Sunday, November 12, 2006

இறைவனின் நம்பிக்கை

எனக்காக அங்கே தூரத்தில்
எனக்கான ஆயிரமாயிரம்
சந்தோஷ மூட்டைகளை
சுமந்து கொண்டு நிற்கின்றான்
எத்தனை முறை
நான் தோற்றுப் போனாலும்
யாருக்குமே இல்லாத நம்பிக்கை
என் மீது அவனுக்கு

எனக்காவது வதற்கும்
தோற்றுப் போவதற்கும் நோக்கமுண்டு

அவனுக்கு?

தொலைந்த கடவுள்

தொலைந்த கடவுளை
எல்லோரும் தேடினார்கள்
பிரதிஷ்டை செய்வதற்கல்ல
மீண்டும் தொலைப்பதற்கு

Friday, May 12, 2006

ஊழி தீயென..

என்னை பிளந்து
நானே பிறக்கின்றேன்
பிரபஞ்சம் விழுங்கும்
பேரொளியுடன்

கட்டுக்கள் அறுத்து
உடல் கடந்து
கடவுளையும் மிஞ்சும்
பலத்துடன்
என்னுள் விழும் அத்தனையும்
எரித்திடும் பசியோடு

ஊழி தீயென எரிகின்றேன்
காலங்கள் கடந்து சிரிக்கின்றேன்

மொழிகளற்று

நானே அர்த்தங்களாய்
விரிகின்ற இன்பம்
இந்த மொழிகளின் உலகில்
கிடைப்பதில்லை

இன்றைய
என் உணர்வுகளுக்கு
நேற்றைய
சொல்லில்
அர்த்தத்தில்
சித்தாந்தத்தில்
என்னைத் தேடி
வாழ்வை நிரப்பும் அவலம்
எனது மொழிகளற்ற உலகில்
நிகழ்வதேயில்லை

மொழிகளின் உலகில்
தீர்ந்து போகும் அர்த்தங்கள்
மொழிகளற்ற உலகில்
கண்டெடுக்கப்படுகிறது
மொழிகளின் உலகில்
சிதைந்து போன அடையாளங்கள்
மொழிகளற்ற உலகில்
மீட்கப்படுகிறது

மொழிகளில் எனது தரிசனம்
மொழிகளற்று விரிகிறது

Saturday, May 6, 2006

எனக்கான முகம்

எல்லோரும்
நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
சிந்திய என் முகத்தை
அவரவர் பாத்திரங்களில்

எனக்கான முகத்தை
தற்காலிகமாக தருகிறார்கள்
அவரவர் தாகம் தணியும் வரை

உதட்டில் கொஞ்சம்
மேசையில் கொஞ்சம்
பாத்திரத்தின் விளிம்புகளில் கொஞ்சம்
தெரித்து விழும் எச்சிலில் கொஞ்சம்
தரையில் கொஞ்சமென
சிந்திய பகுதிகளிலிருந்து
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கான முகத்தை

Monday, March 13, 2006

நானும் கடவுள்

நானும் கடவுள்

நாத்திகர் ஆகாதீர்கள்
என் இருப்பை
அலட்சியப்படுத்தி

அதற்காக
எனக்கு பூஜைகள் செய்யாதீர்கள்
கல்லாக சபிக்கப்படுவேன்
பிராத்தனைகளும் வேண்டாம்
காணிக்கைகள் கேட்பேன்
மதங்களும் வேண்டாம்
பிணங்கள் கோருவேன்

என்னை
நானாகவே இருக்கவிடுங்கள்
இதுவரை உங்களுக்கு
ப்ரீட்சையமான கடவுள்கள்
போலல்லாமல்

தூர எறிந்துவிடுங்கள்

நிலவுக்கு ஒளியில்லை
அது சூரியனுடையது
சூரியனுக்கும் ஒளியில்லை
அது என்னுடையது

அருகில் வர வேண்டாம்
எரிந்து விடுவீர்கள்
யார் வீட்டுக்கும்
கொண்டு செல்லாதீர்கள்
சாம்பலாகி விடும்
ஊரே

எப்பொழுதும் போல்
உங்களை விட்டு
உலகம் தாண்டி
தூர எரிந்து விடுங்கள்

உங்கள் நன்மைக்காக