Friday, May 12, 2006

ஊழி தீயென..

என்னை பிளந்து
நானே பிறக்கின்றேன்
பிரபஞ்சம் விழுங்கும்
பேரொளியுடன்

கட்டுக்கள் அறுத்து
உடல் கடந்து
கடவுளையும் மிஞ்சும்
பலத்துடன்
என்னுள் விழும் அத்தனையும்
எரித்திடும் பசியோடு

ஊழி தீயென எரிகின்றேன்
காலங்கள் கடந்து சிரிக்கின்றேன்

மொழிகளற்று

நானே அர்த்தங்களாய்
விரிகின்ற இன்பம்
இந்த மொழிகளின் உலகில்
கிடைப்பதில்லை

இன்றைய
என் உணர்வுகளுக்கு
நேற்றைய
சொல்லில்
அர்த்தத்தில்
சித்தாந்தத்தில்
என்னைத் தேடி
வாழ்வை நிரப்பும் அவலம்
எனது மொழிகளற்ற உலகில்
நிகழ்வதேயில்லை

மொழிகளின் உலகில்
தீர்ந்து போகும் அர்த்தங்கள்
மொழிகளற்ற உலகில்
கண்டெடுக்கப்படுகிறது
மொழிகளின் உலகில்
சிதைந்து போன அடையாளங்கள்
மொழிகளற்ற உலகில்
மீட்கப்படுகிறது

மொழிகளில் எனது தரிசனம்
மொழிகளற்று விரிகிறது

Saturday, May 6, 2006

எனக்கான முகம்

எல்லோரும்
நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
சிந்திய என் முகத்தை
அவரவர் பாத்திரங்களில்

எனக்கான முகத்தை
தற்காலிகமாக தருகிறார்கள்
அவரவர் தாகம் தணியும் வரை

உதட்டில் கொஞ்சம்
மேசையில் கொஞ்சம்
பாத்திரத்தின் விளிம்புகளில் கொஞ்சம்
தெரித்து விழும் எச்சிலில் கொஞ்சம்
தரையில் கொஞ்சமென
சிந்திய பகுதிகளிலிருந்து
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கான முகத்தை