர விரும்புகிறேன்
இனிமேலும் அவர்கள்
பொய்யானவர்களிடமோ
சினிமாகாரர்களிடமோ
தொழிலதிபர்களிடமோ
பாழடைந்த அரசியல்வாதிகளிடமோ
புனித நூல்களை ஏந்தியவர்களிடமோ
மனோவியல் நிபுணர்களிடமோ
அந்த கடவுள்களிடமோ
அடிமைகளாக வாழாமல் இருக்க

ஆனால் இந்த பாடல் அல்லாமல் எல்லா பாடல்களிலும் என்னை முதலில் கவர்வது, இல்லை இல்லை எப்பொழுதும் கவர்வது இசையும் அதன் நுணுக்கமும்தான். அந்த வகையில் இந்த பாடல் நமது உணர்வுகளின் எல்லா வாசல்களையும் திறப்பது அதன் இசையால்தான். இதுவரை கமர்ஸியல் தளத்தில் யாருமே பயன்படுத்தாத மலாய்காரர்களின் கிராமிய இசையையும் இசைக்கருவிகளையும் அறிமுகப்படுத்திய விதம். முன்பே கூறியது போல் அதையெல்லாம் மீறி நிற்கும் அவரது உச்சஸ்தாயில் அமைந்த அவரது குரல். குரானையும் ஹசானையும் இனிமையான குரலில் கேட்கும் போது ஏற்படும் ஒரு ஆன்மீக உணர்வு அவரது குரலில் பிரதிபலிக்கும் (தயவு செய்து மலேசியாவில் பாடப்படும் ஹசானோடு ஒப்பிட்டுப்பார்க்காதீர்கள்).


அவரது காதல் பாடல்கள் பலவும் மிகவும் பிரபலமடைந்தவை, அதன் பிரபலத்தைப்பற்றி அவரிடம் ஒருமுறை நான் பேசும்போது சொன்னார்,  மேலோட்டமாக பார்த்தால் எல்லா பாடல்களும் காதலைப்பற்றியும் காதலியைப்பற்றியும்தான் இருப்பதாக தோன்றும் ஆனால் நான் பாடுவது இறைவன் என்ற காதலனைப்பற்றி என்றார். அதுவரை எனக்கு தெரியாது அவருடைய பாடல்கள் பெரும்பாலும் சூபிஸத்தை தழுவியது என்று.  சூபிஸம் மலேசியா இஸ்லாமிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு இருந்தது. அவர்பாடல்களை பற்றி அவர் வெளிப்படையாக பேசாததற்கு அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் அவருடைய எந்தப் பாடல்களைப் பற்றியும் அவர் உயர்வாக பேசியதும் இல்லை.  அவருடய சிறந்த பாடல்களின் தொகுப்பு வெளியீடு கண்டபோது,  அவருடைய நிறுவனம் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. மிகப் பெரிய ஸ்டார் ஓட்டலில். அந்த இசைதொகுப்பில் இரண்டு பாடல்கள்தான் புதிய பாடல்கள் அதில் ஒன்று ஒரு சூபி ஞானி ஒருவருடைய வரிகளை கொண்டு, கடவுளை நான் மசூதியில் தேடினேன், கோவில்களில் தேடினேன், காடுகளில் தேடினேன், கலைத்துப்போய் வீடு வந்தபோது, அவர் என் வீட்டில் இருப்பது கண்டு பயந்து போனேன் அதுவும் அனல் கக்கும் சிவந்த கண்களுடன் அமர்ந்திருந்தார் என்று இவருடைய பாடல் வரிக வரும். அடுத்த பாடல் அண்டாலுஸிய என்ற இஸ்லாத்தின் பொற்காலத்தில் இருந்த ஒரு நகரைப்பற்றிய பாடல். அந்த பொற்காலம் இனி வருமா என்று எதிர்பார்ப்புகளை முன்வைக்கும் பாடல்.  இதன் வெளியீட்டில் கலந்துகொண்ட ஒரு நிருபர், 'ஏன் உங்களுடைய பாடல்களில் நமது பாரம்பரிய மலாய் இசைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?' என்று கேட்டார். அரங்கமே அவரது பதிலுக்கு காத்திருந்தது. அப்பொழுது அவரது 5 வயது மகன் இங்கும் அங்கும் ஓடிகொண்டும் குதித்துக்கொண்டும் இருந்தான். அந்த சமயம் எல்லோருக்கும் தயாராய் இருந்த உணவை பார்த்து உற்சாகமாக,  'சாப்பாடு, சாப்பாடு' என்று கத்தினான். அந்த நிருபர் கேள்வியை நிறுத்தவும் இந்த பையன் கத்தினதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. அவர் சிரித்தபடி 'என் பையன் பதில் சொல்லிவிட்டான், - சாப்பாட்டிற்கு' என்றார். எல்லோரும் சிரித்துவிட்டு அவரது தொடர்ச்சிக்கு காத்திருந்தார்கள். ஆனால் அதுதான் அவரது விடையாக இருந்தது அவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவே இல்லை. அந்த நிருபர் அப்படி கேட்க காரணம் அன்றைய சூழலில் மலாய் இசை மேலை கலாச்சாரம் சார்ந்ததாகதான் இருந்தது. எம் நஸிரை தவிர மலாய் இசையின் மரபை யாரும் அவர்களுடைய இசையில் பயன்படுத்தியதும் இல்லை, அதன் பிறகு பயன்படுத்தியவர்கள் இவர் அளவு புகழ் பெற்றதும் இல்லை.

52 வயதாகும் எம் நஸிர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். பிற்காலத்தில் மலேசியாவில் குடியுரிமை பெற்றார். அவரது தனிப்பபாடல்கள் எல்லாம் சூபிஸத்தையும், மலாய்க்கார்களின் கலாச்சார வேர்களை முன்னிறுத்துபவன. தாகூரின் வாசகர், இளையராஜாவின் ரசிகர் என்று இந்தியர்களுக்கு நெருக்கமாக இருப்பதாலேயே சில சமயங்களில் அவரது இசை இந்திய இசைப்போல் இருக்கிறதோ என்று நினைத்ததுண்டு. ஆனால் அவர் ஒருமுறை என்னிடம் கூறினார் அரபியர்களின் இசையும் இந்திய இசையும் அல்லாது மலாய்க்காரர்களுக்கு என்று சுய இசைவடிவம் கிடையாது என்று. அவர்களுடைய இசைக்கு ஸ்வர வரிசைகள் கிடையாது. தமிழ் நாட்டு கிராமிய இசைப்போல் முற்றிலும் செவிவழி வளர்ந்து வந்த ஒரு இசைக்கலை அவர்களுடையது. எம் நாஸிரின் இசையில் இந்திய அரேபிய இசைகளுடன் ஸ்பானிஸ் இசையும், லத்தின் இசையும் கலந்திருக்கும்.  அவரது இசையில் மேலும் ஆர்வம் ஏற்பட அவருடை எல்லா பழைய இசை தொகுப்புகளையும் வாங்க ஆரம்பித்தேன். அவரது இசை மலேசிய இசைக்கலாச்சாரத்திற்கு புது அர்த்தங்கள் கற்பித்தது. அதன் தொடர்ச்சியாக ஜைனால் அபிடின், ரம்லி சாரிப் என்று மலாய் கலாச்சார இசை முயற்சிகளில் பலரும் வெற்றிகரமாக ஈடுபட தொடங்கினர்.

நான் அவருடைய இசையில் பித்து முற்றி அவரது ரசிகர் மன்றத்தில் இணைந்தேன். அது முற்றிலும் அவரது மேற்பார்வையில் நடந்து வந்த ரசிகர் மன்றம். நான் ஒருவன் மட்டுமே இந்தியன். எனது பல்கலைக்கழக படிப்பின் போது விடுமுறையில் அவரது நிறுவனத்தில் இசைத்துறை சம்பந்தப்பட்ட  தொழில் விஷயங்களை கற்றுக்கொள்ள அனுமதி கேட்டு எழுதியிருந்தேன். ஆச்சரியமாக அனுமதியும் வந்தது. எனது இசைதுறை வாழ்க்கை அங்குதான் தொடங்கியது.  இளையராஜாவைப்போல் ஏ ஆர் ராஹ்மானைப்போல் ஆன்மிகத்தை தீவிரமாக பிடித்துக்கொண்டு இசையுலகில் அதன் தரிசனத்தை வெளிக்கொணர்ந்தவர். அதையெல்லாம் தாண்டி அவரிடம் நான் பிரமித்த ஒரு விஷயம் இருந்தது.  அவரது ரசிகர் மன்றம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பெருநாளின் போது திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும். அதில் பிரபலங்கள் பலர் கலந்துக்கொள்வார்கள். அவர்களுடன் அந்த விருந்தில் கலந்துக்கொள்ள ரசிகர்களும் ஒரு பிரமுகர்கள் போல் அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு எந்த தடையும் விதிகளும் கிடையாது. சில சமயங்களில் அவர் அந்த விருந்தில் பாடி, ரசிகர்களுடன் ஆடி கலைஞன் ரசிகன் என்ற இடைவெளியை தகர்திருக்கிறார். ரசிகர் மன்றத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு இலவச பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளது. எப்படி பாடல் இயற்றுவது, இசை ஆல்பங்கள் எப்படி தயாரிப்பது, இசையமைப்பது எப்படி என்று தரமான கற்பித்தலும் கலந்துரையாடலும் இலவசமாகவே நடத்தப்படும். ரசிகர்கள் அவரின் ரசிக மன்ற அடையாள அட்டையின் மூலமாக கழிவு விலையில் அவருடைய சிடிக்களையும், கலைநிகழ்வுக்கான டிக்கெட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். அதோடு 3 மாதத்திற்கு ஒரு முறை சிறிய இதழும் நமது விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவருடைய ரசிகர் மன்றத்தில் இணைய வெறும் 30 மலேசியா ரிங்கிட் மட்டும்தான். ஏறக்குறைய 350 இந்திய ரூபாய் மட்டும்தான், வருடத்திற்கு.  அவருடன் இருந்த காலங்களில் மட்டும்தான் ரசிகன் என்பவன் ஒரு கலைஞனால் எப்படி போற்றப்படுகிறான் என்ற விநோதமான முரண்பாடான நிகழ்வை அனுபவித்திருந்தேன். அவரது ரசிகர் மன்றத்தை எல்லோரும் போல் ரசிகர் மன்றம் என்று பெயரிடவில்லை மாறாக எம் நஸிர் நண்பர்கள் மன்றம் என்றுதான் பெயரிட்டுள்ளார்.  நான் அங்கு வேலை செய்யும் பொருட்டு எழுதிய கடிதத்தில், இசைதுறை சார்ந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் பல்கலைகழக மாணவன், எனது விடுமுறையின் போது வேலையுடன் சேர்ந்த ஒரு பயிற்சியாக இதை பெற விரும்புகிறேன். அதற்கான எந்த வருமானமும் உங்களிடமிருந்து எதிர்பார்க்காமல் ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக கருதி எனது எதிர்கால கனவுகளுக்காக இதை மேற்கொள்ள விரும்புகிறேன் என்று எழுதியிருந்தேன். எனது பல்கலைகழக்கத்தின் டீனிடம் பரிந்துரை கடிதம் தயார்செய்து அதில் அவர் கையொப்பம் ஒன்றை மட்டும் போட்டு பல்கலைகழத்தின் முத்திரையை பதிக்க கேட்டுக்கொண்டேன். அவர் ஒரு விநேதமான நபராக பல்கலைகழகம் முழுவதும் அறியபட்டிருந்தார். பாடம் நடத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் படித்துக்கொண்டே இருப்பார். நடக்கும் போதும், சாப்பிடும் போதும் என்று எல்லா காலங்களிலும் அவரது முகத்துக்கு நேர் ஒரு புத்தகம் இருக்கும். தட்டில் என்ன உணவு எதை சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்க மாட்டார். எனது கடித்ததை பார்த்து ஒரு முறை என் முகத்தை பாரத்துவிட்டு எந்த கேள்வியும் இல்லாமல் கையொப்பமிட்டு ஸ்தாம்பிட்டு கொடுத்துவிட்டு புத்தகத்தில் மூழ்கிப்போனார். ஒருவேளை அந்த தருணம் அவரது வாசிப்பிற்கு நான் தடையாக இருப்பதாக எண்ணி என்னை சற்றென்று தவிர்க்க அந்த அனுமதியை தந்ததார் போலும்.

நான் எம் நஸிரின் நிறுவனத்திற்கு வேலை செய்ய இரண்டு மின்சார் ரயில் எடுத்து, பிறகு இருபது நிமிடம் நடந்தே செல்வேன். ஒரு நாளைக்கு என்னுடைய மதிய உணவையும் சேர்த்து எனக்கு ஏறக்குறைய 10 மலேசிய ரிங்கிட் செலவு ஏற்படும். அம்மா மட்டும் வேலை (அப்பா, எனக்கு 5 வயதிருக்கும் போது இறந்து விட்டார்), நான் பல்கலைக்கழகம் போனபோதுதான் தங்கையும் வேலைக்கு போக ஆரம்பித்திருந்தார், மேலும் படிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி (கொஞ்சம் அடம்பிடித்து). அந்த சூழ்நிலையில் நான் விடுமுறையில் வழக்கமாக எங்காவது சென்று வேலை செய்து திரும்பவும் பல்கலைகழகம் செல்லும் முன் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொள்வேன் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, இப்படி சம்பளம் பெறாமல் இசை ஆர்வத்தினால் பிரயோசனம் அற்ற வேலைக்கு செல்வதோடு தினமும் எனது செலவுகளுக்கு அவர்களிடம் எதிர்பார்த்தது அவர்களுக்கு பெரும் பாரமாக இருந்தது. தினம் தினம் அதற்காக அம்மாவிடம் திட்டு.

ஒரு முறை எம் நஸிரின் தம்பி மதிய உணவின் போது நான் இங்கு வேலைக்கு வர எவ்வளவு செலவாகிறது, மதிய உணவிற்கு எவ்வளவு செலவாகிறது, குடும்பம் என்று எல்லாவற்றையும்  போகிற போக்கில் கேட்டார். அவர்தான் அந்த நிறுவனத்தின் மேலாளர். எம் நஸிரின் மனைவி நிறுவனத்தின் இயக்குனர். அது ஒரு சாதாரண உரையாடலாகவே இருந்தது. ஆனால் அதன் நோக்கம் மூன்று மாதங்கள் நான் என் பல்கலைக்கழக விடுமுறை முடிந்து இவர்களிடமிருந்து விடைபெறும்போதுதான் தெரிந்தது. இந்த மூன்று மாதத்திற்கும் நான் செய்த செலவுகளை நான் அங்கு பணிபுரிந்ததற்காக (இல்லை உதவியாக இருந்ததற்காக) ஊதியமாக தந்தார்கள், அதற்கு அவர்களுக்கு எந்த அவசியமும் இல்லாதிருந்தும்.

 இந்த எனது மூன்று மாதகால அனுபவம்தான் எனக்கு வார்னர் மியூஸிக் நிறுவனத்தில் வேலைகிடைக்கவும், இந்திய இசை மேதைகளான இளையராஜா, எ ஆர் ரஹ்மான் அவர்களின் நட்பை பெறவும் பெரும் காரணமானது. அதுவும் வார்னரின் நேர்முகத்தேர்வில் பல நூறு பேரில் நான் ஒருவன் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதில் முதல் காரணம் எம் நஸிர் நிறுவனத்தில் வார்னர் எதிர்பார்க்கும் காப்புரிமை, ராயல்டி சம்பந்தமான வேலையிலும் நான் பயிற்சி பெற்றிருந்தேன் என்பதும், என்னை பற்றி எம் நஸிர் நிறுவனத்தில் விசாரித்தபோது நல்ல விதமாக முன்மொழிந்திருக்கிறார்கள் என்பதும்தான். அவருடைய ரசிகன் என்ற தகுதி மட்டுமே என்னை இந்த உயரத்துக்கு வர உதவி செய்திருக்கிறது என்பதும் அதற்கான வாய்ப்புகளை அவர் எப்பொழுதுமே திறந்த மனத்துடன் அனுமதித்திருக்கிறார் என்பதும் இன்றுவரை எந்த கலைஞரிடமும் நான் ஒப்பிட்டு பார்க்கமுடியாத ஒரு விஷயம். (இளையராஜா நீங்கலாக, அதுவேறு அவருடனான எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் போது எழுதுகிறேன்).  அவருடைய நிறுவனம் இன்று வாய்ப்புகள் தேடி அலையும் எத்தனையோ திறமையான மலாய்கலைஞர்களின் புகலிடமாக உள்ளது.  ரசிகன் என்பவன் அவருடைய இசை பயணத்தில் சக பயண நண்பனாக இருந்துவருபவனாகவே அவர் நினைக்கிறார். மலாய் இசைத்துறையில் மிகவும் பிரபலமான மற்றொருவர் ஜமால் அப்டில்லா. அவர் ஒரு காலகட்டத்தில் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி வாழ்க்கையையும் அவர் அதுவரை சம்பாதித்திருந்த புகழையும் இழந்துவிட்டிருந்தார். சமூகமே அவரை கைவிட்டிருந்தது. அவரை மீண்டும் அதே புகழின் உச்சியில் கொண்டு நிறுத்தினவர் எம் நஸிர். ஜமால் அந்த நன்றி உணர்வை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.


அவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும்போதுதான் மலாய் கலையுலகில் எம் நஸிருடைய உண்மையான ஆளுமையை என்னால் உணரமுடிந்தது. சுடீர்மான என்ற ஒப்பற்ற மலாய் கலைஞன் தொடங்கி, அமி சேர்ச், அவி, எலா, என்று எல்லா புகழ்பெற்ற கலைஞர்களின் புகழ்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் இவருடையது.  மலாய்பாடல்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றிருந்த இந்தியர்களான எலி கேட்ஸ் (Alley Cats) இவருடைய பலபாடல்களால்தான் புகழ்பெற்றனர்.  அமி சேர்ச் எவி மெட்டல் கலைஞர், எலி கேட்ஸ் ரேகேய் கலைஞர், எலா பெண் ரோக் கலைஞர், அவி ஒரு போப் கலைஞர். அவர்கள் எல்லோருக்கும் எந்தப்பாடல் புகழ்தரும் எந்த மெட்டு எந்த இசைப்பிரிவுக்கு வெற்றியைதரும் என்று கச்சியதமாக உணர்ந்திருந்தார். இசை தயாரிப்பிலும் அந்த அந்த இசைப்பிரிவுக்கு ஏற்றாற்போல் இசைநுணுக்கங்களை பயன்படுத்தும் கலை அறிந்தவர். இசை தயாரிப்பு என்பது இந்தியர்கள் நினைப்பது போல் பணம் முதலீடு செய்யும் துரையல்ல, அது முற்றிலும் வேறு ஒரு துரை. அதைப்பற்றி பின்னாளில் எழுதுகிறேன்.  இந்திய இசைத்துரையில் இந்த அடையாளத்தை அறிமுகப்படுத்தியது எனது அகி மியூஸிக்தான், இளையராஜாவின் குரு ரமண கீதம் வாயிலாக. இதை இங்கு குறிப்பிடுவதால் அதிகம் கர்வம் என்று நினைக்கவேண்டாம். வேறு யாரும் சொல்லப்போவதில்லை. காரணம் ஏ ஆர் ரஹ்மானுக்கே அவரது வரலாறு (காட்பாதர்) திரை இசைதொகுப்புக்கு, 'இசை தயாரிப்பு ஏ ஆர் ரஹ்மான்' என்று முதலில் அடையாளப்படுத்தியது அகி மியூஸிக்தான். இப்பொழுது அவரது வெளியீடுகளில் எல்லாவற்றிலும் அந்த வார்த்தை தவறாமல் இடம் பெறுகிறது. அந்த அலையில் இந்த உண்மை அடித்து செல்லப்பட்டுவிடும்.


சரி மீண்டும் எம் நஸிரிடம் வருவோம். நாட்டில் முதன்மையில் இருக்கும் பாடலாசிரியராக, இசைதயாரிப்பாளராக இசை கலைஞனாக அவர் இருக்கிறார் என்றும் அதிகமான ராயல்டிகளை பெறும் முதன்மை நபராகவும் மலேசியாவில் இருந்திருக்கிறார் என்றும் அவரிடமும் வார்னரிலும் வேலை செய்யும் வரை நான் அறிந்திருக்கவில்லை. ஹாங்காங்கில் அவருடைய சில பாடல்களை சீனத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஈகல்ஸ் என்ற மேலை ரோக் குழுவின் ஒரு கம்போஸருடன் சேர்ந்து ஆங்கில பாடலும் பதிவு செய்திருக்கும் முதல் மலாய் கலைஞர்.  அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு பன்முக கலைஞராகவும் விளங்கி வந்துள்ளார்.  ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் ஒரு ஓவியர், கவிஞர் என்பதோடு, அவர் ஒரு திரை இயக்குனராக, இசையமைப்பாளராக, இசை தயாரிப்பாளராக, நடிகராக, பாடகராக, பல்வேறு நிலைகளில் அவரது படைப்பு மனம் செயல்பட்டிருக்கிறது. ஒருமுறை அவரது கவிதை வாசிப்பின் போது, ஒரு நிருபர் அவரிடம் மகாதீரை பற்றி ஒரு கவிதை வாசிக்க முடியுமா என்று கேட்டார், அதற்கு எம் நஸிர் சிரித்துக்கொண்டு யார் மகாதீர் என்று கேட்டுவிட்டார். இந்த கேள்வி நமக்கு விட்டு செல்லும் விளக்கங்கள் ஆயிரம் ஆனால் அது மிகப்பெரிய தேசச் சர்ச்சையாகி, அரசாங்கம் அவருடைய பாடல்கள், திரைப்படங்கள் என்று அவரின் பங்களிப்பு உள்ள எதையும் இனி மலேசிய தொலைகாட்சிகளிலோ, வானொலிகளிலோ ஒலிபரப்ப தடைவிதித்தது. அப்பொழுது வரை யாரும் உணரவில்லை, மலேசியா இசையிலும் மலாய் இசையிலும் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தில் அவரின் பங்களிப்பு இருந்தது என்று. அவருடைய இசையமைப்பாலும், பாடல்வரிகளாலும், இசைத்தயாரிப்புகளினாலும் நாட்டின் முன்னனி பாடகர்களாக கலைஞர்களாக இருந்த அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டனர். அவருடைய பங்களிப்பு இல்லாத இசை எங்கிருக்கிறது என்ற ஒரு தேசபயத்தை மலாய் கலைஞர்கள் உணர ஆரம்பித்தார்கள். அரசாங்கத்திடமும், எம் நஸிரிடமும் வேண்டுதல்களை எல்லா கலைஞர்களும் முன்வைத்தனர். எம் நஸிரிடம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை ஒன்றுதான். பிரதமரிடம் மன்னிப்பு கேட்டுவிடுங்கள் என்பதுதான். அவரும், பிரதமரை அவமானபடுத்தும் நோக்கில் நான் அந்த வார்த்தையை சொல்லவில்லை அப்படியொரு அவமானத்தை அது அவருக்கு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்னார். அதன் பிறகு உடனடியாக அவரின் படைப்புகள் மீதிருந்த எல்லா தடைகளையும் அரசாங்கம் மீட்டுக்கொண்டது. ஆனால் இந்தியர்கள் மத்தியில் இன்றும் மகாதீரையே யார் என்று கேட்டவர் என்றுதான் எம் நஸிர் என்ற ஒப்பற்ற படைப்பாளன் அறியப்படுகிறான்.

Thursday, November 19, 2009

சபிக்கப்பட்டவன்

என் நிலைகண்டு
உடன் இருப்பவர்கள்
கேலியாக சிரிக்கிறார்கள்
சிலர் தூற்றுகிறார்கள்
பலர் ஏளனப்பார்வையால்
கடந்து செல்கிறார்கள்

என் இருப்பை மறுத்தவர்கள் சிலர்
என்னிடம் வந்து
கோரிக்கைகள் வைக்கிறார்கள்
காணிக்கை தருகிறார்கள்
ஆறுதல் பெறுகிறார்கள்
அழுகிறார்கள்

வேரு சிலர்
வெறுக்கிறார்கள்
கோபம் அடைகிறார்கள்
காரணம் அவர்களுக்கு தான் தெரியும்

தொலைந்துவிடலாம் என்று
பல முறை நினைத்ததுண்டு

நினைப்பதை தவிர
வேறென்ன செய்யமுடியும்
கல்லாக சபிக்கப்பட்டவனால்

நண்பர் யுவராஜனுக்கு

"உங்கள் பதிவை வரவேற்கிறேன்.ஆனால் மேலோட்டமாக சொல்லி நகர்ந்து விடுகிறீர்.இன்னும் விரிவாக உங்களுக்கு பிடித்ததை/பிடிக்காததை எழுதினால் நலம்.ஜெயமோகனின் தேர்வு பற்றிய கட்டுரைக்கு பெருமாள் முருகன் காலசுவடுவில் மாற்று கருத்து வெளியிட்டுள்ளார்.மாற்று கருத்துக்கள் சிந்தனை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.- யுவராஜன்"
நன்றி யுவராஜன். 


பலர் எனக்கு எழுதுவது மகிழ்ச்சியாய் இருந்தாலும் யாருக்கும் நான் பதில் அனுப்புவது இல்லை. மன்னிக்கவும். எல்லோருக்கும் இதன் மூலம் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் யுவராஜனின் கருத்து சில கேள்விகளை முன்னிறுத்துவதால் இதற்கு மட்டும் பதில் அளிக்க நினைக்கிறேன்.  


எனது வலைப்பூ தொடங்கும் எண்ணம் தற்செயலாகவும் விளையாட்டாகவும் எழுந்த ஒன்று இருந்தாலும் (என்னுடைய மெக் மடி கணிணியில் முரசு தமிழ் அடங்கியுள்ளது எனவும் அதை எப்படி பயன்படுத்ததுவது என்று முத்துநெடுமாறான் சொல்லிய அடுத்த நிமிடமே வலைப்பூ தயாராகி விட்டது. அவருக்கு எனது நன்றி).


நான் எழுத தொடங்கும் முன்பு சில வரையரைகளை எனக்கு நானே வகுத்துக்கொண்டேன். அதில் முதலாவது எந்த காரணத்திற்காகவும் எனக்குப் பிடிக்காததை எழுதுவதில்லை என்பதும் யாரையும் விமர்சனம் செய்யப்போவதில்லை என்பதும்தான். நண்பர் நவீன் எத்தனையோ முறை எனது கவிதையை மோசமாக யாரோ விமர்சித்திருக்கிறார்கள் என்று உசுப்பிவிடுவார். அப்பொழுதும் புன்னகையை மட்டும்தான் வெளிபடுத்தியிருக்கிறேன். அவருக்கு நான் எழுத வேண்டும் அதிகம் எழுத வேண்டும் என்ற அக்கறை எல்லோரைவிடவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அதுதடைப்பட்டுக் கொண்டே போனது. 


இப்பொழது எழுத தொடங்கியிருப்பது எனது இறுக்கங்களுக்கு, தனிமைக்கு ஒரு எதிர்மறையான செயல்பாடாக எனது எழுத்தை பார்க்கிறேன். அது கைகொடுப்பதாகவும் நினைக்கிறேன். அதனாலேயே ஏன் எனக்கு பிடிக்காதவற்றை பற்றி எழுத வேண்டும் என்றும் மற்றவர்கள் எழுத்துக்களில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை நிறுவி ஏன் எனது எழுத்துகளுக்கு அடையாளங்கள் தேடவேண்டும் என்றும் நினைக்கிறேன். சில சமயங்களில் யாரைவாது காயப்படுத்தவும் கூடும் அதையும் பெருமளவு தவிர்க்க நினைக்கிறேன். மாற்று கருத்துகள் சிந்தனையை மேலும் விரிவுபடுத்தும் என்பது முற்றிலும் உண்மை ஆனால் எனது மாற்று கருத்துகள் இன்னொருவருடைய சிந்தனையை நேரிடையாக பாதிப்பதை தவிர்க்க நினைக்கிறேன்.  


இந்த எனக்கு பிடித்தவையில் நான் கருத்துரைத்திருக்கும் நூல்களைப் பற்றி இன்னும் அதிகமாக உள்நோக்கி செல்ல நான் விரும்பவில்லை. எல்லோருடைய எழுத்தும் வாசகனால் உள்ளவாரே உள்வாங்கிக் கொள்ளப்படாது. அவனது வாழ்வியல் வாசிப்பு அனுபவங்கள் சார்ந்துதான் அந்த புரிதல் நடைபெறும். அதற்கு ஏதும் குறிக்கீடு நான் செய்துவிடவேண்டாம் என்று நினைத்தேன். அதோடு தேர்வு கட்டுரையை பெருமாள் அணுகியது அதில் வரும் சிறு சம்பவத்தின் அடிப்படையில். அதாவது அரசாங்க பள்ளிகள் பற்றிய தமிழ் நாட்டு மக்களின் போக்கு. எனக்கு அது சம்பந்தமில்லாத சிந்தனையும் அனுபவமுமாகும். பல பகுதிகள் அந்த நூலில் எனது வாழ்வின் பல்வேறு நிலைகளை நினைவு கூற உதவியது. எனது சில நிலைப்பாட்டுகளை தகர்த்திருக்கிறது. நான் எதிர்நோக்க இருக்கும் நிச்சயமில்லாத எனது வருங்கால நிகழ்வுகளுக்கு நான் உணராமலேயே அந்த நூல் என்னை தயார்படுத்தியிருக்கிறது என்பதும் தெரியும். ஆனால் இப்படி ஆழமாக செல்வது அவரின் பெரிய அபிமாநியாக என்னை காட்டிக்கொள்ளக்கூடும் அதனால் நான் சொல்வது பல சந்தேகங்களையும் எழுப்பலாம். அதனால் எனது கருத்து அந்த நூற்களுக்கு ஒரு  எளிய முன்னோட்டமாக மட்டும்  இருக்கட்டும் என்றுதான் எழுதினேன். அதில் இடம் பெற்ற பிரிவின் விஷம் மிகவும் அந்தரங்கமான சில உணர்வுகளுக்கு என்னை இட்டு சென்றது, நமது கைகளில், வர்கீஸின் அம்மா, பெண் எப்போது அழகாக இருக்கிறாள் என்று இன்னும் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் அவசியமிருப்பதாக எனக்கு தெரியல்லை. குறிப்பாக குழந்தைகளிடம் இன்னும் இன்னும் நெருக்கமாகவும் அவர்களின் உலகத்தைப் பற்றிய ஓரளவு புரிதலையும் ஜெயமோகன் எழுத்தில் அதிகம் அடைவது எனக்கு பிடித்திருக்கிறது. எனது குழந்தைகளுடனான எனது உறவுக்கு அது பலவகையில் ஒன்றிப்போவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  


தேர்வைப்பற்றி மற்றும் அன்று குறிப்பிட இன்னொரு முக்கிய காரணம் இன்று கல்வி என்பது குழந்தைகளுக்கு அதிகம் சுமைதருவதாக இருக்கிறது என்பதை எப்போதும் நான் எண்ணிவந்துள்ளேன். பெற்றோர்களும் தங்கள் இயலாமையை, இழந்த கனவுகளை பிள்ளைகளின் மூலம் நிறைவு செய்யவதற்காக அவர்களுடைய உலகை அவர்களிடமிருந்து பறித்து விடுகிறார்கள்.  எனது பையனை எப்பொழதும் நான் படிக்க சொன்னதேயில்லை. நான் அவனுக்கு விரும்பி சொல்லி தந்தது கணிணியை பயன்படுத்தவும், அவனுக்கு ரொம்பவும் பிடித்தமான படம் வரைவதும், வண்ணம் தீட்டுவதையும் கூட கணிணியிலேயே செய்வதற்கும்தான். அவனுக்கு இப்பொழுதுதான் 5 வயது. 4 வயதிருக்கும் போது ஏற்கனவே கொஞ்சம் மோசமாக இருந்த எனது எஸர் மடி கணிணியின் கட்டைகளையும் மானிட்டரையும் உடைத்துவிட்டான். அதை அவன் என்னிடம் இருந்து மறைக்க நினைத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் அவனை திட்டவில்லை இப்பொழுது மெக் மடி கணிணியை பயன்படுத்த அனுமதித்து விட்டேன் சில அறிவுரைகளுடன். அவன் என் கணிணியை தொட்டாலே என் அம்மாவும் மனைவியும் பதருவார்கள். எனக்கு அது எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை. அதிகம் பணம் இருக்கிறதென்றில்லை, எதையும் திரும்பப்பெற்றுவிடலாம், இழக்கும் தருணங்களை தவிர. அத்தகைய தருணங்களை என் குழந்தைகளுக்கு நான் கொடுக்க நினைக்கிறேன். வெறும் அறிவுரைகளும் பள்ளி படிப்புகளையும் அல்ல. எனது நிக்கோன் கமிராவில் என்னைவிட அழகாக படம் எடுப்பான். அதையும் அவனுக்கு நான் தடைவிதித்ததில்லை. 


தோம் ன் ஜெரி முதல் மிக்கி மௌஸ் வரை அனைத்தும் காதல் செய்வதைப்பார்த்து ஒரு பெண் தோழிக்கு இதயம் படம் வரைந்து அவனது கிண்டர்கார்டன் பள்ளிப் பையில் வைத்திருந்தான். என் மனைவி அதைப்பார்த்து என்னிடம் கவலைப்பட்டார். என்னை கண்டிக்க சொன்னாள். நான் அவனிடம் அந்தத் தோழியைப் பற்றி கேட்டுத்தெரிந்துக்கொண்டேன். என் தாய், மனைவி எனது நண்பன் என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள் நான் குழந்தை வளர்ப்பது சரியில்லை என்று. நானே என் பையனின் எதிர்காலத்தை கெடுக்கிறேன் என்று. ஒருமுறை பள்ளியில் யாரையோ தள்ளிவிட்டுவிட்டான் என்றும் கெட்டவார்த்தைப் பேசிவிட்டான் என்றும் பெரிய பிரச்சனையாகிப் போனது. எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.  அவனுக்கு ஆங்கிலமே தெரியவில்லை வீட்டில் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள் என்று பெரிய புகார்போன்று பாவனையில் இந்திய பெண் ஆசிரியை வேறு கூறிவிட்டார். அவனுக்கு இன்னும் கல்வி சுமையை அதிகரித்தால் சரியாகிவிடும் என்று எனது தங்கையின் ஆலோசனைப்படி குமொன் வகுப்பில்  சேர்த்தோம். குறிப்பாக ஆங்கிலத்திலும் கணிதத்திலும். ஆனால் அந்த சம்பவத்தின் போது நான் அவனிடம் கேட்டேன் நடந்தது என்ன என்று. அவன் தன்மீது எந்த தப்புமே இல்லை என்றும் அவன் நண்பன்தான் அதை செய்ததாகவும் கூறினான். நான் நம்பினேன். ஒருவாரம் வீட்டில் அதே புராணம், நான் பிள்ளையை கண்டிப்பதில்லை என்று. நான் பதில் எதுவும் சொல்லவில்லை. பெரும்பாலும் எல்லோரிடமும் பல விஷயங்களுக்கு என் நிலைப்பாடு இப்படிதான் இருக்கும். மறுவாரம் அதேபள்ளியிலிருந்து மனைவிக்கு அழைப்பு, எங்களை மன்னித்துவிடுங்கள் உங்கள் மகன் எந்தத் தப்பும் செய்யவில்லை வேறொரு மாணவன் செய்ததவறு, சாமர்த்தியமாக உங்கள் மகன் மீது பழிபோட்டு விடுகிறான் இன்று மாட்டிகொண்டான்.  எங்களை மன்னித்துவிடுங்கள், உங்களுக்கு மன உலைச்சல் தந்ததற்கு என்று. அப்பொழுதும் என் மனைவி பள்ளியை மாற்றிவிடுவோம் என்றார் கோபமாக. 


அதிலும், அவனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எங்களின் நண்பர்களின் பிள்ளைகள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள், பேசுவதை புரிந்துகொள்கிறார்கள் என்றும் புலம்பிக்கொண்டே இருப்பார் என் மனைவி.  எனக்கு எல்லாம் அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். பெற்றோர்கள் தங்களின் தாழ்வுமனப்பாண்மையால் பிள்ளைகளுக்கு சில விஷயங்களை வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள் என்றுகூட தோன்றும் . இப்படி திணிக்கப்படும் போதனைகளும் கல்வியும் எப்பொழுதும் அறிவார்ந்த நிலையில் நிகழ்வதேயில்லை. கல்வி நிலையங்களை எடுத்துக்கொண்டால் மாணவர்களை எதையும் நினைவில் இருத்திக்கொள்வதற்குதான் முக்கியதுவம் தருகிறது. அதனால்தான் நமது இந்திய மாணவர்கள் பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் தற்கொலை செய்துகொள்வது அதிகம் நம்மிடையே காணப்படுகிறது. அதைவிட பெரிய அவலம் 6ஆம் படிவத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாடே விழ எடுப்பது. இது என்ன கலாச்சாரம் என்று தெரியவில்லை. ஒருமுறை பாரதி இளைஞர் இயக்கத்தின் சார்பாக நாங்கள் நடத்திய இலவச வகுப்புகளில் பங்கெடுத்த மாணவர்களில் இரண்டு பேர் நல்ல தேர்ச்சி எடுத்தார்கள். 2 ஏக்கள்தான். அதில் ஒரு மாணவியின் தந்தை ஏன் 6 ஏக்கள் எடுக்கவில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் அறைந்துவிட்டார். எங்கள் பார்வையில் வாழ்க்கையின் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் சில குணாதிசயங்களோடு எப்பொழுதும் உற்சாகத்தோடு இருந்த அந்த மாணவியை ஏக்களுக்கு ஆசைப்பட்டு அறைந்து அவமானப்படுத்தினார். அந்த வடு எத்தகைய மனோவியல் மாறுதல்களை அந்த மாணவியிடம் உருவாக்கியிருக்கும் என்று நினைக்கும் போது இன்னும் நெஞ்சம் கணக்கிறது.


அதோடு பாடத்தின் போது அவனுடைய கவனம் ஓரிடத்தில் இல்லை என்பதும் வழக்கமான குற்றச்சாட்டு. அதையும் நான் காதில் வாங்கிகொள்வதில்லை. மனைவியிடம் மட்டும், அவன் கற்பனா சக்தி அதிகம் உள்ளவன் அப்படிதான் இருப்பான் என்று சொல்லிவைப்பேன். வீட்டில் அட்டகாசங்கள் பண்ணும் போது கண்டிப்பதில்லை, அதிகம் களைப்பாக தெரிந்தால் குமொன் வகுப்புக்கு லீவு விட்டுடலாம் என்று சொன்னால் அதிக சந்தோஷத்துடன் ஆமோதிப்பான். அவனுக்கு சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன், அதாவது பாலர்பள்ளிக்கு போக அன்று பிடிக்கவில்லையென்றால் அப்பாவிடம் லீவு அப்ளிகேஷன் போடு என்று. இது எல்லாம் எங்குபோய் முடியுமோ என்று புலம்பிக்கொண்டே இருப்பார் என் தாய்.  அவனும் இப்பொழுதெல்லாம் நான் சொல்வதைதான் கேட்கிறான், வீட்டில் யாருடைய பேச்சுக்கும் கட்டுபடுவதில்லை. அவன் சொல்லும் காரணம் வீட்டில் அவன் சொன்னால் கேட்பது நான் மட்டும்தான் . அதுமட்டுமல்லாது வீட்டில் ஆங்கிலமே பேசாதவன் வெளியில் அவன் வயது நண்பர்களிடம் அவனுக்கு தெரிந்த ஆங்கிலம் பேசி விளையாடிக்கொள்கிறான். ஒருமுறை குழந்தைகள் விளையாட்டு மையத்திற்கு சென்றபோது அவரது சீன நண்பனை கண்டு பேசி, விளையாடி திரும்பும்போது நாளைக்கும் வா என்று அந்த பையன் சொல்லி வழியனுப்பினான். பாறையில் மலர்கள் மலர்வதுபோல் பையன்கள் தானாக வளர்ந்துக்கொள்வார்கள் என்று அவரின் அந்த தேர்வு பதிப்பில் ஒரு வரி என்னை பெரிதும் சிந்திக்கவைத்தது. 


இன்று மாலை அவனது பள்ளி இறுதி பரீட்சை முடிவு வந்திருந்தது 500 க்கு 444.5 எடுத்திருக்கிறான். இந்த தேர்வு பதிப்புக்கான எனது கருத்தை சொல்வதற்காக இதை நான் செயற்கையாக சொல்லவில்லை. எல்லாம் தற்செயலாக நடந்ததிருக்கிறது. எனக்கும் இது ஆச்சரியமாகவே இருந்தது. இப்படி என் வாழ்வின் பல சம்பங்களை நான் திரும்பிப்பார்க்கவும், எதிர்கொள்ளவும் நல்ல அனுபவமாக இருந்தது அவருடைய நூல். அதையெல்லாம் எழுதவேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இப்பொழதுகூட இதை எழுதியது அவசியமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும், யுவராஜன். எனது அனுபவங்களின் பகிர்வாகவே எனது எழுத்துக்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதையும் தாண்டி கருத்தாக்கங்களை அவைகள் முன்வைத்தால் மகிழ்ச்சி ஆனால் நான் அதை ஒரு எனது எழுத்தின் நோக்கமாக கொள்ளப்போவதில்லை. 

Tuesday, November 17, 2009

சமீபத்தில் வாசித்ததும் வாசித்துக் கொண்டிருப்பதும்

யமுனா ராஜேந்திரன் எழுதிய அரசியல் இஸ்லாம். வெளியீடு உயிர்மை பதிப்பகம்.


இன்றைய சூழலில் எல்லோரும் வாசிக்கவேண்டிய அற்புதமான நூல். இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் நாம் அந்நியமாக காண முடியாது. எனது நாடு ஓர் இஸ்லாமிய நாடு, எனது பல நண்பர்கள் இஸ்லாமியர்கள். அவர்களிடம் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் எப்பொழுதும் ஒரு தனி அடையாளங்களை முன்னிறுத்தி தனித்து இயங்கவே விரும்புபவர்களாகவே நான் அறிந்திருக்கிறேன்.  இந்துக்களை போலல்லாமல் இஸ்லாமியர்கள் மதம் சார்ந்த விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் முற்றாக தவிர்ப்பவர்கள்.

இஸ்லாமிய பின்னனியில் வன்முறை இன்று உலகின் மைய அரசியலாக இருந்துவருவதும்,  உலக பொருளாதர மற்றும் அமைதியில் தவிர்க்கமுடியாத பல சவால்களை உருவாக்கி வருவதும் என்னில் பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்து வந்துள்ளது. மதமும் மதம் சார்ந்த நம்பிக்கைகளில், சமூக கூறுகளில் ஆர்வம் எனது மற்றோரு பகுதியாகும். நான் படித்தவரையில் இஸ்லாமியர்கள் முற்றிலும் குழு சார்ந்தும், இஸ்லாம் அல்லாதவர்கள்  கஃபீரெனவும் அவர்களின் மீதான வெறுப்பையும் பகைமையையும் இரக்கமின்மையையும் வளர்ப்பதாகவும் நவீன காலத்தின் மாறுதல்களை மறுப்பவர்களாகவுமே  அறிந்து வந்துள்ளேன். அதனால் பல்வேறு நிலைகளில் அதற்கான விடைகளையும் தேடிவந்திருக்கிறேன். 


இந்த நூல் இஸ்லாமியர்கள் பற்றிய எனது கருத்துக்களை மீள் பார்வை செய்வதாக இருக்கிறது. வன்முறையும் இஸ்லாமும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இன்று அறியப்படுவதற்கு இஸ்லாம் காரணமல்ல என்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் வன்முறையை ஆதரிப்பவர்களல்ல என்றும் அரசியல் பின்னனியில் தெளிவுபடுத்தும் நூல் இது.  இஸ்லாமிய உலகின் கலை,  ஊடகம், வாழ்வியல் பற்றிய அனைத்தையும் மிக சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து முன்னிறுத்தி தெளிவாக பேசியிருக்கிறார் யமுனா ராஜேந்திரன்.  அச்சம் கொள்ள வேண்டியது இஸ்லாமியர்கள் மீதல்ல, ஏகாதிபத்தியத்தியதின் மீதுதான் என்ற எண்ணம் இந்த நூலைப்படித்தப்பிறகு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.    


ஜெயமோகனின் தனிகுரல்.  இது பல நிகழ்வுகளில் ஜெயமோகன் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. அற்புதமாக பல கருத்தாக்கங்களை முன்வைப்பதோடு, இலக்கியம், சமூகம், நம்பிக்கைகள் சார்ந்த நமது மதிப்பீடுகளை மீள் பார்வை செய்கிறார். என்னை மிகவும் கவர்ந்தது முதல் பகுதியில் இருக்கும் - என்றும் வற்றாத ஜீவ நதி, இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற உரையும், பகுதி இரண்டில் அனைத்தும், மலையாள கவிதைகளை தமிழாக்குதல் நீங்கலாக.  இந்த எல்லா உரைகளையும் என்னால் சுருங்க கூற இயலவில்லை. எனது வலைப்பூவில் எதாவது இன்று எழுதியே ஆகவேண்டும் என்று முயற்சிப்பதுபோல் ஆகிவிடும். ஒவ்வொரு வரியும், பக்கமும் நமது சிந்தனைகளில் பலநூறு கேள்விகளையும் விடைகளையும் அது சார்ந்து  எழுப்பிவிடுகிறது.

இந்த நூலை படித்தவுடன், உடனே பகிர்ந்து கொண்டது மலேசியாவில் நான் அதிகம் நேசிக்கும் எழுத்தாளரான டாக்டர் சண்முகசிவாவிடம். அவரோடு பல நிகழ்வுகளுக்கு சென்று அவரின் உரைகளை கேட்டிருக்கிறேன். மனிதம், வாழ்வியல், இலக்கியம், அரசியல் சார்ந்த எனது பல சிந்தனைகள் உருபெற அவரின் உரை பெரும் பங்களித்திருக்கிறது. ஆனால் பதிவு செய்யாதவரை அவைகள் பயனற்றதே என்ற உணர்வை தீர்க்கமாக எனக்குள் விதைத்தது இந்த நூல். நீங்களும் கண்டிப்பாக இன்றிலுருந்து உங்கள் உரைகளை தொகுக்க வேண்டும் என்று சொன்னபோது அவர் ஒரு நிகழ்வுக்கு உரையாற்ற சென்றுக்கொண்டிருந்தார். இதுவரை அவரின் எத்தனையோ கருத்துக்கள் பதிவு செய்யப்படாமல் மறக்கப்பட்டிருக்கிறதே என்ற கவலை எனக்கும் அவருக்கும் எங்கள் பேச்சின் இறுதியில் தவிர்க்க முடியாது இருந்தது.

மிகவும் ஆவலோடும் உரிமையோடும் எனக்கும் தனிக்குரலின் ஒரு பிரதியை வாங்கிக்கொடு என்றார். ஆன்லைனில் உயிர்மையிலிருந்து வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இரண்டு வாரங்கள் சென்றுவிட்டது.

ஜெயமோகனின் நிகழ்தல். இதுவும் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுதான்.


நான் மிகவும் கொண்டாடும் நூல் இது. ஜெயமோகனின் அனுபவங்களின் தொகுப்பு. எனக்கு பொதுவாகவே நாவல்கள் படிப்பதிலும் சிறுகதைகள் படிப்பதிலும் ஆர்வம் எழுந்ததில்லை. கற்பனை இலக்கியத்தில் உணர்வுகளை நகர்த்திக் கொண்டு போகும் சூழல் எனது வாசிப்புக்கு மிகவும் அலுப்பு தட்டும் ஒரு விஷயம். அதிகம் விரும்புவது கட்டுரைகள், பதிவுகள், குறிப்புகள். ஆனால் மிகவும் ஆச்சரியமாக இருப்பது, தனது அனுபவ குறிப்புகளையே இலக்கியமாக சர்வசாதாரணமாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார் என்பது, அது கொஞ்சம் கூட எனக்கு அலுப்பு தட்டுவதாக இல்லை என்பதும்.  இலக்கியத்திற்கான கூறுகள் இதில் என்ன, என்று சொல்லும் அளவுக்கு எனக்கு இலக்கிய பரீட்சார்த்தியம் இல்லை என்றபோதும் இது வெறும் டைரி குறிப்புகள் அல்ல மாறாக கொண்டாட வேண்டிய அற்புத இலக்கியத்தின் இன்னொரு வடிவம்.

பல பகுதிகள் எனது வாழ்வியல் பாடங்களாக ஆனாது. எனது உணர்வுகளை அலசிய, கண்ணீர் விட வைத்த  காவியங்களானது. இன்று காலையில் 'தேர்வு'  என்ற பகுதியை படித்து கண் கலங்கிவிட்டேன். மதியத்தில் இருந்து இரவுவரை எனது மகனுடன் நேரத்தை செலவிட்டேன்.  அது அவரின் தனிப்பட்ட அனுபவங்கள் என்பதையும் தாண்டி நமது வாழ்வில் ஏற்படுத்து தாக்கங்கள் ஆயிரம்.

இசை துறை சார்ந்த எனது அனுபவங்களை பலரும் பல தருணங்களில் எழத கேட்டிருக்கிறார்கள் அதில் முதன்மையானவர் வல்லிணம் நண்பர் நவீன் அவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வற்புறுத்தி வந்திருக்கிறார். இன்று அந்த சிந்தனை என்னுள் விஸ்வரூபம் எடுத்து ஒரு பெரும் வேகத்தில் நான்  வலைப்பூவை தொடங்கியதற்கு இந்த நூல் ஒரு முதற்காரணம்.  பெரும்பகுதி தனிமையிலும் விரக்தியிலும் கலிந்து கொண்டிருந்த தருணம், இந்த நூல் எனக்கு புது வாசல்களை திறந்திருக்கிறது.   நன்றி ஜெயமோகனுக்கு.

     

Sunday, November 15, 2009

பழசிராஜா - இளையராஜாவின் இன்னுமொரு பெருங்காவியம்


இளையராஜாவின் இசையில் மிக சிறந்த ஒலிப்பதிவு (Mixing மற்றும் Mastering - இதற்கு நல்ல தமிழ் வார்த்தைகளை யாராவது எனக்கு அறிமுகப்படுத்தவும்)தரத்தில் வந்திருக்கும் முதல் திரை இசை தொகுப்பு. மலேசியாவில் வெளியீடு காணும் எந்த திரை இசைதொகுப்புக்களுக்கும் (பெரும்பாலும்) பாடலாசிரியர், ஒலிநிபுணர், மற்ற கலைஞர்கள் விவரங்கள் சேர்க்கப்படாது. இதனால் எந்த செலவுகளை மிச்சப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக இணையத்திலும் என்னால் இந்த விவரங்களை கண்டடைய முடியவில்லை.

மொத்தம் 5 பாடல்கள் உள்ளது. ஜேசுதாஸ் அவர்கள் பாடிய சுலோகத்தை நான் கணக்கில் எடுக்கவில்லை. சமீபத்தில் இளையராஜாவின் இசையில் பல திரை பாடல்கள் வெளிவந்திருக்கிறது, வால்மீகி, அழகர்மலை, ஜகன் மோகினி இவைகளோடு ஒப்பிடும்போது இது மிகச் சிறந்த ஒரு படைப்பு. மற்ற மூன்றும் அவரிடம் இருந்து சாதாரணமாக வெளிவந்த படைப்பாகவே எனக்கு தெரிகிறது. வால்மீகி, எனக்கு அவரிடம் நான் விரும்பும், எதிர்பார்க்கும் ஒரு இசை தொகுப்பு. முக்கியமாக கூட வருவிய பாடலும் ஒளிதரும் சூரியன் பாடலும்.

பழசிராஜாவின் முதல் பாடல் குன்றத்து கொன்றைக்கும் பொன்மோதிரம். இந்தப் பாடலின் தொடக்க இசை அவரின் முந்தைய வெளியீடான திருவாசகத்தின் பூவேருகோனும் புரந்தரனும் மற்றும் உம்பட்கட்ரசே பாடல்களின் இசைபோன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இரண்டும் முற்றிலும் வேறு கோணங்கள் கொண்ட இசை.


இங்கு அவரின் திருவாசகத்தின் ஆர்கெஸ்டரா இசையை கொஞ்சம் கூறிவிட நினைக்கிறேன். காரணம் இந்த குன்றத்து கொன்றைக்கும் பொன்மோதிரம் பாடலும் அருமையான ஆர்கெஸ்டரா இசையில் வந்திருக்கிறது. ஆர்கெஸ்டராவில் வெளிவந்திருக்கும் சிறந்த பாடல் என்று ஒற்றைவரியில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இந்த பாடலில் வரும் ஆர்கெஸ்டரா இசை பகுதி எங்கு எந்த ஆர்கெஸ்டராவில் பதிவு செய்யப்பட்டது என்று சிடி கவரில் குறிப்பிடப்படவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை. அவரிடம் அவரின் எந்தப் பாடலையும் நான் புகழ்ந்ததே இல்லை என்பது யாராலும் நம்பமுடியாத உண்மை.

திருவாசக வெளியீட்டின் போது யாருமே இளையராஜாவின் வெஸ்டர்ன் கிலாஸிக்கல் எனப்படும் மேலை சங்கீதத்தில் அவருக்கு இருக்கும் ஞானத்தை, திறனை பற்றி பேசவில்லை. அந்த முயற்சி ஒரு ஆர்கெஸ்டராவை கொண்டு செய்யப்பட்ட ஒரு புதுமையான முயற்சி என்ற வகையில் மட்டுமே பேசப்பட்டது. சுஜாதா கொஞ்சம் முயற்சித்தார்.

ஆர்கெஸ்டரா என்பது, மேலைநாட்டு சாஸ்தீர சங்கீதத்தை இசைக்கும் மிக அதிகமான இசை கலைஞர்களைக் கொண்ட ஒரு இசை குழு. இவற்றில் சேம்பர் ஆர்கெஸ்டரா, சிம்பொனி ஆர்கெஸ்டர என்று சில பிரிவுகள் உண்டு. உலக அங்கீகாரம் பெற்று இயங்குவது. சிம்பொனி ஆர்கெஸ்டராவென்றால் மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. எல்லா இசை கலைஞர்களும் சிறந்த இசை ஞானமும் திறனும் கொண்டிருக்கவேண்டும். கண்டிப்பாக இசைகருவி வாசிப்பதில் பட்டம் பெற்றிருப்பார்கள். அதற்கான நேர்முகத்தேர்வுகள் மிகவும் கடினமானது. ஒரு வயலின் கலைஞரின் குறைந்த பட்ச மாத வருமானம் குறைந்தது 50,000 ரூபாய் இருக்கும். இரண்டாவது அம்சம். கண்டெக்டர் (Conductor) என சொல்லப்படும் இசை நடுத்துனர். அவரின் முக்கிய வேலை ஒரு இயக்குனர் எப்படி ஒரு நடிகரிடம் இருந்து உணர்வுகளை வெளிகொண்டு வருகிறாரோ அதுபோன்றது. மூன்றாவது அரங்கம். இசையின் வெளிபாடுகள் வெவ்வேறு நிலைகளில் உணரப்படுவதற்காக அரங்கம் பிரத்தியேகமாக அமைக்கப்படும். முக்கியமானது அரங்கத்தில் மைக் அல்லது ஒலிபெருக்கி கிடையவே கிடையாது. மிக துல்லியமான இசையும் சரி பிரமாண்டமான இசையானாலும் சரி நேரிடையாக நமது செவியுணர்வுகளுக்கு வந்தடையும் நுட்பமான அரங்கம். அது தவிர இசை கலைஞர்கள், கருவிகள் மேடையில் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கவேண்டும்.வயலின்கள் ஒரு இடத்திலும்,குழல்கள் ஒரு இடத்திலும் என்று ஒரு அரை வட்ட வடிவத்தில் மேடையில் இசைகலைஞர்கள் அமர்த்தப் பட்டிருப்பார்கள்.

எல்லா சிம்பொனி ஆர்கெஸ்டராவிற்கும் ஒரு பாணி இருக்கும். உதாரணத்திற்கு மோசார்ட்டின் ஒரு இசையில், அதிலிருக்கும் இசை குறிப்பு (notes) தவறாமல், தெம்போ மாறாமல், ஸ்கேல் மாறாமல், ஒவ்வொரு ஆர்கெஸ்டராவும் ஒவ்வொரு விதமான நுண்ணிய உணர்வு தளங்களில் அந்த இசையை வெளிப்படுத்தும். 100 ஆர்கெஸ்டரா இருக்கிறதென்றால் அத்தனையும் அதே இசையை 100 வித நுண் உணர்வுகளில் வெளிக்கொணருவார்கள். இதை நமது கர்நாடக படைப்போடும் ஒப்பிட முடியாது. கர்நாடகமும், மேலை சாஸ்தீரிய சங்கீதம் போல் ஒரே கீர்த்தனையையே வெவ்வேறு கலைஞர்கள் வெவ்வேறு விதமாக வெளிகொணருகிறார்கள் என்று நாம் அறிவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கீர்த்தணையை வேறு பாடகர்கள் பாடினாலும் அவர்கள் அதை வித்தியாசப்படுத்த, வெவ்வேறு இசை குறிப்புக்களுக்குள்ளும், ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் திரும்ப திரும்ப பல்வேறு சங்கதிகளில் வெளிகொணருவதும், பாடலின் நீளத்தை கூட்டுவதும், ஸ்வரங்களை வெவ்வேறு நிலைகளில் பிரயோகிப்பதும் என்று நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை செய்துதான் வித்தியாசப்படுத்துவார்கள். ராகம் மாறாமல் இருத்தல் மட்டுமே அவசியம்.

கர்நாடக சங்கீதம் கேட்பதற்கும் கேள்விப்படுவதற்கும்தான் புதுமைகளை அனுமதிக்காத, வரட்சியான படைப்பாக தோன்றினாலும், அது மிகுந்த சுதந்திரமும் பரீசார்த்த முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுமாகும். அதேசமயம் கர்நாடக சங்கீதம் உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாத, வெறும் சாரீரங்களுக்கும் ஸ்வரப்பிரயோகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதும், தனிநபர் சார்ந்த ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரிகளின் திறனை பிரகடனப்படுத்தும் ஒரு கருவியாக இருந்திருக்கிறது என்று குற்றச்சாட்டையும் பல சமயங்களில் கர்நாடக இசை கலைஞர்களிடம் கூறிவந்துள்ளேன். ஆனால் எனது இந்த நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியது, சாஸ்வதி அவர்களின், மலேசியாவில் நானும் காயத்திரி வடிவேலுவும் ஏற்பாடு செய்திருந்த கர்நாடக கச்சேரியாகும். முதல் முறை கர்நாடக இசையில் உணர்வுகளை அழகாகவும் ஆழமானதாகும் வெளிகொண்டுவர இயலும் என்பதை நான் அனுபவித்தேன். அதை சாஸ்வதியிடம் கூறிய போது அவர் எனக்கு புது விஷயம் ஒன்றை தெரியப்படுத்தினார். அதாவது 'இசையில் கொரியோக்ராப் (Choreograph) செய்தேன்' என்றார். இந்த இசையில் கொரியோக்ராப் (Choreograph) என்ற பதத்தையும் பிரயோகத்தையும் அறிமுகப்படுத்தியது லால்குடி ஜெயராமன் அவர்கள். அவர்தான் சாஸ்வதியின் குருவும் ஆவார். இந்த யுக்தியை கர்நாடக இசை கலைஞர்கள் யாருமே பொருட்படுத்துவதில்லை. அதனால்தான் ராமரை கீர்த்தனைகளால் சென்றடைந்த தியாகராஜரின் கீர்த்தனைகளை கூட நம்மால் ரசிக்கமுடிந்த அளவுக்கு, உருக முடிவதில்லை.

ஆனால் வெஸ்டன் கிலாஸிக்கல், ராகம் மட்டுமல்ல, சுதந்திரமான சுவரப்பிரயோகத்திற்கு அனுமதியில்லை, சங்கதிகளுக்கு அனுமதியில்லை, எழுதிய குறிப்புகள் அப்படியே வாசிக்கப்படவேண்டும். ஆனால் அவர்கள் வாசிக்கும் முறையில் உணர்வுகளை காட்டுவார்கள். கொரியோக்ராப் செய்வார்கள். குழுவாக ஒத்திசைவோடு இசையில் இயங்குவதன் வாயிலாகவும், இசைகருவிகளின் தன்மைகளாலும், இசை அரங்கத்தின் அமைப்பாலும், இசை நடுத்துனரின் திறனாலும் வித்தியாசப்படுத்தி காட்டுவார்கள். இது கொஞ்சம் சிரமமான விஷயம். அதோடு இசை நடுத்துனர் (Conductor) ஆர்கெஸ்டராக்குளுக்கான கொரியோக்ராபை இயக்குபவராக இருப்பார். ஆனால் அவர்கள் கொரியோக்ராப் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை. அது நடனத்துக்கு மட்டுமே பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஒரே இசை வடிவத்தை திரும்ப திரும்ப வசித்து வரும் ஆர்கெஸ்டராக்கள் அனைத்துமே தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதும் இந்த அம்சத்தில்தான். இதை பொதுவாக மேலைநாட்டு மொழியில், ஒவ்வொரு ஆர்கெஸ்டராவிற்கும் ஒரு ஆன்மா இருக்கும் என்பார்கள்

இப்பொழது இளையராஜாவின் இசைக்கு வருகிறேன். யாரிடமும் இல்லாத ஒரு தனித்துவம், இளையராஜாவிடம். என்னவென்றால் இசை குறிப்புகளை எழுதுவதும், அந்த மொழியை தமிழில் நாம் ஒரு கட்டுரையை எழுதுவது போல் மிகவும் சாதாரணமாக எழுதிக்கொண்டு போவதும். இந்தியாவில் எனக்கு பழக்கமான எந்த இசையமைப்பாளர்களுக்கும் சாத்தியமற்ற ஒன்று. மேலை நாட்டில் கூட பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு அது சாத்தியமற்ற ஒன்று. இசை குறிப்பு எழுதத் தெரிந்தவர்களை இசையமைப்பாளர்கள் அரேஞ்சராக (ARRANGER)அமர்த்தி, அவர்களின் வாயிலாக பெரும் ஆர்கெஸ்டராக்களுக்கு இவர்களின் இசை பொருந்தும்படியாக எழுதிக்கொள்வார்கள். அல்லது எல்லா இசைகருவிக்கான இசையையும் கணிணியில் வாசித்து, குறிப்பு எடுத்துக்கொண்டு விடுவார்கள். இதுவும் பல சமயங்களில் உதவாது. காரணம், கீபோர்ட் மூலமாக் கணிணியில் வயலினிக்காகவோ அல்லது குழலுக்காகவோ குறிக்கப்படும் இசை குறிப்பு, கீபோர்டுக்கான நாதத்திற்கும் வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

ஆனால் இளையராஜா அசாத்தியமாக அதை நிகழ்த்திவருகிறார். இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். அதுவும் ஆர்கெஸ்டராக்களுக்கு பொருந்துபடி எழுத வேண்டும் என்றால் முதல் விஷயம். என்ன ஆர்கெஸ்டரா என்பதுதான் கேள்வியாக இருக்கும். அதை ஆர்கெஸ்டரா நடுத்துனர்கள், எண்களில் வகைப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு 16.14.12.10.8./3.3.3.3./5.4.3.1./T.5P.4Hp.4Pf அல்லது 14.12.10.8.6./3.3.3.3./5.4.3.1./T.3P.Hp.Pf என்பதாகும். முதல் குறிப்பு 101 இசை கலைஞர்கள் அடங்கிய ஆர்கெஸ்டரா. இரண்டவது 81 இசை கலைஞர்கள் அடங்கிய ஆர்கெஸ்டரா. இது இன்னும் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ கூட இருக்கலாம். இதில் முதல் ஆர்கெஸ்டராவின் இந்த எண்கள் எதை குறிக்கிறது என்று பார்க்கலாம். 16 என்பது முதல் 16 பேர்கள் கொண்ட வயலின் குழு, 14 என்பது இரண்டாவது வயலின் குழு, 14 பேர்கள் கொண்டது. அடுத்தது வியோல, செலோஸ், டபள் பேஸ், என வரிசையாக நரம்பு கருவிகள், குழல் கருவிகள், மேளங்கள் என குறைந்தது 16 வகையான இசை கருவிகள் கொண்ட குழுக்கள். குறைந்தது 24 வகையான இசை கருவிகள்இருக்கும் இருக்கும். இதில் பெரிய சவால் 24 அல்லது அல்லது அதற்கும் மேலான தனித்தனியான இசை குறிப்புகள் இந்த ஆர்கெஸ்டராக்களுக்கு தேவைபடும். இதில் எந்த இசை குறிப்பும் வெறும் பக்கவரத்தியங்கள் என்று அல்லாமல் தனி மெலோடிகளாக இருத்தல் அவசியம். ஒரு சிம்பொனி என்பது, அதிகமான இசைக்கருவிகளின் சங்கமம் அல்ல அதிகமான மெலோடிகளின் சங்கமம். சுருங்க சொல்வதென்றால் ஒரு சிம்பொனி என்பது 15 அல்லது அதற்கும் மேலான தனி பாடல்களுக்கு சமம் என்று சொல்லலாம். ஆனால் ஆதார மெலோடிதான் அதன் மொத்த வடிவமாக வெளிவரும். ஒரு ஆர்கெஸ்டராவை ஒரு இசையமைப்பாளர் தனது இசை குறிப்புகளை வாசிக்க அனுமதி கேட்கும் போது அவர்கள் முதலில் கேட்பது அந்த இசையமைப்பாளரின் இசைக் குறிப்புகளைதான். அதை கொண்டுதான் அவரின் இசையை தாங்கள் வாசிப்பதற்கு அனுமதி தருவதை முடிவு செய்வார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களின் தரம் சார்ந்த மதிப்பீடுகளில் எந்த சமரசமும் செய்வதில்லை. அது அவர்களின் ஆர்கெஸ்டராவை உலக அங்கீகாரம் இழக்க செய்துவிடும். அதிலும் ஆர்கெஸ்டராக்கள் தனி நபர் சார்ந்தோ, லாப நோக்கு கொண்ட நிறுவனங்கள் சார்ந்தோ இயங்குவதில்லை. அதன் காரணமாகவே அதற்கான அனுமதி எளிதில் அடையக்கூடிய ஒன்றல்ல. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனிதான். ஆனால் அதை கிலாஸிக்கல் க்ரோஸ் ஓவர் என்று வகைப்படுத்தக் காரணம் அதில் வரும் தமிழ் வார்த்தைகளும் இந்திய இசையும்தான். மோஸர்ட் காலத்திலேயே அவரது சிம்பொனிக்கு இத்தகைய பெரும் சர்ச்சைகளும் குழப்பங்களும் இருந்தன. இளையராஜாவின் திருவாசகத்தை காலம் வெளிக்கொணரும் என்று விட்டுவிடுவோம்.

இளையராஜாவின் இசையை லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்டராவும், புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்டராவும் அரெஞ்சரை (Arranger) அமர்த்தாமல் அனுமதிப்பது, சாதாரணமானது அல்ல. அந்த அளவிற்கு அதன் அத்தனை அம்சங்களிலும் தேர்ந்தவர் என்பதோடு ஒரு அசாத்தியமான முறையில் அவரின் இசையமைப்பு நடந்து வருகிறது. இந்த குன்றத்து என்ற பாடலுக்கு இளையராஜா அளித்திருக்கும் அத்தனை அம்சங்களையும், அதாவது அந்தப் பெண்ணின் வெவ்வேறு உணர்வு நிலைகளும், அவளின் அந்த உணர்வுகள் வெளிவருவதற்கான சூழளும், இயக்குனரும், தளம் அமைப்பவரும் (செட்டுகள் அமைப்பவர்) மனதில் எண்ணிய படிமங்களுக்கு வலு சேர்ப்பதாகவும் இருக்கும் அத்தனை அம்சங்களுக்கும் ஒலி வடிவம் அளித்திருக்கும் இந்த பொருப்பை மற்றொரு இசையமைப்பாளர் ஏற்றிருந்தால், இத்தகைய மனவெளி பயணம் சாத்தியப்பட்டிருக்காது. அடுத்து இப்படியான இசைக்கு அவர்கள் எடுத்திருக்கும் காலம் குறைந்தது ஆறு மாதம். நிச்சயமாக.

அதோடு வழக்கமாக அவரது பாணியில் இருக்கும் இந்த ஒரு பாடலில் பொதிந்திருக்கும் அத்தனை இசை கூறுகளையும் அனுபவித்தால், அத்தனையும் தனி தனி இசை படிமங்கள் என்பது தெரியவரும். குறைந்தது 10 புதுப்பாடலுக்கான ஆதார மெலோடிகள் இருக்கும் பாடல். இதை இசையமைப்பாளர்களும் சீரியலுக்கு பின்னனி இசையமைப்பவர்களும் நன்றாக உணர்வார்கள். இதை இனம் காண்பதுதான் அவர்களின் வேலை, அவர்களின் தொழில் சார்ந்த தேவை. அவரின் இந்த ஆதார மெலோடிகள் விரைவி கிடக்கும் பாடல்களும் இசையும் அதிகம் நம்மிடையே வளம் வருகிறது. இந்த அம்சங்களையும் தேவைகளையும் உணர்ந்த மேலைநாட்டு கலைஞர்கள் சாம்பிள் எனப்படும் துணுக்கு இசைகளை வெளியிடுகிறார்கள். பெரும்பாலான நமது தமிழ் இசையமைப்பாளர்கள் இத்தகைய இசைகளைதான் இன்று பயன்படுத்துகிறார்கள். இளையராஜா லூபஸ் (Loops) மற்றும் சாம்பிள் (samples) என்ற வியாபர யுக்தி ஏற்கனவே எனது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். இந்த மாதிரியான எனது தொழில் சார்ந்த ரகசியங்கள் என்னையும் மீறி வெளிவந்துவிடக்கூடாது என்பதாலேயே என் இசை அனுபவங்களை எழுதுவதை தவிர்த்தேன்.

அது இருக்கட்டும், பல்லவி முடிந்து முதல் சரணம் ஆரம்பிக்கும் முன்பு அதாவது 1.15 நிமிடங்களிலிருந்து 1.48 வரைக்குமான இசையில் அவளின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் காதலும் என நமது அக உணர்வு விரிந்துகொண்டே செல்கிறது. அந்தப் படத்தை மலேசியாவில் இன்னும் வெளியீடு செய்யவில்லை. யார்பார்ப்பது? எல்லோரும் இன்னும் இங்கு ஆதாவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனது புரிதலுக்கு மிகவும் அந்நியமாக இருக்கிறது பாடலின் வரிகள். மலையாளம் போலவே புரிந்தும் புரியாமலும் உள்ளது. அந்த கதை களத்தின் காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் இந்த மொழி என்று நினைக்கிறேன். நம்மவர்களுக்கு தெரிந்தவரை இது இன்னொரு தமிழ் அல்லது மலையாள அல்லது தென்னிந்திய திரைப்பாடல். ஆனால் இந்தப் பாடலின் நிஜமான கட்டமைப்பு classical crossover வகையை சார்ந்த உலக இசை. நமக்கு இளையராஜாவிடமிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பழகிவிட்ட இசைவடிவம் என்பதால் சர்வசாதாரணமாக நம்மை கடந்து செல்கிறது இந்தப் பாடல்.

நான் மிகவும் நேசிக்கும் பாடல்களாக இந்த தொகுப்பில் மூன்று பாடல்கள் ஆதி முதல், அம்பும் கொம்பும், அகில மெல்லாம். இதில் அம்பும் கொம்பும் ஆதிவாசிகளை எல்லாவகையிலும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஏற்கனவே சிறந்த வேல்ட் மியூஸிக் (WORLD MUSIC) வடிவத்தில் (GENRE) அமைந்த ஆதிவசிகளின் சங்கீதமாய் ஒலித்தது, ஜானியில் வரும் ஆசையை காத்துல தூதுவிட்டேன் என்ற பாடல். ஆனால் இந்த அம்பும் கொம்பின் மிகப் பெரிய பலம் ஒலிப்பதிவு. ஒலிபதிவு என்பதைவிட மிக்ஸிங் மற்றும் மாஸ்தரிங் என்று சொல்லவிரும்புகிறேன். இசைத்துறை சார்ந்த அதிகமான வார்த்தைகள் தமிழில் இப்பொழுது எனக்கு தேவையாக இருப்பதை உணர்கிறேன். அந்த ஒலிப்பதிவு சிறந்து அமையாமல் இருந்திருந்தால், எந்த மாற்றமும் அற்ற இன்னொரு இளையாராவின் பாடலாகவே இதுவும் உணரப்பட்டிருக்கும். குறிப்பாக நாயணங்கள் மற்றும் குழல் இசை, வழக்கமான இளையராஜாவின் இசை, வழக்கமான அவரின் உணர்வு (அல்லது style என்று சொல்லாம்). ஆனால் நமக்கு புது உணர்வை தருவது ஒலியமைப்பு. (மிக்ஸிங் மற்றும் மாஸ்த்ரிங் வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை சிக்கிவிட்டது என்று நினைக்கிறேன்). மூங்கில் தன்னில் என்ற பாடலும் கூட, வித்தியாசமாக தெரிவதும் அதனால்தான்.

சில விமர்சனங்கள் இந்த ஆதிவாசிப் பாடல் இயல்பானதாக இல்லை, அதிக சினிமாத்தனமாக இருப்பதாக சொல்லலாம். ஆனால் அப்படி எதுவும் விமர்சனங்கள் வந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை. அப்படி இருக்குமானால் அது உண்மைதான். மிக இயல்பாக தொடங்கி பிறகு அது பெரும் பொருளியல் தேவைகளை முன்வைத்து நகர்கிறது. இது சினிமா தொழிலுக்கு மிகவும் தேவையாய் இருக்கிறது. இதில் இயக்குனரோ, தயாரிப்பாளரோ யாரும் சமரசம் செய்துகொள்ளமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ராகுல் நம்பியாரின் குரல், புது முகத்தை அந்தப்பாடலுக்கு அளித்திருக்கிறது.

அவரின் இன்னொரு பெரும் படைப்பு, என்னை மிகவும் கவர்ந்தது அகிலமெல்லாம் பாடல். எனக்கு தெரிந்து முழுமையான இஸ்லாமிய பாடல் இளையராஜாவிடம் இருந்து வருவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். ஆன்மீகம் அன்று இது ஒரு மதம் சார்ந்த பெரும் விழாவை முன்னிறுத்துகிறது. அதன் தேவை திரையில் கண்டால்தான் எனக்கு புரியும். கேரளாவை மையப்படுத்தும் படம் இது, உலகின் இரண்டாவது அதாவது மக்காவை தவிர்த்து உலகின் முதல் மசூதி நிறுவப்பட்ட இடம் கேரளம், அதுவும் நபிகள் காலத்திலேயே. அதுவும் போர்கள் அற்ற இஸ்லாத்தை அடைந்தது கேரளம். அதை உள்வாங்கி அவர் இந்த இசையை அமைத்தாரோ என்னவோ, இந்த உண்மையை நாம் உள்வாங்கி கொண்டு கேட்கும் போது அந்த பாடல் நமது கற்பனையில் எடுக்கும் பிரமாண்டத்தைத் திரை அனுபவம் தருமா என்று எனக்குத் தெரியவில்லை.

பழசி ராஜா இளையராஜாவின் இன்னொரு பெரும் காவியம்.

உண்மைகள்

உரிமைகள் கோருகின்றோம்
எத்தனை உண்மைகளை
சிறைவைத்திருக்கிறோம்

உயிர்களுக்காய் அழுகின்றோம்
எத்தனை உள்ளங்களை
கொன்றிருக்கிறோம்

கடவுள் கேட்கிறோம்
வாழ்வு முழுவதும்
பேய்களாய் அலைகின்றோம்

வேர்கள்

எங்காவது
நட்டு வைப்பார்கள் என்று
காத்துக் கொண்டிருக்கிறோம்
வேர்களை தொலைத்து விட்டு

இருளாய்

தொலைத்தவைகளை
கண்டெடுக்க
என் அறைக்குள் விளக்காய்
வந்தாய்

இன்று
என்னையும் விழுங்கி
இதே அறைக்குள் நீயும்
இருளாய்

நான் மரணமுற்ற நொடிகளை

எண்ண முடிந்த வெற்றிகள்
எண்ணில் அடங்கா தோல்விகளிலிருந்து
அருகில் இருடக்கும் நட்புகள்
எண்ணில் அடங்கா பிரிவுகளிலிருந்து
எண்ண முடிந்த வாழ்க்கை
கணக்கில் அடங்கா மரணங்களிலிருந்து

முடிந்தவரை
பதிவு செய்து கொள்கிறேன்
நான்
மரணமுற்ற நொடிகளை

Friday, November 13, 2009

இந்தி இசையின் மறுமலர்ச்சி

எனது தனிப்பட்ட தளம் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே பலரும் எதிர்பார்ப்பது எனது இசை துறை சார்ந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்பதுதான். எனது இசை அனுபவம் ஏறக்குறைய 15 வருடங்கள் கொண்டது. சாதாரண இசை ரசிகனாக தொடங்கி விரிவு கண்டது. இன்னும் விரிந்துக் கொண்டே செல்வது. அதோடு எனது இசை மற்றும் இசை தொழில் சார்ந்த அனுபவங்களின் தொடக்கப் புள்ளியாகவும் தவிர்க்க முடியாத அங்கமுமாகி இருப்பது இளையராஜாவும் அவரது இசையும். பெறுமளவு அவருடனான அவரை சார்ந்த அனுபவங்கள், அவருடைய இசையின் மீதான எனது வேட்கை, பிரமிப்பு, தேடல் என மீளாது செல்வதால், முழுதும் அவரைப் பற்றிய, அவர் புகழ்பாடும் தளமாக இது ஆகிவிடுமோ என்றும் பின்வாங்கியதுண்டு. அவரைப் பற்றி எழுத வேண்டாம் என்றல்ல, அவருடை தளமாக நான் தொடங்கிய www.ilaiyaraaja.in அதற்கான முயற்சியில் இருக்கும் போது, எனது அனுபவங்களை நான் எழுதுவது அந்த தளத்திற்கு எந்த முட்டுக்கட்டையையும் உண்டக்கிடக்கூடாது என்ற பயம் தான்.

எனது பயணத்தை பின் நோக்கி பார்க்கும் முன்பாக, சமீபத்தில், அதாவது செப்டெம்பரில், நான் ரசித்த சில இசை தொகுப்புக்களை பற்றி பேச நினைக்கிறேன். ஆனால் இங்கே நான் சிறந்தது என்று குறிப்பிடுவதெல்லாம், அதுமட்டும்தான் சிறந்தது என்றல்ல, எனது பார்வைக்கு வந்து என்னை சில காரணங்களால் கவர்ந்த இசை, அவ்வளவுதான். முக்கியமாக சொல்லியாக வேண்டியது இசை தொழில் சார்ந்த அறிவு இருக்குமளவு இசை அறிவு எனக்கில்லை. எனது இசை ஞானமும், ரசனையும் அனுபவங்கள் சார்ந்ததும், எனது ஆன்மாவிற்கு நெருக்கமானதுமாகும்.

எப்பொழுதும் எங்கு வெளியூர்களுக்கு சென்றாலும், நான் அதிகம் செலவிடுவது இசை தட்டுக்களுக்குதான். அதிகம் இருப்பதும் சுற்றுவதும் இசை விற்பனை நிலையங்களுக்குதான். அப்படி இந்த முறை டில்லி சென்ற போது ஏராளமான சிடிகள் வாங்கி வந்தேன். அதில் இன்னும் எத்தனை  என்னால் கேட்கப்படாமல்  இருக்கிறது என்று தெரியாது, இன்னும் பிரிக்கப்படாமல் எத்தனை கிடக்கிறது என்றும் தெரியாது. அப்படி நான் கேட்டவற்றுள். நான் விரும்பி ரசித்தவை லவ் அஜ் கள் (Love Aj Kal) மற்றும் கமினேய் (Kaminey) என்ற இந்தி திரை இசைப் பாடல் தொகுப்பு.

ஒன்றை தீர்மானமாக சொல்லியே தீர வேண்டும். இந்தி பாடல்கள் தமிழ் பாடல்களை பின் தள்ளிவிட்டு அதிவேகமாகவும் நிதானமாகவும் முன்னோக்கி செல்கிறது. சமீபத்திய தமிழ் திரை இசைப் பாடல்கள் மிகவும் தரம் மலிந்துவிட்டது. ஜேம்ஸ் வசந்தன், சதீஸ் சக்கரவர்த்தி, தமன் என்று சிலர் கவனத்தை ஈர்த்தாலும் புதுமைகள் இல்லாத வறட்சியான இசை பெருகிவிட்டது. இந்தி புது உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கியுள்ளது.

அதுமட்டும் அன்றி தமிழில் காப்பியடிக்கும் போக்கு அதிகமே இருக்கிறது. ஆங்கில பாடல்கள், ஜப்பான், சீனம், இந்தோனீசிய என்று திசைகளை விஸ்தாரமாக்கியிறுக்கிறது. அதோடு எங்கெங்கோ சென்று யார் யாருடனோ இணைந்து என்ன என்ன இசையையோ வடிவமைப்பதாக பேட்டிகள் எல்லாம் தருகிறார்கள் ஆனால் மிஞ்சுவது சாம்பிள் அல்லது லூப்ஸ் என்று சொல்லப்படும், நேற்று, யாரோ தயார் செய்த, சின்ன சின்ன இசை தொடர்கள்தான். இது தவறல்ல ஆனால் இந்த சாம்பிள் அல்லது லூப்ஸை தேர்வு செய்வதிலும் எந்த கற்பனைத்திறனும், தொழில் நூட்பத்திறனும் அற்ற, கற்பனை வரண்ட, பொறுப்பற்றதனம்தான் தெரிகிறது. இசையமைப்பது இன்றைய சூழலில் கற்பனை சிரத்தையே இல்லாத ஒரு செயலாக ஆகிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர்களின் செலவுகள் மட்டும் குறைந்த பாடில்லை. இன்றைய தேதியில் வியாபார வெற்றிக்கான அனைத்து அம்சங்களுடன் 5 பாடல்களை உருவாக்குவது என்பது குறைந்தது பத்தாயிரம் மலேசிய ரிங்கிட்டில் செலவுகளை அடக்கிவிட முடியும். சினிமா பிரபலங்கள் என்பதற்காகவே இதை பத்து மடங்கு ஆக்கலாம். ஆனால் தயாரிப்பாளர்களின் செலவோ குறைந்தது ஐந்து லட்சம் ரிங்கிட்டை எட்டுகிறது. க்ரியேட்டிவ் துறை, கலை, professional charges என்று நியாயமான காரணங்களை இந்த செலவுகளுக்கு நிகராக சொல்லலாம். ஆனால் இன்று தமிழ் திரையிசையில் திறனற்ற டெக்னிக்கல் நிபுணர்கள்தான் கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்கிறார்களே தவிர இசையமைப்பாளர்களென்று யாரையும் அடையாளம் காணமுடிவதில்லை.

ஒரு சிலர் அதிகமாகவே கவனத்தை ஈர்ந்திருக்கிறார்கள். சுப்ரமண்யபுரத்தின் பின்னனி இசையில் ஜேம்ஸ் வஸந்தன், ஈரத்தின் பின்னனி இசையில் ஸ் தமன், லீலை பாடல்களில் சதீஸ் சக்ரவர்த்தீ, நாடோடியின் பின்னனி இசையில் சுந்தர் சி பாபு, தசவதாரத்தின் பின்னனி இசையில் தேவி ஶ்ரீ பிரசாத். இவர் ஏற்கனவே 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' திரையில் கவனத்தை ஈர்த்தவர்.

ஆனால் இந்தியில் நிகழ்ந்துவரும் இசை மாறுதலுக்கு முக்கிய காரணம், அவர்களின் உலகளாவிய வியாபார வாய்ப்புகள் மற்றும் உலக அங்கீகாரத்திற்கான அவர்களின் வேட்கை. அதுமட்டுமன்றி பெரும்  இசை நிறுவனங்களான சோனி, யுனிவெர்சல், வார்னர் போன்ற நிறுவனங்களின் இந்திய சந்தை மீதான மோகம். இல்லையென்றால் ஆங்கில, இந்தோனிசிய பாடல்களோடு நமது இளையராஜாவையும் ரஹ்மானையும் திருடி இசை செய்தவர்கள், இந்த அபார மாறுதலுக்கு தங்களை தயார் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. இசை மீதான அவர்களின் ரசனையும் மதிப்புகளும் மாறியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ தென்னிந்தியாவே இளையராஜாவை கொண்டாடிய காலத்தில், அவரை அதிகம் பொருட்படுத்தாதவர்கள், இன்று பல படங்களுக்கு அவரை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவின் சீநி கம் ( Cheeni Kum) பின்னனி இசையின் டெக்னிக்கல் பரிணாமமும், சேர்க்கையும் அற்புதமானது. இதற்கு முன் எந்த தென்னிந்திய படைப்புகளிலும் ஒலி சேர்க்கை சம்பந்தப்பட்ட டெக்னிக்கல் விஷயங்களில் அவர் அவ்வளவு சிரத்தை எடுதிருக்கவில்லை (ஆனால் பெரும்பாலான அவருடைய ரிக்கார்டிங், live performance வகை என்பதாலேயே ஒலி சார்ந்த நிபுணத்துவம் சாத்தியம் அற்று போனது).

அதன் பிறகு 'நான் கடவுள்' மற்றும் 'பழசிராஜா' அவரின் இசையமைப்பில் அற்புதமான ஒலி சேர்க்கை சார்ந்த நிபுணத்துவத்துடன் வந்திருந்தாலும், இளையராஜாவின் இசையில் 'சீநி கம்' தான் தொடக்கம். அதற்கு வடநாட்டு ஒலி நிபுணர்கள்தான் காரணம் என்பது மறுக்க முடியாதது.  இசையமைப்பு மற்றும் இன்றி, அது சார்ந்த அனைத்து தொழில்நுட்ப கிளைகளிலும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் தொழில் பக்தியுடனும் செயல்படுகிறார்கள் என்று சொல்வதா அல்லது அவர்களுடைய வியாபார சந்தை, தரத்தில் கவனம் செலுத்தும் பொருட்டு பிரத்தியேகமாக பல செலவுகளை தாங்கிக்கொள்ளும் அளவு விசாலமானதா என்று தெரியவில்லை. மிக சாதாரண உதாரணம் வட நாட்டு இசை தொகுப்புக்களின் கவர் மற்றும் packaging. சகல சந்தை மற்றும் கலை சார்ந்த பொருப்புணர்ச்சியுடன் இருக்கும். தமிழ் வெளியீடுகள் ஊதுபத்தி packaging போல் வரும் (தமிழ் நாட்டில்).

லவ் அஜ் கள், இசையமைப்பாளர் ப்ரீத்தம், கமினேய் இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ். இதில் விஷால் பரத்வாஜ் பன்முக திறனாலியும் படைப்பாளியும் கூட. அதற்காக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என தமிழில் இருக்கும் சில படைப்பாளிகள் போல் என்ன வேண்டாம். இவர் உண்மையிலேயே படைப்பாளி. இவரின் படைப்புகளை எனக்கு ஓரளவு அறிமுகப்படுத்தியது சென்னையில் உள்ள எனது நண்பர் ஶ்ரீ.

இந்த இரண்டு திரையின் இசையும் என்னை கவர்ந்ததற்கான முக்கிய காரணம் நவீன, இளைய தலைமுறை ரிதமுடன் அசாத்தியமாக பவனிவரும் இந்திய அடிப்படை இசை மணம். தமிழ் நாட்டு கிராமிய இசையில் இருக்கும் ஈர்ப்பு, வட இந்திய கிராமிய இசையில் எனக்கு எழுந்ததே இல்லை. ஆனால் அதன் சாரத்தை உள்வாங்கி வேறு பரிணாமத்தில் ஒலிக்கும் அசத்தலான அதே சமயம் அசலான இசை, இந்த இரண்டு திரை இசையும். அதிலும் கமினேயில் வரும் ‘டன் தே நான்’, ஒரு பரிசோதனை முயற்சி, Rock, Folk இவைகளோடு என்பதுகளின் ஹீரோயிஸ ரிதமாக சாயல் தரும் இசையையும் இணைத்த புதுமை.ஆனால் இசை எப்பொழுதும் அதன் நுணுக்கங்களுக்காகவோ, மேதாவிதனத்திற்காகவோ அல்லாமல்
நம்மை காரணம் தெரிவிக்காமல் கட்டிபோடும் வசிய ஒலி. சில சமயம் நமது வாழ்க்கை அனுபவங்களை கண்டெடுத்து நமக்கு பொக்கிஷமாக தருவது. உதாரணத்திற்கு வெயில் திரையில் வரும் ஜீ வி ப்ரகாஷின் 'உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே' பாடல் அல்லது யுவன் சங்கரின் 'நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடலை போல. எந்த பரிசோதனை முயற்சியும், நுணுக்கமும், மேதாவித்தனுமும் அற்ற படைப்புகள். ஆனால் நமது ஆன்மாவை, உடல் தாண்டி கடத்திவிடும் சக்தி கொண்டது. சிலசமயம் நமது அனுபவங்கள் சாராமல் அது சாத்தியமும் அல்ல. ஆக, ஒரு பாடலை வெறும் டெனிக்கலாகவோ அல்லது தியொரிட்டிக்கலாகவோ அணுகுவதும் ரசிப்பதும் சரியாகாது. பல சமயங்களில் அருவத்தை தரிசிப்பது போல்தான் இருக்க வேண்டும், இசையை அனுபவிப்பது என்பதும். அதே போல் கமினேயில் வரும் ‘டன் தே நான்’ அதன் நுணுக்கங்களையும் பரிசோதனை முயற்சிகளையும் கடந்து எதோ ஒரு உணர்வுதளத்தில் என்னை ஈர்க்கிறது. நிச்சயமாக பாடல் வரிகளுக்காக அல்ல. எனக்கு இந்தி நஹி மாளும்.

http://www.youtube.com/watch?v=qFZnXIsnDIE

Thursday, November 12, 2009

பெருங்காதல்

ஆர்வமாய் நான் பதிக்கும்
அத்தனை தடங்களையும்
அவசர அவசரமாய்
அள்ளிக் கொண்டு போகிறது
ஓயாமல்
இந்த அலை

எங்கு கொண்டு
சேர்த்து வைக்கும்
எனது, அத்தனை தடங்களையும்?
அதற்கு தெரிந்த வழியில்
என்னை நேசிக்கிறது !!

அடங்காத பெருங்காதலில்
கடல்
அயராத பயணமாய்
நான்

இணையாத உறவில்
முடிவில்லா வேட்கையில்
இன்னும் நாங்கள்

ல்தாக

என் தனிமை
உனக்கு புரிந்ததில்லை
என் கண்ணீர்
நீ அறிந்ததில்லை

உன் கனவை
நான் கண்டதில்லை
உன் விருப்பம்
என் நினைவில் இல்லை

நான் சிரித்து
நீ ரசித்ததில்லை
உன் கனம்
நான் சுமந்ததில்லை

என் இரவில்
நீ உறங்கியதில்லை
உன் காலையில்
நான் விழித்ததில்லை

இருந்தும்
நான் அறிவேன்
நீ என்னை காதலிப்பதை
என்னாலும் தவிர்க்க முடிவதில்லை
உன்மீதான என் காதலை

தற்கொலை

நரம்புகளை அறுத்தேன்
உதிரம் வரவில்லை
உயரத்திலிருந்து விழுந்தேன்
உயிர் பிரியவில்லை

தீயிட்டுக் கொண்டேன்
சாம்பலானது நெருப்பு
கடலுக்குள் குதித்தேன்
வற்றின நீர்வெளி

முடிவில்லா நான்
அழுதேன்
என் கண்ணீர் கடலானது
கோபம் கதிரானது
ஆசைகள் காற்றானது
நான் வெளியானேன்

முடிவில்லா
பெருவெளியானேன்

விநோதம்

இரவின் சப்தம்
தொலைந்த இரவுகள்
சூரியன் விழாத
வெளிச்ச வெளிகள்
எதுவும் விநோதமாய் தெரியவில்லை

வருடங்கள் தாண்டிய
அழுக்கேரிய நிலைக்கண்ணாடியில்
எந்த லட்சணங்களையும் காட்டாத
எனது பிம்பம்
எதுவும் விநோதமாய் தெரியவில்லை

உணவுகள் செயற்கை
உறவுகள் செயற்கை
உணர்வுகள் செயற்கை
புன்னகைகள் முத்தங்கள்
எல்லாம் செயற்கைகளாய்
எதுவும் விநோதமாய் தெரியவில்லை

வெறித்த மசூதியும்
இருண்ட கருவறையும்
அறைந்த சிலுவையும்
விநோதமாய் தெரிவதேன்?